சிங்கம்

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய பூனை
சிங்கம்
அரிமா (ஆண் சிங்கம்)
பெண் சிங்கம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. லியோ
இருசொற் பெயரீடு
பாந்த்தரா லியோ
(லின்னேயசு, 1758)
ஆப்பிரிக்காவில் சிங்கங்களின் பரவல்
வேறு பெயர்கள்
பெலிசு லியோ
(லின்னேயசு, 1758)

சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

இந்தியாவில் கீர் காட்டில் அரிமாக்கள் வாழிடங்கள்

வாழிடமும் இயல்புகளும்

தொகு

சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க் காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தம் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும், இதுதான் தனது எல்லை என, மற்றைய சிங்கங்களுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.

சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின்படி இரு பாலினங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.

கூட்டம்

தொகு

சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஓர் அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.

கலப்பு இனங்கள்

தொகு

சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளன. அறியப்பட்ட அனைத்து பூனை குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப் போலவே கலப்பினச் சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதே வேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம் பெற்றுள்ளது.

வழக்காறுகள்

தொகு
  1. பொதுவாக சிங்கத்தைக் காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது.[3] ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றன.
  2. ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும்.
  3. ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஓர் இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடித் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nowell & Bauer (2004). Panthera leo. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a lengthy justification of why this species is vulnerable
  2. திரிகூடராசப்பக் கவிராயர் (2007). திருக்குற்றாலக்குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். p. 128. ஆளிபோற் பாய்ந்தசுரும் பிசைகேட்கும் திரிகூடத தமலர் நாட்டில் {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  3. "Tiger Kills Lion In Turkish Zoo". BBC News. 7 March 2011. http://www.bbc.co.uk/news/world-europe-12669308. பார்த்த நாள்: 14 March 2011. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கம்&oldid=3694772" இலிருந்து மீள்விக்கப்பட்டது