செவி

ஒலி உணரும் உறுப்பு
(காது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது இரு முக்கிய ஆனால் வேறுபட்ட புலன்களை நமக்கு அளிக்கிறது. அவை கேட்டல், சமநிலைப் படுத்துதல் என்பவையாகும். செவிகளால் உணரப்படும் ஒலி நமது சுற்றுப்புறத்தைக் குறித்த தகவல்களை நமக்கு அளிக்கிறது. நாம் அதனுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. நாம் கீழே விழாமல் நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கு தேவையான சமநிலையை காதுகள் நமக்கு அளிக்கின்றன.

மனிதச் செவி

பாலூட்டிகளின் காது பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். புறச்செவியானது செவிமடல், புறச்செவி குழாய் என்ற இரு பகுதிகளால் ஆக்கப்பட்டு பார்க்கக்கூடிய வகையில் வெளிப்புறமாக அமைந்துள்ளது[1]. காது என்ற சொல் பெரும்பாலும் வெளிப்புறமாகத் தெரியும் புறச்செவியையே குறிப்பதாகக் கருதப்படுகிறது. செவிப்பறை குழி மற்றும் மூன்று செவிக் குருத்தெலும்புகளால் நடுச்செவி ஆக்கப்பட்டுள்ளது. எலும்புச்சிக்கல் வழியில் உட்செவி அமைந்துள்ளது. பல முக்கியமான உணர்வுகளுக்குக் காரணமான கட்டமைப்புகள் இங்குதான் உள்ளன. நகர்ந்து செல்லும்போது அரைவட்டக் குழாய்கள் சமநிலையையும் கண்களைத் தொடரவும் செய்கின்றன. நிலையாக ஓரிடத்தில் நிற்கையில் காற்றுப் பைகளும், உணர்வு செல் படுகையும் சமநிலையைக் காக்கின்றன. செவிக்குழாய் திரவமான காக்லியா கேட்கும் தன்மையையும் அளிக்கின்றது.

முதுகெலும்புள்ள விலங்குகளின் காதுகள் அவற்றின் தலையின் இருபுறத்திலும் சற்றே சமச்சீர் நிலையில் அமைந்துள்ளன. இவ்வமைப்பு ஒலி பரவலை ஓரிடத்தில் சேர்ப்பதற்கான ஓர் ஏற்பாடு ஆகும். ஆரம்ப வளர் கருவில் வளர்ந்த சிறிய ஆறு மூலத் தடிப்புகள் மற்றும் தொண்டைப்பையிலிருந்து காது தொடங்குகிறது. இவை புறத்தோற் படையிலிருந்து உருவானவையாகும்.

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளினால் காது கேளாமை அல்லது செவிடாகும் நிலை ஏற்படும். நோய்த்தொற்று, தலைக்காயம், வெடிச்சத்தம், கனத்த சத்தம் கேட்டல் ஆகியவற்றால் காது நோய்கள் ஏற்படும். புறச்செவி அல்லது நடுச்செவியில் கோளாறு ஏற்பட்டால் கடத்தல் குறைபாடு உண்டாகி கேளாத்தன்மை ஏற்படும். காக்லியாவில் உள்ள சிறிய மயிரிழை செல்கள் பாதிக்கப்படுவதால் உணர்தல் வகை கேளாத்தன்மை உண்டாகும். காக்லியாவிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பில் ஏதேனும் பிரச்சினை என்றால் உணர்நரம்பியல் காது கேளாத்தன்மை ஏற்படுகிறது. காது நோய்களால் செரிமான இழப்பு, காது இரைச்சல், மற்றும் சமநிலைச் சீர்குலைவால் மயக்கம் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். மூளையும் நரம்பியல் பாதைகளில் பாதிப்பும் ஏற்படலாம்.

பல நூற்றாண்டுகளாகக் காதுகள் கலாச்சாரங்களுக்காக காதணிகள் மற்றும் பிற நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அறுவை சிகிச்சை மூலம் சில பல திருத்தங்களுக்கும் இவை உட்படுகின்றன.

