அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு முக்கியமானவர் . இவர் இரவன், இராவத்[1] மற்றும் இராவந்த் என்றும் அறியப்படுகிறார். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன் மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் திருவிழா மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். ”கூத்தாண்டவர்” என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் (இவர்கள் தென்னிந்தியாவில் அரவாணி என்றும், தெற்கு ஆசியா முழுவதும் ஹிஜிரா என்றும் அறியப்படுகின்றனர்) சமூகத்தின் காவல் தெய்வமுமாவார்.[2]

அரவான்
சிங்கப்பூர், மாரியம்மன் கோவிலில் வணங்கப்படும் அரவான். பாம்பு வடிவில் உள்ள தலைமறைப்பு அரவானின் தலைக்குப் பாதுகாப்பாக உள்ளது.
தேவநாகரிइरावान्
சமசுகிருதம்Irāvāṇ
வகைநாகர்
துணைமோகினி (கிருஷ்ணரின் பெண் வடிவம்)

மகாபாரதக் காப்பியத்தின் முக்கியக் கருப்பொருளான, 18 நாட்கள் நடைபெற்ற குருட்சேத்திரப் போரில் அரவான் வீரமரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்குக் காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே பலி கொடுத்ததைச் சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காகக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மோகினி என்ற பெண் வடிவமாக மாறி கிருஷ்ணர் அரவானின் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் உள்ள கூவாகம் என்ற இடத்தில் 18 நாள் திருவிழாவில் நினைவுகூரப்படுகிறது. இதில் முதலில் அரவானை திருநங்கைகளுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த அவருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். அடுத்து அரவான் பலியிடல் நிகழ்த்தப்பட்டபின்னர் அவர்கள் விதவைக் கோலம் கொள்கின்றனர்.

தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்களின் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் பார்ப்பதற்குக் கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மற்றொரு வரத்தைத் திரௌபதி வழிபாட்டு மரபு மையமாகக் கொண்டுள்ளது. மற்றொரு 18 நாள் திருவிழாவில், மகாபாரதப் போரைச் சித்தரிக்கும் சடங்குகளைப் பார்க்கும் வண்ணம் அரவானின் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்படும். அலங்காரம் செய்த அரவானின் தலையே திரௌபதி கோவில்களிலுள்ள பொதுவான கடவுள் உருவமாகும். பெரும்பாலும் இந்தத் தலைகள் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய வகையில் மரத்தால் செய்யப்பட்டவையாக இருக்கும். சிலநேரங்களில் கோவில் வளாகத்தில் இந்தத் தலைக்கு என்று சிறு கோவில் அமைக்கப்பட்டிருக்கும் அல்லது தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் காவலாகக் கோவில் கூரைகளின் மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். தன் வெட்டுண்ட தலையின் உருவமாகவே அரவான் வணங்கப்படுகிறார். அவர் தீராத நோய்களைக் குணப்படுத்துவதாகவும் குழந்தையில்லாத பெண்களுக்குக் குழந்தைப்பேறு அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அரவான் இந்தோனேசியாவிலும் அறியப்படுகிறார் (இங்கு அவரது பெயர் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது). சாவகப் பகுதியின் முக்கிய தீவுகளில் உள்ள அரவானுக்கென்று தனிப்பட்ட மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இவற்றில் நாகருடன் அரவானுக்கு தொடர்பு இல்லை. மேலும் சில சாவக மரபுகளில் அரவானும் கிருஷ்ணரின் மகளாகிய திதிசரியும் திருமணம் செய்துகொள்வதாகவும், தவறாக அடையாளம் காணப்படுவதால் அரவானுக்கு மரணம் நேர்வதாகவும் கருதப்படுகிறது. இந்தக் கதைகள் சாவகத்தின் பாரம்பரிய நாடகக்கலைகளான வயாங் (குறிப்பாக வையாங்க் குளிட் என்ற நிழல்-பொம்மலாட்ட) முறையில் சொல்லப்படுகின்றன.

பெயர் வரலாறு மற்றும் பிற பெயர்கள்

தொகு

மோனியர் வில்லியம்சின் சமற்கிருதம்-ஆங்கிலம் அகராதி (1899), இரவன் என்ற பெயர் இராவத் (इरावत्, Irāvat) என்ற வேர்ச்சொல்லிருந்து உருவானது என்று குறிப்பிடுகிறது.[3] இராவத் என்ற சொல், இடா (इडा) என்ற வார்த்தையுடன் நெருங்கிய தொடர்புள்ள இரா (इरा) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகும். இரா என்ற வார்த்தைக்கு "உணவைக் கொண்டிருத்தல்", "அதிகப்படியான பொருள்களைக் கொண்டிருத்தல்", அல்லது "வசதியாக இருத்தல்" (மகாபாரதம், ரிக் மற்றும் அதர்வ வேத சாத்திரங்களில் பயன்பாடு) என்று பொருள் கொள்ளப்படுகிறது.[4] ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சமயத் துறை[5] பேராசிரியர் ஆல்ஃப் ஹில்டிபைட்டெல் (Alf Hiltebeitel) இரவன் அல்லது இரவந்த் என்ற சமசுகிருதப் பெயர் இடாவந்த் (இடா வைக் கொண்டிருக்கும் ஒருவன்) என்பதிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். இடா என்ற வார்த்தை, சமய ரீதியாக ஒரு தியாகத்தின் அனைத்து ஆக்கத்தன்மை நிறைந்த நன்மைகளும் (உண்பவர்களுக்குக்) கிடைக்கச் செய்யும் ஓர் உண்ணக்கூடிய பொருளைக் குறிக்கிறது என பிரெஞ்சு இந்தியவியலாளர் மடிலைன் பியார்டூ (Madeleine Biardeau) விளக்குகிறார்.[6] இந்த வரையறையின் அடிப்படையில், இரவன் என்றால் மகாபாரதத்தில் தியாகத்திற்குப் பலியாகும் ஒருவர் என்று பொருளென பியர்டூ கருதுகிறார். வேறு இடங்களில் தேவர்களும் அசுரர்களும் அடையப் போட்டியிடும் ஒரு பொருளாகவும் இடா குறிப்பிடப்படுகிறது.[6]

இரவன் எனும் பெயர் அரவன் என்று பொதுவாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் என்று வழங்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுகிறார், அவை: கூத்தாண்டவர் வழிபாட்டு மரபும் (அரவானுக்கு மட்டுமானது) திரௌபதி (அரவானின் மாற்றாந்தாய்-அருச்சுனனின் மனைவி) வழிபாட்டு மரபும். கூத்தாண்டவர் மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று அறியப்படுகிறார். கூத்தசுரன் என்ற அரக்கனைக் கூத்தாண்டவர் கொலை செய்வதாகக் கூறும் புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது.[7]

தமிழ்ப் பெயரான அரவான் அரவு (பாம்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானதாகப் பரவலாக நம்பப்படுகிறது. அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.[6]

உருவ விளக்கம்

தொகு
 
சிங்கப்பூர் ஆசிய நாகரிகங்கள் அருங்காட்சியகத்தில் அரவான் சிலை

அரவான் வெட்டுண்ட தலையின் உருவமாகவே எப்போதும் கோவில்களில் வணங்கப்படுகிறார். வழக்கமாக மீசை, பெரிய கண்கள் மற்றும் காதுகள் ஆகியவற்றுடன் அரவான் சித்தரிக்கப்படுகிறார்; ஒரு கூம்பு வடிவ மகுடம், நெற்றியில் வைணவ நாமம் மற்றும் காதணிகளை அணிந்து காட்சியளிக்கிறார். மகுடத்தின் மீது நாகப்பாம்பு படமெடுப்பது போன்றோ, அல்லது அதிலிருந்து நாகப்பாம்பின் தலைகள் வருவது போன்றோ அல்லது அதன் பின்புறத்திலிருந்து ஒரு நாகப்பாம்பு வருவது போன்றோ அரவானின் உருவம் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது.[8] கூவாகத்தில் இருக்கும் அரவான் சிலையின் மகுடத்திலும் பாம்பு உருவம் இடம்பெற்றுள்ளது.[9]

பேய்களைச் சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் கோரைப் பற்கள் இருப்பது அரவான் உருவத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். கூவாகத்தில் உள்ள அரவானின் உருவத்தில் இது போன்ற கோரைப் பற்கள் இல்லை எனினும், அரவானின் பேய் குணங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் திரௌபதி வழிபாட்டு மரபில் அவரது சிலைகளில் இந்த கோரைப் பற்கள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.[10]

அரவான் தலை சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஏற்றவாறு எளிதாகவும், வண்ணம் தீட்டப்பட்டோ அல்லது தீட்டப்படாமலோ இருக்கும். இச்சிலைகள் அரவான் கோவில்களில் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும். கூவாகம், கொத்தடை, கொத்தட்டை மற்றும் பிள்ளையார்க்குப்பம் போன்ற இடங்களிலுள்ள அரவான் உருவங்கள் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட முகத்துடன் பலவண்ண ஆபணரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. கொத்தட்டை, மதுக்கரை மற்றும் பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் வண்ணம் தீட்டப்படாத கருப்பு நிற கல் சிற்பங்களைக் காணலாம்.[9][11][12][13][14][15]

அரவானது தியாகத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களும் உள்ளன. இக்காட்சிகளில் பெரும்பாலும், அரவானின் தலை வெட்டப்படும் நேரத்தில் அவர் காளி தெய்வத்தினை வணங்கி நிற்பதைப் போன்று இருக்கும். தன் தலையைத் தானே வெட்டிக் கொண்ட அரவான், ஒரு கையில் வாளுடன் மற்றொரு கையில் வெட்டுண்ட தலையை ஏந்தி காளிக்கு அளிப்பது போன்ற ஓவியங்களும் உள்ளன. (இத்தகைய ஓவியமொன்று சென்னை, சௌக்கார்பேட்டையில் உள்ளது).[16][17]

இலக்கியத்தில் அரவான்

தொகு

மகாபாரத காப்பியத்தில், அதன் முக்கிய நபரான அருச்சுனரின் மகனாக ஒரு சிறிய கதாப்பாத்திரமாக அரவான் தோன்றுகிறார். மகாபாரதத்தின் பின்புலத்திலிருந்து, அதன் காலம் முந்தைய வேத காலத்திற்கு பிறகும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத நாட்டில் முதல் பேரரசு உருவானதற்கு முன்பும் அமைந்த காலம் என அறியப்படுகிறது. எனவே அதன் காலம் கிமு எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.[18] சிறிதும் மாறாமலிருந்த வேதங்களைப் போலன்றி, பிரபலமான மகாபாரதம் மொழியிலும் நடையிலும், கதை சொல்பவர்களால் மாற்றப்பட்டிருக்கவேண்டுமெனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[18] இத்தகைய மாறும் தன்மையுடைய காப்பியத்தின் மிகப் பழமையான பகுதிகள் இதைப் பற்றிய புற மேற்கோள்களை விடப் பழமையானதல்ல என நம்பப்படுகிறது. கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பாணினியின் இலக்கணக் கையேடான அட்டாத்தியாயி இத்தகைய மேற்கோள் குறிப்பிடும் ஒரு நூலாகும்.[18][19] குப்தர்கள் காலத்தின் முற்பகுதியிலேயே (நான்காம் நூற்றாண்டில்) மகாபாரதம் இறுதி வடிவம் அடைந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.[18] மகாபாரதத்தின் முதல் இலக்கியத் திறனாய்வின் ஆசிரியர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்: ”மாறும் தன்மையுடைய நூலின் அசல் வடிவத்தை அதன் உண்மையான வகை மற்றும் கருத்தியல் கிளையமைப்பு (stemma codicum ) வடிவங்களைக் கொண்டு பெற நினைப்பது பயனற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு அதன் மிகப் பழைய வடிவத்தைக் கண்டுபிடிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.”[20]

