சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்திலிருந்து சிற்பக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரிகத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக் கலை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது. ஒருவர் தன் கண்களால் கண்ட உருவங்கள் அல்லது கற்பனை உருவங்களை வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு என்ற இலக்கியம் கூறுகின்றது. கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், சலவைக் கல் ஆகியவையும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஆகியனவும் சிற்பம் செய்ய ஏற்றனவாகக் கருதப்பட்டன. வடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களை முழு வடிவச் சிற்பங்கள் என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களை ‘புடைப்புச் சிற்பங்கள்’ என்றும் வகைப்படுத்துவர்.[1]

மைக்கலாஞ்சலோ, "பியேட்டா", 1499.

பண்டைய பண்பாட்டு கலாச்சாரங்களின் எச்சமாக மண்பாண்டங்களைத் தவிர்த்த ஏனைய படைப்புகள் யாவும் அழிவுற்றன.மனிதனின் படைப்புகளில் காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப்படைப்பு சிற்பமாகும். மற்றையவை விரைவில் அழியக்கூடிய பொருட்கள் கொண்டு செய்யப்பட்டவையாகும். பழங்காலத்தில் செய்யப்பட்ட மரச்சிற்பங்கள் இன்று கிடைக்கப்பெறவில்லை. அவை முற்றிலும் அழிந்துவிட்டன. அக்காலச் சிற்பங்களில் பிரகாசமான வண்ணம் தீட்டப்பட்டன. இவை தற்போது தேய்வுற்றும் வண்ணம் மங்கியும் காணப்படுகின்றன.[2]

பல்வேறு கலாச்சாரங்களில் சிற்பங்கள் பெரும்பாலும் மத வழிபாடுகளை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. அது போன்றதொரு பெரிய சிற்பங்களை படைத்தல் என்பது தற்போதைய நூற்றாண்டு வரை ஒரு தனி நபருக்கு மிகவும் விலை உயர்ந்ததும் அதிக செலவு பிடிக்கக் கூடியதுமாகும். சிற்பங்கள் வழக்கமாக அன்றைய சமய அல்லது அரசியல்வெளிப்பாடாக இருந்தன. கலாச்சாரத்தின் எச்சமாக இன்று வரை அழியாதுள்ள சிற்பங்கள் மூலம் அக்கலாச்சாரமும் வாழ்ந்துகொண்டுள்ளன எனலாம். பண்டைய மத்தியதரைக் கடல் நாகரிகம், இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா மற்றும் பல தென் அமெரிக்கக் கலாச்சாரங்கள் இது போன்றே அதன் பேரளவு சிற்பங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்துகொண்டுள்ளன.

மேற்கத்தைய சிற்பக்கலைப் பண்பாடு பண்டைய கிரேக்கத்தில் தொடங்கியது. மேலும் கிரேக்கர்களே செவ்வியல் காலத்தில் பெரும்பாண்மையான புகழ்பெற்ற படைப்புகளித் தந்தவர்கள் ஆவர். மத்திய காலத்தில் கோத்திக் என்பப்படும் சிற்பக்கலை வடிவம் அகோனி மற்றும் கிறித்துவ நம்பிக்கைகளை பிரதிபலிப்பதாக அமைந்தது. மறுமலர்ச்சிக் காலத்தில் மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் என்ற சிற்பங்களைப் போன்ற படைப்புகளை உருவாக்கும் மேதைகள் சிற்பக்கலைக்கு உயிரூட்டினர். நவீனச் சிற்பங்கள் பண்டைய மரபு முறையான சிற்பங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனித உடலமைப்பை அருதியாகப் படைக்கும் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டன. இவை ஒரு முழுமையான கலைப்படைப்பின் அம்சமாக திகழ்ந்தன.