செவியின் கட்டமைப்பு

தொகு
 
மனிதக் காதின் உள்ளகக் கட்டமைப்பு
 
வெளிப்புறத்திலிருந்து செவி ஆய்வுக் கருவியின் மூலம் பார்க்கப்பட்ட செவிப்பறை. புறச்செவி செவிப்பறையில் முடிகிறது. செவிப்பறைக் குழிவுக்கு பின்புறமாக நடுச்செவியை காணலாம்

மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும்[2]. புறச்செவியின் புறச்செவிகுழாயானது நடுச்செவியின் காற்று நிரப்பப்பட்ட செவிப்பறை குழிவிலிருந்து செவிப்பறையால் பிரிக்கப்பட்டுள்ளது. நடுச்செவியில் மூன்று செவிக் குருத்தெலும்புகள் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றான மால்லியசு செவிப்பறையுடனும், சிடேப்பிசு குருத்தெலும்பு நடுச்சுவரிலுள்ள நீள்வட்டப் பலகணியுடனும், இங்கசு இவ்விரு எலும்புகளுடனும் இணைந்துள்ளன. ஒலியைக் கடத்தும் சிற்றெலும்புகள் நாசித்தொண்டையில் தொண்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தொண்டைக் குழியின் வழியாக காது மூக்கு தொண்டைக் குழாயால் இவ்விணைப்பு உருவாகியுள்ளது. உட்செவி காக்லியா மற்றும் வெசுடிபியூல் ஆகியவற்றால் ஆனது [2].

புறச்செவி

தொகு

புறச்செவி என்பது காதின் வெளிப்புறத் தோற்றமாகும். புறச்செவியில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. செவிப்பறையின் வெளிப்புற அடுக்கான செவிப்பறை மென்படலமும் இங்கு காணப்படுகிறது[2][3]. திருகுசுருள் என்றழைக்கப்படும் வளைந்த வெளிப்புறமாக வளைந்த விளிம்பும், எதிர்திருகுசுருள் என்றழைக்கப்படும் உட்புறமாக வளைந்த விளிம்பும் சேர்ந்து செவிமடலை உருவாக்குகின்றன, செவிமடல் செவிக்குழாயில் திறக்கிறது. துறுத்தியிருக்கும் உட்செவிமடலும், பகுதியாக மறைந்திருக்கும் காதுக்குழாயும் எதிர் உட்செவிமடலைப்போலத் தோன்றுகின்றன. செவிக்குழாயின் முன்னுள்ள வெற்றிடப்பகுதி கான்கா எனப்படுகிறது. செவிக்குழாய் 2.5 செ.மீ நீளம் கொண்டுள்ளது. செவிக்குழாயின் முதற்பகுதி குருத்தெலும்புகளால் சூழப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் பகுதி செவிப்பறைக்கு அருகில் எலும்பால் சூழப்பட்டுள்ளது. எலும்பைப்போன்ற இப்பகுதி செவிமடிப்பு என்றழைக்கப்படுகிறது. டெம்போரல் எலும்பினுடைய செவிப்பறைச் சவ்வால் இச்செவி மடிப்பு உருவாக்கப்படுகிறது. செவிக்குழாயைச் சூழ்ந்துள்ள தோலில் காதுமெழுகுச்சுரப்பியும் எண்ணெய்ச் சுரப்பியும் சேர்ந்து காதைப்பாதுகாக்கும் காதுமெழுகை உருவாக்குகின்றன. செவிப்பறையின் வெளி மேற்பரப்பில் செவிக்குழாய் முடிவடைகிறது [3].

