சுப்பிரமணிய பாரதி

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி
(பாரதியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882 – 11 செப்டம்பர் 1921) கவிஞரும், எழுத்தாளரும், இதழாசிரியரும், விடுதலைப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதியார்
சுப்பிரமணிய பாரதி நினைவு தபால் தலை
பிறப்புசுப்பையா (எ) சுப்பிரமணியன்
(1882-12-11)திசம்பர் 11, 1882
எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இந்தியா
இறப்புசெப்டம்பர் 11, 1921(1921-09-11) (அகவை 38)
சென்னை, இந்தியா
இருப்பிடம்திருவல்லிக்கேணி
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]
பணிசெய்தியாளர்
அறியப்படுவதுகவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர்பாரதிதாசன்
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து சமயம்
பெற்றோர்சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் /இலச்சுமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
செல்லம்மாள்
பிள்ளைகள்தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)
கையொப்பம்

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[2] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.[சான்று தேவை] பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[3] இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882-இல்[5] தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.[6] 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

 
காசியில் பாரதி வாழ்ந்த இல்லமான சிவமடம்

தனது பதினொன்றாம் வயதில்[5] பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.[5] 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச்[7] சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904-ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும்[7] பணியாற்றினார்.

பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

இலக்கியப் பணி

 
சுப்பிரமணிய பாரதியாரின் அபூர்வ புகைப்படம்
 
சுப்பிரமணிய பாரதி

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்      - பாரதி.

தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவி இயற்றியதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர்.

பாஞ்சாலி சபதம்

இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியைப் பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்

 
1907 இல் சுப்பிரமணிய பாரதியாரால் தொகுக்கப்பட்ட தமிழ் வார இதழ்.

பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசமித்திரனில்[7] உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத "யங் இண்டியா"[7] என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்

பாரதியாரின் பாடல்களைப் பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றிச் சென்னை மாகாணத்தின் காவல்துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928-ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது. தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.[8]

தேசியக் கவி

 
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைத்துப் பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

புதுக்கவிதைப் புலவன்

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுகளைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக்கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.

பாரதியும் சோவியத் ஒன்றியமும்

 
புகைப்படம்: சுப்பிரமணிய பாரதி, அவர் மனைவி செல்லம்மா

1905-ஆம் ஆண்டில் தன்னிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த ரஷ்ய மக்களை ஜார் மன்னன் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொன்றதைக் கண்ட பாரதி, தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் பின்வருமாறு எழுதினார்:

இச்சம்பவம் நடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெற்று ஜார் மன்னன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு , கெரன்ஸ்கி தலைமையில் அரசாங்கம் அமைந்தபோது, பாரதி தன் பத்திரிகையில் காக்காய் ‘பார்லிமெண்ட்’ என்ற கட்டுரையில் எழுதினார்: “கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷ்யா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடான கோடி சம்பளமாம்” இந்தக் கட்டுரையைப் பாரதி எழுதி 7 மாத காலத்திற்குள்ளாகவே அவ்வாண்டு நவம்பர் 7-ஆம் தேதி மகத்தான ரஷ்யப் புரட்சி லெனின் தலைமையில் வெற்றி பெற்றது. அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பாரதி பாடினார்:

பாரதியார் நினைவுச் சின்னங்கள்

 
புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்
 
புதுவையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம்
சுட்டும் விழி சுடர் - பாரதியார் பாடல்
 
காசியில் பாரதியாருக்கு அமைக்கபட்டுள்ள சிலை

தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.

படைப்புகள்

பாரதியின் படைப்புகள் 1949-இல் அந்நாள் தமிழக முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரால் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.[7] இந்தியாவிலேயே தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் திட்டத்தின் கீழ் முதன்முதலாக நாட்டுடைமையாக்கட்டப் படைப்புகள் பாரதியின் படைப்புகளே இது குறித்து ஆ. இரா. வேங்கடாசலபதி பாரதி: கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு என்ற நூலையும்[10][11] ஆங்கிலத்தில் Who Owns That Song?: The Battle for Subramania Bharati's Copyright என்ற நூலையும் எழுதியுள்ளார் [12]

மறைவு

1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்குக் காலமானார்.[13] அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

