தமிழ் இலக்கியம்
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்டு இவ்வுலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
வரலாறு
தொகுமு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு:
- பழங்காலம்
- சங்க இலக்கியம் (பொ.ஊ.மு. 500 – பொ.ஊ. 300)
- நீதி இலக்கியம் (பொ.ஊ. 300 – பொ.ஊ. 500)
- இடைக்காலம்
- பக்தி இலக்கியம் (பொ.ஊ. 700 – பொ.ஊ. 900)
- காப்பிய இலக்கியம் (பொ.ஊ. 900 – பொ.ஊ. 1200)
- உரைநூல்கள் (பொ.ஊ. 1200 – பொ.ஊ. 1500)
- புராண இலக்கியம் (பொ.ஊ. 1500 – பொ.ஊ. 1800)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
- இக்காலம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
- இருபத்தோராம் நூற்றாண்டு
முதற்சங்கம், இடைச்சங்கம்
தொகுதொல்பழங்காலத்தில், அக்காலப் பாண்டிய அரசர்களின் ஆதரவில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக மூன்று தமிழ்ச் சங்கங்கள் தோன்றித் தமிழாராய்ந்ததாகவும், அக்காலத்தில் தமிழிலக்கியங்கள் பல இயற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என அழைக்கப்படும் இச்சங்கங்கள் சார்ந்த இலக்கியங்களில் கடைச்சங்க நூல்கள் மட்டுமே தற்போது கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. முன்னிரண்டு சங்கங்களையும் சேர்ந்த நூல்கள், அக்காலங்களில் ஏற்பட்ட கடல்கோள்களின்போது, நாட்டின் பெரும்பகுதியுடன் சேர்ந்து அழிந்துபோனதாகக் கருதப்படுகிறது. எனினும், முதலிரு சங்கங்கள் இருந்தது பற்றியோ அக்காலத்தில் இலக்கியங்கள் இருந்தது பற்றியோ உறுதியான ஆதாரங்கள் இல்லை.
சங்க இலக்கியம்
தொகுமுதன்மைக் கட்டுரை: சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் பொது ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2,381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் புரிந்தோரும், பெண்களும் அடங்குவர். அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய்ச் சங்க இலக்கியங்கள் உள்ளன. பண்டைத் தமிழரது காதல்,போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப் பாடல்கள் நமக்கு அறியத் தருகின்றன.
பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற தொகுப்புகளே சங்க இலக்கிய நூல்கள் ஆகும். இவை மதுரையில் அமைந்த கடைச்சங்கத்தில் தொகுக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.
சங்கம் மருவிய காலம் / நீதி நூற்காலம்
தொகுசங்க காலத்திற்கு அடுத்து வந்த காலப்பகுதியில் அறவழி கூறும் நூல்கள் மிகுதியாக வெளிவந்தன. எனவே இக்காலம் நீதிநூற்காலம் எனப்படுகிறது. இந்நூல்களுள் போதிக்கப்படும் நீதி, பெரும்பாலும் சமயச் சார்பற்றவையாகக் கருதப்படுகிறது.[1] நாலடியார் முதற்கொண்டு இன்னிலை / கைந்நிலை ஈறாக உள்ள பதினெட்டு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவையே நீதி நூல்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் இத்தொகுப்பினுள் அடக்கம்.
சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள் இயற்றப்பட்டதும் இக்காலத்தில்தான்.
தற்கால இலக்கியம்
தொகுபொ.ஊ. 18-ஆம், 19-ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. பல்வேறு பேரரசுகளின் ஆட்சியாலும், ஆங்கில மொழியின் வரவாலும் ஒரு தேக்கம் ஏற்பட்டது தமிழ் இலக்கியத்தில். பின்னர் நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், ஐரோப்பிய மிஷனரிகளின் தமிழ் மொழி ஈர்ப்பும், அவர்கள் கொண்டுவந்த அச்சியந்திரங்களும், பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
- சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
- உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
- புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
- மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர், ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும், அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.