பகவத் கீதையின் சாரம்

.

குருச்சேத்திரப் போர்களத்தில் கிருஷ்ணர், அருச்சுனனுக்கு கீதை அருளுதல். படம் கி. பி., 1830
வெண்கலத் தேரில் கிருஷ்ணர் மற்றும் அருச்சுனன், குருச்சேத்திரம்

பகவத் கீதையின் சாரம் பகவத் கீதை 700 சுலோகங்களுடன், பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இது மகாபாரதம் எனும் இதிகாசத்தில், பாண்டவர் படைகளுக்கும், கௌரவர் படைகளுக்கும், குருச்சேத்திரம் எனும் இடத்தில் நடந்தகுருசேத்திரப் போரின் துவக்கத்தில், ஸ்ரீகிருஷ்ணர், அருச்சுனனுக்கு ஆத்ம உபதேசம் வழங்கும் வேதாந்த நூலாக உள்ளது. இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர்.

பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை மூன்று பகுதிகளாக (ஷட்கம்) பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் ஆறு அத்தியாயங்கள் உள்ளன. முதல் பகுதியில் (1 முதல் 6 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவனின் தத்துவம், கர்ம யோகம் மற்றும் சுயமுயற்சி குறித்து விளக்கப்படுகிறது. இரண்டாம் பகுதியில் (7 முதல் 12 வரை உள்ள அத்தியாயங்கள்) ஈஸ்வர தத்துவம், பக்தி யோகம் மற்றும் ஈஸ்வர அனுக்கிரகம் குறித்து விளக்கப்படுகிறது. மூன்றாம் பகுதியில் (13 முதல் 18 வரை உள்ள அத்தியாயங்கள்) சீவ-ஈஸ்வர ஐக்கியம் (சீவாத்மாவும் பரமாத்மாவும் என்ற அத்வைத ஞானம்), ஞான யோகம் மற்றும் நற்பண்புகள் குறித்து விளக்கப்படுகிறது.[1][2]

1 அருச்சுன விசாத யோகம் தொகு

46 சுலோகங்களைக் கொண்டுள்ளது. அருச்சுனன் தன் உறவினர்கள் மற்றும் குருமார்களுக்கு எதிராக போர் செய்வது குறித்தான தனது துயரத்தை (விசாதம்) பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் எடுத்துரைத்தலே இவ்வத்தியாயத்தின் சாரம்.

குருச்சேத்திரப் போர்களத்தில் தங்கள் பாண்டவர் படையை எதிர்த்து நிற்கும் கௌரவர்களின் படையை பார்க்க விரும்பிய அருச்சுனன், தனது தேரோட்டியும் நண்பனுமான ஸ்ரீகிருஷ்ணரிடம், தனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் நிறுத்துமாறு கூறுகிறான்.

அருச்சுனன், எதிரணியில் நிற்கும் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டனார் பீஷ்மர், போர்க்கலையை கற்றுக்கொடுத்த தனது குருவான துரோணர் ஆகியவர்களை கண்டு, போரில் இவர்களது மரணத்தை நினைத்து மனம் கலங்கி செயலற்று நின்றான்.

தன்னால் இவர்களை போரில் கொல்ல மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், போரில் எதிராளிகளை அழித்து நாட்டை திரும்ப அடைவதை விட துறவு மேற்கொள்வதே மேல் என்றும், போரில் சத்திரிய வீரர்கள் கொல்லப்படுவதால் சத்திரிய குலதர்மம் சீர் குலைந்து வர்ணக் கலப்பு உண்டாகிவிடும் என்றும், எனவே கௌரவர்கள் என்னைக் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகிவிடும் என்றும் கூறி கவலையாலும், துயரத்தாலும் தனது கையில் இருந்த காண்டீபம் எனும் வில்லை எறிந்து விட்டு, செய்வதறியாது அருச்சுனன் தேர்த் தட்டில் அமர்ந்து விட்டான்.

2 சாங்கிய யோகம் தொகு

சாங்கிய யோகம் எனில் பகவத் கீதையில் ஞான யோகம் என்று பொருள். 72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை அருச்சுனனின் சரணாகதி, ஞான யோகத்தின் அறிமுகம், கர்ம யோகம், மற்றும் சிதப்பிரக்ஞனின் (ஞானியின்) இலக்கணங்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அருச்சுனனின் சரணாகதி தொகு

உங்கள் சீடனாகிய என்னை, மனத்துயரம் மற்றும் மனக்குழப்பத்திலிருந்து காப்பாற்றுங்கள் என்று கூறி அருச்சுனன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் தன்னை ஒப்படைக்கிறான் (சரணாகதி அடைகிறான்). அதன் பின் பகவான் அருச்சுனனுக்கு குருவாக மாறி ஆத்ம உபதேசம் செய்ய முடிவு செய்கிறார்.

ஞான யோகத்தின் அறிமுகம் தொகு

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை. ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றி அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்றும் ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.

பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியவர்களின் ஆத்மா அழிவது பற்றிய கவலையா? அல்லது அவர்களின் அனாத்மா எனும் உடல் அழிவது பற்றிய கவலையா? ஆத்மாவைப் பற்றிய கவலை எனில், இந்த ஆத்மா எதனாலும் அழியக்கூடியது அல்ல என்று புரிந்து கொள். ஆனால் இந்த அனாத்மா எனும் உடல் ஒரு காலத்தில் உறுதியாக அழியக்கூடியது என்று புரிந்து கொள். உடலானது ஆத்மாவிற்கு சட்டையைப் போல், எனவே தீரன் (ஞானி) இது குறித்து கவலைப்படுவதில்லை என பகவான் அருச்சுனனுக்கு உபதேசம் செய்கிறார்.

கர்ம யோகம் தொகு

கர்ம யோக வாழ்க்கை முறையில் எதிர்மறை பலன் இல்லை. மன ஒருமுகப்பாட்டுடன் கடமைகளைச் செய்பவன் இலக்கை அடைகிறான். பலன் கருதி செய்யும் கர்மங்களை (செயல்கள்) செய்பவர்களை பகவான் இடித்துரைக்கிறார். கர்மத்தை நிந்தனை செய்து கர்ம யோகத்தை பகவான் புகழ்கிறார்.

கர்ம யோகத்தால் உனக்கு செயல்கள் (கர்மத்தை) செய்வதில் மட்டுமே தகுதி உண்டு. ஆனால் அச்செயல்கள் மூலம் கிடைக்கும் பலனில் நீ உரிமை கொண்டாட முடியாது. எனவே செயல் செய்வதிலிருந்து விலகி விடாதே. சமத்துவ நோக்குடன் கடமை ஆற்ற வேண்டும். பந்தப்படுத்தும் செயல்களை, பந்தப்படுத்தாதவாறு செய்ய வேண்டும். கர்ம யோகத்தின்படி கடமையைச் செய்பவனுக்கு மனத்தூய்மை கிட்டும்.

கர்ம யோக வாழ்வின் மூலம் மனமானது மோகம் எனும் மனக்குழப்பத்தை நீக்கி (விவேகம்), வைராக்கியம், மனத்தூய்மை எனும் பலன்களை அடைவாய். எப்போது அறிவு ஆத்மாவில் நிலை நிற்குமோ அப்போது ஞான யோகம் உண்டாயிற்று என அறிந்து கொள் என்று கிருஷ்ணர் அருச்சுனக்கு அருள்கிறார்.

ஞானியின் இலக்கணங்கள் தொகு

கர்ம யோகத்தைப் பயின்று மனத்தூய்மை அடைந்தவன், அதன் பின் ஞான யோகத்தை பயின்று ஞானத்தில் நிலை பெற்றவனை பகவான் இங்கு சிதப்பிரக்ஞன் (ஞான நிஷ்டன்) என்று ஞானியைச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.

எவன் தன்னிடத்திலேயே தான் மகிழ்வாக இருப்பவனோ அவன் (Happy with Himself) சிதப்பிரக்ஞன் அல்லது ஞானி ஆவான். தன்னை அறிந்து தன்னிடத்தில் தான் நிலை பெற்று, மனநிறைவு அடைந்தவனே சிதப்பிரக்ஞன் எனும் ஞானி ஆவான். வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை, அகிம்சை, தவம் போன்ற நற்குணங்கள் பெற்றவனையே ஞானி என்பர்.