உட்தசைகள், வெளித்தசைகள் என்ற இரண்டு தசைகள் புறச்செவியுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஆடு மாடு போன்ற பிற உயிரினங்களால் இத்தசைகளைச் சரிசெய்து, தங்கள் காது மடலைத் திருப்பியும் வளைத்தும் திசையை மாற்றி வரும் ஒலியைச் சேகரித்து காதுக்குள்ளே அனுப்ப இயலும் [3]. ஆனால் மனிதனின் காதுகளை தாமே வளைக்கவோ திருப்பவோ முடியாது [4]. காது தசைகள் முகத்தின் நரம்புகளால் வழங்கப்படுகின்றன, இவை காதுகளின் தோலுக்கும், வெளிப்புற காது குழிக்கு உணர்வையும் அளிக்கிறது. புறச்செவியின் பிற பாகங்களுக்கும் அதைச் சூழ்ந்துள்ள தோலுக்கும் மடலிய நரம்புகளும், பிடரி நரம்புகளும் உணர்வுகளை வழங்குகின்றன [3]. உள் மேற்பரப்பில் ஒரு சிக்கலான அமைப்பும், பின்புற மேற்பரப்பில் மிகவும் மென்மையான கட்டமைப்பும் கொண்ட ஒரு நெகிழ் குருத்தெலும்பு செவிமடலில் உள்ளது. டார்வினின் குழல்நீட்சிகள் சில நேரங்களில் திருகுசுருளின் இறங்கு பகுதியிலும் பாலூட்டிகளின் காது முனையிலும் காணப்படுவதுண்டு. ஒலி அலைகள் புறச்செவி புறவழி, மற்றும் புறச்செவி குழாய் வழியாக செவிப்பறையை அடைகிறது. இதனால் செவிப்பறை அதிர்கின்றது. ஒவ்வொரு காதிலிருந்தும் வருகைதரும் நேரத்தையும் செறிவையும் ஒப்பிடுவதன் மூலம் மூளை உணர்கிறது [5].

செவி மடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பயன் இல்லை. செவிப்பறை சவ்வு தடித்துப் போனாலோ, நலிவடைந்து போனாலோ கேட்கும் திறன் பாதிக்கப்படும்.

நடுச்செவி

தொகு
நடுச்செவி
நடுச்செவியின் கூறுகள்


புறச்செவிக்கும் உட்செவிக்கும் இடையில் நடுச்செவி அமைந்துள்ளது. டெம்போரல் எலும்பில் அமைந்துள்ள காற்று நிரம்பிய குழிவான பகுதியாக நடுச்செவி காணப்படுகிறது. செவிப்பறைக்குழி எனவும் அழைக்கப்படுகிறது. செவிக்குழாயின் வழியாக மூக்குத் தொண்டைப் பகுதியிமுள் இது திறக்கிறது. வாயசைவின் போது செவிக்குழாய் திறக்கிறது. நடுச்செவியில் மூன்று செவிக் குருத்தெலும்புகள் இணைப்பு இழைகளுடன் அமைந்துள்ளன. இவற்றுள் ஒன்றான மால்லியசு செவிப்பறையுடனும், சிடேப்பிசு குருத்தெலும்பு நடுச்சுவரிலுள்ள நீள்வட்டப் பலகணியுடனும், இங்கசு இவ்விரு எலும்புகளுடனும் இணைந்துள்ளது. குருத்தெலும்பு மூன்று சிறிய சிற்றெலும்புகளால் ஆனதாகும். இவை மூன்றும் ஒலியைப் பெறுதல், பெருக்குதல் , கடத்துதல் போன்ற செயல்களில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஒலியைக் கடத்தும் சிற்றெலும்புகள் நாசித்தொண்டையில் தொண்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தொண்டைக் குழியின் வழியாக காது மூக்கு தொண்டைக் குழாயால் இவ்விணைப்பு உருவாகியுள்ளது.

