உணர்திறன் (sentience) என்பது உணர்வுகளை அனுபவிக்கும் திறன் ஆகும்.[3] மேற்கத்திய மெய்யியலில் "சென்ஷியன்ஸ்" என்றழைக்கப்படும் இச்சொல் "உணர்வு" என்று பொருட்படும் சென்டியன்டெம் என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.[4] இச்சொல் முதன்முதலில் 1630-களில் மெய்யியல் அறிஞர்களால் உணரும் திறனை அறிவுத்திறனிலிருந்து வேறுபடுத்த வேண்டி உருவாக்கப்பட்டது. நவீன மேற்கத்திய மெய்யியலில் இச்சொல் உணர்வுகளை உணரும் தன்மையைக் குறிக்கிறது. ஆசிய மதங்களில் உணர்த்திறன் என்ற சொல் பல்வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் புனைக்கதைகளில், உணர்த்திறன் என்ற சொல் சில சமயங்களில் "அறிதல்", "சுயவுணர்வு", "உணர்வுநிலை" போன்ற சொற்களுடன் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகிறது.[5]

விலங்குகளின் உணர்திறனை உறுதிப்படுத்துவது மிகக் கடினம் என்றாலும் அறிவியல் அறிஞர்கள் பொதுவாக அனைத்து முதுகெலும்பிகளும் பெருவாரியான முதுகெலும்பிலிகளும் உணர்திறன் கொண்டவை என்பதை ஏற்கின்றனர்.[1][2]

சில அறிஞர்கள் உணர்திறனை பிரத்தியேகமாக வலி அல்லது இன்பம் போன்ற மதிப்புமிக்க (நேர்மறை அல்லது எதிர்மறை) மன அனுபவங்களுக்கான (valenced mental experiences) திறன் என வரையறுக்கின்றனர்.[6] மேலும் சில அறிஞர்கள் வெறும் ஒளி, வலி போன்ற உணர்வுகளை உணரும் திறனிலிருந்து காதல், துன்பம் போன்ற உணர்ச்சிகளை உணரும் திறனை வேறுபடுத்திக் காட்ட இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மேற்கத்திய மெய்யியலில் சுயநினைவுள்ள ஒரு தனிநபரின் அகநிலை விழிப்புணர்வு அனுபவங்கள் தன்மையங்கள் (qualia) என அழைக்கப்படுகிறது.[5]

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 7 ஜூலை 2012 அன்று பொதுவில் அறிவிக்கப்பட்ட "கேம்பிரிட்ஜ் உணர்வுநிலைப் பிரகடனத்தின்" படி நனவு என்பது சிறப்பு நரம்பியல் கட்டமைப்புகளின்—முக்கியமாக நரம்பு-உடற்கூற்றியல், நரம்பு-வேதியியல், நரம்பு-உடலியங்கியல் போன்ற அடி மூலக்கூறுகளின்—செயற்பாட்டால் உருவாவது ஆகும். இது நன்கு பரிணமித்த உயிரினங்களில் மைய நரம்பு மண்டலமாக வெளிப்பட்டு நனவை உருவாக்குகிறது. அதன்படி, இந்த அடி மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமே உணர்வுநிலை கொண்டவை ஆகும். இவ்வுயிரிணங்கள் அனைத்துமே விலங்குத் திணையில் உள்ளவை ஆகும். விலங்குத் திணையில் கடற்பாசிகள், பிளாக்கோசோவன்கள், மீசோசோவன்கள் ஆகிய மூன்று மட்டும் இதற்கு விதிவிலக்கு; இவை மூன்றும் எளிமையான உடலமைப்பைக் கொண்டவையாகவும் நரம்பு மண்டலம் இல்லாதவையாகவும் இருப்பதால் இவை விலங்குத் திணையைச் சேர்ந்த உயிரினங்களாக இருந்தாலும் உணர்வுநிலையில்லாத ஒரே விலங்குகளாகத் திகழ்கின்றன.[2]