ஞானிக்கு பகலாக இருப்பது அஞ்ஞானிகளுக்கு இருளாகும். அஞ்ஞானிகளின் பகலாக இருப்பது ஞானிக்கு இருளாகும். மரண காலத்திற்குள் இந்த ஞானத்தை ஒருவன் அடைந்து விட்டால் அவனின் உடல் அழிந்த பின்பு பிரம்ம நிர்வானம் எனும் விதேக முக்தி அடைகிறான். விதேக முக்தி அடைந்த ஞானிக்கு மறுபிறப்பு இல்லை.

3 கர்ம யோகம் தொகு

இவ்வத்தியாயம் 43 சுலோகங்கள் கொண்டது. மனிதன் செய்ய வேண்டிய செயல்களை எடுத்துரைக்கிறது. முன்பு ஞான யோகம் உயர்ந்தது கூறினீர்கள், ஆனால் தற்போது என்னை ஏன் கர்மம் (செயல்) எனும் போரில் ஈடுபடத் தூண்டுகிறீர்கள் என அருச்சுனன் கேட்க, அதற்கு கண்ணன் கர்ம யோகத்தின் சிறப்புகளை 1 கர்ம யோகம், 2 உலக வாழ்க்கை மற்றும் 3 காமத்தியாகம் (பற்று விடல்) எனும் மூன்று தலைப்புக்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.

கர்ம யோகம் தொகு

விருப்பு – வெறுப்பு இல்லாமல் ஒருவன் கடமை ஆற்ற வேண்டும். அவ்வாறு ஆற்றிய கடமையிலிருந்து பலனை எதிர்பார்த்து கொண்டு இருக்கக்கூடாது. ஒருவன் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமானால், அந்த விருப்பமான ஆசையை அனுபவிக்கும் போது, அதை பகவானின் பிரசாதமாக ஏற்றுக் கொண்டு, மற்றவர்களுடன் அந்த பிரசாதத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் ஆசையில் மூழ்கி விட மாட்டார்கள். உழைப்பு இல்லாது வரும் இன்பங்களை ஒருவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. (இலவசமாக கிட்டும் இன்பம் / பொருட்களை புறக்கணிக்க வேண்டும்).

உலக வாழ்க்கை தொகு

ஜனகர், அசுவபதி போன்ற ராஜரிஷிகள் உலக நன்மைக்காக சமூக வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் வாழ்ந்தார்கள். எனவே உலக நன்மைக்காக நீயும் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும். பகவான் தன்னையே எடுத்துக்காட்டாக கூறுகிறார். எனக்கு எதுவும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் நான் கர்ம யோகம் எனும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகிறேன். மேலும் மேலானவர்கள் எதைப் பின்பற்றுகிறார்களோ, அதையே மற்றவர்கள் பின்பற்றுவார்கள். எனவே உலக நன்மைக்காகவாவது கர்ம யோகத்தில் ஒருவன் ஈடுபடவேண்டும்.

காமத் தியாகம் தொகு

தியாகம் எனில் விட்டுவிடுதல் என்று பொருள். எனவே ஒருவன் காமத்தை (ஆசையை) தியாகம் செய்துவிட வேண்டும் (பேராசையை விட்டுவிட வேண்டும்). மனிதனின் பகைவன் அவன் மனதிலே உள்ளதன்றி வெளியே இல்லை. நமது பகைவன் நம் மனதில் உள்ள காமமே (பற்று / ஆசை). எனவே ஆசையின் இருப்பிடத்தை அறிந்தால் நமக்கு பாதி வெற்றி கிட்டிவிடும்.

ஐம்புலன்கள், மனம், புத்தி, அகங்காரம் இவற்றிக்கு மேலானது ஆத்மா. இந்த ஆத்மாவை மறைக்கும் இவைகளை வென்று, ஆசையை அழித்து விடவேண்டும். பேராசை, வெறுப்பு போன்ற காரணத்தினால் பாவம் செய்கிறான். எனவே பாவம் செய்வதிலிருந்து விடுபட வேண்டுமானால், காமத்தை (பற்று-பேராசை) தியாகம் (விட்டு விடுதல்) செய்து விடவேண்டும்ம். கர்ம யோக சாதனை மூலம் காமத்தை வெல்ல முடியும். காமத்தின் பிறப்பிடங்களான ஐம்புலன்கள், மனம்,அகங்காரம் மற்றும் புத்தியை நம் கட்டுக்குள் வைத்திருந்தால் மனத்தூய்மை அடையலாம்.

4 ஞானகர்ம சந்நியாச யோகம் தொகு

அத்தியாயத்தில் உள்ள 42 சுலோகங்களை, இறைவனின் அவதார தத்துவம், ஞான கர்ம சந்நியாசம் (ஞானம் பெற மேற்கொள்ளப்படும் சந்நியாசம்), சில சாதனைகள் எனும் மூன்று தலைப்புக்களில் பகவான் விளக்குகிறார்.

அவதார தத்துவம் தொகு

பகவத் கீதையில் இவ்விடத்தில் மட்டுமே அவதார தத்துவம் தெளிவாக விளக்கப்படுகிறது. அனைத்து சீவராசிகளின் இப்பிறப்பிற்கு, அவர்கள்/அவைகள் முற்பிறப்பில் செய்த கர்மவினைகள் (பாவ-புண்ணியம்) அடிப்படையே காரணம். ஆனால் பகவான் இவ்வுலகில் பிறப்பு எடுப்பதற்கு பாவ – புண்ணியம் காரணம் இல்லை. கர்மவினை இன்றி பகவான் பிறவி எடுப்பது அவதாரம் ஆகும். சீவராசிகள் கர்மவினைக்கு ஏற்ப பிறப்பு எடுப்பார்கள். பகவான் அவதாரம் எடுக்கும் நோக்கம், பல்வேறு காலகட்டத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதே ஆகும்.

ஞானகர்ம சந்நியாசம் தொகு

எவன் செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்கிறானோ அவன் மனிதர்களில் ஞானி ஆவான். (செயல்படுகின்றது போல் தோண்றும் கோள்களிலும், சீவராசிகளிலும் செயலின்மையும், செயல்படாமல் இருப்பதாகத் தோன்றும் ஆத்மாவில் செயலையும் ஞானி ஒருவனே காண்கிறான்). எனவே ஞானத்தினால் ஒருவன், தான் எப்போதும் செயல் செய்பவன் அல்ல என்று புரிந்து கொள்பவன் சூத்திராத்மா (மாபெரும் ஞானி) ஆவான் என்கிறார் பகவான்.

சில சாதனைகள் தொகு

ஒரு மனிதன் செய்ய வேண்டிய சாதனைகளில், விவேகம், வைராக்கியம், புலனடக்கம், மனவடக்கம், தவம், யக்ஞம், வேதாந்த சாத்திரங்களை கேட்டல், பிராணயாமம் செய்தல், சத்துவ உணவை நியமத்துடன் உண்பதுடன் ஞான யக்ஞம் செய்வது அனைத்திலும் சிறந்தது. மேலும் குருவின் மூலம் சாத்திரங்களை கேட்டு ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிரத்தையை (இடைவிடாத முயற்சி, நம்பிக்கை) மனதில் வளர்த்து கொள்வதால் ஞானத்தை அடைவது எளிது.

5 கர்ம சந்நியாச யோகம் தொகு

29 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை, இரண்டு விதமான வாழ்க்கை முறைகள், வித்வத் சந்நியாசம், ஞான சாதனைகள், ஞானத்தின் பலன்கள் எனும் நான்கு தலைப்புக்களில் பிரித்து பகவான் அருச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.