சிற்ப வகைகள்

தொகு

சில பொதுவான சிற்ப வகைகள்:

  • தனிச் சிற்பம்: இவ்வகைச் சிற்பங்களின் அடிப்படையான தனித்தன்மை என்னவெனில் அவை அனைத்துப்பகுதியிலிருந்தும் பார்ப்பதற்கேற்ப அமைக்கப்பட்டவையாகும். இதன் அடிப்பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் எதனோடும் இணைக்கப்படாமல் வெளியால் சூழப்பட்டிருக்கும் இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது. சிலைகள் இவ்வகையைச் சார்ந்தன. (சிலை: குறிப்பிட்ட பொருள், மனிதர், நிகழ்ச்சி, விலங்கு போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.)
  • புடைப்புச் சிற்பம்: இவை பின்னணியுடன் பகுதியளவு இணைந்து புடைத்தாற்போன்று அமைக்கப்படும். இவற்றுள் பல வகை உண்டு. இவை சுவரிலிருந்து புடைத்திருக்கும் அளவிற்கேற்ப அடித்தளத் தோற்றம், உயர் தோற்றம், இடைத்தோற்றம், புதைவுறுத் தோற்றம் என வகைப்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்திய சுவர் சிற்பங்கள் புதைவுறு தோற்றச் சிற்பங்களாகும். புடைப்புச் சிற்பங்கள் பெருமளவு குழுவான உருவங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட செய்திகளைச் சொல்லும் கதையமைப்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவன. இது கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஓர் அரிய தொழில் நுணுக்கத் திறனாகும். இவை கட்டிடங்களின் தூண்கள்,சுவர்கள் இவற்றை அலங்கரிக்க அமைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான சிற்பங்கள் மண்பாண்டங்கள், உலோக வேலைப்பாடுகள், அணிகலன்கள் ஆகியவற்றிலும் இவ்வகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை நினைவுச் சின்னங்கள்,நடுகற்கள், கற்சிலைகள் மற்றும் கல்வெட்டுகளை அலங்கரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.
  • செதுக்குச் சிற்பங்கள்: மற்றொரு வகையான சிற்பங்கள் செதுக்குச் சிற்பங்கள் ஆகும். இவை சிலை செய்யப்பயன்படும் உலோகம் அல்லது பொருட்களிலிருந்து தேவையற்ற பொருட்களை செதுக்கி நீக்கிய பின்பு தோற்றம் பெருபவையாகும். ஒரு சாதாரண மரம், கல் அல்லது உலோகத்திலிருந்து இவை நவீன தொழில் நுட்பங்கள் மூலம் தேவையற்ற பகுதிகளை நீக்க சிற்பங்களாக உயிர்த்தெழுகின்றன. மேலும் பற்றவைத்தல், முத்திரையிடுதல், உருக்கிவார்த்தல் போன்ற முறைகளாலும் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன இம்முறையின் மூலம் மிக அதிகமான சிற்பங்களை குறைந்த நேரத்தில் உருவாக்க இயலும்.

சிற்பம் என்ற சொல் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் முப்பரிமாண வடிவங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். சான்றாக நாணயம், பதக்கங்கள், கற்சிற்பங்கள் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். கற்களில் செய்யும் சிறிய செதுக்கல் வேலையிலிந்து மிகப்பெரிய விரிவான நுட்ப வேலைப்பாடுகள் வரையுள்ள அனைத்தையும் இச்சொல் குறிக்கின்றது

  • குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
  • இயங்கியல் சிற்பம்: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
    • ஊற்றுக்கள் (Fountain)
  • அடுக்கற்கலை: பொருட்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச் செய்யப்படும் ஒரு வகைச் சிற்பம்.

