யானை

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தும்பிக்கையுடைய மிகப்பெரிய நிலப் பாலூட்டி
யானை
தான்சானியாவில் ஒர் ஆப்பிரிக்க யானை.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Proboscidea
பெருங்குடும்பம்:
Elephantoidea
குடும்பம்:
Elephantidae

Gray, 1821
Subfamilia
பிளிறல்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை; வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையில் உள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியன கூட நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை, ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

ஆண் யானைக்குக் களிறு என்று பெயர். பெண் யானைக்குப் பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.

யானையினங்கள் தொகு

 
தர்பூசணிப் பழத்தை உண்ணும் ஆசிய யானை

ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளைவிட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால், ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.

உணவும் வாழிடமும் தொகு

யானைகள் இலையுண்ணிகள் அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே, இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

உடலமைப்பு தொகு

 
தந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "யானைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.

தும்பிக்கை தொகு

யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒருசில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது எல்லாப்புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன.[1] தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கையின் முக்கியத்துவம் மிகப் பெரியது.

தந்தம் தொகு

 
உருசியாவை ஆண்ட இவானின் தந்தத்தினாலான அரியணை

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம். இத் தந்தங்கள் வியாபாரத்திற்காகவும் பயன்படுகின்றன. பல யானைகளைக் கொன்று எடுக்கப்பட்ட ஆறு டன் தந்தங்களை எதியோப்பியா நாடு 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தீயிட்டு அழித்தது.[2]

தோல் தொகு

யானையின் தோல் மிகவும் தடிப்பானது. உடலின் பெரும்பாலான பகுதிகளில் தடித்த தோல் காணப்படுகிறது. தோலின் தடிமன் ஏறத்தாழ இரண்டரை சென்டிமீட்டர் இருக்கும். எனினும் இதன் வாயைச் சுற்றியும் காதின் உட்பகுதியிலும் தோல் மெல்லியதாக உள்ளது. பொதுவாக ஆசிய யானைகளின் தோல் ஆப்பிரிக்க யானைகளை விடக் கூடுதலான முடியைக் கொண்டுள்ளது.

யானைகள் பொதுவாக சேற்றையோ மண்ணையோ உடல் முழுதும் பூசிக் கொள்கின்றன. இது யானைச் சமூகத்தின் ஒரு முக்கியக் குணம் ஆகும். இது யானையின் தோலை சூரிய வெப்பத்தில் இருந்தும் கதிர் வீச்சில் இருந்தும் காத்துக் கொள்ள உதவுகிறது. யானையின் தோல் தடித்து இருப்பினும் இதன் உணர்திறன் அதிகம். இதனாலேயே யானைகள் சேற்றையோ அல்லது குளித்த பின் மண்ணை வாரித் தூற்றிக் கொள்கின்றன.

கால்கள் தொகு

 
ஆசுத்திரேலியாவின் விலங்குக் காட்சியகம் ஒன்றில் ஆசிய யானை ஒன்று தன் கால்களால் தர்பூசணிப்பழமொன்றை உடைக்கும் காட்சி

யானையின் பெரிய உடலைத் தாங்குதற்கு ஏற்ப இவை வலிமையான கால்களைக் கொண்டுள்ளன. இவற்றின் கால்கள் செங்குத்தாக இருப்பதாலும் அகன்ற பாதங்கள் இருப்பதாலும் இவை நிற்பதற்கு தசையாற்றல் அதிகம் தேவையில்லை. எனவே இவற்றால் நீண்ட நேரம் இளைப்பாறாமல் நிற்க இயலும். ஆப்பிரிக்க யானைகள் நோயுற்றாலோ அல்லது காயம் பட்டாலோ தவிர பெரும்பாலும் அமர்வதில்லை. ஆனால் ஆசிய யானைகள் அடிக்கடி இளைப்பாறுகின்றன.

யானை அகன்ற வட்டமான அடியைப் (பாதம்) பெற்றுள்ளது. ஆப்பிரிக்க யானைக்கு பின்னங்கால்களில் மூன்று உகிர்களும் (நகங்கள்) முன்னங்கால்களில் நான்கும் உள்ளன. ஆசிய யானைக்குப் பின்னங்கால்களில் நான்கும் முன்னங்கால்களில் ஐந்துமாக உகிர்கள் உள்ளன. யானைகளால் நன்கு நீந்தவும் ஏறவும் முடியும். இவற்றால் குதிக்க இயலாது.