இரண்டு விதமான வாழ்க்கை முறைகள் (நிஷ்டாத்துயம்) தொகு

மனிதர்கள் பின்பற்ற வேண்டிய இல்லறம் மற்றும் துறவறம் எனும் இரண்டு விதமான வாழ்க்கை முறை குறித்து விளக்குகிறார் பகவான். இல்லற தர்மத்தை ஒருவன் நன்கு கடைப்பிடித்தால் கர்ம யோகியாவான். கர்ம யோகம் நன்கு செய்தால் மனத்தூய்மை அடைந்து ஞான யோகத்திற்கு தகுதி பெறுகிறான். அதே போல் ஒருவன் துறவற தர்மத்தை நன்கு மேற்கொண்டால் ஞான யோகி ஆவான்.

வித்வத் சந்நியாசம் தொகு

இல்லறத்தில் ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் (துறவறம்) மேற்கொள்வது விவிதிஷா சந்நியாசம் என்பர். வேதாந்த ஞானம் அடைந்த பின்பு சந்நியாசம் மேற்கொள்வதை வித்வத் சந்நியாசம் என்பர். வித்வத் சந்நியாசி உலகத்தை எவ்வாறு எவ்வாறு காண்பான் எனில் அனைத்து சீவர்களில் சம நோக்குடன் ஆத்மாவை பார்ப்பான். ஈசா வாஸ்ய இதம் சர்வம் எனும் அடிப்படையில், அனைத்து சீவர்களிடம் இறைவனை காண்பான்.

ஞான சாதனைகள் தொகு

விவேகம், வைராக்கியம், முமுச்த்துவம் (இறைவனை அறிந்து கொள்ளும் ஆர்வம்) ஆகியவைகளே ஞானத்தை அடையும் சாதனைகள் ஆகும்.

ஞானத்தின் பலன்கள் தொகு

ஞானத்தில் சாதனை அடைந்த ஞானி சீவ முக்தி எனும் மனநிறைவு பெறுகிறான். பின் தன் சட உடலை விட்டு நீங்கிய பின் (இறந்த பின்) மறு பிறப்பு இல்லாமை எனும் விதேக முக்தி அடைகிறான்.

6 ஆத்ம சம்யம யோகம் அல்லது தியான யோகம் தொகு

47 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை தியானம், யோகப் பிரஷ்டன் எனும் இரண்டு தலைப்பின் கீழ் வகுத்து வழங்குகிறார் பகவான்.

தியானம் தொகு

பகவான் தியானத்தை ஆறு பிரிவுகளில் விளக்குகிறார்.

1. பகிரங்க சாதனை :- தியான நேரத்தில் தவிர மற்ற நேரங்களில் நமது உணவு, உறக்கம், பழக்க வழக்கங்களில் கட்டுப்பாட்டுடன் சமமாக இருக்க வேண்டும். இவைகளே தியானத்தை ஒழுங்கு படுத்தும்.

2. அந்தரங்க சாதனை :- தியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவைகளான தூய்மையும் அமைதியுமான இடம், நல்ல ஆசனம் மற்றும் பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

3. தியானத்தின் வகைகள் :- 1. ஞானம் அடைவதற்கு முன்பு மனதை ஒருமுகப்படுத்தும் தியானம் 2. ஞானம் அடைந்த பின்பு நிதித்யாசனம் செய்ய வேண்டும்.

4. தியானத்தின் நன்மைகள் :- தியானத்தினால் மன அமைதி, மன ஒருமுகப்பாடு, ஈஸ்வரனை அடையத் தகுதி மற்றும் தியானத்தினால் பெற்ற ஞானத்தை நம்மில் நிலைபடுத்த இயலும்.

5. தியானத்தின் போது வரும் தடைகள் :- மனம் அலைபாய்தல் (விட்சேபம்) மற்றும் உறக்கம் (லயம்).

6. தடைகள் நீங்க வழிகள் :- வைராக்கியத்துடன் செய்யும் தியானத்தால் மேற்படி தடைகள் நீங்கும். மேலும் வேதாந்த சாத்திரங்கள் கேட்டல், படித்தல், சான்றோர்களின் கூட்டு (சத் சங்கம்) முதலியவைகளால் மனதை வெளிவிசயங்களிலிருந்து நீக்கி, நம்மிடமே வைத்துக் கொள்ள முடியும். மனத்தூய்மை கிடைக்கும் கர்ம யோகத்தை செய்து பழகிய பின்பு அதனை நீக்கி உபாசனா யோகம் எனும் தியானம் செய்ய வேண்டும்.

யோகப் பிரஷ்டன் தொகு

பஞ்ச பூதங்களில் தன்னையே பார்ப்பவன் மற்றும் தன்னில் பஞ்ச பூதங்களை பார்ப்பவனே யோகப் பிரஷ்டன் ஆவான். இந்த யோகப்பிரஷ்ட நிலையில் நழுவியவன் (யோகப்பிரஷ்டகம்) இறப்பிற்குப்பின், மறுபிறவியில் அவன் மனக்கட்டுப்பாடு, புலனடக்கம் ஆகிய நற்பண்புகளுடன் பிறப்பான். முற்பிறவியில் செய்த முயற்சிகள் வீண் போகாமல் மேல் நிலைக்கு உயர்வான்.

7 ஞான விஞ்ஞான யோகம் தொகு

முப்பது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை பகவான் 1. ஈஸ்வர தத்துவம் 2. பக்தி/பக்தன் 3. பக்தியின் மேன்மை எனும் மூன்று தலைப்புக்களில் அருச்சுனனுக்கு எடுத்துரைக்கிறார்.

ஈஸ்வர தத்துவம் தொகு

நாம் அனுபவிக்கும் இந்த உலகை பராபிரகிருதி எனும் இறைத் தத்துவமாகவும், அபராபிரகிருதி எனும் சடமான தத்துவமாகவும் பகவான் இரண்டாகப் பிரிக்கிறார். இந்த உடல், உலகை அறியும் சடப்பொருளாக உள்ளது. இந்த சட தத்துவமும் (அபராபிரகிருதி), இறைத்தத்துவமும் (பராபிரகிருதி) நானே என அறிமுகப்படுத்துகிறார் பகவான். பராபிரகிருதி என்பது மேலான, நிலையான, சத்தியமான இறைத்தத்துவம் ஆகும். அபராபிரகிருதி என்பது கீழான நிலையற்ற சடதத்துவம் ஆகும். சடதத்துவம் மாயையின் வசத்திற்குட்பட்டது. மேலும் இது நிலையற்றதும் அழியக்கூடியதும் ஆகும் (மித்யா). இந்த மாயை பகவானின் வெளிப்பாடே என்று ஈஸ்வர தத்துவத்தை கண்ணன் விளக்குகிறார்.

பக்தி / பக்தன் தொகு

பகவான் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார். மேலும் செம்மையான மனம் இல்லாதவர்கள் பகவானை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார். பகவானை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார். 1. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள். 2. ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள். 3. பகவானையே அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள். 4. பகவானை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன். இந்த ஞானி பக்தனே அனைத்து பக்த்ர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.

பக்தியின் மேன்மை தொகு

பகவானின் மாயையை யாராலும் வெல்ல முடியாது. பகவானை சரணாகதி அடைந்து பக்தி செலுத்துபவன் மாயையை (அறியாமையை) கடக்க பகவான் அருள் புரிகிறார். எவரேவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ அவரவர்களின் கோரிக்கையை பகவான் நிறைவேற்றுகிறார். பகவானுக்கு எந்த பக்தனிடத்திலும் விருப்பு - வெறுப்பு இல்லை. மேலும் பகவானை அறிவது எளிதல்ல. பகவான் அனைத்தையும் அறிபவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது. சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு - வெறுப்புகளுடன் உள்ளான். இது சீவர்களின் இயற்கை குணமாகும். பிறகு எவர்கள் இந்த விருப்பு - வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு, அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம், அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள் என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் எனும் (வீடுபேறு) அடைகிறார்கள்.

8 அட்சர பிரம்ம யோகம் தொகு

இருபத்தி எட்டு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தை மூன்று தலைப்புகளில் விளக்கப்படுகிறது. 1. அருச்சுனனின் கேள்வியும், பகவானின் பதிலும் 2. மரண காலத்தில் பகவானை நினைத்தல் 3. மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்).

