சுந்தரமூர்த்தி நாயனார்

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரும், 63 நாயன்மார்களில் 'ஆதிசைவர்' குலத்தைச் சேர்ந்தவருமாவார்.
(சுந்தரர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவ சமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.[1][2] இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார் எனப்படுகிறது.[3] பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர்.[3] திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.[3] திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.[3]

சுந்தரமூர்த்தி நாயனார்
பெயர்:சுந்தரமூர்த்தி நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:ஆடிச் சுவாதி
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருவஞ்சைக்களம்
சுந்தரர்
சுந்தரர் (இடமிருந்து மூன்றாமவர்)
பிறப்புதிருநாவலூர்
இறப்புதிருவஞ்சைக்களம்
சமயம்சைவ சமயம்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பக்தி நெறி

இவர் வாழ்ந்தது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[4] இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.[4] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.

இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்டநரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் 38000 பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது. ஆனால் கிடைத்தவை100 மட்டுமே. “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.

சுந்தரர் தேவாரம்

தொகு

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.[3] இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.[3] அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன.[3] தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.[3]

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.[5]

சுந்தரர் வரலாறு

தொகு

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர்.[3] இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.[3] நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாகக் கூறப்பட்டதால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.[4]

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.[4]

தடுத்தாட்கொள்ளல்

தொகு

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று வந்த முதியவர் ஒருவர், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதாக சுந்தரர் கருதினார், "பித்தா பிறை சூடி..." என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்..." எனத் தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

திருமணங்கள்

தொகு

திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். உன்னை விட்டுப் பிரியமாட்டேன் திருவெற்றியூரிலேயே உன்னுடன் வாழ்வேன் என்று சுந்தரர் சங்லியாருக்கு சிவபெருமான் அறிய வாக்களித்து அவரை மணக்கிறார். சில காலத்துக்குப் பிறகு திருவாரூரில் பரவையாரின் நினைவு வந்து வாட்ட அவரைக் காணவேண்டி தான் கொடுத்த வாக்கை மறந்து திருவொற்றியூரிலிருந்து புறப்படுகிறார். அப்போது சுந்தரருக்கு இரு கண்களிலும் பார்வை அற்றுப் போகிறது. கொடுத்த வாக்கை மீறியதால் தனக்கு இவ்வாறு நேர்ந்ததாக சுந்தரர் உணந்தார். பின்னர் ஆரூர் இறைவனைப் பாடி பார்வையைப் பெறுவேன் என்று பாடி தன் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தை அடைந்தபோது இவருக்கு இடது கண் பார்வை வந்தது. தன் பயணத்தில் வழியெல்லாம் பாடியபடி திருவாரூர் அடைந்த பிறகு சுந்தரருக்கு இன்னொரு கண் பார்வை கிடைத்தது. இது இறையருளாளே நடந்ததாக நம்பப்படுகிறது. இந்த தற்காலிகப் பார்வை இழப்புக்குக் காரணம் அமோரோசிஸ் பியுகாஸ் என்ற மருத்துவ சிக்கலே ஆகும், அதாவது விழித்திரையின் குருதி ஓட்டத்தில் திடீரென்று ஏற்படும் குறைவினால் ஏற்படும் தற்காலிக பாதிப்பாக இருக்கலாம் என்கிறார் வரலாற்று ஆய்வாளரும் கண் மருத்துவருமான இரா. கலைக்கோவன்.[6]

சிவபெருமான் செயல்

தொகு

அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.

இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை எனப்படுகிறது. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார் எனப்படுகிறது. சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றதாக நம்பப்படுகிறது. திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

முக்தி

தொகு

சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார் என்று நம்பப் படகிறது.

அற்புதங்கள்

தொகு
 
முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம்
  1. செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
  2. சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
  3. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
  4. அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.[3]
  5. வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.[3]

குருபூஜை

தொகு

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.[7]

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சுந்தரர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 63 நாயன்மார்கள், ed. (19 ஜனவரி 2011). சுந்தரமூர்த்தி நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 "தமிழாய்வு தளம்".
  4. 4.0 4.1 4.2 4.3 http://temple.dinamalar.com/news_detail.php?id=5683
  5. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை
  6. "பார்வையிழப்பின் மூவருலா". 2024-05-05. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  7. http://temple.dinamalar.com/news_detail.php?id=1363

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரமூர்த்தி_நாயனார்&oldid=4049291" இலிருந்து மீள்விக்கப்பட்டது