தொல்காப்பியம்

தமிழ் இலக்கண விதிகளை வகுத்துக் கூறும் தொல்காப்பியரின் நூல்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

தொல்காப்பியர் காலம்

தொகு

தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்குச் சமகாலத்து நூல். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஊ.மு. 711 என்று பொருத்தியது.

தொல்காப்பியம் – பெயர் விளக்கம்

தொகு
 
தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல்.தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்)= தொல்காப்பியம்.(பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகின்றது.

தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்

தொகு

தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும்,பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் "தொல்காப்பியன்" எனப்பெயர் வைத்துக்கொண்டார்.அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி'எனக் குறிப்பிடுகிறார்.தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும்.

அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும் தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும் பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் கருத்தா இன்றி காரியமில்லை அதனால் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமை.

கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.

தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்

தொகு

இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.[2]

தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.

தோற்றம்

தொகு

தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர்[3] என்று சிலர் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.

தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.

பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின்[4] இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் பொ.ஊ.மு. 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இஃது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் பொ.ஊ.மு. 700-ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை பொ.ஊ.மு. 500-இக்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய ச. வையாபுரிப்பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா.இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எசு. வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும், மா. இராச மாணிக்கனார் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார்.

தொல்காப்பியர் காலம்

தொகு

சங்க காலப் புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் பொ.ஊ.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க காலப் புலவர் கபிலர், அரசன் இருங்கோவேள் பற்றிக் கூறுகையில் அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாகத் துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும் அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் பொ.ஊ.மு. 280-290 இடைப்பட்ட காலமாகும். ஒரு தலைமுறைக்கு 27 எனக் கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 பொ.ஊ.மு. 16-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட விடயங்களைப் பற்றியும் மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 20-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும் அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் பொ.ஊ.மு. 1500-ஆம் ஆண்டு வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாகக் கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர் (பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (பொ.ஊ.மு. 5770-பொ.ஊ.மு. 2070) பிறந்தவர். கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் எனத் துள்ளியமாகத் தெரிகிறது.காரணம் நக்கீரர், தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் பொ.ஊ.மு. 2100-இக்கும் முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

அமைப்பு

தொகு
 
thumbமூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு

தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.

எழுத்ததிகாரம்

தொகு
 
தொல்காப்பிய எழுத்து நடை - ஒரு பகுதி.
  1. நூல் மரபு(நூன்மரபுச் செய்திகள்)
  2. மொழி மரபு(மொழிமரபுச் செய்திகள்)
  3. பிறப்பியல்(பிறப்பியல் செய்திகள்)
  4. புணரியல் – (புணரியல் செய்திகள்)
  5. தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்)
  6. உருபியல் (உருபியல் செய்திகள்)
  7. உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
  8. புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)
  9. குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)

எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்

தொகு

எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.

இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன.

மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.

ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.

ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.

இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.

சொல்லதிகாரம்

தொகு
  1. கிளவியாக்கம்
  2. வேற்றுமை இயல்
  3. வேற்றுமை மயங்கியல்
  4. விளி மரபு
  5. பெயரியல்
  6. வினை இயல்
  7. இடையியல்
  8. உரியியல்
  9. எச்சவியல்

சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்

தொகு

சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.

இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துகளைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.

மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும் பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.

நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.

ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும் அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.

ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும் ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும் எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.

ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.

ஒன்பதாவது எச்சவியலில்

  • இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும்,
  • பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்,
  • ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும்,
  • இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும்,
  • காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும்

விளக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே.

மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.

பொருளதிகாரம்

தொகு
  1. அகத்திணையியல்
  2. புறத்திணையியல்
  3. களவியல்
  4. கற்பியல்
  5. பொருளியல்
  6. மெய்ப்பாட்டியல்
  7. உவமவியல்
  8. செய்யுளியல்
  9. மரபியல்

பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்

தொகு

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.

முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.

மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள்.

ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.

ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது.

ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.

எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.

ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும் அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.

உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13-ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.

மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.

இலக்கணம் - சொல்விளக்கம்

தொகு

தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்

தொகு

தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்

தொகு
  1. இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு
  2. பேராசிரியர்-
  3. சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு
  4. நச்சினார்க்கினியர்
  5. தெய்வச்சிலையார்
  6. கல்லாடனார்

சுப்பிரமணிய சாத்திரி, இலக்குவனார், முருகன் ஆகியோர் மொழிபெயர்ப்பின் வழி செய்யப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் சிறப்புப்பற்றிய பேராசிரியர்களின் கருத்து

தொகு

1. தொல்காப்பியம் தமிழர்களின் உயிர் நூல் எனக் கூறுவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்.

செய்தித் தொகுப்புக் கட்டுரைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ramaswamy, Vijaya (1993). "Women and Farm Work in Tamil Folk Songs". Social Scientist (Social Scientist) 21 (9/11): 113–129. doi:10.2307/3520429. "As early as the Tolkappiyam (which has sections ranging from the 3rd century BC to the 5th century AD) the eco-types in South India have been classified into ...". 
  2. {| border="1" align="center" float="left" cellpadding=4 cellspacing="0" width="550" style="margin: 1em 1em 1em 1em; background: #fafafa; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: 90%;" |style="width:200px"| ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
    ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
    தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
    இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே நன்னூல் - 136 |style="width:200px"| தொன்மை + காப்பியம்
    "ஈறு போதல்" என்னும் விதிப்படி
    தொன்மை + காப்பியம்
    தொன் + காப்பியம் "முன்னின்ற மெய்திரிதல்" என்னும் விதிப்படி
    தொன்ல் + காப்பியம்
    தொல் + காப்பியம்
    |}
  3. T.R. Sesha Iyengar (1982). Dravidian India. http://books.google.co.in/books?id=kt1Rp1eXRxoC&pg=PA164&dq=tolkappiyar+is+a+jain&hl=en&sa=X&ei=Gpq4T6TRNYnjrAeFxZDTBw&ved=0CDoQ6AEwAA#v=onepage&q=tolkappiyar%20is%20a%20jain&f=false. p. 164. {{cite book}}: External link in |publisher= (help)
  4. நக்கீர நாயனார். இறையனார் அகப்பொருளுரை.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியம்&oldid=4134293" இலிருந்து மீள்விக்கப்பட்டது