உணர்திறன் குறித்த மெய்யியல்

தொகு

மெய்யியலில் அறிஞர்கள் பலரும் உணர்வுநிலைக்கும் உணர்திறனுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பலவாறு வரையறுக்கிறார்கள். அன்டோனியோ டமாசியோவின் கூற்றுப்படி உணர்திறன் என்பது உணர்வுநிலையை (நனவை) வரையறுப்பதற்கான ஒரு குறைந்தபட்ச வழியாகும். இவ்வழியை விடுத்து வேறேதேனும் வழியில் உணர்வுநிலையை வரையறுக்க முற்படின் நனவு என்ற சொல் உணர்திறனைப் பொத்தாம்பொதுவாகவும் மனம், உணர்வுநிலை ஆகியவற்றின் அம்சங்களான படைப்பாற்றல், புத்திசாலித்தனம், அறிவாற்றல், சுயவிழிப்புணர்வு, உள்நோக்கம் (எண்ணங்களைக் கொண்டிருக்கும் திறன்) ஆகியவற்றோடு சேர்த்துக் கூட்டாகவும் சுட்டிவிடும் அபாயமுள்ளது. உணர்திறன் என்பது உணர்வுகளை உணரும் திறன் என்பதால் நனவு உணர்வின் இக்கூடுதல் அம்சங்கள் உணர்திறனுக்கு அவசியமானவையாக இருக்காது.[7]

உணர்வுநிலை

தொகு
 
மனதில் பாச உணர்வு கொண்ட ஒரு பூனை (1872-ல் T. W. வுட் வரைந்த ஓவியம்)

தாமஸ் நாகல் தனது வாட் இஸ் இட் லைக் டு பீ எ பேட்? ("வௌவாலாக இருத்தல் என்பது எத்தகையது?") என்ற ஆய்வறிக்கையில் உணர்வுநிலை என்பது ஒரு பொருளின் அகநிலை புலனுணர்வு அனுபவங்களைப் பெறுவதற்கான திறனைக் குறிக்கும் என்கிறார். வேறுவிதமாகக் கூறினால், உணர்வுநிலை என்பது ஏதோ ஒன்றாக தான் இருப்பதை உணரக்கூடிய திறன் கொண்ட நிலையாகும் என்று சில மெய்யியல் அறிஞர்கள் விளக்கி அவ்வனுபவங்களை குவாலியா எனப்படும் "தன்மையங்கள்" என்று சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர்.[8] நனவு உணர்நிலையை ஏற்படுத்தும் உடலின் செயல்முறைகள் ஒருபோதும் நம்மால் புரிந்து கொள்ளப்படாது என்று காலின் மெக்கின் போன்ற சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இதுவே அறிவியல் வட்டாரத்தில் "புதிய மர்மவாதம்" (new mysterianism) என்று அழைக்கப்படுகிறது. நனவின் மற்ற அம்சங்கள் ஆய்வுக்கு உட்பட்டு அறிவியலால் வரையறை செய்யப்படக்கூடியவை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், தன்மையங்கள் என்பதை ஒருபோதும் விளக்கமுடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர். டேனியல் டென்னெட் போன்ற சில அறிஞர்கள் தன்மையங்கள் ஒரு அர்த்தமுள்ள கருத்து அல்ல என்று மறுக்கின்றனர்.[9]