வெளிப்புறக் காதுகளிலிருந்து வரும் ஒலியை மூன்று சிற்றெலும்புகளும் உள் காதுக்கு கடத்துகின்றன. செவிப்பறையிம் ஒலி அழுத்தத்திலிருந்து மால்லியசு அதிர்வுகளைப் பெறுகிறது. பின்னர் இவ்வதிர்வுகள் இன்கசு வழியாக நீள்வட்டப் பலகணியை அடைகின்றன. நீள்வட்டப்பலகணியின் அதிர்வுகள் வெசுடிபுலார் அல்லது அங்கண குழாயில் அடங்கியுள்ள திரவத்தில் அழுத்தத்தினை உண்டாக்குகின்றன.இந்த அழுத்த அலைகள் நடுக்குழாயினை அடைந்து அங்குள்ள சவ்வினை அதிர்வடையச் செய்கின்றன. நீள்வட்டப் பலகணியின் கீழ்ப்புறமாக அமைந்துள்ள வட்டவடிவச் சவ்வாகிய வட்டப் பலகணியுடன் செவிப்பறை இணைக்கப்பட்டுள்ளது. வட்டப்பலகணி உள் காதில் உள்ள திரவத்தை நகர்த்துவதற்கு அனுமதிக்கிறது. ஒலி அலைகள் 15-20 முறைக்கு அதிகமாக பெறுக்கப்படுகிறது, அழுத்த அலைகள் இந்த அமைப்பின் மூலமாக செவிக்குழாய் திரவமான காக்லியாவை அடைகின்றன.

உட்செவி

தொகு
உட்செவி
உட்செவியின் கூறுகள்

நடுக்காதுக்கும் அப்பால் உள்ள பகுதி உட்செவியாகும் இது ஒரு சங்கு போன்ற அமைப்பைக் கொண்டு காக்லியா மற்றும் வெசுடிபியூல் ஆகியவற்றால் ஆனதாகும். காக்லியாவின் குழாய் முழுவதும் பேசிலார், ரெய்சினர் சவ்வுகளால் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நடு அறையில் உள்திரவமும் (சிகேலா மீடியா), மற்ற இரண்டு அறைகளில் சுற்றுத் திரவமும் (சிகேலா வெசுடிபிலை) அடங்கியுள்ளன. பேசிலார் சவ்வில் கேள் உணர்திறன் கொண்ட கார்டை உறுப்பு அமைந்துள்ளது. இச்சவ்விலிருந்து நான்கு வரிசை மயிரிழை செல்கள் தோன்றுகின்றன. சிடேப்பிசு அடித்தட்டின் அசைவுகள் சிகேலா வெசுட்பிலத்தில் காணப்படும் சுற்றுத் திரவத்தில் தொடர்வலைகளை உண்டாக்குகின்றன. இதனால் வெசுடிபிலார் சவ்விலும் உட்திரவத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அலைகளால் ரெய்சினர் சவ்வில் வளைவுகள் ஏற்படுகின்றன. மயிரிழை செல்களின் மயிர்களும் இதனால் வளைந்து இவற்றோடு தொடர்புடைய நரம்பிழைகளால் செவிநரம்பின் மூலம் ஒலி கடத்தப்படுகின்றது.

கார்டை உறுப்பில் உண்டாகும் அதிகபட்ச அசைவுகள் ஒலியின் அதிர்வெண்னைப் பொறுத்தது ஆகும். மிகுந்த தொனியுடன் கூடிய ஒலி காக்லியாவின் அடிப்பகுதியில் உயர்ந்த அலைகளையும், குறைந்த தொனியிலான ஒலி காக்லியாவின் நுனிப்பகுதியிலும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. காது கேட்பதற்கு இதுவே அடிப்படையாக அமைகிறது. இப்பகுதி மூளை நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரத்தம் வழங்கல்

தொகு

காதுகளின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு இரத்தம் விநியோகிப்பதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. புறச்செவிக்கு பல தமனிகள் இரத்தத்தை வழங்குகின்றன. பின் செவித் தமனி புறச்செவிக்கான இரத்தத்தின் பெரும்பகுதியை வழங்குகிறது. முன் செவித் தமனி வெளி விளிம்புக்கும் இதன் பிறகுள்ள தலையின் மேற்பகுதிக்கும் ஓரளவு இரத்தத்தை வழங்குகிறது. பின் செவித் தமனியானது வெளிப்புற தோள்பட்டைத் தமனியின் நேரடியான கிளையாகும். முன்செவி தமனியானது மேலோட்டத் தமனியின் கிளையாகும். பிடரித் தமனியும் இரத்தம் வழங்கலில் ஒரு சிறு பங்கு வகிக்கின்றது [6].

