இசுலாம்

(இஸ்லாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுலாம் (இஸ்லாம் الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஓரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள்[1]. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும்[2], அதாவது கிட்டத்தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர். உலகின் 49 நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையான இசுலாம்[3], கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்[4]. இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்குப் பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாகக் கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும்.

இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்)

ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். பின்பு எட்டாம் நூற்றாண்டில் உமையா கலீபகம் காலத்தில் மேற்கின் அந்தலூசியாவிலிருந்து கிழக்கின் சிந்து ஆறு வரை இஸ்லாம் பரவியது. முகம்மது நபி இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.

ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

உலகில் மிக வேகமாகப் பரவி வரும் பெரும் மதம் இஸ்லாம் ஆகும்[5][6].

சொல்-வேர்

இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்த சொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும்[7][8][9]. இதன் பொருள் அந்த ஏக இறைவன் எனும் படைத்தவனின் நாட்டத்தை ஏற்றுக் கொண்டு, தம்மை முழுமையாக ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

நம்பிக்கைகள் (ஈமான்)

 
குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை

இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது[10]. இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.

ஈமானின் அடிப்படைகள்:

ஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. இறை விசுவாசமானது( ஈமான்) இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும். ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவைகளாவன:

1.அல்லாஹ்வை நம்புவது.

2.அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.

3.அவனுடைய வேதங்களை நம்புவது.

4.அவனுடைய தூதர்களை நம்புவது.

5.மறுமையை(கியாமத்) நம்புவது.

6. இறைவனின் விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது. [11].


கடவுள் (அல்லாஹ்)

கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.[12]

அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.

(அல்லாஹ் நித்திய ஜீவன்) - என்றென்றும் வாழ்பவன் - (2:225)

அவனைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியவையே! (28:88).

அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. [13].

மலக்குகள் (வானவர்கள்)

வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது[14]. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ஜிப்ராயீல் வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார்[15].

அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர்.[11]

வேதங்கள்

முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். தவ்ராத், சபூர், இஞ்சில் ஆகியவை முறையே மூசா, தாவூத், ஈசா ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது[16][17][18][19]. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்[20], அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (தௌராத்)

நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (ஸபூர்)

நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட (இன்சீல்)

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட (அல்குர்ஆன்)

ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். [11].

இறைதூதர்கள் (நபிமார்கள்)

இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்) எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது[21].

உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. முகம்மது நபி இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார்[22].

'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை' (அல்குர்ஆன் 35:24)

இறுதித் தீர்ப்பு நாள் (மறுமை-கியாமத்)

ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது. மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை.

ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர்.

எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும்.

விதி

விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது [23].

இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும்.

மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும்.[13]

கடமைகள்

 
இறை வணக்கம் செய்யும் கெய்ரோவாசிகள். ழான் லியோன் யேர்மி 1865ல் வரைந்தது.

இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன.

உறுதிமொழி (கலிமா)

இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது கலிமா சகாதா என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.

கலிமா

ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற ஏகனாகிய இறைவன் தன்னந்தனியனான ஒருவனோ, அதுபோல் அந்த ஓரிறைவனை ஏற்று உறுதி மொழி பகர்வதும் ஒன்றே ஒன்றுதான். அது வருமாறு:

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ.

இந்த அரபி மொழி உறுதி மொழியின் தமிழ்ப் பொருள் வருமாறு: “”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், இன்னும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்பதாகும்.

கலிமா பற்றிய குர்ஆனின் வசனங்கள்:

நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.(37:4.)

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.(112:1)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.(6:153.)

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.(2:82. )


இறை வணக்கம் (தொழுகை)

பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன.

தொழுகை பற்றிய அல்குர்ஆன் வசனங்கள்:

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நல்லவை தீயவற்றைப் போக்கிவிடும். இது (அல்லாஹ்வை) நினைவு கூர்வோருக்கு நல்லுபதேசமாகும் (அல்குர்ஆன் 11:114).