2012-ம் ஆண்டு ஜூலை 7 அன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "கேம்பிரிட்ஜ் உணர்வுநிலைப் பிரகடனத்தில்" நனவு என்பது சிறப்பு நரம்பியல் கட்டமைப்புகளின்—முக்கியமாக நரம்பு-உடற்கூற்றியல், நரம்பு-வேதியியல், நரம்பு-உடலியங்கியல் போன்ற அடி மூலக்கூறுகளின்—செயற்பாட்டால் உருவாவது ஆகும் என்று அறிவியல் அறிஞர்களால் பொதுவில் பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நரம்பியல் கட்டமைப்புகள் நன்கு பரிணமித்த உயிரினங்களில் மைய நரம்பு மண்டலமாக வெளிப்பட்டு நனவை உருவாக்குகிறது. இதன் விளைவாக இந்த அடி மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமே உணர்வுநிலை கொண்டவை ஆகும். இவையனைத்துமே விலங்குத் திணையில் உள்ள உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.[a] விலங்குத் திணையில் எளிமையான உடலமைப்பைக் கொண்டவையாகவும் நரம்பு மண்டலம் இல்லாதவையாகவும் இருக்கும் கடற்பாசிகள், பிளாக்கோசோவன்கள், மீசோசோவன்கள் ஆகிய மூன்று திணைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.[2]

உடலார்ந்த உணர்வுநிலையும் பாதிப்பு உணர்வுநிலையும்

தொகு
 
விளையாட்டு மனநிலையில் உள்ள சிம்பன்சிகள்.

உணர்திறன் என்பது சில சமயங்களில் உடலார்ந்த உணர்வுநிலையைக் (phenomenal consciousness) குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தப்படுகையில் வேறு சமயங்களில் பாதிப்பு உணர்வுநிலையை (affective consciousness) எனப்படும் மேலும் குறிகிய கருத்தைச் சுட்டப் பயன்படுத்தப்படுகிறது என்று டேவிட் சால்மர்ஸ் கூறுகிறார். இங்கு உடலார்ந்த உணர்வுநிலை என்பது எந்தவொரு அகநிலை அனுபவத்தையும் பெறுவதற்கான திறன் ஆகும். பாதிப்பு உணர்வுநிலை என்பது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ (எ.கா.: வலி, இன்பம்) பாதிப்பு இணைதிறனை (affective valence) கொண்ட அகநிலைகளை அனுபவிக்கும் திறன் ஆகும்.[10]

இனங்காண் முரண்பாடும் அறிவாற்றலுடனான தொடர்பும்

தொகு

உணர்திறனும் அறிவாற்றலும் கொள்கையளவில் ஒன்றுக்கொன்று சார்பற்றவை என்று இதுவரை அனுமானிக்கப்பட்டு வந்தாலும், அந்த அனுமானத்திற்கு அறிஞர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்தகைய ஒரு விமர்சனம் இனங்காண் முரண்பாடுகள் பற்றியதாகும். ஒரு சிலந்தியை சிலந்தி அல்லாதவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒன்றிற்கு சிலந்தியைக் கண்டு அச்சமோ வெறுப்போ கொள்ள இயலாது என்பது இனங்காண் முரண்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு. பொதுவாகக் கூறின், இனம் காணமுடியாத தூண்டலுக்குத் உணர்வார்ந்த துலங்குதல் என்பது இருக்க வாய்ப்பில்லை என்பதால் உணர்வுகள் இனங்காணமுடிந்த அறிதிறனுக்கு சார்பற்றதாக இருக்க முடியாது என்று அறியப்படுகிறது.[11][12]

