தில்லி
தில்லி அல்லது டெல்லி (Delhi, இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
தில்லி | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
ஒன்றியப் பகுதி | தேசிய தலைநகர் பகுதி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 110000 – 110099 |
தொலைபேசி குறியீடு | +91—11 |
வாகனப் பதிவு | DL |
வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது.
18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது.
பெயர்
தொகுதில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் பொ.ஊ.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து.
வரலாறு
தொகுஇதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பொ.ஊ.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (பொ.ஊ.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் பொ.ஊ. 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப்-உத்-தீன் ஐபாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப்-உத்-தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின.
முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின.
1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர்.
இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர்.
மக்கள் தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தில்லி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது. [1]
சமயம்
தொகுஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
தொகுஇம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது.
அரசியல்
தொகுதில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை தொகுதிகளையும் கொண்டுள்ளது.[2]
புவியியலும் தட்பவெப்பநிலையும்
தொகுதில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும்.
தில்லி வட இந்தியாவில் 28°37′N 77°14′E / 28.61°N 77.23°E அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு.
தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச – 32 °ச (56 °ப – 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது.
தில்லி - தட்பவெப்பச் சராசரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | ஜன | பெப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | டிச | ஆண்டு |
உயர் பதிவு °C (°F) | 29 (84) |
32 (90) |
37 (99) |
42 (108) |
45 (113) |
44 (111) |
43 (109) |
42 (108) |
38 (100) |
37 (99) |
35 (95) |
32 (90) |
45 (113) |
உயர் சராசரி °C (°F) | 18 (64) |
23 (73) |
28 (82) |
36 (97) |
39 (102) |
37 (99) |
34 (93) |
33 (91) |
33 (91) |
31 (88) |
27 (81) |
21 (70) |
30 (86) |
தாழ் சராசரி °C (°F) | 7 (45) |
11 (52) |
15 (59) |
22 (72) |
26 (79) |
27 (81) |
27 (81) |
26 (79) |
24 (75) |
19 (66) |
13 (55) |
8 (46) |
18.5 (65) |
தாழ் பதிவு °C (°F) | -0.6 (31) |
0 (32) |
6 (43) |
12 (54) |
16 (61) |
21 (70) |
21 (70) |
20 (68) |
20 (68) |
13 (55) |
7 (45) |
2 (36) |
−0.6 (31) |
மழைவீழ்ச்சி mm (inches) | 22.9 (0.9) |
20.3 (0.8) |
15.2 (0.6) |
10.2 (0.4) |
15.2 (0.6) |
71.1 (2.8) |
236.2 (9.3) |
236.2 (9.3) |
111.8 (4.4) |
17.8 (0.7) |
10.2 (0.4) |
10.2 (0.4) |
713.7 (28.1) |
மூலம்: wunderground.com [3] Nov 27th, 2008 |
போக்குவரத்து
தொகுவான்வழி
தொகுஇங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர்.[4]
சாலைவழி
தொகுதில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன.
- உள்வட்டச் சாலைகள்
- வெளிவட்டச் சாலைகள்
- தில்லி - குர்கான் விரைவுவழிச்சாலை
- தேசிய நெடுஞ்சாலைகள்
இரயில்வே
தொகுஇந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் புது தில்லி, தில்லி சந்திப்பு, ஹசரத் நிசாமுதீன், ஆனந்து விகார் முனையம், தில்லி சராய் ரோகில்லா ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன.[5]
தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், பரிதாபாது, குர்கான், நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம்.[6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Population Census data 2011[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.elections.in/parliamentary-constituencies/member-of-parliament.html#l_delhi
- ↑ "Historical Weather for Delhi, India" (in English). Weather Underground. Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2009-01-10.
{{cite web}}
: Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)CS1 maint: unrecognized language (link) - ↑ "India begins $1.94b Delhi airport revamp". Dailytimes.com.pk. 18 February 2007. Archived from the original on 16 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 3 November 2008.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Chapter 3: Demographic Profile" (PDF). Economic Survey of Delhi, 2005–2006. Planning Department, Government of National Capital Territory of Delhi. pp. 17–31. Archived from the original (PDF) on 14 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 21 December 2006.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Faridabad Metro Corridor - Press Brief". Delhimetrorail.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-24.
வெளி இணைப்புகள்
தொகுமேலும் வாசிக்க
தொகு- Economic Survey of Delhi 2005–2006. Planning Department. Government of National Capital Territory of Delhi. Retrieved 12 February 2007
- Dalrymple, W (2003). City of Djinns (1 ed.). Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-200100-4.
- Dalrymple, W (2003). Vidhya Society, (2009). Vidhya Society (NGO) is a leading charitable organization of Uttar Pradesh (India) established under society registration act 21-1860 on the special occasion of World Disable Year 2009. Director Mr. Pavan Upadhyay www.vidhyasociety.com (1 ed.). Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-200100-4.
- Prager, D (2013). Delirious Delhi (1 ed.). Arcade Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61145-832-9.
- Brown, L (2011). Lonely Planet Rajasthan, Delhi & Agra (5 ed.). Lonely Planet Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74179-460-1.
- Rowe, P; Coster, P (2004). Delhi (Great Cities of the World). World Almanac Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8368-5197-7.
- Four-part series on Delhi (2 June 2012). "Metrocity Journal: Delhi's Changing Landscape". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 9 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170709134834/https://blogs.wsj.com/indiarealtime/2012/05/30/metrocity-journal-delhis-changing-landscape/.