கிருட்டிணன்

இந்துக் கடவுள்
(கிருஷ்ணர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிருட்டினன், கிருட்டிணன், அல்லது கிருஷ்ணன் (Krishna) இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விட்டுணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்டிண செயந்தியாக கொண்டாடப்படுகிறது.

கிருட்டினன்
கிருட்டினர்
தேவநாகரிकृष्ण
சமசுகிருதம்Kṛṣṇa
தமிழ் எழுத்து முறைகிருட்டினன்
வகைவிட்டுணுவின் அவதாரம்
இடம்மதுரா, பிருந்தாவனம், கோகுலம், துவாரகை
மந்திரம்ஓம் நமோ நாராயணா
ஆயுதம்சுதர்சன சக்கரம்
துணைருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, ஜாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை
நூல்கள்பாகவத புராணம், அரி வம்சம், விஷ்ணு புராணம், மகாபாரதம், உத்தவ கீதை மற்றும் பகவத் கீதை

கிருட்டிணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விட்டுணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.

கிருட்டிண வழிபாடு, பாலகிருட்டிணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் பொ.ஊ.மு. 4வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணன் (திருமால்) பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் கூறப்பட்டவர். எனினும் பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருட்டிணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. ஒரிசாவில் செகன்னாதர், இராசத்தான், மகாராட்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருட்டிணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960களில் உருவாக்கப்பட்ட இசுகான் அமைப்பு கிருட்டிண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது. பொ.ஊ. 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.

பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்

கிருட்டிணன் என்ற தமிழ் சொல்லிற்கு கரிய நிறம் பாெருந்தியவன் என்பது பாெருள். கரி (கருமை) + இருள் (இருட்டு) + அணன் (பாெருந்தியவன்) = கரிட்டிணன் > கருட்டிணன் > கிருட்டிணன் (கிருஷ்ணன்) > கிருட்டு > கிட்டு.

கிருட்டிணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார். அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள்படும் மோகன், "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள்படும் கோவிந்தன், "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள்படும் கோபாலன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் ஆயர்களையும் பசுக்களையும் தொடர்மழையிலிருந்து காக்க, கோவர்தன மலையை குடை போல் தூக்கியதால் கோவர்தனன் என்றும், கோகுலத்தில் வளர்ந்ததால் கோகுலன் என்றும், இராதையின் (நப்பின்னை, கருப்பாயி) உள்ளங்கவர் காதலன் என்பதால் இராதா கிருட்டிணன் (கருப்பாயி-கருப்பன்) என்றும், வசுதேவர்தேவகி இணையர்க்கு பிறந்ததால் வாசுதேவன் என அடைமொழிகளால் கிருட்டிணரை கொண்டாடுகிறார்கள். பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றார்கள்.

கிருட்டிணனின் கதை

இளமை

விருட்சிணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர்தேவகி இணையருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருட்டிணரின் தாய்மாமன் கம்சனிடமிருந்து கிருட்டிணரை காக்க, கிருட்டிணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர்யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.

கோகுலம் வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதா அவர்களால் வளர்க்கப்பட்டார். பின்னர் கோகுலம் வாழ் யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருட்டிணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது.

அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருட்டிணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன், சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர். சஙக கால புலவர் கபிலர் துவரை (துவாரகை) பற்றி கூறுகிறார்.

புராண நூல்கள் மற்றும் சோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருட்டிணனின் பிறந்த தேதி பொ.ஊ.மு. 3228 ஆம் ஆண்டு சூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு பொ.ஊ.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.[சான்று தேவை]

வாலிபம்

இள வயதில் பிருந்தாவனத்தில்[1] இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

வாலிப வயதை அடைந்தவுடன் பலராமருடன் மதுரா சென்று, கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராச்சியத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் புது நகரை நிறுவி, மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

குடும்பம்

 
எண்மனையாட்டிகளுடன் கண்ணன்

கிருட்டிணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் ருக்மணி, ச‌‌த்‌தியபாமா‌, சாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை ஆவர். மற்றும் பிற 16, 000 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருட்டிணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருட்டிணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார். எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாகூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.

