மக்கள்தொகை அடர்த்தி

(மக்கள் தொகை அடர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மக்கள் தொகை அடர்த்தி அல்லது மக்களடர்த்தி எனப்படுவது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள மக்கள் தொகையாகும். அதாவது இன்ன பரப்பளவில் இன்ன மக்கள் தொகை என்பதாகும். ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் உள்ளனர் என்பது பரவலாகப் பயன்படும் ஓர் அடர்த்தி அளவீடு. மக்கள் தொகை அடர்த்தியின் கணிப்பீட்டின்போது விளைச்சல் நிலங்களின் பரப்பளவு சில நேரங்களில் அகற்றப்பட்ட பின்பே அடர்த்தி கணிக்கப்படும். அடர்த்தியானது நாடு, நகரம், ஊர், மற்றும் இன்னோரன்ன நிலப் பகுதிகள் எனப் பல மட்டங்களிலும், உலகம் முழுவதற்குமேகூடக் கணிக்கப்படுகிறது.

நாடு வாரியாக மக்கள்தொகை அடர்த்தி, 2006

எடுத்துக்காட்டாக, உலக முழுவதற்குமான மக்கள்தொகை 6.5 பில்லியனாகவும், அதன் பரப்பளவு 510 மில்லியன் சதுர கிலோமீட்டர் எனவும் கொண்டால் மக்கள் தொகை அடர்த்தி 6500 மில்லியன்/510 மில்லியன்=சதுர கிலோமீட்டருக்கு 13 பேராகும். நீர்ப்பரப்பை விட்டுவிட்டு நிலப் பரப்பை மட்டும் கவனத்தில் எடுத்தும் மக்கள் தொகை அடர்த்தி கணிக்கப்படுவது உண்டு. நிலம் 150 மில்லியன் சதுர கிலோமீட்டராகும் எனவே மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 43 ஆகும். பூமியின் மொத்தப் பரப்பு ஆயினும், நிலப்பரப்பு ஆயினும் குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுவதற்கான சாத்தியம் இல்லாததால், மக்கள் தொகை அடர்த்தி மக்கள் தொகை அதிகரிப்புடன் அதிகரிக்கும். பூமியின் வளங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதால் மக்களடர்த்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரையுமே அதிகரித்துச் செல்ல முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.

தாய்வானின் தைபே நகரின் ஒரு காட்சி. தாய்வான் மக்கள் தொகை அடர்த்தியில் 14வது இடத்தை பிடிக்கிறது.
உலகிலேயே அதிக மக்களடர்த்தி கொண்ட இடங்களில் ஒன்றான ஹாங்காங்கிலுள்ள ஒரு தெரு.

மக்கள் தொகை அடர்த்தி கூடிய பகுதிகள் நகர நாடுகளாகவோ அல்லது சிறிய நாடுகளாகவோ காணப்படுகின்றன. இவை பாரிய அளவு நகரமயமாக்கப்பட்டு காணப்படுவது வழக்கமாகும். அதிகளவு மக்கள் தொகை அடர்த்திய கொண்ட நகரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா வில் அமைந்துள்ளன. ஆபிரிக்காவின் கெய்ரோ, லாகோஸ் போன்ற நகரங்களும் அதிக அடர்த்தியை கொண்டவையாகும்.

மக்களடர்த்தி வேறுபாடுகள்

தொகு

குறிப்பிட்ட நிலப்பகுதியொன்றில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டியும், அப்பகுதியின் வள நிலைமையை ஒட்டியும், அந்நிலப்பகுதி தாங்கக்கூடிய மக்களடர்த்தி அமையும். உணவு சேகரித்து உண்போர், கால் நடைகள் மேய்ப்போர், நாடோடிகள் போன்றோரின் செயற்பாடுகளுக்குப் பரந்த நிலப்பரப்புத் தேவை. இதன் காரணமாக இத்தகையோர் வாழும் நிலப்பகுதிகள் குறைந்த மக்களடர்த்தியையே கொண்டிருக்க முடியும். நிலையாக ஓரிடத்தில் வாழக்கூடிய வேளாண்மைச் சமுதாயங்கள் சற்றுக் கூடுதலான மக்களடர்த்தியைக் கொண்டிருக்க முடியும். தொழிற்துறை, வணிகம் மற்றும் சேவைத் தொழில்களை முக்கியமாகக் கொண்ட நகரப் பகுதிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டவையாக உள்ளன. நகரங்களுக்கு உள்ளேயும், நிலப்பயன்பாட்டுத் தன்மைகளைப் பொறுத்து மக்களடர்த்தி வேறுபடும்.

நகரங்களின் மையப் பகுதிகளும், அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் அதிக மக்களடர்த்தி கொண்டவையாகக் காணப்படுகின்றன. பொருளாதார அடிப்படையில் கீழ் மட்ட மக்கள் வாழும் பகுதிகள் கூடிய மக்களடர்த்தி கொண்டவையாக இருக்க, மேல் மட்டத்தினர் வாழும் பகுதிகள் அடர்த்தி குறைந்தவையாக இருப்பது இயல்பு.

மக்கள் தொகை அடர்த்தியை அளவிடும் வேறு முறைகள்

தொகு
 
உலகின் மக்கள் அடர்த்திகளைக் காட்டும் படம், 1994.

மக்களடர்த்தியைக் கணிப்பதற்கு மிகப் பொதுவாகப் பயன்படுவது மேற் குறிப்பிட்ட எண்கணித முறையேயாகும். எனினும், சிறப்புத் தேவைகளுக்காக, வேறுபட்ட முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகமாகப் பயன்படுத்தப்படும் முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.

எண்கணித அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / மொத்தப் பரப்பளவு (கி.மீ² அல்லது மைல்²)

உடற்றொழிலியல் அடர்த்தி - மக்களின் மொத்த எண்ணிக்கை / பாசன வசதியுள்ள நிலம்

வேளாண்மை அடர்த்தி - மொத்த ஊரக மக்கள் தொகை / மொத்த வேளாண்மைக்கு உட்பட்ட நிலம்

வாழிட அடர்த்தி - குறித்த நகரப்பகுதியின் மக்கள் தொகை / மொத்த வாழிடத்துக்குரிய நிலப்பரப்பு

சூழலியல் அடர்த்தி - குறித்த பகுதியிலுள்ள வளங்கள் மூலம் தாங்கப்படக்கூடிய மக்கள்தொகை அடர்த்தி.

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்தொகை_அடர்த்தி&oldid=3643480" இலிருந்து மீள்விக்கப்பட்டது