நடுச்செவிக்கான இரத்தத்தை பின்தலை அல்லது பின் செவித் தமனியின் மார்புக் கிளைகள் மற்றும் மெல்லுதசை தமனியின் கிளையான ஆழ் செவித் தமனியும் வழங்குகின்றன. நடுமூளைச் சவ்வு தமனி, மேலேறும் தொண்டைத் தமனி, உட்புற கரோட்டிட் தமனி, மற்றும் டெரிகாய்டு கால்வாய் தமனி உள்ளிட்ட தமனிகள் அங்கு இருந்தாலும் அவை நடுச் செவிக்கான இரத்தம் வழங்கலில் சிறிதளவே பங்களிக்கின்றன[6].

உட்புறக் காதுக்கான இரத்தத்தை மெல்லுதசையின் முன்புறம் செல்லும் நரம்புக்கிளை, பின்செவித் தமனியின் தாடைமுள்ளெலும்புக் கிளை, நடுமூளையின் பெட்ரசல் கிளை, சிறுமூளை அல்லது அடித்தசையிலிருந்து தோன்றும் சிக்கல் தமனி ஆகியவை வழங்குகின்றன [6].

ஒலியுணர்தல்

தொகு

ஒலி அலைகள் வெளிப்புற காது புறவழி மற்றும் புறச்செவிக் குழாய் வழியாகப் பயணித்து உட்செவியிலுள்ள நாள நரம்புக்கு கடத்தப்படுகின்றன. பின் இந்த நரம்பு தகவலை மூளையின் தற்காலிக மடலுக்கு அனுப்புகிறது. புறச்செவி வழியாகப் பயணித்து வந்த ஒலி அலைகள் செவிப்பறையை அடைகின்றன. இதனால் செவிப்பறை அதிர்கின்றது. செவி்ப்பறையின் அதிர்வுகள் நீள்வட்டப் பலகணியை அடைகின்றன. நீள்வட்டப் பலகணியின் அதிர்வுகள் வெசுட்டிபுலார் குழாயில் அடங்கியுள்ள திரவத்தில் அழுத்தத்தை உண்டாக்குகின்றன. இந்த அழுத்த அலைகள் நடுக்குழாயினை அடைந்து அங்குள்ள பேசிலார் சவ்வினை அதிர்வடையச் செய்கின்றன. நீள்வட்டக் குழாயின் கீழ்புறமாக இணைக்கப்பட்டுள்ள செவிப்பறைக் குழாயின் வழியாக அழுத்த அலைகள் காக்லியா திரவத்தை அடைகின்றன. இங்குள்ள் சுற்றுத் திரவத்தில் அவை தொடர்வலைகளை உண்டாக்கி உள்திரவத்திலும் அதிர்வுகளை உண்டாக்குகின்றன. உட்செவியை அறைகளாகப் பிரிக்கின்ற ரெய்சனர் சவ்வில் இதனால் வளைவும் பேசிலார் சவ்வமைப்பில் மாற்றங்களும் உண்டாகின்றன. பேசிலார் சவ்வில் உள்ள கார்ட்டை உறுப்பின் மயிரிழை செல்களின் மயிர்கள் வளைந்து நரம்பிழைகளில் தூண்டுதல் உண்டாகிறது. இத்தூண்டுதல் செவி நரம்பின் மூலம் கடத்தப்படுகிறது.

செவிக் குறைபாடுகள்

தொகு

காதினுள் உள்ள இம்மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறாது. எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாக நேரிடுகிறது. உரக்கப்பேசினால் மட்டுமே சிலருக்குக் கேட்கும். உறவில் மணம் முடிப்போருக்கு இத்தகைய குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. கேட்கும் திறனை அளவிட்டு செவிக்குறைகள் அறியப்படுகின்றன. இத்தகையவர்கள் ஒலியைப் பெருக்கித்தர வல்ல காதொலிக் கருவியைக் காதில் பொருத்திக் கொண்டால் காது நன்கு கேட்கும். முழுச் செவி குறைபாடு உடையவர்களுக்கு இத்தகைய கருவிகளால் பயனில்லை.