ருக்மணிக்கும் கிருட்டிணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன். இவருக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருட்டிணனின் பேரனாவார்.[2] கிருட்டிணர் - சாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பன் ஆவார்.

.

மகாபாரதத்தில் கிருட்டிணன்

 
பார்த்தசாரதியாக, சிரீகிருட்டிணர்

பாண்டவர்களின் தாயான குந்தி, கிருட்டிணரின் சொந்த அத்தை ஆவாள். அருச்சுனனின் சிறந்த நண்பன் கிருட்டிணன். திரௌபதி கிருட்டிணரின் பக்தை ஆவாள். வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களைக் கொண்டு செராசந்தனை கொன்றவர். இந்திரப்பிரசுதத்தில், தருமன் நடத்திய ராசசூய வேள்வி மண்டபத்தில், தன்னை அவமதித்த சிசிபாலனை தனது சக்கராயுதத்தால் வென்றவர். துரியோதனின் சூதாட்ட மண்டபத்தில், தருமன் சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும் தன்னையும் மற்றும் திரௌபதியையும் இழந்து நிற்கையில், திரௌபதியின் துயிலை துச்சாதனன் நீக்கும் போது, கிருட்டிணனை சரணாகதி அடைந்த திரௌபதியின் மானத்தை காத்தவர் கிருட்டிணன். 13 ஆண்டுகால வனவாசம் முடித்த பாண்டவர்களுக்கு, சூதாட்டத்தில் இழந்த இந்திரப்பிரசுதம் நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கே திருப்பித்தர வேண்டி கௌரவர்களிடம் கிருட்டிணன் தூதுவனாக அத்தினாபுரம் சென்றவர். குருச்சேத்திரப் போரில் அருச்சுனனுக்கு பார்த்தசாரதியாக அமைந்தவர். கர்ணனின் நாகத்திர கனையிடமிருந்து அருச்சுனனை காத்தவர். இறுதிப் போரில், சைகை காட்டி துரியோதனை கொல்வதற்கு வீமனுக்கு துணை நின்றவர். அசுவத்தாமன் ஏவிய பிரம்மாத்திரத்தினால் கொல்லப்பட்ட உத்தரையின் கருப் பையில் இருந்த குழந்தை பிரிட்சித்திற்கு, கிருட்டிணர் உயிர் கொடுத்ததன் மூலம், பாண்டவர்களின் ஒரே வாரிசை காத்தருளினார்.

கிருட்டிணரின் வேறு பெயர்கள்

மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருட்டிணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருட்டிணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார்.[3]

  1. அரி - இயற்கையின் அதிபர்
  2. கேசவன் - அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
  3. சிரீதரன்இலக்குமியை மார்பில் கொண்டவன்
  4. வாசுதேவன் - அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
  5. விட்டுணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.
  6. மாதவன் - பெரும் தவம் செய்பவன்.
  7. மதுசூதனன்மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
  8. புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
  9. செனார்தனன் - தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
  10. சாத்வதன்சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல் இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;
  11. விருபாட்சணன் – "விருசபம்" என்பது "வேதங்களைக்" குறிக்கும், "இச்சணம்" என்பது "கண்ணைக்" குறிக்கும். இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், கிருட்டிணணை விருடபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
  12. அசா - எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அசா என அழைக்கப்படுகிறான்.
  13. தாமோதரன் - தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
  14. ரிடிகேசன் – "என்றும் மகிழ்ச்சி" என்பதற்கு "அரிடிகா" என்றும் "ஈசா" என்பதற்கு "ஆறு தெய்வீகப் பண்புகள்" என்றும் பொருள். இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
  15. மகாபாகு - தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மகாபாகு என அழைக்கப்படுகிறான்.
  16. அதாட்சன் - எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
  17. நாராயணன் - மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
  18. புருசோத்தமன் - ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
  19. சர்வன் - அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
  20. சத்யன் - கிருட்டிணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.
  21. சிட்டுணு - தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் சிட்டுணு என அறியப்படுகிறான்.
  22. அனந்தன் - அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
  23. கோவிந்தன் - கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.[4]
  24. அச்சுதன் - என்றும் நழுவாதவர்
  25. பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்
  26. கிருட்டிணன்ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் "கிருட்டி" மற்றும் "நித்திய அமைதி" என்பதைக் குறிக்கும் "ண" ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருட்டிணன் என்று அழைக்கப்படுகிறான். ( "கிருட்டி" என்றால் கீறுதல் என்று பொருள். "கருட்டி" என்றால் பூமி என்று பொருள், "ண" என்றால் சுகம் என்று பொருள். "கிருட்டிண" என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).
  27. மாயோன் - மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான்

