இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. எனவே வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன.

இலக்கணம்

தொகு

இரண்டாவது அடியில் தனிச்சொல் அமைவதும், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகளுடன் அமைவதும் நேரிசை வெண்பாவுக்கான இலக்கணம். எனவே இன்னிசை வெண்பாவில் இவ்விலக்கணங்கள் அமைந்திரா.

  • இன்னிசை வெண்பாவில், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகள் அமையுமானால், இரண்டாவது அடியில் தனிச்சொல் வராது. ஏனைய அடிகளில் வரலாம்.
  • இரண்டாவது அடியில் தனிச்சொல் வந்தால், வெண்பா ஒரே வகையான எதுகையைக் கொண்டோ, இரண்டு வகையான எதுகைகளைக் கொண்டோ வராது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட எதுகை வகைகளைக் கொண்டு அமையலாம்.

எடுத்துக்காட்டு

தொகு
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து

மேலேயுள்ள பாடலில் இரண்டாம் அடியில் சீரேயும் என்னும் தனிச்சொல் வருகிறது. எனினும், முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாகிறது. இரண்டாம் அடியில் தனிச்சொல் இருந்தபோதும், இரண்டுக்கு மேற்பட்ட விகற்பங்கள் அமைவதால் இஃது இன்னிசை வெண்பா ஆகிறது.

கீழே காணும் பாடலில் நான்கு வரிகளிலும் ஒரேவகை எதுகைத் தொடை அமைந்து ஒரு விகற்பம் கொண்டதாக இருப்பினும், இரண்டாம் அடியில் தனிச்சொல் எதுவும் இல்லாததால் இதுவும் ஓர் இன்னிசை வெண்பாவாகிறது.

கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னிசை_வெண்பா&oldid=3201257" இலிருந்து மீள்விக்கப்பட்டது