சோழர்

தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை.

சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.[3] சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

சோழப் பேரரசு
சோழ நாடு
பொ.ஊ.மு. 400–பொ.ஊ. 1279
கொடி of சோழப் பேரரசு
புலி கொடி
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம் (பொ.ஊ. 1050)
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம் (பொ.ஊ. 1050)
தலைநகரம்முற்காலச் சோழர்கள்: பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், திருவாரூர்
இடைக்காலச் சோழர்கள்: தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம்
பிற்காலச் சோழர்கள்: கங்கைகொண்ட சோழபுரம், பழையாறை, தாராசுரம்
பேசப்படும் மொழிகள்தமிழ், சமசுகிருதம்[1]
சமயம்
இந்து[2]
அரசாங்கம்முடியாட்சி
அரசன் 
• பொ.ஊ. 848-871
விசயாலயச் சோழன்
• பொ.ஊ. 1246-1279
மூன்றாம் இராசேந்திர சோழன்
வரலாற்று சகாப்தம்சங்க காலம், மத்திய காலம்
• தொடக்கம்
பொ.ஊ.மு. 400
• இடைக்காலச் சோழர்களின் எழுச்சி
பொ.ஊ. 848
• முடிவு
பொ.ஊ. 1279
பரப்பு
பொ.ஊ. 1050 கணிப்பு3,600,000 km2 (1,400,000 sq mi)
பின்னையது
}
பாண்டியர்கள்
தற்போதைய பகுதிகள் இந்தியா
 இலங்கை
 வங்காளதேசம்
 மியான்மர்
 மலேசியா
 இந்தோனேசியா
 சிங்கப்பூர்
 மாலைத்தீவுகள்
 தாய்லாந்து
 கம்போடியா

பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.

பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், சிரீவிசயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. பண்டைய கால அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.

சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.

தோற்றமும் வரலாறும்

சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறிஸ்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

முற்காலச் சோழர்கள்

இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி[சான்று தேவை] என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.[4]

முதலாம் கரிகாலன்

 
கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. பொ.ஊ. 120

கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.[5] கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.[6][7] பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

பிற சோழ மன்னர்கள்

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

இடைக்காலச் சோழர்கள்

களப்பிரர் வருகை

 
முதலாம் இராசராச சோழன் சிலை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சாவூர்.

பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது.

நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

பழையாறை சோழர்கள்

தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை.

  • இசை வெங்கிள்ளி பொ.ஊ. 300–330
  • கைவண்கிள்ளி பொ.ஊ. 330–350
  • பொலம்பூண்கிள்ளி பொ.ஊ. 350–375
  • கடுமான்கிள்ளி பொ.ஊ. 375–400
  • இரண்டாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 400–440
  • நல்லடி சோழன் பொ.ஊ. 440–475
  • பெயர் தெரியவில்லை பொ.ஊ. 476–499
  • மூன்றாம் கோச்சோழன் செங்கணான்[8] பொ.ஊ. 499–524
  • புகழ்சோழன் [8] பொ.ஊ. 524–530
  • மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550

அரசநாட்டுச் சோழர்கள்

 
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம்
 
தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில்

களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிட்டுணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.

பொ.ஊ. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.

  • நந்திவரும சோழன் பொ.ஊ. 550–575
  • தனஞ்செய சோழன் பொ.ஊ. 575–609
  • மகேந்திரவருமச் சோழன் பொ.ஊ. 609–630
  • புண்ணியகுமார சோழன் பொ.ஊ. 630–655
  • விக்கிரமாதித்த சோழன் பொ.ஊ. 650–680
  • சக்திகுமார சோழன் பொ.ஊ. 680–705
  • விக்கிரமாதித்த சோழன் II பொ.ஊ. 705–730
  • சத்தியாதித்தச் சோழன் பொ.ஊ. 730–755
  • விசயாதித்த சோழன் பொ.ஊ. 755–790
  • சிரீகாந்த சிரீமனோகர சோழன் பொ.ஊ. 790–848

புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.[9]

சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். சிரீகாந்த சிரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது.

