வெண்பா

ஒரு மரபுச் செய்யுள் வகை

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். [1] அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

இலக்கணம்

தொகு

வெண்பாவின் பொது இலக்கணம்:

  • ஈற்றடி  முச்சீராய் ஏனைய அடிகள்  நாற்சீராய் வரும் .
  • இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
  • இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா.
  • ஈற்றடியின்  ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள்  ஒன்றுகொண்டு முடியும்.
  • செப்பலோசை பெற்று வரும்
  • இரண்டடி முதல் 12 அடி வரை வரும்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

தொகு

தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

  • திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
  • நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
  • முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.
  • நள வெண்பா[2] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
  • நீதி வெண்பா[3] மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
  • திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
  • மூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.[4]
  • நல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.[5]

இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.

வகைகள்

தொகு

வேறு வகைப் பிரிவு

தொகு

இந்த வேறு வகை வெண்பாக்களைக் குறிப்பிடும் இலக்கணப் பாடல்கள் இரண்டு தரப்பட்டுள்ளன. [6]

வெண்பா (தழுவல்)

தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்

தொகு

உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்துக் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.

நேர்நேர் தேமா
நிரைநேர் புளிமா
நேர்நிரை கூவிளம்
நிரைநிரை கருவிளம்
நேர்நேர்நேர் தேமாங்காய்
நேர்நேர்நிரை தேமாங்கனி
நேர்நிரைநேர் கூவிளங்காய்
நேர்நிரைநிரை கூவிளங்கனி
நிரைநேர்நேர் புளிமாங்காய்
நிரைநேர்நிரை புளிமாங்கனி
நிரைநிரைநேர் கருவிளங்காய்
நிரைநிரைநிரை கருவிளங்கனி

அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

மேற்கோள் விளக்கம்

தொகு
  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 173
  2. "நள வெண்பா" (PDF). Archived from the original (PDF) on 2005-02-08. பார்க்கப்பட்ட நாள் 2004-12-01.
  3. "நீதி வெண்பா (TSCII encoding)". Archived from the original on 2004-12-11. பார்க்கப்பட்ட நாள் 2004-12-01.
  4. http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012231.htm
  5. http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012232.htm
  6. 1
    பண்பு ஆய்ந்து அடங்கிய பாநிலை தெரியின்
    வெண்பா மூவிசை விரிக்குங் காலே
    2
    செப்பல் வெண்பா வெண்கூ வெண்பா
    அகவல் வெண்பா என்றனர் முறையே

வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்

தொகு

யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஓர் இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது.[1] அந்நெறிமுறைகள் பின்வருவன:

வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
  1. இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
  2. வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

வெண்பா செப்பலோசை பெற்று வரும்.

வெண்பாவுக்கான மேலே தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:[2]

<வெண்பா> <அடி>{1,11}[3]<ஈற்றடி>
<அடி> <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
<ஈற்றடி> <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
<சீர்> <ஈரசை> | <மூவசை>
<ஈற்றுச்சீர்> <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
<ஈரசை> <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
<மூவசை> <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
<தேமா> <நேர்> <நேர்>
<புளிமா> <நிரை> <நேர்>
<கருவிளம்> <நிரை> <நிரை>
<கூவிளம்> <நேர்> <நிரை>
<தேமாங்காய்> <தேமா> <நேர்>
<புளிமாங்காய்> <புளிமா> <நேர்>
<கருவிளங்காய்> <கருவிளம்> <நேர்>
<கூவிளங்காய்> <கூவிளம்> <நேர்>
<நாள்> <நேர்>
<மலர்> <நிரை>
<காசு> <நேர்> <நேர்>
<பிறப்பு> <நிரை> <நேர்>
<நேர்> <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
<நிரை> <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
<குறில்> {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<நெடில்> {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
<ஒற்று> {மெய்யெழுத்து}

தளைகளுக்கான இலக்கண நெறிகள்:

இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்)
<வெண்பா>   → <X> | <Y>
<X>	 → <தேமா> <Y>
<X>	 → <கூவிளம்> <X>
<Y>	 → <புளிமா> <Y>
<Y>	 → <கருவிளம்> <X>
<X>	 → <நாள்> | <காசு>[4]
<Y>	 → <மலர்> | <பிறப்பு>[4]

வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)
<X>	 → <தேமாங்காய்> <X>
<X>	 → <கூவிளங்காய்> <X>
<Y>	 → <புளிமாங்காய்> <X>
<Y>	 → <கருவிளங்காய்> <X>

எடுத்துக்காட்டு

தொகு

ஒரு திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:

"As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose
garment is loosened (before an assembly)."
 
யாப்பிலக்கணப் பத்தியில் தரப்பட்டுள்ள இலக்கண நெறிமுறைகளிற்கேற்ப எடுத்துக்காட்டு குறட்பாவிற்காக வரையப்பட்ட இலக்கண பகுப்பாய்வுப் படிநிலை (parse tree) வரைபடம் - குறிப்பு: 0 குறிலையும், 1 நெடிலையும், 2 ஒற்றையும் குறிக்கிறது
 
எடுத்துக்காட்டுக் குறட்பாவின் தளை சார்ந்த நெறிமுறைகளுக்கான இலக்கண உருவகங்கள் (productions)

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. இல.பாலசுந்தரராமன், எஸ்.ஈஷ்வர், சஞ்சீத்குமார் ரவீந்திரநாத்(22-24). "இயல்மொழிப் பகுதிகளுக்கான இடம் சாரா இலக்கணம் - வெண்பா இலக்கணத்திற்கான ஒரு செயலி". ', உத்தமம் (INFITT). 2007-05-16 அன்று அணுகப்பட்டது. (ஆங்கில மொழியில்)
  2. கீழ்கானும் இ.சா.இ.யில் சில இலக்கண உருவகங்களைக் (productions) குறைக்க முடியுமென்றாலும் தமிழ்மொழி யாப்பிலக்கணத்திற்கு இணையாக இருக்கும் பொருட்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
  3. {1,11} என்பது இடம் சாரா இலக்கணங்களை எழுத உதவும் பேக்கஸ்-நார் முறையில் இல்லாவிட்டாலும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெர்ள் நிரலாக்க மொழிக் (Perl) குறியீடாகும். அதன் பொருள் ஒன்றிலிருந்து பதினொரு முறை வரை வரலாம் என்பதாகும். பார்க்க: பெர்ள் மொழி விளக்கம்
  4. 4.0 4.1 <காசு>, <பிறப்பு> ஆகியன நேர்பு, நிரைபு எனவும் வழங்கப்படும். நேரசை நிரையசையைத் தொடர்ந்து, கு, சு, டு, து, பு, று ஆகியவற்றுள் ஒன்று வந்தால் அந்த அசைகள் நேர்பு, நிரைபு ஆகும். பார்க்க: வெண்பாவின் ஈற்றடி இலக்கணம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பா&oldid=4045440" இலிருந்து மீள்விக்கப்பட்டது