நடுகல் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல் ஆகும். இவற்றை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர். நினைவுக் கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல. உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தியாவிலும் வடக்கு, தெற்கு என்ற பேதமின்றி நெடுங்காலமாகவே நடுகற்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும், வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.

வேலூரில் ஒரு நடுகல்

இந்தியாவில் நடுகற்கள்

தொகு

இந்தியாவில் நடுகற்கள் அல்லது வீரக்கற்கள் வடக்கே இமாச்சலப் பிரதேசம் தொடக்கம் தெற்கில் தமிழ்நாடு மாநிலம் வரை காணப்படுகின்றன. வடக்கில் இமாச்சலப் பிரதேசம், குசராத், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்கள் உட்பட்ட பல இடங்களில் இவை உள்ளன. தென்னிந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பழங்கால நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டில் முனைவர் கேசவராஜ் எழுதிய நூலின் அடிப்படையில் தென்னிந்தியாவில் கருநாடக மாநிலத்திலேயே அதிக அளவாக 397 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 202 கற்களும், ஆந்திராவில் 126 கற்களும், கேரளாவில் ஒரு கல்லும் அறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நடுகற்கள்

தொகு

தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிர சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. செங்கம், தருமபுரி, தேன்கனிக்கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான் போன்ற அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது. தமிழ் நாட்டில் சேரன் , சோழன், பாண்டியன் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வீரச்சாவு அடைந்த மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், போர்ச் சேவலுக்கு அந்த சேவலின் உருவம் பொறிக்கப்பட்ட நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.[1]

சங்ககாலத்தில் நடுகல்

தொகு

கோவலர்களாகிய மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளை மீட்டு வருவர். அப்போது வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அந்த மறவனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது. அக்காலத்து நிறுவப் பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு நம்மிடையே நிலவுகின்றன.

பண்டைய தமிழர்கள் வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் உண்டாட்டு என்பதை நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளன. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "கல்லே பரவினல்லது நெல்லுகுத்தப் பரவும் கடவுளும் இலவே "[2] என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்

வழிபடும் முறை

தொகு

நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதனை புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு 'வல்லாண் பதுக்கைக் கடவுள்' என்று பெயர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.[3]

இல்லடுகள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்’[4]

இல்லங்களில் காய்ச்சப்படும் கள்ளையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சிற்றூரின் பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர் . நெய் விளக்கு ஏற்றியதால் உண்டானபுகை மேகம் போல் எழுந்து தெருவில் மணக்கும் என்று, நடுகல் வணங்கப்பட்ட செய்தியைப் புறநானூறு கூறுகிறது. ‘நடுகல்லுக்குப் பீலி சூட்டி வணங்கும் போது கள்ளும் படைத்து வணங்கினர்” என்று புறநானூறு கூறுகிறது.

‘நடுகற் பீலிசூட்டி நாரரி சிறுகலத்து குப்பவும்” என்று அதியமான் நெடுமானஞ்சியின் நடுகல்லுக்குக் கள்ளும் படைக்கப்பட்டது குறித்து ஔவையார் கூறுகிறார். ஆநிரைகளையுடைய கோவலர் உயர்ந்த வேங்கை மரத்தின் நல்ல பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து அலங்கரித்து இலைமாலை சூட்டி நடுகல்லை வணங்கினர் என்று புறநானூறு கூறுகிறது.

ஊர் நனியிகந்த பார் முதிர் பறந்தலை.
ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப்
போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினை"

என்பது அது குறித்தபாடற் பகுதியாகும்.

வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்காக நடைபெற்ற கரந்தைப் போரில் உயிர்நீத்த வீரனுக்கு ஊரவர் கல்நட்டனர். மரல் நாரில் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியையும் அழகிய மயிலினது பீலியையும் சூட்டிப் பெயரும் பீடும் எழுதிப் பெருமை செய்து வழிபட்டனர் [5]

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணி மயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லும் ‘என்பது அப்பாடற் பகுதி.

நடுகற்களுக்கு நாள்தோறும் வழிபடும் காரியங்களைப் பெண்கள் செய்தனர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணகிக்கு செங்குட்டுவன் அமைத்த நடுகல்லுக்குப் பூசை செய்ய அவள் தோழியான தேவந்தி என்பாளை அம்மன்னன் நியமித்தான்[6] என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

நடுகல் குறித்த நம்பிக்கைகள்

தொகு

நடுகல்லை நாள் தோறும் வணங்கினால் விருந்தினர் எதிர்ப்படுவர் ’ என்றும் போரில் கணவனுக்கும் அரசனுக்கும் வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே நம்பிக்கையும் "நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும்; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும்" என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. இதனை

தொழாதனை கழிதலோம்பு மதி வழாது
வண்டு மேம்படூஉ மிவ் வறநிலையாறே" என்ற புறநானூற்றுப் பாடலடிகள் தெளிவுற உணர்த்துகின்றன.