பிற்காலச் சோழர்கள்

பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன.

 
பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை

விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871)

பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான்.

முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907)

விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.

முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-955)

பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.உலக வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்[10]. இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

கண்டராதித்த சோழன் (பொ.ஊ. 955-962)

பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் பொ.ஊ. 950-இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

அரிஞ்சய சோழன் (பொ.ஊ. 962-963)

கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.

சுந்தர சோழன் (பொ.ஊ. 957-973)

சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பகைவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.

உத்தம சோழன் (பொ.ஊ. 970-985)

 
உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.

பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.

இராசராச சோழன் (பொ.ஊ. 985-1014)

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.

காந்தளூர்ச் சாலை

இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.

கங்கபாடி, நுளம்பாடி

 
சோழப் பேரரசின் எல்லைகள். பொ.ஊ. 1014

சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஈழத்துப் போர்

இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.

இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

முதலாம் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012-1044)

இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.

சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும்[சான்று தேவை] கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும்[சான்று தேவை] மீட்டு வந்தான்.

 
இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. பொ.ஊ. 1030

வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பெரும் பகுதி போர்கள் நிறைந்திருந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.

பின்வந்த சோழ மன்னர்கள்

முதலாம் இராசாதிராசன்

இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

இரண்டாம் இராசேந்திரன்

இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

பிற மன்னர்கள்

இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சாளுக்கிய சோழர்கள்

 
குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1120

முதலாம் குலோத்துங்கன் பொ.ஊ. 1070-1120

இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.

முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.

குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.

வெளிநாட்டுத் தொடர்புகள்

முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான்[11] மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.

ஆட்சிப் பணிகள்

குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான்.[12] இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.

சோழப் பேரரசின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.

1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் பொ.ஊ. 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.

சோழ அரசர்களின் பட்டியல்

அரசன் பெயர் ஆட்சியாண்டுகள் (பொ.ஊ.) தந்தை தலைநகரம்
விசயாலய சோழ வம்சம்
விசயாலய சோழன் 848-871 சுராதிராசன்[13] தஞ்சாவூர்
ஆதித்த சோழன் 871-907 விசயாலய சோழன் தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன் 907-950 ஆதித்த சோழன் தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன் 950-955 முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன் 956-957 முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன் 957-973 அரிஞ்சய சோழன் தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன் 957-969 இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் காஞ்சிபுரம்
உத்தம சோழன் 970-985 கண்டராதித்த சோழன் தஞ்சாவூர்
முதலாம் இராசராச சோழன் 985-1014 இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் தஞ்சாவூர்
முதலாம் இராசேந்திர சோழன் 1012–1044 முதலாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் கங்கைகொண்ட சோழபுரம்
வீரராசேந்திர சோழன் 1063–1070 இரண்டாம் இராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
அதிராசேந்திர சோழன் 1070 வீரராசேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன் 1118–1136 முதலாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 விக்கிரம சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசராச சோழன் 1146–1163 இரண்டாம் குலோத்துங்க சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசாதிராச சோழன் 1163–1178 இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 இரண்டாம் இராசராச சோழன் கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசராச சோழன் 1216–1256 மூன்றாம் குலோத்துங்க சோழன் பழையாறை[14]
மூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279 மூன்றாம் இராசராச சோழன் பழையாறை

பிற சோழர்கள்

  1. குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு)
  2. எல்லாள சோழன் (பொ.ஊ.மு. 205 - பொ.ஊ.மு. 161)
  3. வீரசேகர சோழன் (பொ.ஊ. 1511–1561)

சோழ நாடு

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

உறையூர் பொ.ஊ. 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.

கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது.