அருச்சுனனின் கேள்வியும் பகவானின் பதிலும் தொகு

அழியாத பொருள் (வஸ்து) எது? என்ற அருச்சுனனின் கேள்விக்கு பகவான், அழியாத பொருள் பிரம்மம் ஒன்றே என பதில் அளிக்கிறார். பிரம்மத்தின் தன்மையான ஜீவாத்மாவை அத்யாத்மம் என்பர். மேலும் தோன்றுவது, அழிவது என்ற தன்மையுடன் கூடியவை அனைத்தும் அதிபூதம் ஆகும். படைக்கும் தொழில் செய்யும் நான்முக பிரம்மாவை அதிதைவம் ஆவார். சீவர்களில் பிரம்ம சைதன்யம் எனப்படும் ஞானமாக நானே அந்தர்யாமி உருவில் அதியக்ஞம் ஆக இருக்கிறேன்.

மரண காலத்தில் பகவானை எவ்வாறு நினைப்பது தொகு

மரண காலத்திற்கு முன்பும், மரண காலத்திலும் தொடர்ந்து பகவானை நினைத்து தியானிப்பவனுக்கு, அதன்படி அந்த சீவனுக்கு மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பகவான் நாமத்தை என்றும் நினைத்துக் கொண்டே இறப்பவன் பகவானை அடைகிறான்.

ஒருவன் வாழ்க்கை முழுவதும் எதை நினைத்துக் கொண்டு இருந்தானோ, அதையே மரணகாலத்திலும் நினைப்பான். எனவே உடல்நிலை நன்கு இருக்கும் போது, எல்லா காலத்திலும் பகவான் நாமத்தை தியானித்துப் பழகியவன்தான் மரணகாலத்திலும் பகவானை நினைப்பான்.

கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து மறுபிறப்பில்லா பேற்றை அடைகிறான். எனவே பகவானை அடைந்தவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுதான் பகவானின் இருப்பிடம்.

மரணத்தின் இரண்டு வழிகள் (மார்க்கத்துயம்) தொகு

எந்த காலத்தில் (வழியில்) உடலை நீத்துவிட்டுச் செல்கின்ற யோகியர் மீண்டும் பிறவியிலா பெரு வாழ்வையும், மேலும் எந்த வழியில் செல்கின்ற யோகிகள் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையையும் (மறுபிறப்பு எனும் நிலையும்) அடைகிறார்கள் என்பது குறித்து பகவான் விளக்குகிறார். மரணத்திற்கு ஒன்று உத்தராயணம், மற்றது தட்சிணாயனம் எனும் இரண்டு வழிகள் உள்ளது. உத்தராயன காலத்தில் இறப்பவர்கள் சுக்கில கதியில் (வழியில்) பிரம்மலோகத்திற்கும் (மறுபிறவி இல்லா நிலை), தட்சிணாயன காலத்தில் இறப்பவர்கள் கிருஷ்ண கதியில் சொர்க்க லோகத்திற்கும் (மீண்டும் பிறவி எடுப்பது) செல்வார்கள்.

9 ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் தொகு

முப்பத்தி நாலு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாத்தில் இரண்டு முக்கிய கருத்துக்களை பகவான் விளக்குகிறார். 1 ஈஸ்வரத் தத்துவம். 2 பக்தி. இந்த தத்துவம் அனைத்து அறிவைக் காட்டிலும் மேலான அறிவு என்றும், அனைத்து இரகசியங்களில் மேலான இரகசியம் என்றும் பகவான் கூறுகிறார்.

ஈஸ்வரத் தத்துவம் தொகு

அபரா பிரகிருதி எனும் பிரபஞ்சம் (மாயை), பரா பிரகிருதி எனும் ஈஸ்வரனை சார்ந்து உள்ளது. ஆனால் பரா பிரகிருதியான ஈஸ்வரன் மாயையை (அபரா பிரகிருதி) சார்ந்து இல்லாதவன். அபரா பிரகிருதி எனும் இந்த பிரபஞ்சம் பொய்த் தோற்றம் கொண்டது. இந்த பிரபஞ்சம் மற்றும் சீவர்கள் இருப்பது போல் தோற்றமளித்தாலும், அழியும் தன்மை கொண்டதுவே. இந்த மாயையான பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரனே காரணம். ஈசுவரன் எதனுடனும் தொடர்பு அற்ற தன்மையுடயவன். ஈஸ்வரன் எந்த செயலையும் செய்வதில்லை, செயலின் விளைவுகளையும் அனுபவிப்பது இல்லை. (ஈஸ்வரன் அகர்த்தா / அபோக்தா). எனவே ஈசுவரன் உதாசீனன் ஆக உள்ளார்.

பக்தி தொகு

எவ்வித பலனை எதிர்பாராது பகவானிடம் முழு மனதுடன் பக்தி செலுத்துவது “ அநன்ய பக்தி “ ஆகும். இவ்வாறு பக்தி செலுத்தி பகவானையே சரணாகதி அடைந்த பக்தர்களை காப்பது எனது கடமை என பகவான் உறுதிமொழி தருகிறார். மேலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துவது பக்குப்படாத பக்தி என்று இடித்துரைக்கிறார் பகவான்.

எவரெவர் எந்த நோக்கத்துடன் பகவானிடம் பக்தி செலுத்துகிறார்களோ, அவரவர் கோரிக்கைகயை பகவான் நிறைவேற்றுகிறார். பகவானுக்கு எந்த பக்தர்களிடம் விருப்பு - வெறுப்பு இல்லை. பகவானை அறிந்து கொள்வது அரிது. பகவான் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் சீவர்கள் பகவானை அறிய இயலாது.

இயற்கையாக சீவர்கள் பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு - வெறுப்பு உணர்வுகளுடன் இருப்பதால், அச்சீவர்கள் பகவானை அறிது கடினம். பிறகு எவர்கள் அத்யாத்மம், அதிபூதம், அதிதெய்வம், அதியக்ஞம் என்ற தத்துவங்களை அறிகிறார்களோ அவர்களே இருமைகளிருந்து விடுபட்டு பகவானிடம் பக்தி செலுத்தி வீடுபேறு எனும் விதேக முக்தி அடைகிறார்கள்.

எனவே சீவர்கள் பகவானையே மனதில் கொண்டு வழிபட்டு, பகவானுக்காவே அனைத்து நற்செயலகளையும் செய்ய வேண்டும்.

10 விபூதி யோகம் தொகு

நாற்பத்தி இரண்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் ஈஸ்வர தத்துவம், பக்தி, ஈஸ்வரனின் விபூதி (மகிமை, பெருமை) விளக்குகிறது.

ஈஸ்வர தத்துவம் தொகு

ஈஸ்வர தத்துவத்தை பகவான் அத்தியாயம் 10, 13, 14 மற்றும் 15-இல் விளக்கியுள்ளார்.

பக்தி தொகு

பக்தி குறித்து பகவான் 12வது அத்தியாயத்தில் விளக்கியுள்ளதை காண்க.

ஈஸ்வர விபூதி (மகிமைகள், பெருமைகள்) தொகு

சீவராசிகள் மற்றும் பிரபஞ்ச படைப்பிற்கு பகவானே காரணமாகவும் காரியமாகவும் உள்ளார். (எவ்வாறு பானைக்கு களிமண் உபாதான காரணமோ அவ்வாறே பகவானின் உடல் இந்த பிரபஞ்சமாகவும், சீவராசிகளாகவும் வெளிப்பட்டுள்ளது). மேலும் பகவான் தான் சிறப்பாக எதுவாக உள்ளார் என்று தனது பெருமைகளை கீழ்கண்டவாறு உரைக்கிறார்.