 
சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் உள்ள மரத்தால் ஆன அரவானின் தலை

அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். அவையாவன 1) விஷ்ணு புராணம் (4:20:12). இதன் காலம் பிற்கால வேத காலத்திலிருந்து குப்தர் காலம் வரை இருக்கலாம் 2) பாகவத புராணம் (9:22:32). இது பொதுவாக வேதகாலத்தியது என கருதப்பட்டாலும், நவீன அறிஞர்கள் இதன் காலம் கிபி 9 அல்லது 10ஆம் நூற்றாண்டு எனக் கருதுகிறார்கள்.[21][22][23] மகாபாரதத்தின் சமசுகிருதப் பதிப்பில், 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போரின் போது அரவான் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும், மகாபாரதத்தின் தமிழ் பதிப்புகள் போர் துவங்குவதற்கு முன்பே அவர் காளிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாகக் கூறுகின்றன. ஹில்டிபெய்டல் இதனைப் பெண் கடவுளுக்கு முன்னர் தன்னைத் தானே வெட்டிக் கொள்வதையும், தலையறுத்துக் கொள்வதையும் உயர்வாகக் கருதும் தென்னிந்திய மரபோடு தொடர்பு படுத்துகிறார்.[24][25] போரிடும் தமிழ் அரசர்கள் வெற்றி வேண்டி வெற்றி தேவியின் முன் தங்கள் குருதியைச் சிந்துவதைச் சித்தரிக்கும் தமிழ் சிற்பங்களைக் குறிப்பிட்டு அதே போல தேவி மகாத்மயம் என்ற புராணத்தின் இறுதியில் வரும் ஒரு காட்சியுடன் அவற்றை ஒப்பிடுகிறார்.[24](இத்தமிழ் சிற்பங்களில் காட்டப்படும் தெய்வம் கொற்றவை, துர்க்கையுடனும் காளியுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது)[24]

ஹில்டிபெய்டல் தெலுங்கு மரபுக் கதைகளில் குறிப்பிடப்படும் பார்பரிக்காவின்[26] தன் பலியினை அரவான் கதையுடன் ஒப்பிடுகிறார். பார்பரிக்கா மகாபாரதத்தில் வரும் மற்றொரு கதாபாத்திரம். அரவானைப் போலவே தன் கழுத்தைத் தானே வெட்டிக் கொண்டு தியாகம் செய்தவர் பார்பரிக்கா. தெலுங்கு மரபுக்கதைகளில் மட்டுமல்லாது இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், கார்ஹ்வால், குருச்சேத்திரம், புந்தேல்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளின் மரபுக் கதைகளிலும் பார்பரிக்கா இடம் பெறுகிறார். தலையை வெட்டித் தியாகம் செய்த பின்னும், வெட்டுண்ட தலையின் கண்கள் மூலம் மகாபாரதப் போர் முழுவதையும் காணும் வரம் பெறுவதே அரவானுக்கும் பார்பரிக்காவிற்கும் உள்ள கவனிக்கத்தக்க ஒற்றுமையாகும்.[27][28]

தமிழ் இலக்கியத்தில் அரவானின் தியாகச் செயல் பற்றிய முதல் குறிப்பு பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பா என்ற நூலில் காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை ஆகியோர் எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை குறிப்பிடப்பட்டுள்ளது.[29] கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலிலும் அரவான் கதை குறிப்பிடப்பட்டுள்ளது.[30]

அரவான் மரபு பற்றிய விவரங்களைக் கூத்து என்னும் தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலையின் மூலம் அறிந்து கொள்ளலாம். மரபுவழி தெருக்கூத்தில் ”அரவான் களப்பலி” பிரபலமான ஒரு கருப்பொருளாக உள்ளது. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் போர் நடக்கும் முன்பு காளிக்கு அரவான் தன்னையே பலி கொடுத்த கதையை அரவான் களப்பலி கூறுகிறது. மெலட்டூர், கொடுகிழி மற்றும் ஏர்வாடி போன்ற சிற்றூர்களில் ஆண்டுதோறும் அரவான் களப்பலி பல்வேறு கூத்து வடிவங்களில் அரங்கேற்றப்படுகிறது. கரம்பையில், ஆண்டுத் திருவிழாவின் (ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெறும்) 18 ஆம் நாளன்று திரௌபதி வழிபாட்டின் ஒரு பகுதியாக அரவான் களப்பலி நிகழ்த்தப்படுகிறது.[31]

தற்காலப் புரிதல்களில் அரவானின் தலை, தியாகத்தை மற்றுமல்லாமல் மீட்டுருவாக்கம் மற்றும் தொடர்ச்சி ஆகிய கருப்பொருள்களையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தலை வெட்டப்பட்ட பின்னரும் அத்தலையினால் மகாபாரதப் போர் முழுவதையும் அரவானால் காணமுடிவதே இத்தகு புரிதலுக்கு அடிப்படை.[32] எடுத்துக்காட்டாக, ராமசாமிப்புலவரின் "மேற்கோள்விளக்கக் கதை அகரவரிசை" (1963) என்ற புத்தகத்தில் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதால் தமிழ் நாட்டில் ஒரு நாட்டுப்புற நாயகனாக அரவான் இன்றும் கருதப்படுவதாக கூறப்படுகிறது.[33] அரவான் கதாபாத்திரம் போருக்குச் சமூகம் கொடுக்கும் விலையையும் உணர்த்துகிறது. "என்றும் திருப்தியடையாத போர்க் கடவுள் புசிப்பதற்காகப்" பல தாய்மார்கள் தயக்கத்துடன் போருக்கு அனுப்பி வைத்த எண்ணற்ற அப்பாவிகளை அரவான் நினைவுபடுத்துகிறார்.[31] இந்தியவியலாளர் டேவிட் ஷுல்மேன், அரவானின் பலி தமிழ் காப்பிய மரபுகளில் வரும் பாம்புப் பலியின் இன்னொரு வடிவம் என்று கூறுகிறார்.[34]

மகாபாரதம்

தொகு
 
மகாபாரதப் போரிலிருந்து ஒரு காட்சி, அங்கூர் வாட்டில் உள்ள ஒரு சிற்பம்

மகாபாரதத்தின் முதல் புத்தகமான ”ஆதி பர்வ”த்தில் (தொடக்கங்களின் புத்தகம்) அரவானின் பெற்றோர்களுக்குத் திருமணம் நடந்ததாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரவானின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய விவரங்கள் மகாபாரதத்தின் ஆறாவது புத்தகமான “பீஷ்ம பர்வ”த்தில் (பீஷ்மர் பற்றிய புத்தகம்) இடம் பெற்றுள்ளன.[35][36] மகாபாரதத்தின் ஆறாவது புத்தகத்தில், பாண்டவர்களில் மூன்றாவது சகோதரனான அருச்சுனன், திரௌபதி-பாண்டவர்களின் திருமண விதிமுறைகளை மீறியதால் இந்திரபிரஸ்த (பாண்டவர் பேரரசின் தலைநகரம்) நகரத்திலிருந்து ஓராண்டு புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டு நாடுகடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் வடகிழக்கு இந்தியாவிற்குச் சென்று, அங்கிருந்த நாக வம்சத்தின் விதவை இளவரசி உலுப்பி என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்; அவர்களுக்கு அரவான் என்ற மகன் பிறந்தார். நாகர்களின் இருப்பிடமான நாகலோகத்தில் அரவானையும் உலுப்பியையும் விட்டுவிட்டு அருச்சுனன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.[37] அரவான் ”பரச்சேத்திரத்தில்” (வேறொருவருக்குச் சொந்தமான பகுதி) பிறந்ததாகக் கூறப்படுகிறது. பரச்சேத்திரத்தில் பிறத்தல் என்பது மற்றொருவரின் மனைவிக்கு பிறத்தலைக் குறிக்கிறதென ஹில்டிபைடெல் கருதுகிறார். தனது தாயின் பாதுகாப்பில் நாகலோகத்தில் அரவான் வளர்ந்தார். அருச்சுனன் மீது அரவானின் தாய்வழி மாமனுக்கு இருந்த வெறுப்பு காரணமாக அவர் அரவானை ஏற்றுக்கொள்ளவில்லை. அரவான் வளர்ந்த பிறகு, தனது தந்தையுடன் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் இந்திரனின் (அருச்சுனனின் தந்தை) இருப்பிடமான இந்திரலோகத்திற்கு சென்றார். தனது வளர்ந்த மகனைக் கண்ட அருச்சுனன் குருசேத்திரப் போரில் தனக்கு உதவியாக இருக்கும்படி வேண்டினார்.[35][38]

இவ்வாறாகப் பாண்டவர்களின் எதிரிகளான கௌரவர்களுக்கு எதிராக, அரவான் தனது தந்தை மற்றும் பாண்டவர்களுக்கு உதவ குருசேத்திரப் போர்க்களத்தை வந்தடைகிறார். போரின் முதல் நாளில், அரவான் சுருதாயுசூ என்பவனுடன் சண்டையிட்டார். சுருதாயுசூ முற்பிறவியில் குரோதவாசா என்ற அரக்கனாக இருந்த சத்திரிய அரசனாவார். பின்னர் அவர் அர்ச்சுனனால் கொல்லப்பட்டார்.[39][40] போரின் ஏழாம் நாளன்று அவந்தி இளவரசர்களான விந்தா மற்று அனுவிந்தா ஆகியோரை அரவான் தோற்கடித்தார். பின்னர் இவர்களும் அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர்.[41][42]