கீதை

 
அருச்சுனனுக்கு, கிருட்டிணர் விராட் விசுவரூபத்தை காட்டல்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அருச்சுனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அருச்சுனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு

 
செரா எனும் வேடுவனின் அம்பால் தாக்கப்பட்ட கிருட்டிணன்

கிருட்டிணன் துவாரகையில் மனைவியான ருக்மணி முதலியவர்களுடன் வாழ்ந்து யது குலங்களின் தலைவனாக விளங்கினார். கிருட்டிண அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவான் சிரீகிருட்டிணரை வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருட்டிணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். கிருட்டிணர் ஒரு முறை பிரபாச பட்டினத்தின் காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருட்டிணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் வைகுந்தம் எழுந்தருளினார். சாம்பனுக்கு முனிவர்களின் சாபத்தின்படி யது குலங்களின் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.

ஆராய்ச்சிகள்

துவாரகை கடலில் மூழ்கியதை தொல்பொருள் ஆய்வாளர் எசு.ஆர்.ராவ் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தார். 1980 இல் துவாரகேசு கோயிலின் முன்மண்டபத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வில் அக்கோயிலுக்கு கீழே இரண்டு அத்திவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அங்கு அரப்பா நாகரீகத்தின் பிந்தைய காலத்தைச் சுட்டும் சிவப்பு நிறப்பானை ஓடுகள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன.[5] பேட்துவாரகையில் கிடைத்த கூறுகள் எவையும் ஆரிய நாகரிகத்துடன் பொருந்தவில்லையாம். அதாவது ஆரிய சார்பாளராகிய எசு.ஆர்.ராவ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அனைத்தும் சிந்து நாகரிகத்துடன் பொருந்தி போயிருந்ததாம்.

சமீபத்திய ஆராய்ச்சி

குசராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6] அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருட்டிணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் முழுவதும் கடலால் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பொ.ஊ.மு. 1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், பொ.ஊ.மு. 1100 க்கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு பொ.ஊ.மு. 1100க்கு முற்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எசு.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.[7]

கிருட்டிணரின் கோயில்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "கூட்டத்தினரை காப்பவன் கிருஷ்ணன்". Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
  2. தீபம் மே 02 2016 இதழ் பக்கம் 65
  3. கிருஷ்ணனின் பெயர்களும் பொருளும்! - உத்யோக பர்வம் பகுதி 70
  4. வைணவத் தலங்களில் கோவிந்தா கோவிந்தா என்று அழைப்பது ஏன்?
  5. இராமகிருஷ்ண விஜயம்; நவம்பர் 2007; பக்கம் 27
  6. A.S. Gaur, Sundaresh and Sila Tripati (Number 21, 2005). "ANCIENT DWARKA: STUDY BASED ON RECENT UNDERWATER ARCHAEOLOGICAL INVESTIGATIONS" (PDF). p. 77. பார்க்கப்பட்ட நாள் 06 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "History has it. Dwarka inundated by tsunami!". Times of India. Jan 4, 2005. Archived from the original on 2012-08-13. பார்க்கப்பட்ட நாள் 06 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. http://directory.krishna.com/temples

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணன்&oldid=4126836" இலிருந்து மீள்விக்கப்பட்டது