 1. அதிதியின் மகன்கள் பன்னிருவர்களில் விஷ்ணுவாகவும்
 2. ஒளிர்பவைகளில் சூரியனாகவும்
 3. 49-வாயு தேவர்களில் தேஜஸ் ஆகவும்
 4. நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனாகவும்
 5. வேதங்களில் சாம வேதமாகவும்
 6. தேவர்களில் இந்திரனாகவும்
 7. பொறிபுலன்களில் மனமாகவும்
 8. உயிரினங்களுள் உணர்வாக - ஞான சக்தியாகவும்
 9. 11- ருத்திரர்களில் பரமசிவனாகவும்
 10. யட்ச - இராட்சசர்களுல் செல்வத்திற்கு தலைவனான் குபேரனாகவும்
 11. அஷ்டவசுக்களில், அக்னியாகவும்
 12. சிகரமுடைய மலைகளுல் சுமேரு மலையாகவும்
 13. புரோகிதர்களில் பிரகஸ்பதியாகவும்
 14. படைத்தலைவர்களில் ஸ்கந்தனாகவும்
 15. நீர்நிலைகளுல் கடலாகவும்
 16. மகரிஷிகளுல் பிருகு மகரிஷியாகவும்
 17. சொற்களுல் ஒரெழுத்தான ஓங்காரமாகவும்
 18. வேள்விகள் அனைத்துள்ளும் ஜெபமாகிய யக்ஞமாகவும்
 19. அசையாப் பொருட்களுல் இமயமலையாகவும்
 20. மரங்களுல் அரசமரமாகவும்
 21. தேவரிஷிகளில் நாரதர் ஆகவும்
 22. கந்தர்வர்களில் சித்ரரதன் ஆகவும்
 23. சித்தர்களுல் கபிலர் ஆகவும்
 24. குதிரைகளுல் அமுதத்துடன் தோண்றிய உச்சைச்சிரவம் ஆகவும்
 25. யாணைகளுல் ஐராவதம் ஆகவும்
 26. மனிதர்களுல் அரசன் ஆகவும்
 27. போர்க்கருவிகளுல் வஜ்ராயுதம்ஆகவும்
 28. பசுக்களுல் காமதேனு ஆகவும்
 29. சாத்திர முறையில் மகப்பேற்றுக்கு காரணமான மன்மதன் ஆகவும்
 30. சர்பப்ங்களுல் சர்ப்பராஜனான வாசுகியாகவும்
 31. நாகங்களுல் ஆதிசேஷன் ஆகவும்
 32. நீர் வாழ்வனவற்றிற்கும் நீர் தேவதைகளுக்கும் தலைவனான வருணன் ஆகவும்
 33. பித்ரு தேவதைகளுல் அர்யமா என்ற பித்ரு தேவதையாகவும்
 34. அடக்கி ஆள்பவர்களுல் யமன் ஆகவும்
 35. தைத்தியர்களுல் பிரகலாதன் ஆகவும்
 36. காலம் கணிப்பவர்களுல் காலமாகவும்
 37. விலங்குகளில் சிங்கமாகவும்
 38. பறவைகளுல் கருடனாகவும்
 39. தூய்மைப்படுத்துபவர்களுல் காற்றாகவும்
 40. ஆயுதம் தாங்கியவர்களுல் இராமன் ஆகவும்
 41. மீன் இனங்களுல் முதலையாகவும்
 42. ஆறுகளுல் பாகீரதியாகவும்
 43. படைப்புகளின் துவக்கமாகவும், முடிவாகவும், நடுவாகவும்
 44. வித்தைகளுல் பிரம்ம வித்தை எனும் ஆத்ம வித்தையாகவும்
 45. தர்க்கம் செய்பவர்களுடைய தத்துவத்தை தீர்மானிப்பவனாகவும்
 46. எழுத்துக்களுல் அகாரமாகவும்
 47. தொகைகளுல் உம்மைத் தொகை ஆகவும்
 48. காலங்களுக்கெல்லாம் காலமாகவும்
 49. அனைத்துப் புறங்களிலும் முகங்கள் கொண்ட விராட் விஸ்வரூபனாகவும்
 50. அனைத்தையும் காத்து பேணுபவனாகவும்
 51. எல்லாவற்றையும் அழிக்கின்ற மரண தேவனாகவும்
 52. இனி படைக்கப்படுபவைகளுக்கும் காரணமாகவும்
 53. மாதர்களுல் கீர்த்தி தேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், வாக் தேவியாகவும், ஸ்ம்ருதி தேவியாகவும், மேதா தேவியாகவும், த்ருதி தேவியாகவும், சமா தேவியாகவும்
 54. கானம் செய்யத் தக்க வேதப் பகுதிகளுல் பிருகத் சாமம் எனும் சாம வேதப் பகுதியாகவும்
 55. சந்தங்களுல் காயத்ரீ சந்தமாகவும்
 56. மாதங்களுல் மார்கழி மாதமாகவும்
 57. பருவங்கள் ஆறினுள் வசந்த காலமாகவும்
 58. வஞ்சகர்களுல் அவர்களது சூதாட்டமாகவும்
 59. திறமை படைத்தவர்களுடைய திறமையாகவும்
 60. வெற்றி கொள்பவரது வெற்றியாகவும்
 61. தீர்மானம் செய்யும் சக்தி உள்ளவர்களின் தீர்மானமாகவும்
 62. சாத்வீக குணம் படைத்வர்களிடம் சத்துவ குணமாகவும்
 63. யாதவர்களில் வாசுதேவனாகவும்
 64. பாண்டவர்களுல் அருச்சுனன்ஆகவும்
 65. முனிவர்களுல் வேத வியாசர் ஆகவும்
 66. கவிஞர்களுல் சுக்ராச்சாரியர் ஆகவும்
 67. அடக்குபவர்களுல் அடக்கும் சக்தியாகவும்
 68. வெற்றி பெற விரும்புபவர்களின் நியாய உணர்வாகவும்
 69. மறைத்து வைக்கப்பட வேண்டியவற்றைக் காப்பாற்றும் மௌனமாகவும்
 70. ஞானிகளுடைய தத்துவ ஞானமாகவும் இருக்கிறேன்
 71. எல்லா உயிரினங்கள் தோண்றுவதற்கு எது விதையோ அதுவும் நானாகவும்
 72. எது எது சிறப்புடையதோ, ஒளியுடையதோ, சக்தி படைத்ததோ, அந்த அந்த பொருட்கள் எல்லாம் என்னுடைய ஒளியின் ஒரு பகுதியின் வெளிப்பாடே என்று அறிந்து கொள்.
 73. இந்த அனைத்துலகையும் எனது யோக சக்தியின் ஒர் அம்சத்தினால் தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

11 விஸ்வரூப தரிசன யோகம் தொகு

 
பகவான் அருச்சுனனுக்கு விசுவரூப தரிசனம் காண்பித்தல்

இவ்வத்தியாம் 55 சுலோகங்கள் கொண்டுள்ளது. விசுவரூப தரிசன யோகம் நான்கு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது. 1 அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல். 2 சஞ்சயன் விஸ்வரூப தர்சனம் செய்தல். 3 அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல். 4 அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள்.

அருச்சுனனுக்கு ஞானக்கண் வழங்குதல் தொகு

பகவானாகிய நீங்கள் (ஸ்ரீகிருஷ்ணர்) அனைத்துமாக உள்ளதாக விபூதி யோகத்தில் கூறினீர்கள். அனைத்துப் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகளாக, நீங்களாகவே உள்ள உங்களது விஸ்வரூப காட்சியை எனக்கு காட்ட வேண்டும் என அருச்சுனன் பகவானிடம் வேண்டினான். பகவானும், எனது விஸ்வரூபத்தை உனது ஊனக்கண்ணால் பார்க்க இயலாது, அதனால் நான் உனக்கு அருளும் ஞானக்கண் மூலம் எனது விஸ்வரூபத்தை பார் எனக் கூறி அருச்சுனனின் மனதில் உள்ள விருப்பு - வெறுப்புக்களை நீக்கி ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்குகிறார்.

சஞ்சயன் விஸ்வரூப தரிசனம் செய்தல் தொகு

குருச்சேத்திரப் போர்க்களக் காட்சிகளை அத்தினாபுரம் அரண்மனையில் இருந்தவாறே கண்டு அதை திருதராட்டிரனுக்கு எடுத்துச் சொல்ல வியாச முனிவர் சஞ்சயனுக்கு ஞானக்கண் (தெய்வீக பார்வை) வழங்கியமையால், சஞ்சயன் பகவானின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு அதை திருதராட்டிரனுக்கு விளக்கிக் கூறினார்.