பொருட்கள் மற்றும் தொழிநுட்பங்கள்

தொகு

வரலாறு முழுவதும் சிற்பங்கள் செய்யப் பயன்படும் பொருட்களில் பெரும் மாறுபாடுகள் காணப்படுகின்றன.சிறந்த நிலைப்புத்தன்மையுடைய சிலைகள் செய்ய வெண்கலம் போன்ற உலோகங்கள் பொருத்தமானதாகும். மரம், களிமண், எலும்பு, விலங்குகளின் கொம்புகள் போன்ற பொருட்கள் சிக்கனமானது ஆனால் குறை ஆயுட்காலங்களைக் கொண்டவைகளாக இருக்கக்கூடும்.மதிப்புமிக்க பொருட்களான தங்கம், வெள்ளி,பச்சை மாணிக்கக்கல், யானைம் தந்தங்கள் போன்றவற்றைக் கொண்டு சிறு சொகுசு வேலைப்பாடுகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.சில வேளைகளில் பெரிய சிலைகளில் பொன் இழைக்கப்பட்டும் உருவாக்கப்படுகின்றன.பொதுவான பயன்பாடுகளுக்கு பரவலாக குறைந்த விலையுள்ள பொருட்களான கடினத்தன்மையான மரங்கள் (கருவாலி மரம்) ,சுடுமண், பீங்கான், மெழுகு (அழுத்தி உருவாக்கப்படும் சிற்பங்கள் முத்திரைகள் போன்றவை செய்ய மெழுகு ஏற்றது) மலிவான உலோக கலவையான பியூட்டர் கலவை மற்றும் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டன.

சிற்பங்களுக்கு பெரும்பாலும் வர்ணம் பூசப்படுகின்றன, ஆனால் அவை நேரடியாக தங்கள் ஓவியத்தை நேரத்தை இழக்கின்றன அல்லது மீட்டெடுக்கின்றன. சிற்பங்களுக்கு வண்ணமிட பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பதவண்ணம், எண்ணெய் ஓவியம், தங்கமுலாம் பூச்சு (gilding), வீட்டு வண்ணம், தூவாணமாகத் தெளிப்பு (aerosol), மின்பூச்சு (enamel) மற்றும் மண்ணூதையிடல் (sandblasting) ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கற்கள்

தொகு
 
முகலாயப் பேரரசில் ஷாஜகானால் பயன்படுத்தப்பட்ட பச்சைக்கல் மதுக் கோப்பை

கடினமான மற்றும் இயற்கை கற்களில் தேவையற்ற பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அகற்றப்பட்டு கற்சிலை உருவாக்கும் நுட்பம் பண்டைய முறைகளுள் ஒன்றாகும்.கற்சிலைகளின் நிலைத்த தன்மையின் காரணமாக பண்டைய நாகரீகத்தில் கற்சிலை வேலைப்பாடுகள் பயன்பாட்டில் இருந்தததை எகிப்து, கிரேக்கம்,இந்தியா, ஐரோப்பாவின் பெரும்பான்மையான பகுதிகளில் காண முடிகிறது.பண்டைய பாறைக்குடைவு (Petroglyphs அல்லது rock engraving) எனும் கற்சிலை வடிப்பு முறையில் பாறைகளைின் பகுதிகளை வெட்டி நீக்கி உருவங்கள் செதுக்கப்பட்டது.இது வெட்டுதல் (incising), கொத்துதல் (pecking),செதுக்கல் (carving),வழித்தல் அல்லது மழித்தல் (abrading) போன்ற படிநிலை நுட்பங்களை கொண்டுள்ளது. நினைவுச்சின்ன சிற்பம் பெரிய வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. கட்டிடக்கலை சிற்பங்கள் கட்டிடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பச்சைக்கல் (jade), பளிங்கு(agate), நரம்புக்கல் (onyx), பாறைப் படிகங்கள், படிகக்கல் (carnelian) போன்ற சற்று விலைமிக்க கடினகற்களை செதுக்கி பொருட்கள் செய்யப்படுகின்றன.