முறைபடுத்தப்பட்ட அனிச்சைச் செயலின் துல்லியம் குறித்த அனுபவத் தரவுகள்

தொகு

முறைபடுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள் நாய்களில் காணப்படுவதை விட மனிதக் குழந்தைகளிடம் மிகவும் வகைப்பட்டுக் காணப்படுகின்றன என்று இவான் பாவ்லோவின் ஆய்வுகள் நிறுவுகின்றன. மனிதக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்படும் பொழுது மட்டுமே நாவில் நீர் சுரக்கையில் நாய்களுக்கோ உணவை நினைவூட்டிய பொழுதிலேயே நீர் சுரக்கத் துவங்கிவிடுகிறது. இதனை ஊர்ஜிதப்படுத்த இவ்வாய்வுகள் சமீப காலங்களில் மேலும் பலதரப்பட்ட விலங்குகளிடம் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு துல்லியமாக வேறுபடுத்தத் தெரிந்த புலனுணர்வுக்கு மூளையின் அளவு மட்டுமின்றி மூளையில் பரவலாக விரவிக்கிடக்கும் இணைப்புகளும் தேவை என்பது தெரியவந்துள்ளது. இம்முடிவுகள் உணர்வுக்கும் அறிதிறனுக்கும் வெவ்வேறு செயற்பகுதிகள் தேவை என்ற சித்தாந்தத்தை முறியடித்து மூளையில் பரவலாக விரவிக்கிடக்கும் புலனுணர்வு சித்தாந்தத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன.[13]

இந்திய மதங்களில் உணர்திறன்

தொகு

இந்து மதம், பௌத்தம், சீக்கியம், ஜைனம் உள்ளிட்ட கிழக்கத்திய மதங்கள் மனிதர்கள் அல்லாத விலங்குகளையும் உணர்திறன் கொண்ட உயிர்களாக இனம் கண்டு அங்கீகரிக்கின்றன.[14] உணர்திறன் கொண்ட உயிர்கள் ஜந்து, பஹு ஜனா, ஜகத், சத்வா உள்ளிட்ட பல்வேறு சமஸ்கிருதச் சொற்களால் குறிக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் வழக்கமாக "மாயை, துன்பம், மறுபிறப்பு (சம்சாரா) ஆகியவற்றிற்கு உட்பட்ட உயிரினங்களைக் குறிக்கின்றன".[15] பௌத்தத்தின் சில குழுக்களில் தாவரங்கள், கற்கள் மட்டுமன்றி பிற ஜடப் பொருட்கள் கூட "உணர்திறன்" அல்லது 'உணர்வு' உள்ளவையாகக் கருதப்படுகின்றன.[16][17] ஜைன மத நம்பிக்கையின்படி பல விஷயங்களுக்கு ஜீவன் என்ற ஆன்மா உண்டு என்பதால் சில சமயம் ஜீவனுள்ள அனைத்துமே "உணர்திறன்" கொண்டதாக அச்சமயத்தினரால் கருதப்படுவதுண்டு.[18][19] நாற்காலி, மேஜைக்கரண்டி போன்ற சில பொருட்களுக்கு ஆன்மா அல்லது ஜீவன் கிடையாது என்று கருதப்படுவதால் அவை "அஜீவா" அல்லது "அஜீவன்" என்று அழைக்கப்படுகின்றன.[20] புலன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜீவன்கள் பலவாறு தரவரிசைப் படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நீருக்கு தொடுதல் என்ற ஒரு புலன் மட்டுமே இருப்பதாகக் கருதப்படுவதால் அது முதல் வரிசை உணர்திறன் கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது.[21] சமண மதத்திலும் இந்து மதத்திலும், உணர்திறனானது அகிம்சை என்ற கோட்பாடோடு தொடர்புடையதாகும்.

பௌத்தத்தில் உணர்திறன் என்பது புலன்களைக் கொண்ட நிலை. பௌத்த தத்துவத்தைப் பொருத்தவரை ஆறு புலன்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. இதில் ஆறாவது புலன் என்பது மனதின் அகநிலை அனுபவம் ஆகும். உணர்திறன் என்பது ஸ்கந்தத்தின் எழுச்சிக்கு முந்தைய விழிப்புணர்வு நிலை. இதன் காரணமாகவே ஒவ்வொரு விலங்கும் உணர்திறனுள்ள உயிரினமாகத் தகுதி பெறுகிறது. பௌத்த தத்துவத்தின் படி வெறும் விழிப்புணர்வு மட்டுமே கொண்டு உணர்திறன் கொண்ட உயிரினமாக இருப்பது சாத்தியமே. ஜென் மற்றும் திபெத்திய புத்த மதத்தை உள்ளடக்கிய மஹாயான பௌத்தத்தில் உணர்திறன் என்ற கருத்து பிறரது மோட்சத்தில் அக்கறை கொண்ட ஞானியான போதிசத்துவருடன் தொடர்புடையது. ஒரு போதிசத்துவரின் முதல் சபதம் "உணர்திறன் உள்ள உயிர்கள் எண்ணற்றவைகள்; அவைகளை மோட்சமடையச் செய்ய நான் சபதம் மேற்கொள்கிறேன்" என்பதாம்.