அருச்சுனன் விஸ்வரூப தரிசனம் செய்தல் தொகு

 
அருச்சுனனுக்கு கிருஷ்ணர் தனது விராட் விஸ்வரூபத்தை காட்டல்

ஆயிரக்கணக்கான சூரிய ஒளியால் மின்னும் பகவானின் ஆயிரக்கணக்கான முகங்கள், கண்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்களுடன் கூடிய கைகளைக் கொண்ட விராட் விஸ்வரூபத்தை தரிசனம் செய்த அருச்சுனன், பகவானின் பெருமைகளை பலவாறு பேசி வர்ணிக்கிறான்.

அருச்சுனனின் மனதில் ஏற்பட்ட உணர்வுகள் தொகு

பகவானின் விஸ்வரூபக்காட்சியை கண்ட அருச்சுனனுக்கு மனதில் மூன்று விதமான உணர்வுகள் ஏற்பட்டது. 1 ஆச்சரியம் (பார்காததைப் பார்த்தல்). 2 ஞானம் இல்லாமையால் பயம் எனும் உணர்வு அருச்சுனனுக்கு ஏற்பட்டது. விஸ்வரூப காட்சியில் பகவானின் செயல்களைப் பார்த்து அருச்சுனன் திகில் அடைகிறான். பகவானின் அழிவுத் தத்துவத்தை தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமையும் பயத்திற்கு காரணம் ஆயிற்று. பகவானின் விராட் விஸ்வரூப தர்சனத்தை தன்னில் வேறாக பிரித்துப் பார்த்ததால் அருச்சுனனுக்கு இந்த பயம் உண்டாயிற்று. 3 பயந்த அருச்சுனன் பகவானிடம் மீண்டும் பழைய நிலைக்கே காட்சி அளிக்க வேண்டுகிறான். பகவானும் விராட் விஸ்வரூப காட்சியிலிருந்து மீண்டும் ஸ்ரீகிருஷ்ணராக அருச்சுனனுக்கு காட்சி அளிக்கிறார். பகவான் அருச்சுனனைப் பார்த்து பயப்படாதே என்று கூறிய பின்பு அருச்சுனனுக்கு பகவான் மீது பக்தி ஏற்படுகிறது. மேலும் அருச்சுனன், பகவானிடம் நான் உங்களை ஒரு நண்பனைப் போல் பேசி அவமதித்து விட்டேன். அதனால் என்னை மன்னித்தருள வேண்டுகிறான் அருச்சுனன். பகவானிடம் இடைவிடாத பக்தி செலுத்துதல் மற்றும் யாரிடமும் பகைமை பாராட்டாமை போன்ற நற்குணங்கள் உள்ளவர்களே இது போன்ற விஸ்வரூப காட்சியை காண இயலும், மற்றவர்களால் இக்காட்சியை எளிதில் பார்க்க இயலாது என்று பகவான் அருச்சுனனுக்கு அருளினார்.

12 பக்தி யோகம் தொகு

இருபது சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை இரண்டு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது. 1 பக்தியின் ஐந்து நிலைகள் மற்றும் பக்தி யோகத்தின் பலன்கள். 2 பரா பக்தனின் இலக்கணம்.

பக்தி யோகத்தின் ஐந்து நிலைகள் தொகு

 1. மாயை நீக்கிய பிரம்ம தத்துவத்தை புரிந்து கொண்டு பகவானை தியானிப்பது நிர்குண பக்தியாகும் (அருவ வழிபாடு).
 2. அனைத்து பிரபஞ்சத்தை ஈஸ்வரனாகவே கருதி பகவான் மீது பக்தி செலுத்துவது விராட் பக்தியாகும் (இயற்கையை வழிபடுதல்).
 3. தனக்கு பிரியமான உருவமுள்ள தெய்வத்தை தியானிப்பது, இஷ்ட தேவதா பக்தியாகும் (உருவ வழிபாடு).
 4. கர்ம யோகத்தை செய்து கொண்டே ஈஸ்வரனிடம் பக்தி செலுத்துவது.
 5. சில பக்தர்களின் மனது ஆசையால் நிரம்பியுள்ளதால், எல்லா செயல்களையும் பகவானின் பிரசாதம் என்ற உணர்வுடன் போகங்களை அனுபவித்துக் கொண்டே பகவானிடம் பக்தி செலுத்துதல்.

பக்தி யோகத்தின் பலன்கள் தொகு

பரா பக்தனின் இலக்கணம் தொகு

முதல் நிலையில் உள்ள நிர்குண பிரம்மத்தை உணர்ந்தவர்களே பரா (மேலான) பக்தர்கள். வேத வேதாந்த சாத்திரங்கள் துணையுடன் குருவின் மூலம் பிரம்மத்தை உணர்ந்த ஞானியே பகவானின் பராபக்தன் ஆவான். பராபக்தன் எவர்களையும் வெறுக்காதவன், என்றும் சமத்துவ குணத்துடன் விளங்குபவன். அவனே எனது பிரியமான பக்தன் ஆவான்.

13 சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம் தொகு

34 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை 1 சேத்திரம் (உலகம், உடல்கள்), 2 சேத்திரக்ஞன் (பகவான்), 3 புருஷன், 4 பிரகிருதி, 5 ஞானம், 6 நேயம் எனும் ஆறு தலைப்புகளில் விவரிக்கப்படுகிறது.

சேத்திரம் தொகு

விளைநிலத்திற்கும், பூமிக்கும் சேத்திரம் என்பர். பகவான் அகிலப் பிரபஞ்சத்தையே சேத்திரம் என்று கூறுகிறார். மனித சட உடலையும் பகவான் சேத்திரம் என்று கூறுகிறார்.

சேத்திரக்ஞன் தொகு

இந்த உடலை சேத்திரம் என்று அறிபவன் சேத்திரக்ஞன் ஆவார். சேத்திரக்ஞன் ஆகிய நான், ஈஸ்வரன் என அறிந்து கொள்ள வேண்டும். ஆத்மாவை ஈஸ்வரனாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆத்மா அனைத்து உடலுக்குள் இருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும் சேத்திரக்ஞனை நான் என்று அறிந்து கொள்ள வேண்டும். சேத்திரக்ஞன் அனைத்து உயிரினங்களில் சாட்சியாக அறிமுகப்படுத்துகிறார் பகவான். இதுவே அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் ஆகும். சேத்திரத்தையும் சேத்திரக்ஞனையும் ஐக்கியப்படுத்துகிறார் (சீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஐக்கியப்படுத்துகிறார்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

புருஷன் தொகு

சேத்திரக்ஞன் மற்றும் ஆத்மா ஆகிய சொற்கள் ”புருஷன்” என்பதைக் குறிக்கிறது. அனைத்தும் ஒரே பொருளைத் தரும் சொல். புருஷன் இந்த உடலில் இருப்பதால், உடல் சுக - துக்கங்களை அனுபவிக்கிறது.

பிரகிருதி தொகு

பிரகிருதி எனும் சொல் மாயையைக் குறிக்கிறது. காரணப் பிரபஞ்சம் இவ்வுலகம், காரியமான பிரபஞ்சம் மாயை; மாயையிலிருந்து வெளிப்பட்ட இந்த பிரபஞ்சமே பிரகிருதி எனப்படும்.