உலோகம்

தொகு

வெண்கலம் மற்றும் செப்பு உலோகக்கலவையைப் பயன்படுத்தி சிலைகள் செய்யும் முறை பழமையான இன்றளவும் பயன்பாட்டில் உள்ள முறை ஆகும். வெண்கலத்தில் செதுக்கிய சிற்பங்கள் வெண்கலம் என்றே வழங்கப்படுகின்றன. பொதுவான வெண்கல உலோகக்கலவைகள் அச்சுகளில் நிரப்பும் போது நன்றாகப் இடுக்குகளில் பரவி சிலையின் நுண்ணிய வேலைப்பாடுகள் கூட சிறந்த முறையில் தெளிவாகத் தெரிகின்ற காரணத்தால் விரும்பத்தக்க வகையில் பயன்படுத்தப்படுகிறது.கற்கள் மற்றும் பல்வேறு பீங்கான் பொருட்களை ஒப்பிடும் போது உலோகங்களின் வலிமையும் நொருங்காத தன்மையும் உருவங்கள் செய்ய அனுகூலமாக உள்ளது.மிக மென்மையானதும், அதிக விலைமதிப்பு மிக்கதுமாக தங்கம் நகைகள் செய்யவும் அதே போல தங்கத்துடன் வெள்ளியும் சுத்தியல் மற்றும் வேறு கருவிகளைக் கொண்டு அச்சில் வார்த்தெடுத்தல் (cast), சித்திரவுலோகவேலை (repousse), உருச்செதுக்குதல் (chasing), போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி நகை செய்யும் பொற்கொல்லுத் தொழிலிலும் மற்றும் வெள்ளியைக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யுமிடங்களிலும் பயன்படுகின்றன.

  • வார்த்தெடுத்தல் (Casting)
வார்த்தெடுத்தல் என்பது பொதுவாக திரவநிலையில் இருக்கும் உலோகங்களான வெண்கலம், செப்பு, கண்ணாடி, ஈயம் இரும்பு போன்றவற்றை அதற்குறிய வடிவ உள்ளீடற்ற அச்சுகளில் ஊற்றி வார்க்கும் குழுவான தயாரிப்பு செயல்முறையாகும்.உருக்கிய உலோகம் அல்லது உலோகக்கலவைகளை விரும்பத்தக்க வடிவ அச்சுகளில் ஊற்றி சில நேரம் அவை திடநிலை அடையும் வரை அனுமதிக்க வேண்டும். பின்னர் அச்சுகளை உடைத்தோ (மண் மற்றும் பாரிசச் சாந்து அச்சுகள் உடைக்கப்படுகிறது) தட்டியோ வார்ப்புகள் வெளியேற்றப்படுவதோடு இச்செயல்முறை நிறைவடைகிறது [3] .
 
நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய லைகுர்கஸ் கண்ணாடிக் கோப்பை

மிக நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் செய்ய வார்த்தெருத்தல் முறையே சிக்கனமானதும் எளிமையானதும் ஆகும்.கி.மு. 3200 ஆம் ஆண்டில் செய்ப்பட்ட மெசபடோமியன் காலத்திய எஞ்சியிருக்கின்ற செப்புத்தவளைச் சிலை இதற்கு தற்போதைய உதாரணமாகும்.மெழுகில் வார்த்தல், பாரிசச் சாந்தில் வார்த்தல், மணல் அச்சில் வார்த்தல் போன்றவை குறிப்பிடத்தக்க வார்த்தெடுத்தல் உத்திகளாகும்.

கண்ணாடி

தொகு

கண்ணாடியை கொண்டு சிற்பங்கள் செய்ய பரந்த அளவிலான செயல் நுட்பங்கள் தேவைப்படுகிறது. இருப்பினும் பெரிய சிற்ப வேலைகளுக்காக அதைப் பயன்படுத்துவது சமீபத்திய வளர்ச்சியாகும். கண்ணாடியை செதுக்குவது மிகச் சிரமமான பணியாகும்.இரு வண்ண ரோமன் லைகுர்கஸ் கோப்பை கண்ணாடிச் சிற்பத்துக்கு தனித்துவ அடையாளமாகும் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thinakaran.lk/2013/09/05/?fn=f1309052[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ""Gods in Color: Painted Sculpture of Classical Antiquity" September 2007 to January 2008, The Arthur M. Sackler Museum". Archived from the original on 2009-01-04. பார்க்கப்பட்ட நாள் 2014-05-10.
  3. "Flash animation of the lost-wax casting process". James Peniston Sculpture. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  4. British Museum - The Lycurgus Cup
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பம்&oldid=3659469" இலிருந்து மீள்விக்கப்பட்டது