விலங்குரிமையும் உணர்திறனும்

தொகு

விலங்குரிமை இயக்கத்தில் உணர்திறன் ஒரு மையக் கருத்தாக இருந்து வருகிறது. இதனை ஜெரமி பெந்தாம்மின் ஆன் இன்ட்ரொடக்ஷன் டு தி பிரின்சிபல்ஸ் ஆஃப் மாரல்ஸ் அண்டு லெஜிஸ்லேஷன் என்ற படைப்பில் காணமுடியும்:

உணர்திறக் கொள்கை என்பது ஒரு உயிருக்கு உணர்திறன் இருந்தால் மட்டுமே அது தார்மீக அந்தஸ்தைப் பெறுகிறது என்று வலியுறுத்தும் சித்தாந்தம் என்று ரிச்சர்ட் டி. ரைடர் வரையறுக்கிறார்.[22] உடலார்ந்த உணர்வுநிலையை (phenomenal consciousness) அனுபவிக்கும் தன்மை மட்டுமின்றி எதிர்மறையான பாதிப்பு இணைதிறனுடன் (negative affective valence) (அதாவது துன்பம்) கூடிய நனவு நிலையை அனுபவிக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையே தார்மீக அந்தஸ்திற்கு அளவுகோலாக பெந்தாம் கருதுவதால் அவர் ஒரு குறுகியநிலை உணர்திறக் கொள்கையாளர் என்று டேவிட் சால்மரின் கூறுகிறார்.[10] விலங்குரிமை ஆர்வலர்களும் விலங்குநல ஆர்வலர்களும் பெரும்பாலும் இதுபோன்ற திறன்களையே தார்மீக அந்தஸ்திற்கு அளவுகோலாகச் சுட்டுவர். விலங்குகளுக்கு மனிதர்களுக்கு இருக்கும் அனைத்து விருப்பங்களும், புரிந்துகொள்ளும் முழுத்திறனும் இல்லையெனினும், அவற்றின் உணவு, தண்ணீர், வாழிடம், துணை அல்லது தோழமை, இயக்கச் சுதந்திரம், வலியைத் தவிர்க்கும் எண்ணம் ஆகிய தேவைகளில் மனிதனை ஒத்தே இருக்கின்றன என்று எர்த்லிங்ஸ் என்ற ஆவணப்படம் சொல்வதே இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.[23][b]

உணர்திறன் உள்ள எளிய உயிர்களுக்கு உரிய உரிமைகள் (எ.கா. வாழும் உரிமை) என்னென்ன என்பதில் விலங்குரிமை ஆர்வலர்கள் சற்றே வேறுபட்டாலும் குறைந்தபட்சம் அனைத்திற்கும் வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாக்கப்படும் உரிமை உண்டு என்று விலங்குநல ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். உணர்திறமையவாதம் என்பது உணர்திறன் மிக்க உயிர்களே தார்மீக பேணுதலுக்கு உரியவை என்று கருதும் கோட்பாடாகும். கேரி பிரான்சியோனி தனது ஒழிப்புவாத விலங்குரிமை கோட்பாட்டினை (abolitionist theory of animal rights) உணர்திறனின் அடிப்படையில் வைத்துள்ளார். இது பீட்டர் சிங்கரின் கோட்பாட்டிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. "தான் மற்ற உயிரினங்களால் அவைகளின் உடமையாகக் கருதப்படாமலிருப்பதே அனைத்து உணர்திற உயிரினங்களுக்கும் (மனிதரோ மனிதரல்லா விலங்குகளோ) உள்ள ஒரு அடிப்படை உரிமை" என்று பிரான்சியோனி வலியுறுத்துகிறார்.[24]