போரின் எட்டாம் நாளில், காந்தார தேசத்தின் இளவரசர்களுடன் அரவான் போரிட்டார். அவர்கள் சுவாலா அரசனின் மகன்களும் கௌரவர்களின் தாய்வழி மாமனான சகுனியின் இளைய சகோதரர்களுமாவர். கயா, கவாக்சா, விர்சவா, சர்மாவாத், அர்சவா மற்றும் சுகா ஆகிய சகோதரர்கள், கௌரவர்களின் ஒட்டுமொத்த படைவீரர் துணையுடன் அரவானைத் தாக்கினர். ஆனால் அரவானின் நாகர் படை இவர்களில் ஒருவரைத் தவிர மீதமிருந்த அனைவரையும் கொன்றது. எதிரிகளை வதைப்பவன் என்று போற்றப்படும், மாய வித்தையில் கைதேர்ந்தவரான அரவான், வாள் சண்டையில் ஐந்து காந்தார இளவரசர்களைக் கொன்றார், விர்சவா மட்டும் தப்பிவிட்டார்.[43][44]

இதற்குப் பழிவாங்கும் விதமாக கௌரவர்களின் மூத்த சகோதரன் துரியோதனன், ரிஷ்யசிரிங்கரின் மகனாகிய அரக்கன் அலம்பூசனிடம் அரவானைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டார். இந்த முறை அரவானைப் போன்று அலும்பூசனும் போரில் மாயக் கலையைப் பயன்படுத்தினார். தன்னிடமிருந்த வில்லைக் கொண்டு அலம்பூசன் அரவானைத் தாக்கினார்; ஆனால் எதிர்த்துத் தாக்கிய அரவான், அலம்பூசனின் வில்லை உடைத்தெறிந்து அவனைப் பல துண்டுகளாக வெட்டியெறிந்தார். அப்போதும் அலம்பூசனின் உடல் மீண்டும் தானாக ஒன்றிணைந்தது. பின்னர் அரவான் சேசா (அனந்தா) எனும் பாம்பு வடிவத்தை அடைகிறார், அப்போது அவரது பாம்புப் படை அவரைச் சுற்றி வளைத்து அவரைப் பாதுகாக்கிறது. அப்போது அலம்பூசன் பாம்புகளுக்குப் பகைவனான கருட வடிவத்திற்கு மாறி, பாம்புப் படையைத் தாக்கி அழித்து அரவானின் தலையைக் கொய்து கொல்கிறார். பின்னர் அரவானின் தந்தை வழி சகோதரனான கடோத்கசன் அலம்பூசனைக் கொன்று பழி தீர்க்கிறார்.[38][43][45]

தமிழ் மரபுகள்

தொகு

பலிக்காகத் தேர்ந்தெடுத்தல்

தொகு

அரவான் பற்றிய தமிழ் மரபுகளைப் பற்றிய முதல் குறிப்புகள், பெருந்தேவனார் எழுதிய மகாபாரதத் தமிழ்ப் பதிப்பான பாரத வெண்பாவில் (ஒன்பதாம் நூற்றாண்டு) காணப்படுகின்றன.[46] களப்பலி என்ற சடங்கைப் பற்றிச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளில் மட்டுமே களப்பலி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இது போரில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் போர் தொடங்குவதற்கு முன்பே செய்யப்படும் சடங்கு. மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்பு கௌரவர்களின் தலைவனும் பாண்டவர்களின் எதிரியுமான துரியோதனன், பாண்டவர்களின் சோதிட வல்லுநரான சகாதேவன் மூலமாக அமாவாசை தினமே (சோதிடம் பார்த்த நாளுக்கு அடுத்த நாள்) களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொள்கிறார் என்று பெருந்தேவனார் விளக்குகிறார். இதனால் துரியோதனன் அரவானிடம் பேசி அவரைக் களப்பலி கொடுக்கச் சம்மதம் பெறுகிறார்.[25]

 
காளியின் உருவச்சிலை

பாண்டவர்களின் நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான கிருஷ்ணர், துரியோதனனின் திட்டத்தை அறிந்து கொண்டு, அரவான் கௌரவர்களுக்காகத் தியாகம் செய்யாமல் பாண்டவர்களுக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் வண்ணம் ஒரு திட்டம் தீட்டுகிறார். பாண்டவர்களில் மூத்தவரான தருமனிடம் இதைப் பற்றி ஆலோசித்து, காளி தெய்வத்திற்குப் பலி கொடுப்பதை ஆயுதபூசையின் ஒரு பகுதியாக நிறைவேற்றலாம் எனப் பரிந்துரைக்கிறார். இவ்வாறு பலி கொடுக்கச்செய்வதற்குத் தன்னையும் சேர்த்து நான்கு பேர் பொருத்தமானவர்கள் என்று கிருஷ்ணர் கருதுகிறார். மற்ற மூவர்: கௌரவர்களின் பக்கமுள்ள சால்யன், பாண்டவர்களின் படைத்தலைவர் அருச்சுனன் மற்றும் அரவான். இந்த நான்கு பேரிலிருந்து அரவான் தான் சரியான தேர்வாக இருக்குமென்று கிருஷ்ணர் முடிவு செய்கிறார். அரவான், கிருஷ்ணரின் உத்தரவை ஏற்று பாண்டவர்களுக்காகக் களப்பலியாகச் சம்மதிக்கிறார். துரியோதனனிடம் கெளரவர்களுக்காகக் களப்பலியாவதாக முன்பே வாக்களித்திருந்ததையும் கூறுகிறார்.[47][48]

பின்னாளில் வந்த தமிழ் நூல்கள் பெருந்தேவனாரின் பதிப்பிலிருந்து மாறுபடுகின்றன. வில்லிப்புத்தூராழ்வாரின் பதினான்காம் நூற்றாண்டு பதிப்பில், கிருஷ்ணர் முதலில் தானே களப்பலியாக முன்வருவதாகவும், அரவான் தானாக முன்வந்து அவருக்குப் பதிலாகத் தான் களப்பலியாகச் சம்மதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நூலில் துரியோதனன் பற்றிய செய்தி ஏதுமில்லை.[49] கௌரவர்கள் ஒரு வெள்ளை யானையைப் பலி கொடுத்ததை ஈடு செய்ய அரவானைப் பலியிடுவதாக பிற கதைகள் கூறுகின்றன.[49] தஞ்சாவூர் மாவட்டத்தின் நெப்பத்தூர் என்ற கிராமத்திலுள்ள மரபுகள் படி அரவான் மிக வலிமையானவர் என்றும் ஒரே நொடியில் துரியோதனனின் படைகளை அழித்துப் போரே ஏற்படாமல் தடுத்திருந்திருக்கக்கூடிய சக்தியுள்ளவராகவும் நம்பப்படுகிறது. அதனால், கிருஷ்ணர் பெரும்பலியான போர் நிகழ வேண்டும் என்பதற்காக அரவானைப் பலி கொடுப்பதே சிறந்தது எனப் பரிந்துரைக்கிறார்.[50]

தெருக்கூத்து நாடகங்களில், அரவானின் தியாகச் செயலானது தங்கள் தந்தையர்களுக்காக தமது பாலுறவு இன்பத்தையும் இளமையையும் விட்டுக்கொடுத்த யயாதியின் மகன் புரு மற்றும் சாந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறது. இந்த நாடகங்களில், அரவானின் சம்மதம் கிடைத்த பிறகு கிருஷ்ணர் அரவானின் தாயான நாகக்கன்னி உலுப்பியின் அனுமதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. முதலில் அரவானின் முடிவை அவனது தாய் கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் கடைசியில் தான் காளிக்கு அர்ப்பணிக்கப்படவே பிறந்தவன் என்று அரவான் எடுத்துக்கூறிய பின்னர் அரவானின் தாய் ஒப்புக்கொள்கிறார்.[47]

இந்தக் கதையின் அனைத்து வடிவங்களிலும், இறுதியில் கிருஷ்ணர் சூரிய தேவனையும் சந்திர தேவனையும் கட்டுப்படுத்தி அவர்களின் நகர்வை மாற்றியமைத்து அன்றைய நாளுக்கு ஒரு நாள் முன்னரே அமாவாசை தினம் வரும் வண்ணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தனது உடலின் முதல் பலியைப் பாண்டவர்களுக்காக அரவானால் செய்ய இயலுகிறது. துரியோதனனுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மறுநாள் கெளரவர்களுக்காக எஞ்சியிருக்கும் உடலைப் பலி கொடுக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் துரியோதனனுக்குத் தான் செய்து கொடுத்த வாக்குறுதியையும் அரவான் காப்பாற்றினார்.[46][47][48]

மூன்று வரங்கள்

தொகு

பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற வரத்தை வேண்டியதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரே ஒரு வரம் மட்டும் கேட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. பாரத வெண்பாவில் அரவான் ஒரு வரம் மட்டுமே வாங்கியதாகக் கூறப்படுவது, போருக்கு முன்பு அரவான் தன்னைத் தியாகம் செய்து கொண்டதாகத் தமிழ் மரபுகளில் கூறப்படுவதையும், மகாபாரதத்தின் முந்தைய சமசுகிருத பதிப்பில் அரவான் போரிட்டு மடிவதாகச் சொல்லப்படுவதையும் பொருந்திப் பார்க்க 9ஆம் நூற்றாண்டில் நடந்த முயற்சியைக் குறிக்கிறது என ஹில்டிபைடெல் கருதுகிறார்.[46]

கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரு மரபுகளிலும், அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாக நம்பப்படுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பில், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. ஆனால் போரின் எட்டாம் நாளில் அரவான் இறந்த பிறகு வெட்டுண்ட தலையுடன் போர் முழுவதையும் கண்டானா என்பது பற்றிய தகவல்களை வில்லிப்புத்தூராழ்வார் குறிப்பிடவில்லை.[51]

 
பேளூர் கோவிலில் மோகினி சிலை. நாட்டார் மரபுகளில் கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டு அரவானை மணந்தார் என நம்பப்படுகிறது.

மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புற சடங்குகளில் மட்டுமே காணப்படுகின்றன. தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்கிறார். (மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர்). ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க கிருஷ்ணர் மோகினி என்ற பெண் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் இருந்ததாக கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது. அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாள் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறி போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது.[46][47][48][52] தெருக்கூத்து கதைகளில் சிறப்பான முறையில் திருமணச் சடங்குகள் நடைபெறுவது போலவும் அதனையடுத்து மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காண்பிக்கப்படுகின்றன. இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது.[53] திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதை வடிவில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது தெளிவாகச் சொல்லப்படுகிறது.[54][55] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை. வேறு சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.[56]

முதல் வரமும் (வீர மரணம்) மூன்றாவது வரமும் (திருமணம்) கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் உருவானவை என்றும் இரண்டாவது வரம் திரௌபதி வழிபாட்டு மரபில் உருவானது என்று ஹில்டிபைடெல் கூறுகிறார். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், வீர மரணம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய இரண்டு சடங்குகளும் இடம்பெறுகின்றன. இச்சடங்குகளை திருநங்கைகள் நிகழ்த்துகின்றனர். ஆனால் திரௌபதி வழிபாட்டு மரவில், கம்பத்தில் பொருத்திய களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலை, 18 நாள் நடைபெறும் போர் நிகழ்வுகளைப் பார்ப்பதைக் குறிக்கும் சடங்கே முக்கிய நிகழ்வாக நிகழ்த்தப்படுகிறது. மேலும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள திரௌபதி வழிபாட்டு மரபின் நூல்களில் இந்த வரம் மட்டுமே இடம்பெறுகிறது; மற்ற இரு வரங்கள் காணப்படவில்லை.[57][58]

போருக்கு முன்பு அரவானைப் பலி கொடுப்பது முதல், இரண்டாவது வரங்களுக்கு முரணாக உள்ளது. ஆனால் இந்த மரபுகளில் இம்முரணுக்குத் தனிப்பட்ட விளக்கங்கள் உள்ளன. போருக்கு முன்பு தன்னைத்தானே பலி கொடுப்பது போரின் போது வீர மரணம் அடைதல் என்ற நிகழ்வுக்கு முரணாக உள்ளது. மேலும் இவை இரண்டுமே உயிருடன் இருந்து போர் நிகழ்வுகள் முழுவதையும் காணுதல் என்பதற்கு முரணாக உள்ளன. கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்கு பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது. போரின் அனைத்து நிகழ்வுகளையும் அரவான் தொடர்ந்து கவனித்தார் என்ற இரண்டாவது வரம் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் பெரிதாகக் கருதப்படுவதில்லை. மற்றொரு புறம், திரௌபதி வழிபாட்டு மரபில் முதல் வரமான வீர மரணம் பெரிதாகக் கருதப்படவில்லை. மேலும் அரவான் தனது வெட்டுண்ட தலையில் உள்ள கண்கள் மூலம் போரின் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்க முடியும் எனக் கூறுவதன் மூலம், அரவான் தொடர்ந்து போரைப் பார்த்தது குறித்த இரண்டாவது வரம் பற்றிய குழப்பத்தை இந்த மரபு தீர்க்கிறது. மூன்றாம் கண்ணோட்டம் ஒன்று, அரவான் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்ட பிறகு அரவானின் உடல் மீண்டும் ஒன்றிணைந்து முழுமையடைந்ததாகவும், எட்டாம் நாள் அவர் தலை துண்டிக்கப்படும் வரை வீரத்துடன் சண்டையிட்டதாகவும், தனது வெட்டுண்ட தலையிலிருந்த கண்களின் மூலம் போரின் எஞ்சிய நாட்களைக் கண்டார் என்றும் கூறி, இந்த மூன்று வரங்களையும் பொருத்தி விளக்குகிறது.[57]

தமிழ் மரபுகளில் அரவானின் போருக்கு முந்தைய பலி பொதுவான ஒன்றாக உள்ளது. அரவான் கேட்ட வரங்கள் கிடைக்கப்பெற்றதும் பலிக்குத் தயாராகிறார். பின்னர் குருட்சேத்திர போர்க்களத்திற்குச் செல்கிறார். தருமன் தனது ஆயுதக் கூடத்தில் காளியை வணங்கிய போது அரவான் தனது அணிகலன்களையும் மார்புக் கவசத்தையும் நீக்கிவிட்டு வணங்கினார். அடுத்து அவர் தனது உடலை 32 துண்டுகளாக வெட்டினார். (அவரது உடலின் 32 கச்சித அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு துண்டு என்ற கணக்கில்) பின்னர் அவற்றை தருமன் காளி தேவிக்குப் படைத்தார். தெருக்கூத்தில் அரவானாக நடிக்கும் நடிகர் கழுத்திலிருந்து கீழ்நோக்கி ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு இந்தக் காட்சிகளை நடித்துக்காட்டுவார். இந்தக் காட்சியில் நடிக்கும் நேரத்தில் அரவானின் ஆன்மா நடிகரின் உடலில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. தெருக்கூத்து நடைபெறும் மேடையில் இப்பலியைக் குறிக்கும் வகையில் சிலநேரங்களில் கோழி பலியிடப்படும்.[56][59] வில்லிப்புத்தூராழ்வாரின் மகாபாரதத்தில் அரவானின் தன்பலியை முழுமையாக்க காளிக்கு யானை ஒன்று பலிகொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.[49]

அரவான் தனது சதைகளை வெட்டியெடுத்து, அவரது தலையும் எலும்புக்கூடும் மட்டுமே மிஞ்சியிருக்கும் தருணத்தில். கிருஷ்ணர், அரவானின் தாத்தாவும் உலுப்பியின் தந்தையுமான ஆதிசேஷனை வணங்குமாறு அரவானுக்கு அறிவுறுத்துகிறார். அப்போது ஆதிசேஷன் அரவானின் உடலைச் சுற்றிக்கொண்டு அவனது சதையாக மாறுகிறார், இதனால் அவனது உடல் மீண்டும் வடிவம் பெறுகிறது.[60] கிருஷ்ணர் இரண்டாவது வரத்தை நிறைவேற்ற, பலம் வாய்ந்த அரவானைத் தோற்கடிக்கும் வகையில் எதிரிப் படையிலிருக்கும் ஒருவனை மிகவும் வலிமையானவனாக மாற்றுகிறார். இதன் மூலம் அரவானுக்கு வீர மரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு கிருஷ்ணர் அலம்பூசனைத் தேர்வு செய்தார். பிறகு அசரீரி மூலமாக அலம்பூசனை கருட வடிவம் எடுக்க யோசனை கூறுகிறார் அல்லது அலம்பூசனுக்கு உதவ உண்மையான கருடனை அனுப்புகிறார் எனக் கூறப்படுகிறது. ஆதிசேஷன், தனது எதிரியான கருடனைக் கண்டதும் பயத்தின் காரணமாக அரவானிடமிருந்து விலகிச் செல்ல, பாதுகாப்பற்ற நிலையில் சோர்வாக இருந்த அரவானை அலம்பூசன் தலையைக் கொய்து கொல்கிறார்.[61]

அரவானிலிருந்து கூத்தாண்டவர்

தொகு

கூவாகம் பகுதியில் கூறப்படும் ஒரு மரபுக் கதையில், அரவான் எப்படி கூத்தாண்டர் என அழைக்கப்படலானார் என விவரிக்கப்படுகிறது. போருக்குப் பிறகு, கௌரவர்களை அழித்தது குறித்து பாண்டவர்கள் பெருமை பேசிக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணர் இந்த போர் முழுவதையும் நேரில் பார்த்தவரான அரவானிடம் "இந்த போரில் பாண்டவர்கள் வெற்றியடைய உண்மையான காரணம் யார்"? என்று கேட்கிறார். எதிர்களின் தலையைக் கொய்யும் கிருஷ்ணரின் சக்கரம் மற்றும் அவர்களின் குருதியைச் சேகரிக்கும் சங்கு ஆகிய இந்த இரண்டையும் தான் கண்டதாக அரவான் பதிலளித்தார். வெற்றிக்கு முழுக்காரணம் கிருஷ்ணர் என உணர்த்துவதாகவே இந்தப் பதில் கொள்ளப்படுகிறது.[7] செருக்கும் எளிதில் கோபம் கொள்ளும் குணமும் கொண்டவருமான பீமனுக்கு அரவானின் இந்த பதில் கடும் கோபத்தை உண்டாக்கியது. (போரை வெல்லுவதில் பீமன் ஆற்றிய பெரும் பங்கு மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது). பீமன் அரவானைத் தாக்குவதற்கு முன்பு, அரவானது தலையை கரபரிகா ஆற்றில் வீசுமாறு கிருஷ்ணர் ஆணையிட்டார். ஆற்றில் விழுந்து குழந்தை வடிவம் பெறுகின்ற அரவானை ஆற்றங்கரையோரத்தில் இருந்த சந்திரகிரி நகரின் அரசன் கண்டெடுக்கிறார். அரசன் குழந்தையைத் தூக்கும் போது "குவா குவா" என்று குழந்தை அழுததால் அந்த இடத்துக்கு கூவாகம் என்றும் அந்தக் குழந்தைக்கு கரபாலன் ("நாணல்-குழந்தை") என்றும் பெயரிட்டார்.[7]

காரபாலன் வளர்ந்த பின்னர், ஒரு போரில் தனது வளர்ப்புத் தந்தையைக் காயப்படுத்திய கூத்தசூரன் என்ற அரக்கனைக் கொல்வதாக இக்கதையில் கூறப்படுகிறது. இந்த மரபின் மகாதேவியாக வணங்கப்படும் திரௌபதி அம்மன், கரபாலனுக்கு கூத்தாண்டவர் (கூத்தசூரனை கொன்றவன்) என்ற புதிய பெயரை வழங்கி ஆசீர்வதித்து கூவாகத்தில் அவருக்கு கோவில் ஒன்றையும் அருளுகிறாள்.[7] இந்த மரபிற்குள்ளேயும் பல வேறுபாடுகள் உள்ளன. இதன் சில கதை வடிவங்களில், குழந்தையைச் சந்திரகிரியின் அரசியான கிருபான்ஞ்சி என்பவர் கண்டெடுத்தாகக் கூறப்படுகிறது.[7] பிற கதை வடிவங்களில் சந்திரகிரியின் அரசன் மற்றும் கூவாகம் கோவில் பற்றி எதுவும் கூறப்படவில்லை. மாறாக, இவை அரக்கன் கூத்தசூரனைப் பற்றி அதிகம் கூறுகின்றன. மேலும் தலையை மட்டும் கொண்டிருக்கும், நீரில் பிறந்த ஒருவனால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும் என்ற வரம் பெற்றதைப் பற்றியும் கூறுகின்றன. கிருஷ்ண அவதாரம் எடுத்த விஷ்ணு, இந்த அரக்கனை அரவான் கொல்வார் என்று கடவுள்களுக்குக் கூறுகிறார். இதை மனதில் கொண்டே அரவானின் தலை ஆற்றில் தூக்கி எறிய ஆணையிடுகிறார். பின்னர் அது கூத்தன் ("நீரில் பிறந்தவன்") என்ற குழந்தையாக மாறி அரக்கனைக் கொல்கிறது.[62]

வழிபாடு

தொகு

பின்பற்றுவோர் மற்றும் கோவில்கள்

தொகு

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபே முதல் தமிழ் அரவான் வழிபாட்டு மரபு என ஹில்டிபெய்டல் வாதிடுகிறார்.[63] ஆனால் இது மட்டுமே அரவானை வணங்கும் மரபல்ல. திரௌபதி வழிபாட்டு மரபும் அதற்கே உரித்தான அரவான் வழிபாட்டு சடங்குகளையும் முறைகளையும் உருவாக்கிக் கொண்டுள்ளது.