பாரதியாரின் உறவினர்கள்

 • சி. விசுவநாத ஐயர் பாரதியாரின் ஒன்று விட்ட தம்பி.[14] இவர் மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்.[15] [16]இவர் கவிஞராகவும் விளங்கியவர். பாரதியின் பாடலைத் திரட்டிய சீனி. விசுவநாதனைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[17]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

 1. Attar Chand The great humanist Ramaswami Venkataraman Page 12.
 2. "Mahakavi Bharathiyar – Tamilnadu". Tamilnadu.com. 13 February 2013. Archived from the original on 11 ஆகஸ்ட் 2013. Retrieved 12 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
 3. "Bharathi, the first poet whose works were nationalised". தி இந்து. 2 ஆகத்து 2015. Retrieved 23 ஆகத்து 2015.
 4. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014 ; கட்டுரை : சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு
 5. 5.0 5.1 5.2 "Subramanya Bharathi biography". Tamil Virtual University. Retrieved 30 November 2022.
 6. http://www.tamilvu.org/courses/degree/c011/c0111/html/c0111111.htm 1.1 தோற்றமும் பிள்ளைப் பருவமும் தமிழாய்வு தளம்
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 Kasi Viswanathan, Muralidharan. "In Memory of Bharathi (Bharathi's biography. பாரதியார் நினைவு தினம்)". BBC.com BBC News Tamil. Retrieved 30 November 2022.
 8. "சட்ட சபையில் இலக்கிய விவாதம்". தீக்கதிர். 9 ஏப்ரல் 2012. Archived from the original on 2016-03-06. Retrieved 25 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 9. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10016:2010-07-16-11-04-06&catid=1149:10&Itemid=417 மகாகவி பாரதியார் புதிய புத்தகம் பேசுது ஜூன்10 கீற்று இணைய இதழ்
 10. "பாரதி – கவிஞனும் காப்புரிமையும்". Retrieved 22 அக்டோபர் 2021.
 11. "பாரதி: கவிஞனும் காப்புரிமையும்". தினமலர். 06 ஜூலை 2015. https://m.dinamalar.com/weeklydetail.php?id=25823. பார்த்த நாள்: 2021-10-22. 
 12. A. R. Venkatachalapathy (2018). Who Owns that Song? The Battle for Subramania Bharati's Copyright. New Delhi: Juggernaut Books. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789386228673. இணையக் கணினி நூலக மையம்:1031959609. https://www.google.co.in/books/edition/Who_Owns_That_Song_The_Battle_for_Subram/Tq5oDwAAQBAJ?hl=en. பார்த்த நாள்: 24-10-2021. 
 13. பாரதியார் கவிதைகள்- பூம்புகார் பிரசுரம்
 14. "விஜயா பாரதி குடும்பத்தினர் எழுதியுள்ள கட்டுரைகள் (Post No.4424)". 23 November 2017.
 15. பாரதியாரின் தம்பியா?' என்றேன் ஆச்சரியத்தோடு.
  ஆமாம். சி. விஸ்வநாத ஐயர்!' என்றார் டிகேஆர்.
  எங்கே இருக்கார்?'
  மானாமதுரையிலே இருக்கார். அந்த ஊர் பள்ளிக் கூடத்துலே தலைமை ஆசிரியரா ரொம்ப காலம் இருந்தார். இப்ப ரிட்டையர் ஆகி அந்த ஊரிலேயே தான் இருக்கார்.'
  இப்ப அவருக்கு வயது என்ன இருக்கும்?'
  அது... வந்து 88 க்கும் மேலே இருக்கும் இருந்தாலும் இந்த வயசுலேயும் நல்லா சுறுசுறுப்பாக இருக்கார்.' - தினமலர்
 16. சி.விசுவநாத ஐயர் https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2023/jul/16/my-teacher-viswanatha-iyer-4038845.html
 17. நாட்டின் நலனுக்கே நாளெல்லாம் எழுதிவந்த
  பாட்டுக்கொரு புலவன் படைப்பின் பான்மையினைக்
  காட்டும் பலநூல் நீர் கண்டெடுத்தும் தொகுத்தும் எழில்
  கூட்டுமுயர் பாங்கினை யான் கூறிடவும் வல்லேனோ - என்பது அந்தப் பாடல்

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Subramanya Bharathi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பிரமணிய_பாரதி&oldid=3868500" இலிருந்து மீள்விக்கப்பட்டது