ஞானம் அடைய வழிகள் தொகு

ஞானம் என்பது சாதாரனமாக மனதில் தோன்றும் அறிவைக் குறிக்கும். ஞானத்தை அடைய இருபது சாதனைகள் செய்ய வேண்டும் என பகவான் அருள்கிறார்:

1 தற்பெருமையின்மை 2 தன்னிடமில்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை 3 எந்த உயிரினத்தையும் எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல் 4 சுக-சுக்கங்களை பொறுத்துக் கொள்ளுதல் 5 மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை 6 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பெரியோர்களுக்குப் சேவை செய்தல் 7 உள்ளும் புறமும் தூய்மையாக இருத்தல் 8 உள்ளத்தின் உறுதி 9 மனம் மற்றும் ஐம்புலன்களோடு கூடிய உடலை கட்டுப்படுத்துதல் 10 இவ்வுலக இன்பங்களில் பற்று அற்ற தன்மை 11 அகங்காரம் இல்லாமை 12 பிறப்பு - இறப்பு, மூப்பு, நோய் இவைகளை சிந்தித்தல் 13 மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் தன்னுடையது என்ற எண்ணமின்மை (மமகாரமின்மை) 14 வேண்டியன - வேண்டாதனவாற்றை அடையும் போதும் எப்போதும் சமபாவனையுடன் இருத்தல் 15 யோகத்தின் மூலம் பிறழாத பக்தி 16 தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு 17 உலகியலில் ஈடுபாடு கொண்டவர்களிடம் விலகி இருத்தல் 18 அத்யாத்ம ஞானத்தில் என்றும் நிலைத்து நிற்றல் 19 தத்துவஞானப் பொருளான பரமாத்மாவையே தியானம் செய்தலே ஞானம் என்றும் 20 எது அதனில் மாறுபட்டதோ, அது அஞ்ஞானம் எனும் அறியாமை என்று தெரிந்து கொள்வதே ஞானத்தை அடையும் வழிகளாகும்.

நேயம் தொகு

நேயம் எனில் நம்மால் அறியப்படுவது எனப் பொருள். எது அறிவதற்கு தகுதி உடைய விஷயம் எனில் பிரம்மம் ஒன்றே.

14 குணத்திரய விபாக யோகம் தொகு

27 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தில் புருஷன் மற்றும் பிரகிருதி விளக்கப்பட்டு, பின் மாயையின் சத்துவம், ராஜசம் மற்றும் தாமசம் எனும் முக்குணங்களை விளக்குகிறார். மேலும் முக்குணங்களை கடந்த குணாதீதனின் இலக்கணத்தையும் உரைக்கிறார். முக்குணங்களைப் பற்றிய ஐந்து கருத்துக்களை கீழ்கண்டவாறு பகவான் விளக்குகிறார்.

முக்குணங்களின் இலக்கணம் தொகு

சத்வகுண இலக்கணம்:- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.

சத்துவ குணப் பலன்கள்:- சத்துவ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களை அனைத்தும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி (முக்தி) மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.

இராட்சத குண இலக்கணம், ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் இராட்சத குணமாகும்.

இராட்சத குணப் பலன்கள்:- இராட்சத குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.

தாமச குண இலக்கணம்:- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

தாமச குணப் பலன்கள்:- தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.

முக்குணங்களால் பந்தப்படுதல் தொகு

சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச குணங்கள் மனிதர்களை எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்பதை விளக்குகிறார்.

லிங்கம் (அடையாளம்) தொகு

முக்குணத்தை எவ்வாறு அடையாளம் (லிங்கம்) காண்பது என்று பகவான் விளக்குகிறார்.

பலன்கள் தொகு

தாமச குணம் சோம்பல் மற்றும் மயக்கத்தையும், இராட்சத குணம் கோபத்தையும் மற்றும் துக்கத்தையும், சத்துவ குணம் அறிவு மற்றும் ஆனந்தத்தையும் வழங்கும்.

வழி (கதி) தொகு

இம் முக்குணங்கள் கொண்டவர்கள் இறந்த பின் மறு பிறவியில், தாமச குணம் உடையவர்கள் மூடர்களிடத்திலும், இராட்சத குணம் உடையவர்கள் செயல் திறன் மிக்கவரிடத்திலும், சத்துவ குணம் உடையவர்கள் ஞானம் அறிந்தவர்களிடம் பிறக்கிறார்கள்.

முக்குணங்களைக் கடந்த குணாதீதனின் இலக்கணம் தொகு

தாமசம், ராஜசம் மற்றும் சத்வம் எனும் முக்குணங்களைக் கடந்தவனே குணாதீதன் {ஞானி}ஆவான். குணாதீதன் அறிவு ஒளியாக, அனைத்துப் பொருட்களில் சமத்துவ நோக்குடன், வெறும் சாட்சியாக மட்டும் விளங்குவான்.

15 புருசோத்தம யோகம் தொகு

இருபது சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் பகவான் அருள்கிறார். 1 சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை. 2 பிரம்மமே அனைத்துமாக இருத்தல். 3 பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல்.

சம்சாரத்தின்/உலக துயரத்தின் வர்ணனை தொகு

உபநிடதங்களில் வாழ்க்கைத் துயரத்தினை வர்ணித்துள்ளது. பிரம்மத்திலிருந்து தோண்றிய பிரபஞ்சம் எப்போதும் காணப்படுவது போல் தோண்றினாலும், அது ஒரு காலத்தில் அழியக்கூடியேதே (மித்யா). ஒருவனுக்கு உண்மையாக தெரியக்கூடிய பொருள், பொதுவான உண்மை அல்ல. துயரம் காலத்திற்குட்பட்டது. பிரம்மம் மேலானது. துயரம் / சம்சாரம் எனும் மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அந்த கண்ணுக்கு தெரியாத வேர்களே மரத்தினை காக்கிறது. அதுபோல் கண்ணுக்கு தெரியாத பிரம்மம் சாதாரணமான கண்களுக்கு தெரிவதில்லை. சம்சாரம் எனும் துயரமான மரத்தை வெட்ட வைராக்கியம், பற்றின்மை எனும் கோடாரியால் மட்டுமே வெட்ட இயலும். அவ்வாறு செய்தால்தான் முக்தி எனும் மோட்சம் கிடைக்கும். பக்தி யோகம் எனும் சாதனையால் பிரம்மத்தியானம் செய்து வீடுபேறு அடையவேண்டும்.

பிரம்மமே அனைத்துமாக உள்ளார் தொகு

சீவனின் தன்மை விளக்கப்படுகிறது. பிரம்மம் சீவ வடிவாகவும், சூரிய - சந்திரர்களின் ஒளியாகவும் உள்ளது. வயிற்றில் அக்னியாக இருந்து உணவை ஜீரணிக்கும் சக்தியாகவும் பிரம்மம் உள்ளது.

பிரம்மத்திற்கு புருசோத்தமன் எனப் பெயரிட்டு விளக்குதல் தொகு

புருசோத்தமன் எனில் எல்லோரையும்விட மேலானவர் என்று பொருள். உத்தமபுருஷனே புருசோத்தமன். புருஷனை சர, அட்சர புருஷன் என்று பிரித்து பகவான் விளக்குகிறார். சர புருஷன் எனில் அழிகின்ற பிரபஞ்சத்தைக் குறிக்கும். அட்சர புருசன் எனில் இங்கு மாயையைக் குறிக்கும். உத்தமபுருஷன் எனில் பிரம்மத்தைக் குறிக்கும்.

16 தெய்வ அசுர சம்பத் விபாக யோகம் தொகு

இருபத்தி நாலு சுலோகங்களுடன் கூடிய இவ்வத்தியாயத்தில், 1 தெய்வீக சம்பத் (நற்பண்புகள்). 2 அசுர சம்பத் (தீய குணங்கள்) எனும் இரு தலைப்புக்களில் விளக்கப்படுகிறது.

தெய்வீக சம்பத் (நற்பண்புகள்) தொகு

1 மனம், மொழி, மெய் இவற்றால் எவர்க்கும் எவ்விதமான தீங்கும் செய்யாமை. 2 மனமறிந்த உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தல். 3 செயல்களை செய்யும் போது, இது நான் செய்கிறேன் எனும் இறுமாப்பின்மை, 4 கோபமின்மை, 5 மனதை அலைபாயாமல் நமது கட்டுக்குள் கொண்டு வந்து அமைதியாக இருத்தல், 6 பிறறை பழியாமை, குறை கூறாமை 7 புலன் நுகர்பொருட்களில் பற்றின்மை, 8 உயிரினங்களிடம் பரிவு, 9 பொலிவு, 10 பொறுமை, 11 மனஉறுதி, 12 புறத்தூய்மை, 13 பகைமை பாராட்டாமை மற்றும் 14 கர்வம் கொள்ளாமை போன்ற இந்த நற்குணங்கள் அனைத்தும் தெய்வீக குணங்கள் (சம்பத்துக்கள்) என்று பகவான் கூறுகிறார்.