தமிழ் நாட்டின் கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் கூத்தாண்டவருக்கு அதிகமான பக்தர்கள் உள்ளனர்.[64][65] திரௌபதியை வழிபடும் பக்தர்கள் மேற்கூறிய மாவட்டங்களைத் தவிர காஞ்சீபுரம் (முன்பு செங்கல்பட்டு) மாவட்டத்திலும் பரவியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் தென் மாவட்டங்களிலும் திரௌபதி கோவில்கள் காணப்படுகின்றன. திரௌபதி கோவில்களை விட கூத்தாண்டவர் கோவில்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுலிருந்து கோயம்புத்தூர் வரை நீண்டு செல்லும் பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் கூவாகம் மிக முக்கியமானது. இந்த 32 கோவில்கள் உள்ள இடங்கள்:[66]

கோயம்புத்துர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்[64]

ஈரோடு மாவட்டம்[67]

சேலம் மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்[64]

  • சேர்ப்பாப்பட்டு
  • கீழ்வானம்பட்டி
  • தேவனூர்
  • வேதாந்தவதி
  • வீரனேந்தல்

வேலூர் மாவட்டம்[64]

  • சோழவரம்
  • ஒடுகத்தூர்
  • புலிமேடு
  • புதூர்
  • வெள்ளையம்பட்டி
  • வரகூர்

விழுப்புரம் மாவட்டம்[64]

  • கொணலூர்
  • கூவாகம்
  • பெண்ணைவளம்
  • தைலாபுரம்
  • கிளியனூர்

புதுச்சேரி யூனியன் பிரதேசம்[68]

  • மதுக்கரை[11]
  • பிள்ளையார்க்குப்பம்[13]

திரௌபதி கோவில்களில் வெட்டுண்ட அரவானின் தலை பரவலாக இடம்பெற்றுள்ளது. இது பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட எளிதாக எடுத்துச்செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தலையாக இருக்கும். சில நேரங்களில் கோவில் வளாகத்தில் ஒரு தனிக்கோவிலில் வைக்கப்பட்டிருக்கும்.[69] திரௌபதி கோவில்களின் கூரை மூலைகள் மற்றும் ஓரங்களில் அரவான் தலைச் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும். பேய் அல்லது பூத வடிவில், அரவான் கோவிலையும் படுகளம் விழாவையும் தீய ஆன்மாக்களிடமிருந்து காக்கும் பாதுகாவலனாகக் திகழ்கிறார்.[70] திரௌபதி வழிபாட்டு மரபில், படுகளம் என்பது மகாபாரதப் போர் நிகழ்வை நிகழ்த்திக்காட்டும் மைதானமாகும். தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் அரவானின் தலை தனி மண்டபம் அல்லது மாடக்குழியுள் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய அரவான் தலை, கும்பகோணத்தின் ஹாஜியார் தெரு கோவிலில் காணப்படுகிறது.[71]

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் சடங்குகள்

தொகு

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவான் கூத்தாண்டவராக அறியப்படுகிறார்; இந்த மரபில் கூத்தாண்டவரே முக்கியக் கடவுளாகக் கருதப்படுகிறார். கூத்தாண்டவரின் முதன்மைக் கோவில் தமிழ் நாட்டில் கூவாகம் என்ற இடத்தில் உள்ளது. இந்த மரபில் ஆண்டுதோறும் சித்திரை (ஏப்ரல்-மே) மாதத்தின் பௌர்ணமி தினத்திற்கு முந்தைய அல்லது பிந்தைய 18 நாட்களில் திருவிழா நடக்கிறது. இதில் அரவானுக்கும் கிருஷ்ணரின் பெண் வடிவமான மோகினிக்கும் நடக்கும் திருமணம், அரவானின் பலிக்குப் பின் மோகினி விதவையாகுதல் மற்றும் புலம்பல் ஆகியவையே முக்கிய சடங்குகளாகும். இத் திருவிழாவின் முக்கிய நாளான பௌர்ணமி அன்று அரவானின் தன்பலி நடத்திக் காட்டப்படுகிறது.[55][72]

 
தன்பலி சடங்கு நிகழ்வுக்கு முன்பு கூவாகமெங்கும் தூக்கிச் சொல்லப்படும் கூத்தாண்டவர் / அரவான்

தங்களை அரவாணிகள் என்று அழைத்துக்கொள்கின்ற, இங்கு வாழும் திருநங்கைகள், அரவானுக்கும் மோகினிக்கும் நடைபெறும் திருமணத்தை நடத்தி காட்டுவதன் மூலம் கூவாகம் திருவிழாவில் கலந்துகொள்வர். (தமிழ் நாட்டின் தேவனாம்பட்டினம், திருவேட்களம், அதிவராகநத்தம் (சிதம்பரத்திலிருந்து வடமேற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது) மற்றும் கொத்தடை மற்றும் புதுச்சேரியில்[73] உள்ள பிள்ளையார்குப்பம் போன்ற இடங்களில் சிறியளவில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாக்களிலும் திருநங்கைகள் இதே போன்று கலந்து கொள்வர். பல ஆண்டுகளாக உள்ளூரைச் சேர்ந்த திருநங்கைகளே இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர் எனினும், 1960 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் திருநங்கைகள் வந்து இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.[51][74][75] திருநங்கைகளையும் சேர்த்து தோரயமாக 25,000 மாற்றுப்பால் உடையணிந்தவர்கள் இந்த திருவிழாவைக் காண வருகின்றனர்.[76] 1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஃபிரான்சிசின் பதிவு வன்னியர் மற்றும் மற்ற சூத்திரர் சமூகங்களைச் சேர்ந்த ஆண்களே பெண்கள் உடையணிந்து இவ்விழாவுக்கு வருவதாகக் கூறுகிறது. இவ்விழா சூத்திரர்களிடையே பிரபலமானது என்றும் கூறுகிறது. ஆனால் திருநங்கைகள் பற்றி வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. மேலும் ஆண்களைக் கூத்தாண்டவருக்கு மணமுடிப்பதும் அவர்கள் விதவைக்கோலமேற்பதும் திருவிழாவின் இறுதி நாள் நடைபெற்றதாக பிரான்சிஸ் கூறுகிறார் (தற்போதைய விழாக்களில் திருமணச்சடங்கு 14ம் நாளும், விதவைக்கோலச் சடங்கு 16ம் நாளும் நிகழ்த்தப்படுகின்றன).[77]

கூத்தாண்டவர் திருவிழாவின் முதல் ஆறு நாட்களின் போது, வானவேடிக்கைகள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க அரவானின் தலை (சாமி ) கூவாகத்தின் முக்கிய வீதிகளில் நடனத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்தின் போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தீபாராதனை, தேங்காய் உடைத்தல் மற்றும் பிற சடங்குகளுடன் அரவானுக்குப் பூசை செய்வர். 13 ஆம் நாளில் அரவானின் ஆன்மா சடங்கு முறைப்படி தலையிலிருந்து ஒரு பானைக்கு மாற்றப்படுகிறது. இதன் பிறகு தலைக்கு வண்ணம் தீட்டப்படுகிறது. 14 ஆம் நாளின் மாலை நேரத்தில் ஊர்வலத் தேரில் 20 அடி உயரமுள்ள நீண்ட கம்பம் ஒன்று செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தக் கம்பம் தான் திருவிழாவின் அடுத்து வரும் நாட்களில் அரவானின் தலை மற்றும் உடலைத் தாங்குகிறது. "கம்பம் நிறுத்துதல்" சடங்குக்குப் பிறகு, அரவானை மணப்பதாக வேண்டிக் கொண்ட இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் (கூவாகம், அதன் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்கள்) திருமணமான பெண்களின் அடையாளமான தாலியை வாங்குவார்கள். அரவான் சார்பாகக் கருதப்படும் பூசாரி கோவிலின் உட்புறக் கருவறையில் வைத்து அவர்களது கழுத்தில் தாலியைக் கட்டுவார்.[78][79] திருமணமான ஆண்களும் நோய்வாய்ப்பட்ட ஆண்களும் கூட அரவானை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகத் திருவிழாவில் பெண் உடையணிந்து அரவானைத் திருமணம் செய்து கொள்வர்.[74]

14 ஆம் நாளிலிருந்து 16 ஆம் நாள் வரை திருநங்கைகள் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் 15 ஆம் நாளின் இரவு அரவானின் பூங்கரகத்தைத் தலையில் வைத்து நடனமாடுவர். இதில் அரவானின் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.[78] இந்த நடனத்திற்குப் பிறகு அவர்களுக்குத் தாலி கட்டி பூசாரி அவர்களை அரவானுக்குத் திருமணம் செய்து வைப்பார். பிறகு அவர்கள் தங்கள் திருமணத்தை முழுமைப்படுத்துவதற்கு அடையாளமாக உடலுறவில் ஈடுபடுவர். அன்று இரவு முழுவதும் திருநங்கைகள் கட்டுப்பாடற்று பலருடன் உடலுறுவு கொண்டு கொண்டாடுவர்.[55][72] ஆனால் அரவானை மணந்த கிராமவாசிகள் இவ்வாறு உடலுறவில் பங்கு கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. இத்திருநங்கைகள் பெண்களின் உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொள்கின்றனர். ஆனால் நேர்த்திக்கடனுக்காக அரவானைத் திருமணம் செய்துகொள்ளும் கிராமத்துவாசிகள் வழக்கமான ஆண் உடைகளையே அணிகின்றனர்.[80]

 
அரவானுக்காக ஒப்பாரி வைக்கும் அவரது ”மணப்பெண்”கள் (திருநங்கைகள்)

16 ஆம் நாளின் முற்பகுதியில், அரவானின் ஆன்மா புதிதாக வண்ணம் தீட்டப்பட்ட தலைக்குள் மீண்டும் செலுத்தப்பட்டு, அரவானின் கண்களுக்கு வண்ணம் தீட்டி, ”சாமி திருக்கண் திறத்தல்” சடங்கு நடைபெறுகிறது. பின்னர் அரவானின் தலையை, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கேடயத்தின் மீது வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இந்தக் கேடயத்துடன் இன்னும் இரண்டு தேர்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒன்றில் அரவானின் மார்புக் கவசம் மற்றும் ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும்; இவை இல்லையென்றால் திருவிழா முழுமையடையவில்லை என்றே கருதப்படுகிறது. மற்றொன்றில் அரவானின் பூ மகுடம் வைத்து கொண்டு செல்லப்படுகிறது. சேவல்களைப் பலிகொடுக்கும் சடங்குடன் திருவிழா முடிவடைகிறது. வைக்கோல் கொண்டு உருவாக்கப்பட்ட உடலில் அரவானின் தலை பொருத்தப்படுகிறது. அந்த உடலுக்கு அவரது கவசமும் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு பூமாலையும் சூட்டப்படுகிறது. முன்பு நடப்பட்ட நீண்ட கம்பத்தில் அரவானின் தலையும் உடலும் பொருத்தப்படுகின்றன. களப்பலிக்காக அரவானைத் தயார்ப்படுத்தவும் போரின் எட்டாம் நாள் மரணத்தை நிகழ்த்திக் காட்டும் சடங்குக்காகவும் இந்த உருவம் கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். மதியவேளையில், அரவான் களப்பலியைக் குறிக்கும் வகையில் தேர் வடக்கு நோக்கி திருப்பி வைக்கப்படுகிறது. பின்னர் குருட்சேத்திர போர்க்கள மேடையை நோக்கி திருப்பி வைக்கப்படுகிறது. இது போர்க்களத்தில் நுழைந்து அலம்பூசனின் கையால் இறப்பதற்காக அரவான் வருகிறார் என்பதைக் குறிக்கிறது. குருசேத்திரத்தை அடைந்த பிறகு பூமாலைகள் கழற்றப்படும். போரின் எட்டாம் நாள் அரவான் தனது சதைகளை இழந்து தோல்வி அடைந்ததை இது குறிக்கிறது.[78]

