பாலாறு
பாலாறு (Palar River) தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது.[1] கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது [2]. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் செய்யாறு, நீவா ஆறு ஆகியவை முதன்மையானவையாகும். வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர்,வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன.

அணை தொகு
ஆந்திரப்பிரதேச அரசு குப்பத்துக்கு அருகிலுள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே பாசன அணை கட்ட திட்டமிட்டுள்ளதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகியவை பாலாறினால் பயன்பெறுகின்றன.
பாலாறு ஆண்டு முழுவதும் நீர் ஓடும் வற்றாத ஆறு. பருவ காலங்களில் பெய்யும் மழையே இதன் நீர் ஆதாரம் ஆகும். கணேசபுரத்தில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ள பாசன அணை தமிழகத்திற்கு வரும் ஆற்றின் நீரை பெருமளவில் தடுத்துவிடும் என தமிழக அரசு கருதுகிறது. மேலும் பருவ மழை பொய்க்கும் காலங்களிலும் குறைவான மழைப்பொழிவு உள்ள காலங்களிலும் இந்த அணை தமிழகத்திற்கு வரும் நீரை முழுவதும் தடுத்துவிடும் என தமிழகம் அச்சப்படுவதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அப்போதய தமிழக முதல்வர் செயலலிதா இந்த அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை அ -வில் 1892 ஆண்டின் ஒப்பந்தம் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒப்பந்தத்தின் உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினார்.[3]
தனித்துவம் தொகு
1963 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கலிபோர்னியா நீர்பாதையைப்போல் இவ்வாறானது இயற்கையாகவே கால்வாயாகவும், மற்றும் நீர்தேக்கமாகவும் அமையப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. [4]
விளக்கப்படம் தொகு
என் பெயர் பாலாறு என்ற விளக்கப்படம் செங்கல்பட்டை சேர்ந்த நீர் உரிமை பாதுகாப்பு குழு தயாரித்தது. சூன் 30, 2008-ல் இது வெளியிடப்பட்டது. 85 நிமிடங்கள் ஓடும் இது பாலாறு கர்நாடகத்தில் உற்பத்தியாகும் இடத்திலிருந்து அது வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை உள்ள நிலைகளை காட்டுகிறது. மணல் அள்ளுதல் மற்றும் தொழிலகங்களின் கழிவுகள் வட தமிழகத்தின் முதன்மையான குடிநீர் ஆதாரமான பாலாற்றை எவ்வாறு பாழாக்குகிறது என்பதை சொல்கிறது.[5]
மேற்கோள்கள் தொகு
- ↑ Palar river
- ↑ "Dam across the Palar is not feasible: State officials". http://www.hinduonnet.com/2006/01/11/stories/2006011104890600.htm.
- ↑ TN against AP making dam on Palar river
- ↑ பகுதி: நீர் எனும் பெரும் புதிர்!இந்து தமிழ் திசை - சனி, நவம்பர் 16 2019
- ↑ "பாலாற்றின் நிலையை சொல்லும் விளக்கப்படம்". http://www.hindu.com/2008/07/03/stories/2008070353060500.htm.