(நபியே!) அவர்கள் கூறுபவை குறித்து நீர் பொறுமையாக இருப்பீராக! சூரியன் உதிப்பதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு துதிப்பீராக. மேலும், இரவு வேளைகளிலும், பகலின் ஓரங்களிலும் (அவனைத்) துதிப்பீராக! (இதன் நன்மைகளால்) நீர் திருப்தி அடைவீர் (அல்குர்ஆன் 20:130).

சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை தொழுகையையும், இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநாட்டுவீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை சாட்சிக் கூறத்தக்கதாக இருக்கின்றது (அல்குர்ஆன் 17:78).

நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்யுங்கள். வானங்கள் மற்றும் பூமியில் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. முன்னிரவிலும் நண்பகலிலும் இருக்கும் போதும் (துதி செய்யுங்கள்) (அல்குர்ஆன் 30:17, 18).

நோன்பு

ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு பற்றிய திருமறை வசனங்கள்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ [٢:١٨٣]

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

சூரா: 2 வசனம்: 183

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

சூரா:2 வசனம்: 185

பொருள் தானம் (ஸக்காத்)

ஸக்காத் எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.

ஸக்காத் பற்றிய குர்ஆனின் வசனங்கள்:

நாம் சம்பாதிக்கும் செல்வம் என்பது முழுவதுமே நமக்குரியதில்லை. நம்முடைய தேவைக்கும் அதிகமாகத் தான் இறைவன் செல்வத்தைத் தருகிறான். எனவே இறைவன் நமக்குத் தரும் செல்வத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் முறையாக வழங்கி விட வேண்டும். அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும். (அல்குர்ஆன் 70:24, 25)

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிறவர்களே இறை நம்பிக்கை கொண்டவர்கள். (அல்குர்ஆன் 5:56)

இது குர்ஆனின் - தெளிவான வேதத்தின் - வசனங்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நற்செய்தியுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை அவர்களே உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் 27:1-3)

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 24:37)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

புனித பயணம் (ஹஜ்)

புனித பயண நேரத்தில் காபா

வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது இசுலாமின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் இசுலாமிய நாட்காட்டியின் துல்கச் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பற்றிய குர்ஆனின் வசனங்கள்:

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.(2:197)

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! (22:27)

தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் (ஹஜ்ஜுக்குரிய)அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.(22:28)

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.(3:97)

இசுலாமியப் பிரிவுகள்

இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன.

சன்னி இசுலாம்

 
சுன்னி, சியா பரவல்

சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் சுன்னத் என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். இராக், ஈரான், மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை மத்கபு என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன.

சியா இசுலாம்

சியா இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.

சூபிசம்

சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும்.

பிற பிரிவுகள்

  • அகுமதிய்யா - இசுலாத்தின் பல கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், முகமது நபிக்கு பிறகு வந்த மிர்சா குலாம் அஹ்மத் என்பவரை மற்றொரு இறைதூதராக நம்புகின்றனர். இது இசுலாத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை முசுலிம்களாக ஏனைய முசுலிம்கள் ஏற்பதில்லை.
  • இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி இசுலாம் ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
  • குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள்.
  • யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது.
  • இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.
  • ரோஹிங்கியா முஸ்லிம் இவர்கள் மியான்மர்உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள்.[24]

இசுலாமிய பரவல்

 
முசுலிம் மக்கள் பரவல் சதவிகிதம் (Pew Research Center, 2009).

2010ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில் 75 முதல் 90 சதவீதம் வரை சுன்னி முசுலிம்களும்[1], 10 முதல் 20 சதம் வரை சியா முசுலிம்களும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது[1]. ஏறக்குறைய 50 நாடுகளில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது.

கண்டங்கள் விரிசையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் இந்தோனேசியா, பாகிசுத்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆப்பிரிக்காவை பொருத்த அளவில் எகிப்து மற்றும் நைசீரியா ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன.