காது கேளாத்தன்மையில் , கடத்தல் வகை கேளாமை, உணர்தல் வகை கேளாமை, கலப்புக் கடத்தல்வகை கேளாமை, நரம்புக் கோளாறுகளால் கேளாமை எனப் பலவகை குறைபாடுகள் உள்ளன.

புறச்செவி அல்லது நடுச்செவியில் ஏற்படும் கோளாறுகளால் கடத்தல் வகை கேளாமை நோய் உண்டாகிறது. இந்நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காது சிறிதளவு கேட்கும். இதுவொரு தற்காலிகமான பாதிப்பு ஆகும். மருத்துவர்களால் இதை சரிசெய்ய இயலும்.

காக்லியாவில் உள்ள மயிரிழை செல்கள் பாதிக்கப்பட்டால் உண்டாவது உணர்தல் வகை கேளாமையாகும். இக்குறைபாட்டின் அளவினைப் பொறுத்து கேளாமையின் அளவுகள் மாறுபடும். பல சத்தங்கள் கேட்பது, சில சத்தங்களை மட்டும் கேட்பது, முற்றிலும் எதையுமே கேட்க முடியாமல் இருப்பது போன்ற நிலைகள் இதனால் உருவாகின்றன. இதுவொரு நிரந்தரமான குறைபாடாகும். இக்குறைபாட்டினால் பேச்சுத்தன்மையும் பாதிக்கப்படும்.

காக்லியாவிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் பிரச்ச்சினைகளால் நரம்பியல் காது கேளாமை ஏற்படுகிறது. இது மரபியல் தொடர்புடையதாகவோ,நடுச்செவி திரவத்தினாலோ, தொற்று நோய்களாலோ, தலைக்காயம், தலையில் மாட்டிக்கொள்ளும் செல்பேசி சாதனங்களாலோ, கனத்த சங்கீதம் கேட்டலாலோ இயந்திரங்களின் கன ஒலியைக் கேட்டதாலோ இக்குறைப்படு தோன்றலாம்.

கடத்தல் காது கேளாத்தன்மைக்கு பொதுவான காரணம் செவிக்குழாயைச் சார்ந்துள்ள தோலில் அமைந்துள்ள செருமினசு சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மெழுகினால் புறச்செவி அடைக்கப்படுகிறது. சிலருக்கு இந்த மெழுகானது கடினமாக செவிப்பறை அழுத்துகின்றது. சிரப்பாக வடிவமைக்கப்பட்ட உறிஞ்சுக் குழாய்கள் மூலம் இம்மெழுகினை அகற்றினால் மீண்டும் கேட்கும் தன்மையினை அடையமுடியும்.

துளையுள்ள செவிப்பறை அமைந்தாலும் கடத்தல் காது கேளாமை உண்டாகும். நடுச்செவியில் தொற்று, வெடிச்சத்தம், தலையில் திடீரென் அடிபடுவதால் உண்டாகும் காயம் ஆகிய காரணங்களால் செவிப்பறையில் துளை உண்டாகிறது. இதனால் நடுச்செவி எலும்புகள் துண்டிக்கப்பட்டு காக்லியாவுடன் தொடர்பு விடுவிக்கப்படுகின்றது.

அதிர்வலைகள் உட்செவிக்குத் திறம்படக் கடத்தப்பட்டாலும் காக்லியாவும் செவிநரம்பும் பழுதடைவதால் கேளாத்தன்மை ஏற்படுகிறது. இதை உணர் நரம்பியல் காது கேளாத்தன்மை என்பர்.

முழுமையாகக் குணப்படுத்த இயலாத கடத்தல் காது கேளாமைக்கு கேள் உதவி கருவி பயன்படுகிறது.