நடுகல் வழிபட ஆற்றுப்படுத்துதல்

தொகு

பாணர்களும் கூட, வீரர்களின் நடுகற்களைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு ஆற்றுப்படுத்திய நிகழ்வுகளையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறியின்
தொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டு மேம் படூஉ மிவ் வற நிலையாறே
............................
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன்கல்லே"[7]

பெரிய யானையின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினையுடைய பெரிய பறையினையுடைய இரவலனே, நீ போகின்றாயாயின் பகைவரது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்புகள் மிகுதியாகத் தைக்கவும் எதிர்நின்று விலக்கியவனது கல்லைத் தொழாமல் போவதைத் தவிர்ப்பாயாக என்று, பாணர்கள் நடுகல்லை வணங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டதைப் புறநானூற்றின் வாயிலாக அறியலாம்.

வழிச் செல்லும் பாணர்கள் வழியிடைக்காணும் நடுகற்களை வணங்கி யாழை வாசித்து செல்லுமாறு வழிப்ப்படுத்தப்பட்டனர்.

"ஓன்னாத் தெவ்வர் உலைவிடத்தார்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
கல்லேசு கவலை யெண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பாகத்
தொன்றொழுகு மரபினும் மருப்பிகுத்தினைமின்’[8]

ஏவல் பொருந்தாத பகைவர் புற முதுகிட்ட அளவிலே தமது வெற்றி தோன்ற வீரர்கள் ஆரவாரித்தாராக, அது பொறாமல் இவ்விடத்தே உயிர் கொடுத்தற்கு நல்லகாலம் என்று மீண்டும் உயிரைக் கொடுத்த பெயர்களை எழுதி நட்ட கற்கள் மிகுதியாக உள்ளன. இன்பம் மிகுகின்ற தாளத்தையுடைய உங்கள் பாட்டு, அந்நடுகல்லின் தெய்வத்திற்கு விருப்பம் உடையதாதலின் நீங்கள் உங்களுடைய யாழை வாசித்து விரைந்து செல்வீர் என்று, பாணர்கள் நடுகல்லைக் கண்டு வணங்கிச் செல்லுமாறு கூறப்பட்டனர்.

வினையழி பாவை

தொகு

போர்முனையில் வீழ்ந்தோருக்கு அவர்கள் போரிட்ட மன்றத்தில் பாவைப்பொம்மை செய்து வைப்பார்களாம். அந்தப் பொம்மை மழையில் கரைந்தும் வெயிலில் காய்ந்தும் செயத அதன் அழகு அழிந்துபோகுமாம். இதுதான் வினையழி பாவை. (கல்லில் பெரும் பீடும் எழுதி வைத்தால் அது நடுகல் எனப்படும். மண்ணில் உருவாரம் செய்து வைத்தால் அது பாவை எனப்படும்.) - (வேம்பற்றூர்க் குமரனார் அகநானூறு 157)

தற்கால நடுகற்கள்

தொகு
 
தமிழகத்தில்1972ஆம் ஆண்டு நடந்த உழவர் போராட்டத்தில், இறந்தவர்களின் நினைவாக எழுப்பப் பட்ட நடுகல் = வீரக்கல்.
 
தமிழீழத்தின் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த கல்லறை ஒன்று

தற்காலத்திலும் பொது மக்களுக்கான போராட்டங்களில் ஈடுபட்டு இறப்போருக்காக நடுகற்களைப் போன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படுவது உண்டு. இவை கற்களினால் அல்லது காங்கிறீட்டினால் கட்டப்படுகின்றன. எனினும் இவற்றைத் தற்போது நடுகற்கள் என்று குறிப்பிடுவது இல்லை.

மாவீரர் துயிலும் இல்லங்கள்

தொகு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் போன்றனவற்றினை உள்ளடக்கியதாக்கிய பிரதேசம் மாவீரர் துயிலுமில்லம் எனப்படும். விடுதலைப் புலிகளின் நிலப் பகுதிகளைக் கட்டுப் பாட்டுக் கொண்டிருந்த காலத்தில் இவை சிறப்பாக பேணப்பட்டன. 2009 இல் விடுதலைப் புலிகள் போரில் தோற்ற பின்பு இந்த மாவீரர் துயிலும் இல்லங்களில் பெரும்பாலானவை இலங்கை படைத்துறையால் அழித்துதொழிக்கப்பட்டுள்ளன. போர் வீரர்களைப் புதைக்கும் இயக்க மரபு தமிழர்களின் நடுக்கல் மரபில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இரா.சிவசித்து (13 அக்டோபர் 2018). "சோழனுடன் போரிட்ட சேவல்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2018.
  2. மாங்குடி மருதனார் புறநானூறு.
  3. அம்மூவனார்,அகநானூறு,பா. 35
  4. புறநானூறு பா.306
  5. புறநானூறுபா.264
  6. சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம்,நடுகற்காதை
  7. புறநானூறு பா. 263
  8. மலை படுகடாம் .பாடல் வரிகள் 386 – 90

உசாத்துணைகள்

தொகு
  • கிருஷ்ணமூர்த்தி, ச., நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2004.
  • கேசவராஜ், வெ., தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை, 2008.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நடுகல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுகல்&oldid=3933081" இலிருந்து மீள்விக்கப்பட்டது