ஐரோப்பாவை பொருத்த அளவில் அநேக நாடுகளில், கிறிஸ்தவத்திற்கு அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. துருக்கி, அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். அமெரிக்காவில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.

வரிசை எண் கொடி நாடு இசுலாமிய மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில்
இசுலாமியர்களினன் பரவல் (%)[25]
1   இந்தோனேசியா 204847000 88.1%
2   பாகிசுத்தான் 178097000 96.4%
3   இந்தியா 177286000 14.6%
4   வங்காள தேசம் 148607000 90.4%
5   எகிப்து 80024000 94.7%
6   நைசீரியா 75728000 47.9%
7   ஈரான் 74819000 99.7%
8   துருக்கி 74660000 98.6%
9   அல்சீரியா 34780000 98.2%
10   மொராக்கோ 32381000 99.9%
 
இறை வணக்கத்தில் ஈடுபடும் முசுலிம்கள். இடம்: டெல்லி ஃசும்மா பள்ளிவாசல்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx
  2. NW, 1615 L. St; Suite 800Washington; Inquiries, DC 20036USA202-419-4300 | Main202-857-8562 | Fax202-419-4372 | Media. "Why Muslims are the world's fastest-growing religious group". Pew Research Center (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. NW, 1615 L. St; Washington, Suite 800; Inquiries, DC 20036 USA202-419-4300 | Main202-419-4349 | Fax202-419-4372 | Media (2012-12-18). "The Global Religious Landscape". Pew Research Center's Religion & Public Life Project (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  4. Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population
  5. Editor, Daniel Burke, CNN Religion. "The fastest growing religion in the world is ..." CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-02-22. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  6. Lippman, Thomas W. 7 April 2008. "No God But God." U.S. News & World Report. Retrieved 24 May 2020. "Islam is the youngest, the fastest growing, and in many ways the least complicated of the world's great monotheistic faiths. It is based on its own holy book, but it is also a direct descendant of Judaism and Christianity, incorporating some of the teachings of those religions—modifying some and rejecting others."
  7. "Siin". www.studyquran.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
  8. "The Quranic Arabic Corpus - Quran Dictionary". corpus.quran.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
  9. "Arabic-English Lexicon by Edward William Lane". www.tyndalearchive.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-13.
  10. குரான் 4:136
  11. 11.0 11.1 11.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-14.
  12. Islam: Empire of Faith. PBS. Retrieved 2010-12-18
  13. 13.0 13.1 [1]
  14. "And it was narrated in a saheeh hadeeth that 'Aa'ishah said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: "The angels were created from light, the jinn were created from smokeless fire and Adam was created from that which has been described to you." (Narrated by Muslim in his Saheeh, no. 2996; also narrated by Ahmad, no. 24668; by al-Bayhaqi in al-Sunan al-Kubra, no. 18207 and by Ibn Hibbaan, no. 6155)". Archived from the original on 2008-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.
  15. "Jibreel". Archived from the original on 2012-04-10. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.
  16. குரான் 21:48
  17. [குரான் 53:36]
  18. குரான் 17:55
  19. Abdullah Yusuf Ali, Holy Quran: Text, Translation and Commentary, Appendix: On the Injil
  20. See: * Accad (2003): According to Ibn Taymiya, although only some Muslims accept the textual veracity of the entire Bible, most Muslims will grant the veracity of most of it. * Esposito (1998, pp. 6,12) * Esposito (2002b, pp. 4–5)* Peters (2003, p. 9) *F. Buhl; A. T. Welch. "Muhammad". Encyclopaedia of Islam Online.* Hava Lazarus-Yafeh. "Tahrif". Encyclopaedia of Islam Online.
  21. குரான் 10:47
  22. குரான் 33:40
  23. "விதியைப் பற்றி வீண் தர்க்கம் செய்யாதீர்". Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.
  24. http://tamil.thehindu.com/search/advanced.do%7C தி இந்து தமிழ் 20. சூன் 2014
  25. pewforum.org 2010ன் கணிப்பு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்&oldid=4058320" இலிருந்து மீள்விக்கப்பட்டது