"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்

தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா

பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்

கோழியர் கோக்கிள்ளிக் களிறு"

சோழர் ஆட்சி

சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

ஆட்சிப் பிரிவுகள்

சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

படைகள்

கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது, இந்த படைபிரிவு செங்குந்தம் பிடிக்கும் கைக்கோளர் வகுப்பினரால் நிரப்பப்பட்டது.[15] இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.

- பாவாணர்[16]

சமூகநிலை

சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.[17] பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.[18]

பெண்டிர்

சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.[19]

உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[20]

ஆடல் வல்லார்

சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

அடிமைகள்

சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[21] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். [22]

சோழரின் வணிகம்

சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்

 
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் அர்த்தநாரீசுவரர் தோற்றம்.

சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.

பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

கலைகள்

சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. பொ.ஊ. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

 
தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், பொ.ஊ. 1200

சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விட்டுணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

கல்வி

சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.[23] இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[24]

மொழி

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".

இலக்கியம்

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[25] சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.

சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.

சமயம்

சோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்

ஊடகங்களில் சோழர்

திரைப்படம்
புதினம்

மேற்கோள்கள்

  1. Shulman, David. Tamil. Harvard University Press. p. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-97465-4. {{cite book}}: External link in |ref= (help)
  2. Kulke; K Kesavapany; Vijay Sakhuja. Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia. Institute of Southeast Asian Studies. p. 190. {{cite book}}: More than one of |author1= and |last1= specified (help)
  3. ஞா.தேவநேயப் பாவாணர், பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் (1966), பக்17, http://tamilvu.org/library/libindex.htm
  4. அகநானூறு 375 ஆவது பாடல்:
    .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன்
    விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
    குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்
    செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி
    வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்.....
  5. Purananuru – 266
  6. History of ancient India, page 478: ..raising the banks of the Kaveri by Parakesari Karikala Chola
  7. Proceedings of the Indian History Congress, Volume 39, page 156
  8. 8.0 8.1 சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
  9. தமிழக வரலாறும் பண்பாடும்/பல்லவர் காலச் சமுதாய மாற்றங்கள் பக் 106.
  10. தமிழக வரலாறும் பண்பாடும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், பக். 145.
  11. தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம்.பக்.167
  12. விக்கிரம சோழன் உலா,ஒட்டக்கூத்தர்.
  13. அபிதான சிந்தாமணி.பக்.1611
  14. Temples of Forgotten Glory: A Wide Angle Exposition. 2019. p. 6. {{cite book}}: Unknown parameter |https://books.google.co.in/books?id= ignored (help)
  15. Krishnamurthy, Kalki (2015). Ponniyin Selvan: பொன்னியின் செல்வன். Mukil E Publishing And Solutions Private Limited.
  16. பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42
  17. க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக்கம் 19.
  18. "The picture which emerges suggests that the brahmans were in control of the powerful positions and that the non-brahmans were more or less working for them. The brahmans naturally emphasized caste-loyalties and caste-assemblies, since this would prevent a wider basis of unity developing amongst the non-brahmans. - Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books.
  19. சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726
  20. சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727
  21. [தாவுத்](2006-05-11). "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு". தமிழியல்: திணையும் தளமும் நிலையும், டொராண்டோ:டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்விக் கழகமும் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையும். 2006-10-30 அன்று அணுகப்பட்டது.. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-11-06. பார்க்கப்பட்ட நாள் 2006-10-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  22. "Slavery was frequent, with men and women either selling themselves or else being sold by a third party. Many such persons were sold to the temple, particularly in cases of poverty or during a famine. But slaves were limited in number, since they were largely domestic slaves or attached to temples. The use of slave labour for large-scale production was not known." Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books.
  23. Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கங்கள் 212-213.
  24. Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213.
  25. "Had Tamil been encouraged to a greater extent in the centres of higher education it would have assisted in producing a far more vigoruous intellectual tradition than was actually in existence in these centres." – Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சோழர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்&oldid=4072287" இலிருந்து மீள்விக்கப்பட்டது