சிறுகதை

இலக்கியத்தின் ஒருவகை

சிறுகதை என்பது சுருக்கமான, கதை கூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். இது பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

அறிமுகம்

தொகு

முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவம். பெரும்பாலும் நடப்பியல் நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப் புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.

தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல் சிறுகதை என்பார்கள்.[1] உண்மையில் பாரதியின் முதல் சிறுகதை 1905ல் தொடங்கி - அவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த சக்கரவர்த்தினி என்ற இதழில்- பகுதிகளாக வெளியிடப்பட்ட 'துளஸிபயி என்ற இரஜபுதனக் கன்னிகையின் சரித்திரம்' என்பதாகும். ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ. வே. சு. ஐயர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை என்பது பலரால் சொல்லப்பட்டுவரும் விவாதத்திற்குரிய கருத்தாகும். சிறுகதை என்ற புதிய இலக்கியவகை தமிழில் அறிமுகமானபோது - சிறுகதை என்பது என்ன?என்ற முடிவான, ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்து ஏதும் உருப்பெற்று நிலைபெறாத அக்காலகட்டத்தில் (1900-1920), பாரதியார், மாதவையா,வ.வே.சு. ஐயர் ஆகியோர் தத்தமக்கு வாகான வகையாகச் சோதனை முயற்சிகளாக எழுதினர். வ.வே.சு ஐயரே பிற்காலத்தில் நெடிய சரித்திரக் கதைகள் எழுதக் 'கைப்பழக்கமாகவே ' சிறுகதைகள் எழுதி வருவதாகத் தன் நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் வார்த்தைப்படுத்தியுள்ளார்.

தாம் சுயமாகச் சிறுகதைகள் எழுதும் முன்னரே தாகூரின் வங்கமொழிச் சிறுகதைகளை மூலமொழியறிந்திருந்த பாரதியார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளாரென்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் பார்த்தால், பாரதியார் தமது சொந்தச் சிறுகதைகளைத் தாம் விரும்பிய-'சொல்புதிது, பொருள் புதிது' எனும் முற்போக்கு எண்ணப்படி வார்த்தளித்துள்ளாரென்ற ஏற்பே நியாயமானதாக இருக்கும்.

தற்காலத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் மூல மூவர்களான பாரதியார், மாதவையா, வ.வே.சு. ஐயர் ஆகிய மூவருமே 1925வாக்கில் இயற்கையடைந்துவிட்ட பின்னர் ஏற்பட்டிருந்த வெற்றிடக்காலம் நீண்டு தொடர்ந்து விடாமல் தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள்.

தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க. நா. சுப்பிரமணியம் [தெய்வஜனனம்.] சி. சு. செல்லப்பா [சரசாவின் பொம்மை], லா. ச. ராமாமிர்தம் [பாற்கடல்], ஜெயகாந்தன் [நான் என்னசெய்யட்டும் சொல்லுங்கோ], சுந்தர ராமசாமி [வாழ்வும் வசந்தமும்], கு. அழகிரிசாமி [ராஜா வந்திருக்கிறார்], தி. ஜானகிராமன் [பாயசம்], கி. ராஜநாராயணன் [பேதை] சுஜாதா போன்றோர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

தமிழில், அயல் நாட்டினர் எழுதிய சிறுகதைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-03-10.

வெளி இணைப்புகள்

தொகு
இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகதை&oldid=3709545" இலிருந்து மீள்விக்கப்பட்டது