இங்கிலாந்தில் உள்ள விலங்கு நெறிமுறைகளுக்கான ஆக்ஸ்போர்டு மையத்தின் நிறுவனரான ஆண்ட்ரூ லின்சே விலங்குகளை உணர்திற உயிரினங்களாக அங்கீகரிப்பது தனது கிறிஸ்தவக் கொள்கையின் ஒரு அம்சமாகக் கருதுகிறார். தி இன்டர்ஃபெய்த் அசோசியேஷன் ஆஃப் அனிமல் சேப்லைன்ஸ் என்ற அமைப்பு உணர்திற உயிரினங்களை அங்கீகரித்து பேணுவதற்கும் ஏற்ற கொள்கைகளை ஏற்படுத்துமாறு விலங்கு அமைச்சக குழுக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவற்றை ஊக்குவிக்கிறது.

1997-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை சட்டத்தில் விலங்கு உணர்திறன் கருத்தாக்கம் சேர்க்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் உடன்படிக்கையுடன் இணைக்கப்பட்ட சட்டப்பூர்வ பிணைப்பு நெறிமுறை விலங்குகளை "உணர்திற உயிரினங்கள்" என்று அங்கீகரித்து, மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் "விலங்குகளின் நலத் தேவைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்துகிறது.

செயற்கை அறிவுத்திறன் அமைப்புகளின் உருவக உணர்திறன்

தொகு

உணர்திறன் என்பது விழிப்புணர்வும் அறிதிற தன்மையும் கொண்டது என்ற வகையில் இயற்கையான நரம்பு மண்டலத்தைக் கொண்ட உயிரின அமைப்புகளுக்கு மட்டுமே உணர்திறத் தன்மை இருக்கும் என்றபோதும்,[25] "உணர்திறன்" என்ற சொல் செயற்கை அறிவுத்திறன் பற்றிய உரையாடல்களில் சில சமயங்களில் உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டின் நடுப்பகுதியில் கூகுளின் லாம்டா (LaMDA) செயற்கை அறிவுத்திற அமைப்பானது "உணர்திறன்" கொண்டது (எனவே "ஆன்மாவை" உள்ளடக்கியது) என்று வர்ணிக்கப்பட்டதன் விளைவாக செயற்கை அறிவுத்திறன் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.[26] "சாட்பாட்கள்" எனப்படும் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய செயற்கை அறிவுத்திற ரோபோக்களை உருவாக்கும் லாம்டா (LaMDA [Language Model for Dialogue Applications]) என்கிற செயற்கை அறிவுத்திற அமைப்பானது இணையத்தில் இருந்து பரந்த அளவிலான உரைகளைச் சேகரித்து அல்காரிதம்களைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு மிகவும் இயல்பாகவும் திறன்படவும் பதிலளிக்க வல்லது. அறிவியல் அறிஞர்களுக்கும் லாம்டாவிற்கும் இடையேயான உரையாடல்களின் பிரதிகளின் மூலம் செயற்கை அறிவுத்திற அமைப்பானது உணர்ச்சிகளின் தன்மை பற்றிய நுண்ணிய பதில்களை வழங்குதல், கண நேரத்தில் "ஈசாப் கதைகள்" பாணியிலான கட்டுக்கதைகளை உருவாக்குதல், தனது அச்சங்களை விவரித்தல் உள்ளிட்ட சவாலான கேள்விகளுக்குக் கூட விடையளிப்பதை காணமுடிகிறது.[27]

