வெட்சித் திணை

(வெட்சித்திணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களைக் (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்.

  • தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.

அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழிலும், வேளாண்மையும் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளைக் கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.

மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும் ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.[1][2] பகைவரின் ஆ நிரைகளைக் கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.

தொல்காப்பியத்தில் வெட்சித் திணை தொகு

வெட்சித்திணை பதினான்கு துறைகளை [3] உடையது. தொல்காப்பியர் வெட்சியைக் குறிஞ்சியின் புறன் என்று வகைப்படுத்துகிறார் [4][5]

வெட்சியின் துறைகள் தொகு

தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள்

  1. ஆ நிரைகளை கவர எழும் படையின் பேரரவம்
  2. படைகள் தம்மூரைக் கடக்கையில் ஊரிடத்து நிகழும் நற்சொல்லைக் கேட்டல்
  3. பக்கத்து உள்ளோர் அறியாதவாறு செல்லுதல்
  4. பகை ஒற்றர்களின் கருத்து கெடுமாறு தாம் பகைவரை ஒற்றறிதல்
  5. ஒற்றறிந்த பின் பகைவேந்தனை சூழ்ந்து தாக்குதல்
  6. போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்
  7. ஊரின் பசுக்கூட்டத்தைக் கவர்தல்
  8. பின்பற்றி வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்
  9. கவர்ந்த பசுக்கூட்டங்களை அவை நோகாதவாறு ஓட்டி வருதல்
  10. தம் சுற்றத்தார் கவலையுடன் நிற்கும் இடத்துக்கு (பொதுவாய் ஊரின் வெளிப்பக்கம்) வந்து சேருதல்
  11. கவர்ந்து வந்த ஆ நிரைகளைத் தம் ஊரில் கொண்டுவந்து நிறுத்துதல்
  12. வீரர்கள் அப்பசுக்களைத் தம்முள் பகிர்ந்து கொளல்
  13. வெற்றி களிப்பில் மதுவுண்டு ஆடுதல்
  14. தாம்பெற்ற பசுக்களைப் பிறருக்கும் கொடையளித்து மகிழ்தல் [6]

வெட்சியுள் கரந்தை தொகு

இன்றைய நிலையில் புலவர்கள் கரந்தை என்னும் திணையைத் தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். கரந்தை ஆ நிரைகளை மீட்டுக்கொள்வது ஆதலால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம்.

கொற்றவை நிலை தொகு

  • கொற்றம் என்பது வெற்றி. வெற்றி தந்தவரைப் போற்றுதல் கொற்றவை நிலை,

வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது.[7] இது 21 துறைகளைக் கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.[8]

  1. காந்தள் துறை - வேலனின் வெறியாட்டத்தை விளக்கும்
  2. குடிப்போர் - வேந்தன் தன் குடிப்பூ சூடிப் போரிடுதல்
  3. போந்தை சூடிய சேரர் போர்
  4. வேம்பு சூடிய பாண்டியர் போர்.
  5. ஆர் சூடிய சோழர் போர்
  6. வள்ளி [9] - இது வள்ளிக் கூத்து.
  7. கழல்நிலை - போரில் புறங்கொடாத நிலையை விளக்குவது
  8. உன்னநிலை - உன்னமரத்தில் குறி அறிவது. பருவநிலை அறிவது இது.[10]
  9. பூவைநிலை - பூவை எனப்படும் காயாம்பூ நிறம் கொண்ட மாயோனை வழிபடுவது.
  10. பூவைநிலை - புறநானூற்றுப் பாடல்கள் பல-கடவுளரை வழிபடுவதையும் பூவை நிலை எனக் காட்டுகிறது.
  11. ஆ பெயர்த்துத் தருதல் - ஆனிரை மீட்டல்
  12. வேந்தனைப் புகழ்தல்
  13. நெடுமொழி - தன் பெருமையை எடுத்துரைத்தல்
  14. பிள்ளைநிலை - தார்ப்படை என்றும், கொடிப்படை என்றும் கூறப்படும் காலாட்படையை எதிர்த்து நிற்றல். வாளால் வெட்டப்பட்டுச் சாய்தல்.
  15. பிள்ளைநிலை - புண்ணொடு வருதல்
  16. பிள்ளையாட்டு - வாட்போரில் வென்று வந்தவனுக்கு அரசன் நாடு தந்து போற்றல்.
  17. காட்சி - நடுகல்லுக்குக் கல்லைக் காணுதல்
  18. கால்கோள் - கல்லைத் தோண்டிக் கொண்டுவருதல்
  19. நீர்ப்படை - கல்லை நீராட்டுதல்
  20. நடுகல் - கல்லைத் தெய்வமாக்கி நடுதல்.
  21. பெரும்படை - நடுகல்லுக்குக் கோயில் கட்டுதல்

புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் திணை தொகு

தொல்காப்பியத்திற்குப் பிறகு தமிழில் புறப்பொருள் பற்றியதாகக் கிடைக்கும் ஒரே இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலையாகும். இது மன்னவனின் கட்டளை பெற்றோ பெறாமலோ படைவீரர் சென்று பகைவரோடு போரிட்டு அவரின் ஆ நிரைகளைக் கவர்ந்துவந்து தருதல் வெட்சித் திணையாகும் என்கிறது.[11]

வெட்சி 19 துறைகளை உடையது என்று இந்நூல் உரைக்கிறது. புறப்பாடல்களின் திணை, துறைகளைத் தீர்மானிக்க பெரும்பான்மை இந்த நூலே பயன்படுத்தப்படுகிறது. இந்நூல் கூறும் 19 துறைகள், வெட்சி (வேந்தன் ஆணைப்படியும் ஆணை இல்லாமலும் ஆனிரை கவர்தல் வெட்சித் திணை)

  1. வெட்சியரவம்,வேல் கொண்ட மறவர் காலில் செருப்பு அணிந்துகொண்டு செல்கின்றனர் துடிப்பறை முழக்கத்துடன் செல்கின்றனர் வெட்சிப்பூ சூடிக்கொண்டு செல்கின்றனர் அப்போது பகைவர் ஆனிரை இருக்கும் இடத்தில் தீ நிமித்தமாக காரி என்னும் கருங்குருவி அழுகை ஒலி எழுப்புகிறது.
  2. விரிச்சி விருப்பத்தின் விளைவு என்ன ஆகும் என்பதை நன்கு அறிந்தகொள்வதற்காக இருண்டிருக்கும் மாலை வேளையில் யாரோ பேசிக்கொள்ளும் விரிச்சிச் சொல்லை நிமித்தமாகக் கேட்பது விரிச்சி,அது கழுமரம் இருக்கும் சீரூர் இருண்ட மாலை நேரம் கையைக் கூப்பிக்கொண்டு முற்றத்தில் நிற்கின்றனர் எங்கோ ஒரு ஆனிரைத் தொழுவத்தில் இருப்பவள் ‘குடத்தில் கள் கொண்டு வா’ என்றாள் இது அவர்கள் கேட்ட விரிச்சிச்சொல். இது வில்லாளனுக்கு வெற்றி தரும் என நினைத்துக்கொண்டனர்
  3. செலவு, வில்லேர் உழவர் வேற்றுப்புத்தை நினைத்துக்கொண்டு கற்கள் மிகுந்த கானத்தைக் கடந்து செல்வது - செலவு
  4. வேய், பகைவர் ஆனிரை இருக்குமிட நிலைமையை ஒற்றர் அறிந்து வந்து சொல்வது - வேய்
  5. புறத்திறை, ஊரின் நுழைவாயிலை வளைத்துக்கொண்டு புறத்தே தங்குதல்
  6. ஊர்கொலை, வில் மறவர் குதிரையில் சென்று ஊரே ஓலமிடும்படி வீடுகளுக்குத் தீ மூட்டினர்
  7. ஆகோள், வென்ற மறவர் கன்றுகளோடு ஆனிரைகளை வளைத்தல்
  8. பூசல் மாற்று, கூட்டமாக ஆனிரைகளைக் கைப்பறியவர் தடுத்தோரைப் பிணமாக்கி ஆனிரைகளை ஓட்டிச் செல்லல்
  9. சுரத்து உய்த்தல், ஆனிரைகள் வருந்தாமல் பாலைநிலக் காட்டில் ஓட்டிச் செல்லுதல்
  10. தலைத் தோற்றம், விரும்பும் இளையோன் ஆனிரை இனத்துடன் வருதல் கண்டு அவன் கிளைஞர்கள் மகிழ்தல்
  11. தந்து நிறை, துடி முழக்கத்துடன் ஊரார் மகிழுமாறு மறவன் ஆனிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தது
  12. பாதீடு, கவர்ந்துவந்த ஆனிரைகளை ஊரார் பகிர்ந்துகொண்டனர் செயலாற்றிய பாங்கிற்கு ஏற்ப, பகிர்ந்துகொண்டனர்
  13. உண்டாட்டு, வீரக்கழல் அணிந்த மறவர் மட்டுக்கள் பருகி மகிழ்ந்தல்
  14. கொடை, தொகுத்துக் கொண்டுவந்த ஆனிரைகளை ஒளிவு மறைவு இல்லாமல் வேண்டியவர்களுக்கு வழங்குதல்
  15. புலனறி சிறப்பு, போருக்குச் சென்று முற்றுகை இட்டிருந்தபோது ஊருக்குள் சென்று நிலைமை அறிந்து வந்து புலன் கூறியவருக்கு, மிகுதியாக வழங்குதல்
  16. பிள்ளை வழக்கு, புள் நிமித்தம் பார்த்துப் பொய்யாமல் சொன்னவர்க்கு, குறை ஏதும் வைக்காமல் ஆனிரை வழங்குதல்
  17. துடி நிலை, மறவர் போரிடும்போது துடி முழக்குபவன் பண்பினை உரைத்தல்
  18. கொற்றவை நிலை,கொற்றவை என்பவள் வெற்றித் தெய்வம் இவள் அருளைக் கூறுதல்.
  19. வெறியாட்டு தொடங்கிய செயல் நிறைவேற முருகனொடு வெறி ஆடுதல்.

