புறநானூறு

புறநானூறு பாடலில் போர் வீரம்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும்.[1] புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பாடியவர்கள்

இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அதனை அடுத்துப் போர்ப் பற்றிய பாடல்களும் கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

புறப்பொருள்

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.

பாடல்:

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.[2]

இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம்.

சமூக நிலை

பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும் 30 படைக்கலக்கருவிகளையும் 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்குக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி எனப் புறநானூறு விளங்குகிறது.

வரலாற்றுக் குறிப்புகள்

புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.

எடுத்துக்காட்டுப் பாடல்

தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
- நம்பி நெடுஞ்செழியன் - புறம் - பாடல் 235

மொழிபெயர்ப்புகள்

பேராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பதிப்பு வரலாறு

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1894-ஆம் ஆண்டு பழைய உரையோடு (முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது) நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.[3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. மது.ச. விமலானந்தம் (2020). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். p. பக்க எண். 47. {{cite book}}: Unknown parameter |மொழி-= ignored (help)
  2. இந்தப்பாடல் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய புறப்பொருள் வெண்பாமாலை நூலிலுள்ள பகுப்புகளை விளக்கும் வாய்பாட்டுக் குறிப்புப் பாடல். தொல்காப்பிய நெறியைப் பின்பற்றாதது என்பதைக் கரந்தைத் திணைக்கு விளக்கம் தரும் பகுதியால் உணரலாம்.
  3. சங்க இலக்கியப் பதிப்புரைகள், பாரதி புத்தகாலயம், பக்கம் 24

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநானூறு&oldid=4133792" இலிருந்து மீள்விக்கப்பட்டது