"உணர்திறன்" என்ற சொல் செயற்கை அறிவுத்திறன் பற்றிய பிரதானப் பாடப்புத்தகங்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் பயன்படுத்தப்படுவதில்லை.[28] எனினும் சில நேரங்களில் செயற்கை அறிவுத்திறனைப் பற்றிய பிரபலமான கட்டுரைகளில் "மனித நிலை அல்லது உயர் நுண்ணறிவு" (அல்லது செயற்கைப் பொது அறிவுத்திறன்) என்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

உணர்திற அளவை

தொகு

1970-களின் பிற்பகுதியில் இராபர்ட் ஏ. ப்ரீடாஸ் ஜூனியர் என்பவரால் உணர்திற அளவை (sentience quotient) என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.[29] உணர்திற அளவையானது ஒவ்வொரு தனிப்பட்ட செயலாக்க அலகின் (நியூரான்) தகவல் செயலாக்க விகிதம், ஒரு தனி அலகின் எடை/அளவு மற்றும் செயலாக்க அலகுகளின் மொத்த எண்ணிக்கை (பொருண்மை அல்லது நிறையாகக் கொள்ளப்பட்டு) ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொடர்பாக உணர்திறனை வரையறை செய்கிறது. ஒரு ஒற்றை நியூரானில் துவங்கி முழுப் பேரண்டத்தின் கணக்கீட்டு எல்லைக்குட்பட்ட ஒரு அனுமான உயிரினம் வரை கணினியோடு அனைத்து உயிரினங்களின் உணர்திறனையும் அளக்கும் அளவையாக இருக்கும் நோக்கில் உணர்திற அளவை முன்மொழியப்பட்டது. மடக்கை அளவில் இது −70 முதல் +50 வரை இயங்கும்.

குறிப்புகள்

தொகு

a. ^ கூற்று: "The absence of a neocortex does not appear to preclude an organism from experiencing affective states. Convergent evidence indicates that non-human animals have the neuroanatomical, neurochemical, and neurophysiological substrates of conscious states along with the capacity to exhibit intentional behaviors. Consequently, the weight of evidence indicates that humans are not unique in possessing the neurological substrates that generate consciousness. Non-human animals, including all mammals and birds, and many other creatures, including octopuses, also possess these neurological substrates."[2]