கேள் உதவிக் கருவி

தொகு

கேள் உதவிக் கருவி மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். தொடர்பினை மேம்படுத்துவதற்காக இக்கருவி ஒலியினைப் பெருக்கி அல்லது மாற்றி அமைக்கின்றது. காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது அதிகரிக்கச் செய்து ஒலிபெருக்கியின் மூலம் காது புறக்குழாயிமுள் செலுத்துகிறது. மின் சமிக்ஞைகள் மீண்டும் ஒலி அலைகளாக மாற்ரப்படுகின்றன.

உட்செல்லும் ஒலியின் அளவினை இக்கருவியில் அமைந்துள்ள ஒரு சிறிய சக்கர வடிவ ஒலிக் கட்டுப்படுத்தியின் மூலம் ஒழுங்கு செய்யலாம்.

ஒலியினை மிக அதிகமாகப் பெருக்கமடையச் செய்யும் சக்தி வாய்ந்த கருவிகள் தற்சமயம் கிடைக்கின்றன. இக்கருவிகளில் ஒலிவாங்கி, பெருக்கி, மின்கலம் ஆகியவை உடலில் அணியக்கூடிய ஒரு பெட்டியில் அடங்கியுள்ளன. காது அருகிலுள்ள பகுதிக்கு ஒரு மெல்லிய மின்கம்பி மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

கடத்தல் காது கேளாத்தன்மை கொண்ட, குறிப்பாகக் காதுகுழாயில் தொற்றுதல் அல்லது சீழ் வடிதல் போனறவற்ரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு கடத்தி காதுகேள் கருவியினைப் பயன்படுத்தலாம். இவ்வகை காதுகேள் கருவி ஒரு கண்ணாடி பட்டை அல்லது கூந்தல் பட்டையின் மீது பொருத்தப்படுகிறது.

ஒலிபெருக்கிய தொலைபேசிகள், அழைப்பு மணி மற்றும் தொலைபேசி மணிக்குப் பதிலாக பிரகாச ஒளி விளக்குகள், இலி உணர் அதிர் கருவிகள், தலையில் பொருத்தும் தொலைபேசியுடன் கூடிய தொலைக்கட்சிப் பெட்டிகள், தொலை தட்டச்சு இயந்திரங்கள், வழிநடத்தும் ஒலிகள் போன்றவை காது கேளாதவர் பயன்படுத்தும் பிற கருவிகளாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ear". Oxford Dictionary. Archived from the original on 18 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 Standring, Susan (2008). Borley, Neil R. (ed.). Gray's Anatomy: The Anatomical Basis of Clinical Practice (40 ed.). எடின்பரோ: Churchill Livingstone/எல்செவியர். pp. Chapter 36. "External and middle ear", 615–631. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-06684-9. Archived from the original on 10 March 2014. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2017. {{cite book}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help); More than one of |archivedate= and |archive-date= specified (help)
  3. 3.0 3.1 3.2 3.3 Drake, Richard L.; Vogl, Wayne; Tibbitts, Adam W.M. Mitchell; illustrations by Richard; Richardson, Paul (2005). Gray's anatomy for students. Philadelphia: Elsevier/Churchill Livingstone. pp. 855–856. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8089-2306-0.
  4. Moore KL, Dalley AF, Agur AM (2013). Clinically Oriented Anatomy, 7th ed. Lippincott Williams & Wilkins. pp. 848–849. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4511-8447-1.
  5. Purves, D. (2007). Neuroscience (4th ed.). New York: Sinauer. pp. 332–336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0878936977.
  6. 6.0 6.1 6.2 Standring, Susan (2008). Borley, Neil R. (ed.). Gray's Anatomy: The Anatomical Basis of Clinical Practice (40 ed.). எடின்பரோ: Churchill Livingstone/எல்செவியர். pp. Chapter 37. "Inner ear", 633–650. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-06684-9.

உசாத்துணை

தொகு

இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை பப்ளிகேஷன் வெளியீடு. -1995

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவி&oldid=3744896" இலிருந்து மீள்விக்கப்பட்டது