சீர் (யாப்பிலக்கணம்)

சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.

இப்பாடல் ஒரு அருமையான கலிவிருத்தம்;

கலிவிருத்தம்

கனி 3 / மா

நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்
மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே! 1 - 080 திருக்கேதீச்சரம், ஏழாம் திருமுறை

மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.

சீர் வகைகள்

தொகு

செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரும்படியான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை,

  1. ஓரசைச்சீர்
  2. ஈரசைச்சீர்
  3. மூவசைச்சீர்
  4. நாலசைச்சீர்

எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

சீர்கள் வேறு பெயர்கள்
ஓரசைச்சீர் அசைச்சீர்
ஈரசைச்சீர் இயற்சீர், ஆசிரியச்சீர், ஆசிரிய உரிச்சீர்
மூவசைச்சீர் உரிச்சீர், வெண்சீர்
நாலசைச்சீர் பொதுச்சீர்

மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க.

  • ஓரசைச்சீர்கள்
1. நேர் நாள் நாள்
2. நிரை மலர் மலர்
3. நேர்பு காசு காசு
4. நிரைபு பிறப்பு பிறப்பு
  • ஈரசைச்சீர்கள்
1. நேர்-நேர் தேமா தே.மா
2. நிரை-நேர் புளிமா புளி.மா
3. நிரை-நிரை கருவிளம் கரு.விளம்
4. நேர்-நிரை கூவிளம் கூ.விளம்
  • மூவசைச்சீர்கள்
1. நேர்-நேர்-நேர் தேமாங்காய் தே.மாங்.காய்
2. நேர்-நேர்-நிரை தேமாங்கனி தே.மாங்.கனி
3. நிரை-நேர்-நேர் புளிமாங்காய் புளி.மாங்.காய்
4. நிரை-நேர்-நிரை புளிமாங்கனி புளி.மாங்.கனி
5. நிரை-நிரை-நேர் கருவிளங்காய் கரு.விளங்.காய்
6. நிரை-நிரை-நிரை கருவிளங்கனி கரு.விளங்.கனி
7. நேர்-நிரை-நேர் கூவிளங்காய் கூ.விளங்.காய்
8. நேர்-நிரை-நிரை கூவிளங்கனி கூ.விளங்.கனி
  • நாலசைச்சீர்கள்
1. நேர்-நேர்-நேர்-நேர் தேமாந்தண்பூ தே.மாந்.தண்.பூ
2. நேர்-நேர்-நேர்-நிரை தேமாந்தண்ணிழல் தே.மாந்.தண்.ணிழல்
3. நேர்-நேர்-நிரை-நேர் தேமாநறும்பூ தே.மா.நறும்.பூ
4. நேர்-நேர்-நிரை-நிரை தேமாநறுநிழல் தே.மா.நறு.நிழல்
5. நிரை-நேர்-நேர்-நேர் புளிமாந்தண்பூ புளி.மாந்.தண்.பூ
6. நிரை-நேர்-நேர்-நிரை புளிமாந்தண்ணிழல் புளி.மாந்.தண்.ணிழல்
7. நிரை-நேர்-நிரை-நேர் புளிமாநறும்பூ புளி.மா.நறும்.பூ
8. நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல் புளி.மா.நறு.நிழல்
9. நேர்-நிரை-நேர்-நேர் கூவிளந்தண்பூ கூ.விளந்.தண்.பூ
10. நேர்-நிரை-நேர்-நிரை கூவிளந்தண்ணிழல் கூ.விளந்.தண்.ணிழல்
11. நேர்-நிரை-நிரை-நேர் கூவிளநறும்பூ கூ.விள.நறும்.பூ
12. நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல் கூ.விள.நறு.நிழல்
13. நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ கரு.விளந்.தண்.பூ
14. நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல் கரு.விளந்.தண்.ணிழல்
15. நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ கரு.விள.நறும்.பூ
16. நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல் கரு.விள.நறு.நிழல்

செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன. மூவசைச்சீரில் நேர் அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை காய்ச்சீர் எனப்படும்.

காய்ச்சீர் அமையும் வகைகள்

தொகு

நேர்,நேர்,நேர் = தேமாங்காய்

நிரை,நேர்,நேர் = புளிமாங்காய்

நிரை,நிரை,நேர் = கருவிளங்காய்

நேர்,நிரை,நேர் = கூவிளங்காய்

பெயர்க்காரணம்

தொகு

வாய்ப்பாட்டின் இறுதியில் காய் என முடிவதால் காய்ச்சீர் என்பர்.

சிறப்புப் பெயர்

தொகு

இச்சீர் வெண்பாவுக்கு உரியதால் வெண்பாவுரிச்சீர் என்றழைப்பர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

1.தமிழ் இலக்கணக் களஞ்சியம் - தேவிரா

2.நற்றமிழ் இலக்கணம் - அ.ஞானசம்பந்தம்

3.தொல்காப்பியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

4. இராஜகோபாலாச்சாரியார், கே., யாப்பியல், ஸ்டார் பதிப்பகம், சென்னை. 1998.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்_(யாப்பிலக்கணம்)&oldid=4046133" இலிருந்து மீள்விக்கப்பட்டது