வேலூர் ஜலகண்டேசுவரர் கோயில்

சிவன் கோயில்
(வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் (Jalakandeswarar Temple) தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தின் தலைநகரான வேலூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

நுழைவாயில்

அமைவிடம்

தொகு

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். இதில் கிழக்குப் பக்கத்தில் மட்டுமே நுழைவாயில் உள்ளது. தற்போது கோட்டை அகழியின் மூன்று பக்கங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. தெற்குப் பக்கத்தில் தண்ணீர் இல்லை. கோட்டையின் உள்ளே மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ளன. இதன் வடக்குப் பக்கத்தில் கோயில் அமைந்துள்ளது. இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.[1] நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட இதன் ஒரு பாணி விஜயநகர கட்டிடப்பாணியின் இறுதி நிலையைக் கொண்டுள்ளது.

கோயில் அமைப்பு

தொகு

தெற்கு நோக்கியுள்ள ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது.[2] அந்த கோபுரம் பிரம்மாண்டமாகவும் பிரமாதமாகவும் அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது. கோயிலின் வடமேற்கில் வசந்த மண்டபத்தையும் அதை ஒட்டி கிணற்றையும் வடகிழக்கில் வெளிப்பிரகார யாகசாலையும் அடுத்து தென்கிழக்கில் உத்சவ மண்டபத்தையும் வெளிப்பிரகார மடப்பள்ளியையும் காணலாம். உள்ளே நுழையும் போது வலம்புாி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

வலம்புாி விநாயகரைத் தாிசித்து மேலே சென்றால் கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து உட்பிரகார மடப்பள்ளி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள், பிள்ளையார், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். இரண்டு பிரகாரங்களை வலம் வந்து மூன்றாம் பிரகாரமான மகாதேவர் சன்னதிக்கு நுழையும் போது நடராஜர் சன்னதி உள்ளது. நடராஜர் சன்னதியிலிருந்து விரிஞ்சிபுரம் அருள்மிகு வழித்துணைநாதர் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் வளாகம் அருள்தரும் மரகதவல்லி அம்மையார் சன்னதிக்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா உற்சவமூர்த்திகளைக் கண்டு தாிசித்து மேலும் சென்றால், மிக கம்பீரமாகவும் நெடிதுயர்ந்தும் துவாரபாலகர்கள் நின்ற திருக்கோலத்தைக் காணலாம். இவர்களைக் கடந்தால் ஜலகண்டேஸ்வரர் லிங்கத் திருமேனியாக இருப்பதைக் காணலாம்.[1] கோயிலின் கிணற்றின் அருகே கங்கா பாலாறு ஈஸ்வரனும், அதன் அருகே கால பைரவரும் அடுத்து, நவக்கிரக சந்நிதியும், சனீஸ்வரரும், நந்திதேவரும் உள்ளனர். அடுத்து கொடி மண்டபமும் உள்ளது. தொடர்ந்து விநாயகர், வெங்கடேசப்பெருமாள், வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கால பைரவர், சனீஸ்வரர், 63 நாயன்மார்கள், நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.[2]

இறைவன், இறைவி

தொகு

மூலவர் சன்னதியின் முன்பாக கொடி மரம் மற்றும் பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. அருகில் நந்திதேவர் உள்ளார். இங்குள்ள மூலவர் ஸ்வரகண்டேஸ்வரர் என்றும், ஜலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள இறைவி அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.[2] அம்மன் சன்னதி சுவர்களில், விநாயகர், மாதேஸ்வாி, வைணஷ்ணவி, பிராஹி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ விக்ரகங்கள் எழிலோடு பதிக்கப்பட்டுள்ளன. அம்பாள் சன்னதியின் இருபுறமும் கம்பீரமாக துவாரபாலகியர் உள்ளனர். அம்பாள் சன்னதியின் எதிரே 1981 ஆம் ஆண்டு மயிலை குருஜி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நவசக்தி ஜோதி என்னும் நந்தாவிளக்குகள் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி கோடி தீபம் என்ற இலக்கை நோக்கி தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

கல்வெட்டுச் செய்திகள்

தொகு

கல்வெட்டுச் செய்திகள் பின்வருவனவற்றைத் தெரிவிக்கின்றன.[1]

  • ஜலகண்டேஸ்வரர் அந்நாளில் ஜ்வரகண்டேஸ்வரர் என்றழைக்கப்பட்டுள்ளார். ஜ்வரகண்டேஸ்வரர் என்றால் ஜுரத்தை அழிக்கும் ஈசன் எனப் பொருள். ஜ்வரகண்டேஸ்வரர் என்பது பின்னாளில் மருவி ஜலகண்டேஸ்வரர் என மாறியது.
  • இக்கோயிலுக்கு அரப்பாக்கம், முருக்கோி, சித்தோி, அரும்பரட்டி, சதுப்போி, சத்துவாச்சாாி, பெருமுகை, சேக்கனூர், சமங்கி நெல்லூர் ஆகிய ஒன்பது கிராமங்களை சின்ன பொம்மு நாயக்கர், விஜய நகரப் பேரரசுவிடம் இருந்து மானியமாகப் பெற்றுத் தந்துள்ளார். இவை அனைத்தும் வேலூருக்கு அருகிலேயே உள்ளன.
  • கோயிலின் முதல் கோபுர நுழைவாயிலின் இரண்டாவது நிலையில் வலது தூணில் மேற்குப்புறம் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் உயர்ந்து காணப்படுவது சதாசிவ தேவமகாராயர் மன்னராவார். அருகில் உள்ள சிறிய உருவம் சின்ன பொம்மு நாயக்கர் ஆவார். (இவை இரண்டும் இக்கோயிலைக் கட்டிய பொம்மிரெட்டி, திம்மிரெட்டி என பரம்பரையாகக் கூறி வருகின்றனர். இது தவறான தகவலாகும்.)
  • இக்கோயிலின் உட்பகுதியும், உட்சுவருடன் கூடிய உள்கோட்டைப் பகுதியும் "வென்று மண் கொண்ட சம்புவராயர்" காலத்தில் கட்டப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
  • பின்பு விஜய நகரப் பேரரசரான சதாசிவ தேவமகாராயரால் (பொ.ஊ. 1542, 1565) திருக்கோயிலில் மதில் சுவர்கள், இராஜகோபுரம், கல்யாணமண்டபம் முதலான விாிவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக அறிகிறோம். இத்திருப்பணி நடக்கும் சமயத்தில் சின்ன பொம்மு நாயக்கர் என்னும் பெயருடைய தளபதி அவற்றை மேற்பார்வை செய்து வந்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 ஏ. கே. சேஷாத்திாி "வரலாற்றில் வேலூர்க் கோட்டை" (1994 பதிப்பு)
  2. 2.0 2.1 2.2 ஜ.பாக்கியவதி, ஜாலம் காட்டும் சிற்பங்கள்: ஜலகண்டேஸ்வரர் கோயில், தினமணி, 2 செப்டம்பர் 2016

வெளி இணைப்புகள்

தொகு

படத்தொகுப்பு

தொகு