போர்க்களத்திலிருந்து திரும்பி வரும் போது இந்தத் தேர் ஒப்பாரிச் சடங்குகள் செய்வதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ”அழுகளம்” மைதானத்தை நோக்கி செல்லும். அரவான் களப்பலியாகத் தன்னைத் கொடுத்ததால் கணவனை இழந்து விதவைகளாகும் திருநங்கைகள் தங்கள் தலைமுடியைக் கலைத்து அலங்கோலமாக்கி புலம்பி அழுவர். அரவான் கொஞ்சம் கொஞ்சமாக பலம் இழப்பதைக் குறிக்கும் விதத்தில் அரவானின் உடலில் இருக்கும் பூமாலைகள் ஒவ்வொன்றாக பக்தர்கள் மீது வீசி எறியப்படும். புராணக் கதையின் மோகினியைப் போலவே, திருநங்கைகள் தங்கள் வளையல்களை உடைத்தும், மார்பில் அடித்துக் கொண்டும், தங்கள் மணக்கோலத்தை அழித்தும் அரவானின் இறப்பிற்காகத் துக்கம் அனுசரிப்பர். அவர்கள் தங்கள் தாலிகளை அறுத்து இதற்காக திருவிழாவில் நடப்பட்டிருக்கும் ”வெள்ளிக்கால்” என்ற கம்பத்தின் மீது அவற்றை வீசியெறிவர். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தங்களது விதவைக் கோலத்தைக் குறிக்கும் விதமாக வெள்ளைச் சேலையை அணிந்து கொள்வர். விழா முடிந்து ஒரு மாத காலம் வரை வளையல்களையும், பல வண்ணச் சேலைகளையும் அணியாமல் தங்கள் விதவைக் கோலத்தைக் குறிக்கின்றனர்.[78]

உச்சிப் பகல்வேளைக்குப் பிறகு அரவானது தேர் அழுகளத்தை அடையும் போது, அரவானின் உடம்பில் இருந்த அலங்காரங்கள் அகற்றப்பட்டு வைக்கோலாலான எலும்புக்கூடு மட்டும் காட்சியளிக்கும். பெரும்பாலான திருநங்கைகள் அங்கிருந்து சென்ற பின்னர் அரவானைத் திருமணம் செய்த ஆண்கள் தங்களது தாலிகளை அறுத்தும் வளையல்களை உடைத்தும் விதவைக் கோலம் ஏற்றுக்கொள்வர் (வெள்ளிக்கால் சடங்கு). அப்போது ”பாரதியார்” (மகாபாரதக் கதை கூறுபவர்) மகாபாரதத்தின் முடிவுக் காட்சிகளை விவரிக்கிறார். இது போரைக் காண வேண்டும் என்ற அரவானின் ஆசையை நிறைவேற்றுவதன் அடையாளமாகச் செய்யப்படுகிறது. போரின் இறுதியில் அரவானின் தலையை விட்டு உயிர் பிரிந்து செல்லும் போது, திருநங்கைகள் அரவானின் களப்பலிக்காக அழுகிறார்கள், அதே சமயம் கிராமவாசிகள் முன்னோர் ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக அழுகிறார்கள் என்று ஹில்டிபைடெல் கருதுகிறார்.[78]

அழுகளத்தில் இறந்த அரவானை கௌரவப்படுத்தும் விதமாக அர்ப்பணிப்பின் அடையாளமாக சமைத்த "இரத்த சோறு" அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது அரவானின் தியாகத்தின் குறியீடாகும். இந்த சோறு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் அளிப்பதாக நம்பப்படுகிறது. அந்தி வேளையில் இறப்பு சடங்குகள் முடிந்த பிறகு அரவானின் தேர் “இழவு வீடு” போலக் கருதப்படுகிறது. அரவானின் எலும்புகூடான உடம்பிலிருந்து உயிரற்ற தலை நீக்கப்பட்டு, துணிகள் கொண்டு மூடப்பட்டு, சவ ஊர்வலம் போல கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. அந்தத் தலை காளிகோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது, அங்கே அரவானின் தலைக்கு மீண்டும் உயிர் கிடைக்கிறது. ”விடையாட்டி” (திரும்பும் நடனம்) சடங்கின் போது, 17 ஆம் நாளின் விடியற்காலை வரை அரவானின் தலை மீண்டும் ஒரு முறை கிராமத்தைச் சுற்றி வலம் வருகிறது. 18 ஆம் நாளான இறுதி நாளன்று, அரவானின் தலை மீண்டும் ஒருமுறை அலங்கரிக்கப்பட்டுக் கிராமத்தை இறுதியாகச் சுற்றி வருகிறது. அன்று மாலை, கோவிலின் கருவறையில் நடக்கும் மகுடம் சூட்டு விழாவில் பூசாரி தருமராக அரவானின் தலைக்கு மகுடம் சூட்டுகிறார்.[78][81]

திரௌபதி வழிபாட்டு மரபின் சடங்குகள்

தொகு
 
அய்யம்பேட்டை திரெளபதி அம்மன் கோவிலில் உள்ள 13 அடி உயர அரவான் தலை. அவரது மகுடத்தில் ஒரு நாகப்பாம்புத் தலையையும், மகுடத்தின் பின்புறத்திலிருந்து ஒரு ஐந்து தலை நாகம் வெளி வருவதையும் இதில் காணலாம்

திரௌபதியின் வழிபாட்டு மரபினர், ”படுகளம்” எனப்படும் ஆண்டு விழாவை நடத்துவதன் மூலம் மகாபாரதப் போரை நினைவுகூர்கின்றனர். இந்த விழா திரௌபதியின் திருமணத்தைக் காட்டும் கூத்து நிகழ்ச்சியுடன் தொடங்கும்.[82] இந்தத் திருவிழாவின் போது, திரௌபதியாக நடிப்பவரும், பொது நிகழ்வுகளில் பங்கு பெறும் பிற பெண்களும் அரவானுக்காகவும் போரில் மடிந்த பிற வீரர்களுக்காகவும் புலம்புவர்.[83] படுகளம் திருவிழா நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையும் அதில் அரவான் களப்பலிக் கூத்து நிகழ்ச்சி நடத்தப்படும் நாளும் அந்தந்த ஊரைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஆனால் பொதுவாகக் களப்பலி நிகழ்ச்சி எங்கு நடைபெறுகிறதோ, அந்த இடம் குருட்சேத்திர போர்க்களத்தைக் குறிக்கும் குறியீடாகக் கருதப்படுகிறது.[84]

தமிழ் நாட்டில் உள்ள இருங்கல் என்ற பகுதியில், 18 நாட்கள் நடத்தப்படும் திருவிழாவின் இறுதி நாளான 18 ஆம் நாள் படுகளம் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. இச்சடங்குக்கு 16 நாட்களுக்கு முன் இந்தக் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் இந்தக் களப்பலிக் கூத்து புரட்டாசி மாதத்தின் (செப்டம்பர்-அக்டோபர்) அமாவாசை நாளன்று நிகழ்த்தப்படுகிறது.[85] 10 முதல் 12 நாட்களே நடக்கும் திருவிழாக்களில் இந்தக் கூத்தும் அரவானின் களப்பலிச் சடங்கும் விழாவின் இறுதி நாள் இரவு நிகழ்த்தப்படும். இப்பழக்கம் பெரும்பாலும் பெங்களூர் மற்றும் சென்னையின் சௌக்கார்பேட்டை, ஆலந்தூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் காணப்படுகிறது.[84]

இந்த விழாக்களில் அரவானின் தோற்றத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சென்னை மற்றும் பாண்டிச்சேரி கோவில்களில் நடைபெறும் விழாக்களில் நிரந்தரமான மரத்தாலான தலை உருவம் பயன்படுத்தப்படும். கிராமப் பகுதிகளில் அரவானின் தலை மற்றும் உடல் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்கும்; இரண்டும் திருவிழா முடிந்தபின்னர் அழிக்கப்படும்.[84] திண்டிவனத்தில் மூங்கில் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட அரவானின் தலையற்ற உடல் பயன்படுத்தப்படுகிறது. கையில் வில்லுடன் இடது முழங்காலில் மண்டியிட்டு வீரமாக அரவான் காட்சியளிப்பார். பின்னர் சடங்கு முறைப்படி களிமண் தலை பொருத்தப்பட்டு, அரவானின் உருவ பொம்மை 7 அடி உயரமுள்ளதாகும். முதன்மைப் பூசாரி வாளை எடுத்து அரவான் தலையை வெட்டுவார். அரவான் தியாகம் செய்த உடல் 32 துண்டுகளாக்கப்பட்டதை உணர்த்தும் வண்ணம் ஒரு பூசணிக்காய் 32 துண்டுகளாக வெட்டப்பட்டும். அடுத்ததாக, அரவானுக்கு அவரது குருதியைப் படைக்கும் விதமாக (அரவானுக்காக முன்பே பலி கொடுக்கப்பட்ட) ஆட்டின் குருதி படைக்கப்படும். அரவானின் உடல் கழுத்திலிருந்து கீழ்ப்பகுதி வரை இரத்தக்கறை படிந்த வெள்ளைத் துணி கொண்டு மூடப்படும். இறுதியாக இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி அரவானின் முகத்தில் தூவப்படும். பக்தர்கள் விழா முடிந்த பிறகு இந்த அரிசியை உட்கொள்கின்றனர். கூத்தாண்டவர் வழிபாட்டு மரபு பக்தர்களைப் போலவே இவர்களும் அரவானின் முகத்தில் தூவப்பட்ட இந்த அரிசியை உண்பதால் விழா முடிந்த பிறகு, பிள்ளைப் பேறு பாக்கியம் உண்டாகும் என நம்புகின்றனர்.[86]