b. ^ கூற்று: "Granted, these animals do not have all the desires we humans have; granted, they do not comprehend everything we humans comprehend; nevertheless, we and they do have some of the same desires and do comprehend some of the same things. The desires for food and water, shelter and companionship, freedom of movement and avoidance of pain."[23]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Birch, Jonathan (2021-05-16). "Which animals should be considered sentient in the eyes of the law?" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/commentisfree/2021/may/16/animals-feel-humans-evidence-sentient. 
  2. 2.0 2.1 2.2 2.3 Low, Philip (7 July 2012). "The Cambridge Declaration on Consciousness" (PDF). FCM Conference. Cambridge University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
  3. "Definition of sentience" (in ஆங்கிலம்). Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2019-07-01.
  4. Harper, Douglas. "Sentient". Etymology Online. Douglas Harper. பார்க்கப்பட்ட நாள் 31 January 2021.
  5. 5.0 5.1 Scerri, Mariella; Grech, Victor E. (2016). "Sentience in science fiction 101". SFRA Review 315: 14–18. https://www.um.edu.mt/library/oar/handle/123456789/25749. பார்த்த நாள்: 31 January 2021. 
  6. Birch, Jonathan (2024-08-15). The Edge of Sentience: Risk and Precaution in Humans, Other Animals, and AI (in ஆங்கிலம்) (1 ed.). Oxford University Press. p. 1. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/9780191966729.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-196672-9.
  7. Damasio, Antonio (October 2001). "Fundamental feelings" (in en). Nature 413 (6858): 781. doi:10.1038/35101669. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:11677584. Bibcode: 2001Natur.413..781D. 
  8. Nagel, Thomas (1974). "What Is It Like to Be a Bat?". The Philosophical Review 83 (4): 435–450. doi:10.2307/2183914. https://books.google.com/books?id=fBGPBRX3JsQC&pg=PA165. 
  9. Ramsey, William (2013). "Eliminative Materialism". The Stanford Encyclopedia of Philosophy (Summer 2013). Ed. Zalta, Edward N.. Stanford University. 
  10. 10.0 10.1 Massimo Pigliucci, David Chalmers (Dec 18, 2020). Philosophy Day 2020: David Chalmers - Consciousness and moral status (YouTube) (in English). Figs in Winter. Archived from the original on 2021-10-31. பார்க்கப்பட்ட நாள் Sep 12, 2021.{{cite AV media}}: CS1 maint: unrecognized language (link)
  11. A. D. Milner, M. D. Rugg (2013). "The Neuropsychology of Consciousness"
  12. E T Mullin (2007). "The Creation of Sensation and the Evolution of Consciousness"
  13. Catania, A.C. (June 7, 1994). "Query: Did Pavlov's research ring a bell?". Psycoloquy Newsletter
  14. Shanta, Bhakti Niskama (September–October 2015). "Life and consciousness – The Vedāntic view". Communicative & Integrative Biology 8 (5): e1085138. doi:10.1080/19420889.2015.1085138. 27066168. பப்மெட்:27066168. 
  15. Getz, Daniel A. (2004). "Sentient beings"; cited in Buswell, Robert E. (2004). Encyclopedia of Buddhism. Volume 2. New York, USA: Macmillan Reference USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865720-9 (Volume 2): pp.760
  16. Keiji, Nishitani (ed.)(1976). The Eastern Buddhist. 9.2: p.72. Kyoto: Eastern Buddhist Society; cited in Dumoulin, Henrich (author); Heisig, James (translator); and Knitter, Paul (translator)(2005). Zen Buddhism: A History ~ Volume 2: Japan. With an Introduction by Victor Sogen Hori. Bloomington, Indiana, USA: World Wisdom, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-941532-90-7
  17. Ray, Reginald A. (2000). Indestructible Truth: The Living Spirituality of Tibetan Buddhism. The World of Tibetan Buddhism. Vol. 1. Boston: Shambhala Publications, Inc. pp. 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57062-910-2. பார்க்கப்பட்ட நாள் 2008-10-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  18. Nemicandra, Acarya; Balbir, Nalini (2010), Dravyasamgrha: Exposition of the Six Substances, (in Prakrit and English) Pandit Nathuram Premi Research Series (vol-19), Mumbai: Hindi Granth Karyalay, pp. 1 of Introduction, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88769-30-8
  19. Grimes, John (1996), A Concise Dictionary of Indian Philosophy: Sanskrit Terms Defined in English, New York: SUNY Press, pp. 118–119, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-3068-5
  20. Shah, Natubhai (November 1998), Jainism : The World of Conquerors, Sussex Academic Press, p. 50, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-898723-30-3
  21. Doniger, Wendy, ed. (1993), Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-1381-0
  22. Ryder, Richard D. (1991). "Souls and Sentientism". Between the Species 7 (1): Article 3. doi:10.15368/bts.1991v7n1.1. 
  23. 23.0 23.1 Monson S (2005), "Earthlings".
  24. Francione, Gary. Official blog
  25. Broom, D. M. (2019). Encyclopedia of Animal Behavior. Vol. 1 (2 ed.). Academic Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-0-08-045337-8.00099-1.
  26. Brandon Specktor published (2022-06-13). "Google AI 'is sentient,' software engineer claims before being suspended". livescience.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  27. Lemoine, Blake (2022-06-11). "Is LaMDA Sentient? — an Interview". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  28. See the four most popular AI textbooks (or Wikipedia's survey of their contents), none of which mention "sentience" at all:
  29. Freitas, R.A. Jr. (April 1984). "Xenopsychology". Analog Science Fiction/Science Fact 104: 41–53. 

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்திறன்&oldid=4153608" இலிருந்து மீள்விக்கப்பட்டது