என்பன

சங்க இலக்கியத்தில் வெட்சித் திணை தொகு

புறப்பொருள் பாடல்களை சங்க இலக்கியத்தில்தான் பெரும்பாலும் காண்கிறோம், அதிலும் வெட்சி முதாலான திணைகளில் பொருந்திய பாடல்கள் புறநானூற்றில் மட்டுமே காணப்படுகின்றன.

புறநானூற்றில் வெட்சித் திணையில் அமைந்த பாடல்களின் வரிசை எண்கள் பின்வருமாறு,

257, 258, 262, 269, 297

இந்தப் பாடல்கள் அனைத்தும் உண்டாட்டு என்னும் துறையிலேயே அமைந்துள்ளன. உண்டாட்டு ஆவது பகைவரை வென்று ஆ நிரைகளை கவர்ந்துவந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் மது உண்டு ஆடுவதாகும்.

குறிப்புகள் தொகு

  1. புறநானூறு பாடல் 9 காண்க
  2. வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

    வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
    எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
    அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
    பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்

    செரு வென்றது வாகையாம்

  3. துறை என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்
  4. அகத்திணை புறத்திணை ஒப்பீடு
  5. வெட்சிதானே குறிஞ்சியது புறனே
    உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

    -தொல்-பொருள்-2-1

  6. படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,

    புடை கெடப் போகிய செலவே, புடை கெட
    ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
    முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றியே
    ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
    நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
    தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என

    வந்த ஈரெழ் வகையிற்று ஆகும். -தொல்-பொருள்-2-3

  7. "மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். பொருள் 62)
  8. தொல்காப்பியம், பொருளியல் 63
  9. வள்ளி என்னும் வள்ளைப்பூ வாடிவிடும். வள்ளிக்கூத்து 'வாடா வள்ளி' எனக் குறிப்பிடப்படுகிறது
  10. உன்னமரம் உலறி நின்றால் மன்னனுக்குக் கேடு வரும் என்றும், குழைந்து நின்றால் வெற்றி வரும் என்றும் நம்பினர்.
  11. வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
    சென்றி கல்முனை ஆதந்து அன்று

    -பு.பொ.வெ.மா-வெட்சி-1

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெட்சித்_திணை&oldid=3305577" இலிருந்து மீள்விக்கப்பட்டது