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சத்திரம் கருப்பூர் என்ற ஊரில் அரவானின் 25 அடி நீளமுள்ள சிலை கிடைமட்டமாக நிலத்தில் படுத்து இருப்பது போன்று வடிவமைக்கப்படுகிறது. பின்னர் அரவானின் கதை நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நாடகத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் மீது காளி தெய்வம் இறங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர் சேவல் ஒன்றைச் சிலையின் கழுத்துப் பகுதியில் பலிகொடுக்கிறார். இது அரவானின் பலியைக் குறிக்கிறது. பின்னர் மீண்டும் இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தையில்லாப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.[87] இதே மாதிரியான பலிகொடுக்கும் நிகழ்வுகளும் இரத்தத்தில் நனைக்கப்பட்ட அரிசி வழங்குவதும் மேலக்கரை[88], ஆலந்தூர், பூந்தமல்லி மற்றும் விழுப்புரம் போன்ற பகுதிகளிலும் நடைபெறுகின்றன. ஆலந்தூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் ஆடு பலியிடப்படுகிறது. கடலூர், பாதிரிக்குப்பம் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் சேவல் பலியிடப்படுகிறது.[89] கடலூர் தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அரவானின் தலை படுகளம் மற்றும் மகாபாரதப் போரின் நிகழ்வுகளை பார்ப்பதற்காக உயர்த்திய நிலையில் வைக்கப்படுகிறது.[64][90]

சாவக மக்களின் மரபுகள்

தொகு

ஏழாம் நூற்றாண்டிலிருந்து சுமத்ரா தீவின் ஸ்ரீவிஜய வம்சத்தினால் ஆளப்பட்டுவந்த இந்தோனேசியாவின் சாவகத் தீவின் (ஜாவா) சில பகுதிகளில் இந்து சமயம் பின்பற்றப்பட்டு வந்தது. இங்கு மகாபாரத மரபு பரவி மாற்றங்களும் அடைந்தது. சமசுகிருத காப்பியங்கள் சாவகத்தின் கிராமப் பகுதிகளில் அறிமுகமானது பற்றிய முதல் ஆதாரம் பலிதுங்க (Balitung) மன்னனால் கி.பி. 907 இல் வெளியிடப்பட்ட சாங்சாங் (Sangsang) செப்புப் பட்டயங்களில் காணப்படுகிறது.[91] மகாபாரதத்தை சாவக மொழியில் பெயர்க்கும் பணி அரசன் தர்மவாங்சா தேகு (கி.பி. 990–1016)[91] என்பவரின் ஆதரவினால் தொடங்கப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பு முடிந்த பின்னர் ஒரு மாதத்திற்கு ஒரு மாலை குறைவான காலத்துக்கு (அக்டோபர் 14 - நவம்பர் 12, 996) விராட பர்வம் (மகாபாரதத்தின் நான்காம் நூல்) மக்கள் முன் வாசிக்கப்பட்டது.[91] சாவக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் மகாபாரதப் பதிப்பு மிகவும் சுருக்கமாகவும் உரைநடை வடிவிலும் இருந்தது.[91] ஆனால் விரைவில் கிழக்கு சாவகத்தின் புலவர்கள், மகாபாரதத்தின் பர்வங்களின் (புத்தகங்கள் அல்லது அதிகாரங்கள்) கருப்பொருள்களை விரிவுபடுத்தியும், அவற்றை சாவகச் சூழலுக்கேற்ப மாற்றியும் “காகவின்” என்ற நீண்ட கவிதைகளைப் படைக்கத் தொடங்கினர்.[91] பெட்ரஸ் ஜோசப்ஸ் ஜோட்மல்டர் (Petrus Josephus Zoetmulder), என்ற டச்சு அறிஞர் இப்படைப்புகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த ஆண்களும் பெண்களும் இந்தியப் பெயர்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அடிப்படையில் இவர்கள் சாவக மக்களே - இவர்கள் சாவக மக்கள் போலத் தான் யோசிக்கிறார்கள், நடக்கிறார்கள், சாவகச் சூழலில் தான் வாழ்கிறார்கள்”.[92]

 
வயாங் கோலெக் பொம்மலாட்ட மரபில் ”பாம்பாங்” அரவான் கைப்பாவை
 
சாவகத்தின் வயாங் குலிட் பொம்மலாட்ட மரபில் அரவான் கைப்பாவை

ஜாவா மக்களின் பாரம்பரிய நாடக வடிவமான ”வயாங்” (wayang) மற்றும் பொம்மலாட்ட நிகழ்ச்சியான ”வயாங் குலிட்”(wayang kulit) ஆகிய கலைகளின் மூலம், அரவான் மற்றும் சாவக மரபு மகாபாரதத்திலிருந்து பிற கதாப்பாத்திரங்களின் கதைகள் கூறப்படுகின்றன. அரவான் என்ற பெயர் சாவகப் பகுதியில் Irawan என்று எழுத்துக்கூட்டப்படுகிறது. இந்தியாவில் உள்ளது போலவே அர்துசுனன் (அருச்சுனன்) மற்றும் உலுப்பியின் மகனாகவே அரவான் கருதப்படுகிறார். இந்தியாவில் அரவானின் தாய் உலுப்பி என்ற நாகர் இனப் பெண்ணாவார். ஆனால் சாவக மரபில் அவர் யாசாரதா துறவி மடத்தின் முனிவர் கன்வர் (பொம்மலாட்டத்தில் ஜயாவிலபர்) என்பவரின் மகள் எனக் கூறப்படுகிறது. துறவி மடத்தில் பிறந்து தனது தந்தையிடமிருந்து விலகி தாய் மற்றும் தாத்தா ஆகியோரால் அரவான் வளர்க்கப்படுகிறார்.[93][94] பாண்டவர்களின் அமர்தா காலகட்டத்தில் நடைபெறுவதாக எழுதப்பட்ட 40க்கும் மேற்பட்ட ”லகோன்”களில் (நாடகங்கள்) அரவானும் அரவானின் மாற்றாந்தாய் மகனான அபிமன்யு அல்லது அங்கவிசயனும் முக்கிய கதாநாயகர்களாக உள்ளனர்.[95] இந்த லகோன்களில் அரவான் ”லிஜேபன்” (lijepan) பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறார். லிஜேபன் என்பது சிறிய, நற்குணமும் கட்டுப்பாடும், தன்னடக்கமும் உள்ள பாத்திரம் எனப் பொருள்படும். வயாங் குலிட் பொம்மலாட்ட மரபில் அரவான் ”பாம்பாங்” (நற்குணமுள்ள போர்வீரன்) என்ற பெயருடன் வெள்ளை நிற முகம் மற்றும் மென்மையான குரலுடன் சித்தரிக்கப்படுகிறார்.[96] அரவான் அமைதியான மற்றும் தீர்க்கமான குணமுள்ளவராகவும் காட்டப்படுகிறார்.[94]

”அரவான் ராபி” (Irawan Rabi, அரவானின் திருமணம்) என்ற பிரபலமான லகோன் அரவானுக்கும் கிருஷ்ணரின் மகளான திதிசாரிக்கும் இடையே இருந்த காதலைச் சொல்கிறது. அரவானுக்காக திதிசாரியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்படிருக்கும் வேளையில் கிருஷ்ணரின் சகோதரரும் கௌரவர்களின் நண்பருமான பலதேவர், திதிசாரி துரியோதனனின் மகனாகிய லஷ்மண மந்திரகுமரனை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கல் பாண்டவர்கள், கௌரவர்கள் மற்றும் அரக்கப் பேரரசு (ogre-kingdom) ஆகிய மூன்று குழுக்களுக்கிடையிலான மோதலாக முடிகிறது. அரக்கர்களின் அரசன் பரந்த்ஜனா திதிசாரியை கடத்துவதற்கு திட்டமிடுகிறார். இதனால் விளையும் குழப்பம் கௌரவர்களுக்கு ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. கிருஷ்ணரின் மூத்த மகளும் அபிமன்யுவின் மனைவியும் அவரிடமிருந்து பிரிந்து வாழ்பவளுமான சிதி சேந்தாரி, இந்த நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அரவானையும் திதிசாரியையும் சேர்த்து வைத்து, தானும் தனது கணவருடன் சேர திட்டம் தீட்டுகிறாள்.[97][98] அரவானும் திதிசாரியுமே இந்த லகோனின் நாயகன்-நாயகியாகக் கருதப்பட்டாலும் நாடகத்தில் அவர்கள் வெறுமனே பார்வையாளர்களாகவே உள்ளனர்.[97] இந்த லகோனில் அரவான் ஒரு சிறிய பாத்திரம் தான் என்று ஜேம்ஸ் ஆர். பிராண்டன் கூறுகிறார்.[99] அரவான் மனத்திடம் இல்லாதவராகவும் மற்றவர்களால் வழிநடத்தப்படுபவராகவும் சித்தரிக்கப்படுகிறார் (இது தெற்கு ஆசியாவின் கலை வடிவங்களில் பரவலான சித்தரிப்பு) [97] ”சீரத் லம்பகான் பெர்கிவா பெர்கிவாதி” (Serat Lampahan Pregiwa Pregiwati) என்ற மற்றொரு லகோனும் அரவான்-திதிசாரி காதலைப் பற்றிக் கூறுகிறது.[100]

நான்காம் மங்குனேகரா அரசனின் அவைப்புலவரான ஆர். எம். நிக். விரயகுசுமா (R. M. Ng. Wiryakusuma) 1883 ஆம் ஆண்டில் ”மகாபட்” என்ற கவிதை வடிவில் ”சீரத் கம்பிரனம்” என்ற லகோனை எழுதினார். அவருக்கு பின்வந்த புலவர்கள் அதை மேலும் விரிவுபடுத்தினர். இக்கதையில் அரவான் நாக்ரான்காங் கெஞ்சனா என்ற பகுதியின் அரசனாவதாகவும் ”பிரபு கம்பீரனம்” என்ற பட்டத்தைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.[101] ”அரவான் மாலிங்” (Irawan Maling) என்ற மற்றொரு லகோன் அரவானுக்கும் அங்கவிசயனுக்கும் இடையே நடந்த சண்டையை விவரிக்கிறது.[102]

”பார்த்தவிசயா” (அருச்சுனனின் வெற்றி) அல்லது ”இரவான் தகா” (அரவானின் மரணம்) என்ற காகவின் கவிதை நூலில், மகாபாரதப் போரில் அரவான் மரணமடைவது விவரிக்கப்படுகிறது.[103] அரவான் பாரதப் போரின் ஆரம்பத்தில் தனது சகோதரர்களுடன் போர்க்களத்திற்குச் செல்கிறார். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கௌரவர்கள் பலரைக் கொல்கின்றனர். பிறகு காலசரங்கி என்ற அரக்கன் அரவானைத் தாக்குகிறார். காலசரங்கியின் தந்தையைக் கொன்ற அருச்சுனனைப் போலவே தோற்றம் கொண்ட அரவானை, அருச்சுனன் எனத் தவறாக எண்ணிய காலசரங்கி, அரவானைக் கொன்றுவிடுகிறார்.[94] அரவானின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அருச்சுனன் காலசரங்கியைக் கொன்றுவிடுகிறார். சாவக மொழி மகாபாரதத்தில் போரின் தொடக்கத்திலேயே அரவானின் மரணம் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.[104] இந்தக் கதையின் பொம்மலாட்ட வடிவங்களில் அரவானுக்கும் காலசரங்கிக்கும் நடக்கும் சண்டை பாரதப் போருக்கு முன்பு அரவான் தனது தந்தையைச் சந்திப்பதற்கு முன்பு நடப்பதாகக் கூறப்படுகிறது.[94]

