மோகினி

இந்து கடவுளான விஷ்ணுவின் பெண் அவதாரம்

மோகினி (சமஸ்கிருதம்:मोहिनी, மோஹினி) என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த பெண் அவதாரமாகும். மோகினி என்ற பெயருக்கு மோகத்தினால் மயக்கும் வல்லமையுடையவள் என்று பொருள்.

மோகினி
எட்டு கரங்களுடன் நடனமாடும் மோகினியின் சிலை, ஹோய்சாலேஸ்வரர் கோவில், ஹளபீடு
அதிபதிமோகம்
ஆயுதம்மோகம், சக்ராயுதம்
துணைஅரவான், சிவபெருமான்
குழந்தைகள்ஐயப்பன் என அறியப்படும் சாஸ்தா.

மோகினி அவதாரம் பற்றி மகாபாரதம் மற்றும் பாகவதம் ஆகிய நூல்களில் குறிப்பு உள்ளது. பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதத்தினை தேவர்களுக்கு மட்டும் பிரித்து தருவதற்காகவும், பிட்சாடனுடருடன் இணைந்து தருகாவன ரிசிகளின் ஆணவம் அழிக்கவும், பசுமாசுரனை அழிக்கவும் எனப் பல முறை விஷ்ணு, மோகினியாக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மோகினி, சிவனுடன் உடலுறவில் ஈடுபட்டு ஐயப்பன் என்ற குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மகாபாரதத்தில் கூறப்படும் அரவான் என்பவரின் வரத்தை நிறைவேற்ற கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அமுதம் பகிர்ந்தளித்தல்

தொகு

தேவர்களும், அசுரர்களும் இணைந்து மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அந்நிகழ்வில் வெளிபட்ட ஆலகாலத்தினை சிவன் உண்டபின்பு, பாற்கடலிருந்து, லட்சுமி, அரம்பையர்கள், ஐராவதம், உச்சைசிரவம் போன்றவை தோன்றின. இறுதியாக அமுதம் தோன்றியது.

அமுதம் இறவாமையை தரவல்லது என்பதால் அசுரர்கள் அருந்துவதைத் தடுக்க விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்தார். தன் அழகில் மயக்கி அசுரர்களை ஏமாற்றிய மோகினி, தேவர்களுக்கு அமுதத்தை வழங்கினார். இதற்கிடையில் தேவர்கள் போல் வேடமிட்டு இருந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை மோகினியிடம் கூறினர். உடனே மோகினி தன் சக்ராயுதத்தால் அந்த அசுரனின் தலையை உடலில் இருந்து துண்டித்தார். இதனால் அவ்வசுரனின் தலை இராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.

பஸ்மாசுரன் வதம்

தொகு
 
பஸ்மாசுரன் - மோகினி, மரத்தின் மறைவில் சிவபெருமான்

விஷ்ணு புராணத்தில் மோகினி பஸ்மாசுரனை அழித்தமை பற்றி கூறப்பட்டுள்ளது.

அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவர் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் சாம்பல் ஆகும்படி வரம் கேட்டுப் பெற்றார். அதனை சிவபெருமானிடம் சோதிக்க எண்ணி அவரை துரத்தினார். அந்நேரத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து பஸ்மாசுரனை தனது அழகினால் மயக்கி மோகம் கொள்ளச் செய்தார். மோகம் கொண்ட பஸ்மாசுரனை தன்னுடன் ஆடும் படி மோகினி கூறினார். அவளுடைய நடன முறைகளை பின்பற்றி ஆடிய பஸ்மாசுரன் தான் பெற்ற வரத்தினை மறந்து தன் தலையிலேயே கைவத்தார். ஆகவே சிவபெருமான் தந்த வரத்தின்படி பஸ்மாசுரன் சாம்பலானார்.[1]

சிவபெருமானுடன் உறவு

தொகு
 
சிவபெருமானுடன், மோகினி இணைந்திருக்கும் காட்சி. வெண் காளையின் மீது பார்வதி.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கு மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.

காண்போரை மோகத்தில் ஆழ்த்தும் வல்லமையுடைய மோகினி அவதாரத்தினை விஷ்ணு மீண்டும் எடுத்தார். அத்துடன் ஒரு வனத்தில் சென்று மறைந்தார். மோகினியினை காண சென்ற சிவபெருமான் வனத்தின் ஒரு மரத்தில் விளையாடிக்கொண்டிருந்த மோகினியை கண்டார். அவருக்கும் மோகம் வந்தது. உடனிருக்கும் பார்வதியை மறந்து மோகினி அடைய எண்ணினார். அப்பொழுது சிவனும் மோகினியும் உடலுறவு கொண்டார்கள். அவர்களுக்கு பிறந்தவரே ஐயப்பன் ஆவார்.

நாட்டுப்புற மரபுகளில்

தொகு

மகாபாரதத்தில் கூறப்படும் அரவான் என்பவர், கிருஷ்ணரிடம் மூன்று வரங்கள் கேட்டதாக நாட்டுப்புற மரபில் கூறப்படுகிறது. அதில் மூன்றாவது வரம் பற்றி கூவாக மரபில் மட்டுமே கூறப்படுகிறது. அதன்படி அரவான், தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வரம் கேட்டதாகவும் அதற்கு கிருஷ்ணர் மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 
ஊஞ்சலாடும் மோகினி இராஜாரவி வர்மா (1894)

காண்க

தொகு

ஆதாரம்

தொகு
  1. http://tamil.nativeplanet.com/yana/

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mohini
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகினி&oldid=3632019" இலிருந்து மீள்விக்கப்பட்டது