வெண்பாவிற்கான ஓசை செப்பலோசை. செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஓசையமைப்பே செப்பலோசை எனப்படும். செப்பலோசை மூன்று வகைப்படும்:

௧. ஏந்திசைச் செப்பலோசை ஏந்திசைச் செப்பலோசை எனப்படுவது வெண்சீர் வெண்டளைகள் (காய் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.[1]

௨. தூங்கிசைச் செப்பலோசை

தூங்கிசைச் செப்பலோசை எனப்படுவது இயற்சீர் வெண்டளைகள் (மா முன் நிரை மற்றும் விளம் முன் நேர்) மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். [2]

௩. ஒழுகிசைச் செப்பலோசை

ஒழுகிசைச் செப்பலோசை எனப்படுவது இருவகை வெண்டளைகளும் சேர்ந்து வரும் (இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை).

எடுத்துக்காட்டு:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் [3]

அடிக்குறிப்பு தொகு

  1. திருக்குறள் 397
  2. திருக்குறள் 28
  3. திருக்குறள் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்பலோசை&oldid=3268881" இலிருந்து மீள்விக்கப்பட்டது