குறிப்புகள்

தொகு
  1. Sörensen (1902) p. 345 indexes the name as Irāvat.
  2. Somasundaram O, S (Jan–Mar 2009). "Transgenderism: Facts and fictions". Indian Journal of Psychiatry 51 (1): 73–75. doi:10.4103/0019-5545.44917. பப்மெட்:19742192. பப்மெட் சென்ட்ரல்:2738402. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2738402/. 
  3. by sandhi with the onomastic suffix आन्. Iravan is the masculine nominative singular of the root form Iravat.
  4. Monier-Williams (2008) [1899]. "Monier Williams Sanskrit-English Dictionary". Universität zu Köln. p. 168. Archived from the original on 26 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. See "Religion Department". Official site of GWU. The George Washington University (GWU). Archived from the original on 31 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 22 March 2010. for Alf Hiltebeitel's profile.
  6. 6.0 6.1 6.2 Hiltebeitel (1988) p. 320, Madeleine Biardeau is quoted on the page.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 Hiltebeitel (1995) pp. 455–56
  8. Hiltebeitel (1991) p. 309
  9. 9.0 9.1 Hiltebeitel (1998) pp. 152, 160, 162, 165 for Koovagam images
  10. Hiltebeitel (1998) p. 147
  11. 11.0 11.1 See Madurai's temple photos at n.g3nd3r (Jul 2, 2008). "Madukarai". Picasa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  12. See Kothadai's temple's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Kothadai". Picasa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  13. 13.0 13.1 See Pillaiyar-Kuppam's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Pillaiyar Kuppam". Picassa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  14. See Devanampattinam's photos at n.g3nd3r (Jul 2, 2008). "Devanampattinam". Picasa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  15. 15.0 15.1 "Kothattai Aravaan Festival". Flickr. Dilip Muralidaran. 2008. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.
  16. See Hiltebeitel (1991) pp. 254–56, 268; Hiltebeitel (1988) p. 249 for Draupadi cult images.
  17. "ARAVAN KADABALI" (in French). பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. 18.0 18.1 18.2 18.3 Buitenen (1973) pp. xxiv–xxv
  19. Brockington (1998) p. 26
  20. Sukthankar (1933) "Prolegomena" p. lxxxvi. Emphasis is original.
  21. For Viṣṇu Purana 4:20:49 and article on Irāvat, see Dikshitar (1951) p. 199.
  22. Vishnu Purana 4:20:12 translation at Wilson, Horace Hayman (1840). "The Vishnu Purana". Yahshuan Archives. Archived from the original on 4 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 20 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  23. Aadhar, Anand. "Bhāgavata Purana 9:22:32". பார்க்கப்பட்ட நாள் 20 March 2010.
  24. 24.0 24.1 24.2 Hiltebeitel (1988) pp. 318–20
  25. 25.0 25.1 Hiltebeitel (1991) p. 284
  26. Barbarika is described as the son of Iravan's cousin, Ghatotkacha in the Mahabharata.
  27. See Hiltebeitel (1999) for parallels with Barbarika's story
  28. Hiltebeitel (1988) pp. 317–18
  29. Hiltebeitel (1988) p. 318
  30. Pattanaik (2000) p. 37
  31. 31.0 31.1 Santhanam, Kausalya (August 17, 2001). "Symbol of sacrifice". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104064550/http://www.hindu.com/2001/08/17/stories/0917035f.htm. பார்த்த நாள்: 7 May 2010. 
  32. Hiltebeitel (1988) p. 332
  33. Shulman (1978) p. 132. Iramacamippulavar, Merkolvilakka kkatai akaravaricai (Madras, 1963), 1:40–44.
  34. Shulman (1978) p. 131
  35. 35.0 35.1 Hiltebeitel (1995) p. 448
  36. Sörensen 1902, p. 345. Index notes references to Irāvat in Mahabharata book 6, chapters 45, 56, 75, 81, 83, 90, 91, and 96 of the Bombay edition.
  37. For Iravan article, see Mani (1975) pp. 331–32.
  38. 38.0 38.1 Vogel (1995) pp. 75–76
  39. Mani (1975) p. 743 (Mahabharata—Bhishma Parva 45:69)
  40. Ganguli (1883–1896). "XLV". The Mahabharata Book 6: Bhishma Parva. பார்க்கப்பட்ட நாள் 7 May 2010.
  41. For Vinda and Anuvinda, Mani (1975) (Mahabharata—Bhishma Parva 83:18–22) pp. 45, 857
  42. Ganguli (1883–1896). "LXXXIV". The Mahabharata Book 6: Bhishma Parva. பார்க்கப்பட்ட நாள் 7 May 2010.
  43. 43.0 43.1 Ganguli (1883–1896). "Section XCI". The Mahabharata Book 6: Bhishma Parva. பார்க்கப்பட்ட நாள் 7 May 2010.
  44. For sons of Subala, Mani (1975) pp. 90, 178, 217, 287, 758, 881. For Iravan, Mani (1975) pp. 331–32 (Mahabharata—Bhishma Parva 90:27–46)
  45. For Almabusha, Mani (1975) p. 24. For Iravan, Mani (1975) pp. 331–32 (Bhisma Parva 90:56–76)
  46. 46.0 46.1 46.2 46.3 Hiltebeitel (1995) p. 452
  47. 47.0 47.1 47.2 47.3 Hiltebeitel (1988) pp. 322–24
  48. 48.0 48.1 48.2 Hiltebeitel (1991) pp. 284–85
  49. 49.0 49.1 49.2 Makaparatam of Villiputtiralvar (Villiputuralvar) 2659–2667 (kalappali. 0.8 Shulman (1978) p. 131
  50. Shulman (1978) p. 133
  51. 51.0 51.1 Hiltebeitel (1995) p. 453
  52. Pattanaik (2002) p. 87
  53. Hiltebeitel (1988) p. 324
  54. Doshi, Tishani (May 25, 2003). "Lessons in transformation". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606124222/http://www.hinduonnet.com/mag/2003/05/25/stories/2003052500600500.htm. பார்த்த நாள்: 19 March 2010. 
  55. 55.0 55.1 55.2 Goldman (1993) p. 388
  56. 56.0 56.1 Hiltebeitel (1991) p. 286
  57. 57.0 57.1 Hiltebeitel (1988) p. 325
  58. Hiltebeitel (1991) p. 285
  59. Hiltebeitel (1988) p. 326
  60. Hiltebeitel (1988) p. 329
  61. Hiltebeitel (1988) p. 331
  62. Hiltebeitel (1995) pp. 464–65
  63. "This Aravan-Kuttantavar cult may well be older than the Draupadi cult and was almost certainly originally independent of it, as it still largely is today." Hiltebeitel (1988) p. 320
  64. 64.0 64.1 64.2 64.3 64.4 64.5 Hiltebeitel refers to the North and South Arcot districts. In 1989, North Arcot was split into two districts—Tiruvannamalai and Vellore; and in 1993, South Arcot was also split into two districts—Cuddalore and Villupuram. The towns in the following table are grouped according to their current district names (taluks are noted as provided by Hiltebeitel.)
  65. See for overview of districts (Please follow links for specific details): "Districts of Tamil Nadu". Official Govt. site. Government of Tamil Nadu. Archived from the original on 2 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 1 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  66. Hiltebeitel (1995) p. 448. For a map dedicating location of the 32 temples see p. 449.
  67. Until 1996, Erode district was called Periyar district.
  68. Puducherry was formerly called Pondicherry.
  69. Hiltebeitel (1988) p. 327
  70. Hiltebeitel (1991) p. 298
  71. Hiltebeitel (1991) p. 314
  72. 72.0 72.1 Gurung, Madhu (Mar 18, 2007). "Journey of possibilities". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080326191521/http://www.hinduonnet.com/thehindu/mag/2007/03/18/stories/2007031800220100.htm. பார்த்த நாள்: 19 March 2010. 
  73. See Niklas (2003) p. 14 for the account of the 10-day Pillaiyarkuppam festival, which is similar to the Koovagam description.
  74. 74.0 74.1 Thurston (2001) pp. 10–12
  75. Elmore (2003) p. 18
  76. Verma, Varuna (April 29, 2007). "Celebrating the third sex". The Telegraph (கொல்கத்தா) இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 1, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090201033150/http://www.telegraphindia.com/1070429/asp/7days/story_7705455.asp. பார்த்த நாள்: May 14, 2009. 
  77. Hiltebeitel (1995) p. 454
  78. 78.0 78.1 78.2 78.3 78.4 78.5 See:
    • Hiltebeitel (1991) p. 301
    • Hiltebeitel (1995) pp. 457–64
    • Pattanaik (2002) p. 87
  79. தாலி கட்டுதல், தமிழர் திருமணங்களின் முக்கியச் சடங்கு. மணப்பெண் மணமகனின் வாழ்விலும் இல்லத்திலும் நுழைவதைக் குறிக்கிறது.
  80. See photos of the marriage ceremony at n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam:Marriage to Aravan". Picassa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link).
  81. See photos of the ceremony of dancing of Aravan's head and the procession at n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam: Procession of Aravan". Picassa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) and n.g3nd3r (Jul 2, 2008). "Koovagam: Widowhood". Picassa Web Albums. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2010.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  82. Hiltebeitel (1988) p. 145
  83. Hiltebeitel (1995) p. 462
  84. 84.0 84.1 84.2 Hiltebeitel (1991) p. 288
  85. Hiltebeitel (1991) p. 287
  86. Hiltebeitel (1991) pp. 289–93
  87. Hiltebeitel (1991) pp. 294–96
  88. Hiltebeitel (1991) pp. 292–93
  89. Hiltebeitel (1991) pp. 296–97
  90. Hiltebeitel (1991) p. 294
  91. 91.0 91.1 91.2 91.3 91.4 Supomo (1995)
  92. Zoetmulder (1974) pp. 187–188
  93. For Ulupi: Sudibyoprono (1991) pp. 551–52
  94. 94.0 94.1 94.2 94.3 For Irawan article: Sudibyoprono (1991) p. 237
  95. Brandon (1993) p. 13
  96. Mrázek (2005) pp. 274–75
  97. 97.0 97.1 97.2 Brandon (1993) pp. 70–71
  98. Alkire, Stephen R. and Guritno, Pandam (translation); Brandon, James R (English version) (1993). "Irawan's Wedding (Irawan Rabi)". In Brandon (ed.). pp. 171–268. {{cite book}}: Missing or empty |title= (help)CS1 maint: multiple names: authors list (link)
  99. Brandon (1993) p. 75
  100. Florida (2000) p. 309
  101. Florida (2000) p. 312
  102. Florida (2000) p. 435
  103. Creese (1999) p. 78
  104. For Bharatayuddha: Sudibyoprono (1991) p. 88

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அரவான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவான்&oldid=3927197" இலிருந்து மீள்விக்கப்பட்டது