காதுகள் தொகு

யானைகள் நன்கு பெரிய அகன்ற மடல் போன்ற காதுகளைக் கொண்டுள்ளன. இவை யானையின் உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. யானையின் காதுகள் இரத்த நாளங்கள் நிரம்பியனவாய் உள்ளன. வெப்பம் மிகுந்த இரத்தம் காதுகளில் பாயும் போது சுற்றுப்புறக் காற்று பட்டு குளிர்கிறது. பின் இது உடலுக்குள் சென்று வெப்பநிலையைக் குறைக்கிறது. இரத்தச் சுழற்சியின் காரணமாக இச்செயல் தொடர்ந்து நிகழ்ந்து வெப்பநிலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. இதனாலேயே யானைகள் எப்போதும் காதுகளை அசைத்துக் கொண்டே இருப்பதைக் காணலாம். வளர்ந்த யானைக் காதுகளின் மேல் ஓரம் ஆசிய யானைக்கு வெளிப்புறம் மடிந்து இருக்கும், ஆப்பிரிக்க யானைக்கு உட்புறம் சுருண்டிருக்கும்.[3]

அறிவாற்றல் தொகு

 
தமிழ்நாடு கருநாடகா வனப்பகுதியில் உள்ள ஒரு தந்தம் இல்லாத இந்திய யானை

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். இது ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கன. விலங்குகளில் முதனிகளுக்கும் டால்பின்களுக்கும் அடுத்து யானைகளே அறிவாற்றல் நிரம்பியவையாகக் கருதப்படுகின்றன.

மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற் சிறந்தவையாக யானைகள் கூறப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.[4]

புலன் உணர்வு தொகு

யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத் திறனையுமே நம்பி வாழ்கிறது.[5] இவற்றின் தும்பிக்கையும் உணர் திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.

குமுக வாழ்க்கை தொகு

களிறுகளின் குமுக வாழ்க்கை முறையும் பிடிக்களின் வாழ்க்கை முறையும் வேறுபட்டவை. களிறுகள் தாம் பருவம் எய்தும் வரை தம் தாய் உள்ள குழுவோடு வாழும், பின் பெரும்பாலும் தனியாகவே வாழ்கின்றன. ஆனால் பிடிகள் நன்கு பிணைப்பான குடும்பமாக தாய், சகோதரி, மகள் என வாழ்கின்றன. இனப்பெருக்க காலங்களில் பருவமெய்திய பிடியும் தனித்துக்காணப்படும்.

தன்னுணர்வு தொகு

யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள், சில குரங்கினங்கள், டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. யானைகள் ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று சிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.[6]

இனப்பெருக்கம் தொகு

 
யானைக்கன்று

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

அச்சுறுத்தல்கள் தொகு

வேட்டையாடுதல் தொகு

யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடப்படுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அவை அளவு மீறி வேட்டையாடப்படுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதால் (அல்லது வேறு காரணங்களால்) யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறிய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது.

வாழிடம் சுருங்குதல் தொகு

 
யானையைப் பிடித்தல்

யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால், இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. காடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது.

யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.[7]

மனிதர்களும் யானைகளும் தொகு

 

யானைகள், மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும், எதிராகவும் கொல்லப்படுவதனால், யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள், பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது.

இறப்பு தொகு

இருதயக் கோளாறு, மாரடைப்பு, மூளையில் இரத்தக்கட்டி போன்றவற்றால் யானைகள் இறக்கக்கூடும்.[8]

சங்க இலக்கியங்களில் யானை தொகு

தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.விரிவாக தமிழ்விக்சனரியில் காணலாம். அவைகளில் சில வருமாறு;

1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் - சான்று[தொடர்பிழந்த இணைப்பு], 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம் / இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம்,26.நாகம் (கதநாகம்), 27.

பழமொழிகளும் சொலவடைகளும் தொகு

தமிழில் யானை பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

பழமொழிகள் தொகு

 • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
 • யானைக்கும் அடி சறுக்கும்.
 • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
 • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
 • யானை கறுத்தாலும் ஆயிரம் பொன்

சொலவடைகள் தொகு

 • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
 • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல

துணை நூற்பட்டியல் தொகு

 • ச, முகமது அலி; க, யோகானந்த் (நவம்பர் 2004). யானைகள் அழியும் பேருயிர். மேட்டுப்பாளையம்: மலைபடு கடாம் பதிப்பகம். p. 117.

மேற்கோள்கள் தொகு

 1. வ. ஷாலாயேவ், நி.ரீக்கவ் எழுதிய விலங்கியல் நூல்
 2. ஆறு டன் யானைத் தந்தங்களை எத்தியோப்பியா தீயிட்டு அழித்தது
 3. ச.முகமது அலி, பக். 16
 4. http://tamil.thehindu.com/opinion/columns/உடல்-பலத்தை-மிஞ்சிய-அறிவு-பலம்/article6465857.ece
 5. ச.முகமது அலி, பக். 21
 6. "சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்". பிபிசி. 11 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013.
 7. http://www.lastdaysofivory.com/
 8. ச.முகமது அலி, பக். 31

இவற்றையும் காண்க தொகு

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Elephantidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானை&oldid=3816261" இலிருந்து மீள்விக்கப்பட்டது