பகவத் கீதை

இந்து மதத்தின் புனித நூல்

பகவத் கீதை (About this soundpronunciation ) (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.

An 1830 CE painting depicting Arjuna, on the chariot, paying obeisance to Krisha, the charioteer.
குருச்சேத்திரப் போர்க் களத்தில் அருச்சுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையை எடுத்துரைத்தல், 1830ம் ஆண்டு ஓவியம்

மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமாக 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.[1]

இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது.[2]

ராஜாஜியின் கைவிளக்கு, பால கங்காதர திலகரின் கர்ம யோகம், மகாத்மா காந்தியின் அநாஸக்தி யோகம் போன்றவை பகவத் கீதை உரைகளாகும்.

கீதா கீதா கீதா என்று அடுத்தடுத்து விரைந்து உச்சரித்தால் தாகி தாகி என வரும். தாகி என்பது தியாகி என்ற சொல்லின் சிதைவு. உலகப் பற்றைத் தியாகம் செய்யுங்கள். ஈசுவரனிடம் மனத்தை வையுங்கள் எனப் பகட்டுவது கீதை[3]

கண்ணனின் ஐந்து வாதங்கள்தொகு

கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து.

வேதாந்த வாதம்தொகு

“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆத்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டாம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது.

சுயதரும வாதம்தொகு

“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் சத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் சத்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48)

‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47).

இந்த சுயதருமப் பார்வை மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப்படுகின்றது.

கருமயோகப் பார்வைதொகு

இது கர்ம யோகம் என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30).

கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கர்ம யோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது.

பக்திப் பார்வைதொகு

‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு.

தத்துவப் பார்வைதொகு

பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் சொல்லப்பட்ட ஐந்தாவது வாதம்.

சரணாகதி என்ற முத்தாய்ப்புதொகு

‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது.

இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான்.

கீதையின் போதனைதொகு

போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது.

 • பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.
 • பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.
 • ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.
 • அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.
 • யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.
 • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
 • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
 • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
 • உன்னுடையதை எதை இழந்தாய் என்று நீ அழுகிறாய்?
 • எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
 • எதை நீ படைத்தாய், அது வீணாவதற்கு?
 • எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
 • எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
 • எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது
 • மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் படைப்பின் சாரமாகும்.

பாடல்:

பொருள்: பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், பக்தி யோகத்தாலும் மற்றும் ஞான யோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்‍ணும் பொருளாவான்.

- பகவத் கீதை வெண்பாவிலிருந்து.

கீதைக்கு உரைகள் பலதொகு

 
19ம் நூற்றாண்டு பகவத்கீதை எழுத்துப்பிரதி

பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிருக்கின்றனர்.

மொழிபெயர்ப்புதொகு

உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.[4]

பிற கீதைகள்தொகு

கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்டது என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை:

குருசேத்ர போர் காலம் குறித்த ஆராய்ச்சிகள்தொகு

சி.சி. சர்க்கார் கருத்துகள்தொகு

இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர் முனைவர். சி.சி. சர்க்கார் “, குருச்சேத்திரப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழ் கண்ட காரணங்களை முன் வைக்கிறார்.

 1. வேத சாகித்தியத்தில் எங்குமே பாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.
 2. பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்று தெரியவில்லை.
 3. கி.மு.4 ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப் படவில்லை.
 4. மகாபாரதப் போர் நடந்த குருசேத்திரம் ஒர் போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.

மொகஞ்சதாரோ அரப்பாவில் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. கி.மு 3000லோ கி.மு.4000த்திலோ பாதப்போர் நடந்ததாக எடுத்துக் கொண்டால், அவர்கள் இரும்பாலான அயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப் படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இந்த மகாயுத்தத்தோடு சம்மந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகின்றார்.

விமர்சனங்கள் சர்ச்சைகள்தொகு

கீதையின் மறுபக்கம் நூல்தொகு

தமிழ்நாட்டில் பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்தினர் பகவத் கீதையை கடுமையாக எதிர்த்தனர். திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி கீதையின் மறுபக்கம் என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பகவத் கீதை வருணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலே என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்தொகு

கீதை வருணாசிரம கருத்துகளுக்கு முட்டு கொடுக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர்.

 • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
 1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
 2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)
 • மக்கள் தங்கள் சமுதாய நிலை முடிவு செய்யும் கடமைகளைச் செய்ய வைப்பதற்காக உண்மையை அவர்களிடம் சொல்லக்கூடாது(பகவத் கீதை 3:26, 29)
 • செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் யக்ஞம் செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (பகவத் கீதை 16:15)
 • பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.
 • காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார்
 • கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்து

``கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.``அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:(அத்.1 - சுலோகம் - 41)

 • தமிழ் மொழியில் சங்க காலத்திலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரைதோன்றிய இலக்கியங்களில் கீதை பற்றிய குறிப்புகளோ, கீதையின் தாக்கமோ இடம் பெறவில்லை

உருசியாவில் சர்ச்சைதொகு

உருசியாவின் சைபீரியாவில் உள்ள டோம்ஸ்க் என்ற நகர நீதிமன்றத்தில் இஸ்கான் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவினால் எழுதப்பட்ட ’பகவத் கீதா அஸ் இட் ஈஸ்’ நூலின் உருசிய மொழிபெயர்ப்பு நூல் "தீவிரவாத" நூலாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் என எதிர்ப்பாளர்கள் வழக்கு பதிந்தனர்[5][6] இந்த மொழிபெயர்ப்பு நூல் "சமூக வேற்றுமையை " வளர்ப்பதாக உருசியா எங்கும் தீவிரவாத நூல் என்று தடை செய்ய வேண்டும் என சூன் மாதத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது.

தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விரும்பும் ’உருசிய ஆர்தடாக்ஸ் சர்ச்’ இவ்வழக்கின் பின்னணியில் உள்ளதாக இஸ்கான் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.[6]

இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் அமளியை எழுப்பிய இவ்வழக்கு குறித்து உருசிய அதிகாரி, பகவத் கீதையின் ருஷ்ய மொழிபெயர்ப்பு 1788 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் தொடர்பானதே தவிர பகவத் கீதையைக் குறிப்பது அல்ல என்பதை வலியுறுத்தினார்.[6]

இந்தியாவின் பல முசுலீம் அமைப்புகளும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நூலுக்கு ஆதரவாக தத்தம் கருத்தைப் பதிவு செய்தனர்.[7]

வழக்கைப் பதிவு செய்த நகர நீதிமன்றம் இதனை டோம்ஸ்க் மாநில பல்கலைக்கழகத்திற்கு "ஆராய்வதற்காக" அக்டோபர் 25 அன்று அனுப்பியது. திசம்பர் 28, 2011 அன்று இம்மொழிபெயர்ப்பை தடை செய்யமுடியாதென்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது.[8][9]

துணை நூல்கள்தொகு

 • Swami Shivananda. Srimad Bhagavad Gita. 1967. Divine Life Society, Shivanandanagar, Aurobindo. Essays on the Gita. 1922. Aurobindo Ashram. Pondicherry.
 • T. Subba Row. Notes on the Bhagavad Gita. 1978. Theosophical Society Press. Pasadena, California.
 • பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி. கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி? 2001. அல்லயன்ஸ் கம்பெனி. சென்னை.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. http://www.sangatham.com/bhagavad_gita/notes-on-gita
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2013-02-13 அன்று பரணிடப்பட்டது.
 3. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருள்வாக்கு, பதிவு ஸ்ரீமத் பகவத் கீதை 55, சித் பவானந்தா உரை விளக்கம் (1985) பக்கம் 141
 4. ஸ்ரீமத் பகவத்கீதை; ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்; பக்கம் 27
 5. உருசியாவில் பகவத்கீதை நூலுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு, விக்கிசெய்தி, திசம்பர் 21, 2011
 6. 6.0 6.1 6.2 http://timesofindia.indiatimes.com/world/europe/Russian-court-refuses-to-ban-Bhagvad-Gita-followers-cheer-across-the-world/articleshow/11280702.cms
 7. articles.timesofindia.indiatimes.com/2011-12-22/india/30546086_1_darul-uloom-deoband-hindus-muslims
 8. "சைபீரிய உயர்நீதி மன்றம் இம்மொழி பெயர்ப்பு நுலை தடை செய்ய மறுப்பு". மூல முகவரியிலிருந்து 2013-07-29 அன்று பரணிடப்பட்டது.
 9. பகவத்கீதை நூலைத் தடை செய்யக் கோரும் மேன்முறையீட்டை உருசிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, விக்கிசெய்திகள், மார்ச் 21, 2012

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பகவத் கீதை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்_கீதை&oldid=3284765" இருந்து மீள்விக்கப்பட்டது