அருச்சுனன்

அருச்சுனன் அல்லது அர்ஜூனன் (Arjuna, சமக்கிருதம்: अर्जुन, ப.ச.ரோ.அ: Arjuna) மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவர் மிகச் சிறந்த வில் வீரன் ஆவார். பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வீரனான இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது. இவர் உபயோகிக்கும் காண்டீப வில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது பிரம்மன் உபயோகித்த வில் ஆகும். இது அக்கினி பகவானால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்டது.

அருச்சுனன்
தேவநாகரிअर्जुन
துணைதிரௌபதி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை.
பெற்றோர்கள்பாண்டு - தந்தை குந்தி - தாய்
சகோதரன்/சகோதரிகர்ணன்,தருமன், வீமன், நகுலன், சகாதேவன்
குழந்தைகள்உபபாண்டவர்கள்#சுருதகர்மா, அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன்

அருச்சுனனின் குடும்பம்

தொகு

அர்ஜுனனின் தாய் தந்தையர் குந்தி தேவியும் இந்திர பகவானும் ஆவர். வளர்ப்புத் தந்தை பாண்டு மகாராஜா. பெரியப்பா பெரியம்மா திருதராட்டினன் மற்றும் காந்தாரி. இவரின் அண்ணன்கள் தருமன் (யுதிஷ்டிரன்) மற்றும் பீமன். தம்பிமார்கள் நகுலன் மற்றும் சகாதேவன். அருச்சுனனுக்கு திரெளபதி தவிர சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன் எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர். அருச்சுனனுக்கு அல்லி ராணி என்ற மனைவியும் இருந்ததாக மரபு வழி கதைகள் கூறுகின்றன. சுபத்திரையை மணந்ததால் கிருஷ்ணனும் பலராமனும் இவருக்கு மைத்துனர்கள் ஆவர். கிருஷ்ணனின் பிறப்புக்கு அடுத்தபடியாக தேவர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது அருச்சுனனின் பிறப்பாகும்.

வில்லாளன்

தொகு

ஒருநாள் குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றைச் செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான். பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. துரோணர் கதறினார். அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து பிரசிரஸ் என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்.[1] மகாபாரத்தில் மிகச் சிறந்த வில் வீரனாக அறியப்படுகின்றார். மகாபாரத்தில் அதிக அஸ்திரங்களை வைத்திருந்த வீரனாக காணப்படுகின்றார். இவரின் வீரத்தையும் வில்லாற்றலையும் விபரிக்கும் பல நிகழ்வுகள் மகாபாரத்தில் காணப்படுகின்றன. ♦துரோணர் கேட்ட குருதட்சிணையாக பாஞ்சால தேச தேச மன்னன் துருபதனையும் அவன் வீரர்களையும் தோற்கடித்தமை. ♦விராட யுத்தத்தில் பீஷ்மர்,துரோணர்,அஸ்வத்தாமன்,கிருபாச்சாரியார்,கர்ணன்,துரியோதனன் ஆகிய அனைத்து மாவீரர்களையும் தனி ஒருவனாக தோற்கடித்தார். ♦சிவனிடம் பசுபதாஸ்திரத்தைப் பெற பெற அவரை நோக்கித் தவம் இருந்த போது சிவன் வேடனாக மாறுவேடம் பூண்டு வந்த போது அவருடன் விற் போர் செய்தமை. ♦குருக்ஷேத்திர போரில் கௌரவ சேனைக்கு அதிகளவு அழிவை ஏற்படுத்தியமை. ♦கௌரவர்கள் கந்தர்வ மன்னன் சித்திர சேனனால் சிறைப்பட்ட போது அவனுடன் போர் செய்து அவனைத் தோற்கடித்து கௌரவர்களை விடுவித்தமை.

குரு தட்சனை

தொகு

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குரு குல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.

பின்னர் பாண்டவர்களில் அருச்சுனன் பாஞ்சாலம் சென்று துருபதனுடன் போரிட்டு வென்று, தேர்ச்சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்தான்.

அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்

தொகு

விராட பருவத்தில், அருச்சுனன் உத்தரனிடம் தனது பத்து சிறப்புப் பெயர்களை அதற்கான காரணத்துடன் கூறுகிறான்.

 • பார்த்திபன்
 • தனஞ்சயன்: தான் வெற்ற எதிரி நாட்டு செல்வங்களால் நிரம்பிப் பெற்றவனாக நான் இருந்ததால், தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
 • விஜயன்: எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு நான் திரும்பியதில்லை என்பதால், விஜயன் என்று அழைக்கிறார்கள்.
 • சுவேதவாகனன்: எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்.
 • பல்குனன்: பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் நான் பிறந்ததால் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
 • பீபத்சு: போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், பீபத்சு என்று அறியப்படுகிறேன்.
 • சவ்யசச்சின்: காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் சவ்யசச்சின் (சவ்யசாசி) என்று அறியப்படுகிறேன்.
 • அர்ஜுனன்: எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
 • ஜிஷ்ணு: அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், இந்திரனின் மகனாகவும் இருப்பதால்நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
 • கிருஷ்ணன்: எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் என்பது, கரிய நிறத் தோல் கொண்ட என் மீது பாசம் கொண்ட எனது தந்தை (பாண்டுவால்) எனக்கு வழங்கப்பட்டதாகும்.[2]

மேலும் காண்டீபதாரி என்ற பெயரும் அர்ச்சுனனுக்கு உண்டு.அதாவது காண்டீபம் என்ற வில்லை உபயோகிப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

பகவத் கீதை உபதேசம்

தொகு

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், குருசேத்திரப் போர்க்களத்தில் மனம் தளர்ந்த அருச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து மனத்தெளிவு பெறச் செய்து போரிடுவது அருச்சுனனின் கடமை என்றும், பிறப்பின் ரகசியத்தையும் உபதேசித்து போரில் ஈடுபடச்செய்தார்.

குருசேத்திரப் போரில் அருச்சுனன் பங்கு

தொகு

குருச்சேத்திரப் போரில் அருச்சுனன், பகவான் கிருஷ்ணரின் உதவியால் பீஷ்மர், சுசர்மன், ஜயத்திரதன் மற்றும் கர்ணன் போன்ற மாவீரர்களை அழித்ததின் மூலம் கௌரவர் படைகள் தோற்றது.கௌரவ சேனைக்கு அதிகளவு சேதத்தை ஏற்படுத்திய வீரனாக திகழ்கின்றார்.

மேற்கோள்கள்

தொகு
 1. வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்
 2. http://mahabharatham.arasan.info/p/blog-page_8070.html#sthash.fAFuh81d.dpuf

வெளி இணைப்பு

தொகு

சான்றாவணம்

தொகுபஞ்ச பாண்டவர்கள்
தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனன்&oldid=3843026" இலிருந்து மீள்விக்கப்பட்டது