பிட்சு கீதை

கதை

கண்ணன் அருச்சுனனுக்கு குருச்சேத்திரப் போர்க்களத்தில் உபதேசித்த பகவத் கீதையைத் தவிர உத்தவருக்கு கண்ணன் அருளிய உத்தவ கீதையின் ஒரு அங்கமாக பிட்சு கீதை அருளப்படுகிறது.

கண்ணனால் உத்தவருக்கு உபதேசிக்கப்பட்ட நீண்ட உத்தவ கீதையில் இது ஒரு சிறு துளி. இது வியாசர் எழுதிய பாகவத புராணத்தின் 11வது ஸ்கந்தத்தில் 23வது அத்தியாயம். 62 வடமொழி சுலோகங்கள் கொண்டது. இதை மராத்திய பக்தர் ஏகநாதர் (16வது நூற்றாண்டு) 1004 மராட்டிய சுலோகங்களாக விரித்துள்ளார்.

நூலின் சாராம்சம் தொகு

'மிகுந்த அவமதிப்புக்கும் துயர்படுத்தலுக்கும் உள்ளான மனிதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளமுடியுமா?'. இது உத்தவர் கண்ணனைக்கேட்ட கேள்வி. முடியும் என்கிறார் கண்ணன். ஒரு கதையும் சொல்கிறார். முன்னொருகாலத்தில் மாளவ தேசத்து அவந்தி நகரத்தில் வசித்த ஓர் அந்தணன் மிகச்சிரமப்பட்டு பேராசையுடன் சம்பாதித்த பொருள் அனைத்தும் நாசமடைந்ததால் வெறுப்படைந்து அதனால் மனம் மாசற்று இருந்தபோது பொது மக்களால் தீராத் துயர்படுத்தப்பட்டான். அச்சமயம் அவன் தத்துவத்தை உணர்ந்தவனாக 'நிச்சயமாக என் துக்கங்களுக்குக் காரணம் இந்த மக்களோ, காலமோ, கர்மமோ, கிரகங்களோ அல்ல. மனதுதான் என் வருத்தத்திற்குக் காரணம். அம்மனதானது ஆன்மாவிடத்தில் செய்பவன், செய்யப்படுவது முதலிய குணங்களை ஏற்றிவைத்து எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கிறது' என்று கூறி சாந்தியடைந்தவனாக ஆண்டவன் நினைவில் சரணடைந்து துறவறமும் மேற்கொண்டான். 'பிட்சு' என்ற வடமொழிச்சொல் மற்றவர் அளிக்கும் உணவை உண்டு உயிர்வாழும் துறவியைக் குறிக்கும் சொல். அதனால் பாகவதத்தின் இவ்வத்தியாயம் பிட்சுகீதை எனப்பெயர் பெற்றது.

ஏகநாதரின் விரிவாக்கம் தொகு

பாகவதத்தில் ஓர் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட கதையை பன்மடங்கு விரிவாக்குவதின் மூலம் ஏகநாதர் அதை பகவத்கீதையைவிட ஒரு பெரிய நூலாகவும் பக்தியைப்போற்றும் ஒரு சிறந்த நூலாகவும் ஆக்கிவிட்டார்.

சில பொன்மொழிகள் தொகு

  • பொருள் தேடும் விஷயத்தில் திருட்டு, வன்முறை, பொய், தம்பம், ஆசை, கோபம் ஆகிய ஆறு தீயபழக்கங்களும், பொருள் கிடைத்ததும் கர்வம், மதம், பேதம், வைரம், அவநம்பிக்கை, பொறாமை என்ற ஆறு தீயகுணங்களும், இன்னும் பெண்ணாசை, குடி, சூதாட்டம் ஆகிய மூன்று பாவச்செயல்களும் ஆகப்பதினைந்து அனர்த்தங்களும் பணத்தோடு கூடவே வருகின்றன.
  • விதிவசமாக பணம் நிறைய சேர்ந்துவிட்டால் அதை ஐந்து தியாகங்களால் துறந்துவிடவேண்டும்: அதாவது, ஆண்டவனுக்காகவும், முன்னோர்களுக்காகவும், உயிரோடு இருக்கும் பெற்றோர்களுக்காகவும், கற்றறிந்த நல்ல பிராம்மணர்களுக்காகவும், இதர மக்களுக்காகவும், செலவழிக்கப்படவேண்டும்.
  • சுகதுக்கங்களுக்கு மற்றவர் காரணமானாலும் அது உடல்களுடையதாகுமே ஒழிய ஆன்மாவினுடையதாகாது. தனது பற்களினால் தனது உதட்டையே கடித்த்க்கொண்டால் யாரிடம் கோபிப்பது?

உசாத்துணைகள் தொகு

  • Bhikshu Gita. or The Mendicant's Song. Translation by Justin E. Abbott. Samata Books, Madras, 1989. (First Published by the Author, 1928).

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்சு_கீதை&oldid=2099647" இலிருந்து மீள்விக்கப்பட்டது