அசுர சம்பத் (தீய குணங்கள்) தொகு

பேராசை எனும் காமம், கோபம், பகட்டுத்தனம், ஆடம்பரம், தற்பெருமை, இறுமாப்பு, வெறுப்புணர்வு போன்ற தீய குணங்கள் படைத்தவர்களே அசுர குணம் (சம்பத்) உடையவர்கள். இவர்கள் காமம், கோபம், பேராசை எனும் நரகத்தின் மூன்று வாயில் வழியாகச் செல்வார்கள். எனவே செய்யத்தக்கச் செயல்கள், செய்யத் தகாத செயல்கள் என்று எவைகள் சாத்திரங்கள் கூறியுள்ளதோ அதன்படி நமது செயல்கள் அமைய வேண்டும்.

17 சிரத்தாத்திரய விபாக யோகம் தொகு

இருபத்தி எட்டு சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயம் மூன்று சிரத்தைகளை (நம்பிக்கைகள்) இரண்டு தலைப்புகளில் விளக்கப்படுகிறது. 1 சிரத்தையின் பண்புகள் விளக்கப்படுகிறது. 2 ஓம் தத் சத் என்பதன் பொருள் விளக்கப்படுகிறது.[3]

சிரத்தையின் (நம்பிக்கை) பண்புகள் தொகு

மனிதர்களுக்குள் முக்குணங்களுடன் கூடிய சிரத்தைகள் (நம்பிக்கைகள்) உண்டு. அவை சத்துவ குண சிரத்தை, ரஜோகுண சிரத்தை மற்றும் தாமசகுண சிரத்தை ஆகும். எந்த மனிதன் எந்த சிரத்தையுடன் கூடியவனோ, அவன் அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே. சத்வ குணத்துடன் கூடிய சிரத்தையே இறைவன் விரும்புவார்.

சத்துவ குணம் நிறைந்த மக்கள் தேவர்களையும், ரஜோ குணமுடையவர்கள் யட்சர் மற்றும் அரக்கர்களையும், தமோ குணமுடையவர்கள் பூதப் பிரேதங்களை வழிபடுகிறார்கள்.

எந்த மனிதர்கள் சாத்திர விதிமுறைகளை மீறி, கொடிய தவம் செய்கிறார்களோ, ஆடம்பரம், அகங்காரம் இவற்றோடு பேராசை, விருப்பம், மற்றும் உடல் வலிமை - இவற்றின் மீது கர்வமும் கொண்டுள்ளார்களோ, மனிதர்களையும், இறைவனையும் துன்புறுத்துகிறார்களோ, அவர்களை அசுரப் பண்புடையவர்கள் ஆவர்.

முக்குணங்களுடன் கூடியஉணவு, யாகம், யக்ஞம், தவம், தானம் ஆகியவற்றில் சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தை எனும் முக்குணங்கள் மூலம் செய்யப்படுகிறது. இவற்றில் சத்துவ சிரத்தையுடன் செய்யப்படும் செயல்களே இறைவனை மகிழ்விக்கும்.

சத்துவ சிரத்தை, ரஜோ சிரத்தை மற்றும் தமோ சிரத்தையுடன் உடல், வாக்கு, மனம் மூலம் செய்யப்படும் தவத்தில் இறைவனுக்கு சத்துவ சிரத்தையுடன் கூடிய தவமே சிறந்தது.

ஓம் தத் ஸத் தொகு

ஓம் தத் ஸத் என்று மூன்று விதமாக சத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தினுடைய குணங்களை குறிக்கும். ஓம் என்பது ஈஸ்வரனை குறிக்கும். தத் என்பதும் இறைவனை குறிக்கும். ஸத் என்பதும் இறைவனை குறிக்கும், அத்துடன் நல்லது என்பதையும் குறிக்கும். ஒரு செயலை செய்யத் துவங்கும் போது ஓம் தத் சத் என்று மனதில் கூறி தொடங்க வேண்டும். நம்பிக்கையின்றி பகவானுக்காக செய்யப்படும் நற்செயல்களான யாகம், யக்ஞம், ஜெபம், தவம், தானம் ஆகியவைகள் அஸத் (சடத்தன்மை) ஆகும். எனவே நம்பிக்கை இன்றி செய்யும் அச்செயல்கள் இம்மையிலும், மறுமையிலும் நன்மை பயக்காதவைகளே ஆகும்.

18 மோட்ச சந்நியாச யோகம் தொகு

72 சுலோகங்கள் கொண்ட இவ்வத்தியாயத்தை கீழ்கண்ட ஆறு தலைப்பின் கீழ் விளக்கப்படுகிறது. 1 சந்நியாசம், சந்நியாசத்தின் பலன்கள், 2 முக்குணங்களுடன் கூடிய தியாகம், தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம், கருமத்தின் தன்மைகள், கர்த்தா(செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் 3 கர்ம யோக சாரம், வர்ணாசிரம தர்மங்கள் 4 பக்தி யோக சாரம், 5 ஆத்ம ஞானம் அடையும் வழிகள், 6 நிதித்யாசனம் (ஆத்ம தியானம்), 7 முடிவுரை.

சந்நியாசம் தொகு

வாழ்கையில் வெறுப்பு அடையாது, மனநிறைவுடன் மேற்கொள்வதே சந்நியாசம் எனும் துறவறம் ஆகும். கர்மங்களினால் வரும் புண்ணியத்தை துறப்பது கர்மபல சந்நியாசம் என்பர். இவ்வாறு புண்ணியத்தை துறப்பதால் நமக்கு விவேகம், வைராக்கியம் மற்றும் முமுச்த்துவம் எனும் பிரம்மத்தைப் பற்றிய அறிவுத் தேடலில் ஆர்வம் பிறக்கும்.

மேலும் வேதாந்தங்களை கேட்கும் ஆர்வம் மனதில் வரும். இதன் பயனாக ஆத்மாவாகிய ”நான்” எந்த செயலை செய்வதில்லை என்ற ஞானம் (அறிவு) ஏற்படுகிறது. இதனால் “நான் செயல் செய்கிறேன்” என்ற எண்ணம் துறக்கப்படுகிறது. இதற்கு கர்த்துருத்துவ சந்நியாசம் என்பர். இதனால் ”நான்” எனும் ஆத்மா எந்த செயலை செய்பவனும் அல்ல என்றும் செயலின் பயனை அனுபவிப்பவனும் அல்ல என்ற அறிவு மனதில் பிறக்கிறது.

வர்ணாசிரம தர்ம கடமைகள் தொகு

சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் முக்குணங்களின் அடிப்படையில் அனைத்து சீவர்களும் வர்ணாசிரம தர்மத்தின்படி பிரிக்கப்படுகின்றனர்.

கர்ம யோக சாரம் தொகு

நமது செயல்கள் அனைத்தும் பகவானை முன்னிட்டு செய்வதே கர்ம யோகமாகும். நமது செயல்கள் பகவானுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இருத்தல் வேண்டும். வேள்வி, தானம், தவம் எனும் செயல்களை துறக்கக்கூடாது.

ஆனால் விலக்கப்பட்ட செயல்களையும், பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களையும் துறக்க வேண்டும். ஆனால் சாத்திரங்கள் விதித்த செயல்களை செய்யாமல் இருப்பது தகாது. எனவே அறியாமையால் அச்செயல்களை செய்யாமல் இருப்பது தாமசத் தியாகம் ஆகும். (இங்கு தியாகம் எனில் விட்டு விடுதல் என்று பொருள்) துன்பம் வரும் எனக்கருதி, செய்ய வேண்டிய செயலை, செய்யாமல் இருப்பது ராஜசத் தியாகம் ஆகும். பற்றையும் பயனை கருதாமல் செய்யும் செயலே சாத்வீகமான தியாகம் ஆகும். இதே போன்று முக்குணங்களுடன் கூடிய தியாகி, தியாகத்தின் பலன், மேலும் முக்குணங்களுடன் கூடிய ஞானம், கருமத்தின் தன்மைகள், கர்த்தா (செயல் செய்பவன்), புத்தி, தைரியம், சுகம், மற்றும் கர்மம் ஆகியவைகளைப் பற்றி பகவான் விளக்குகிறார்.

செயலின் பயனைத் துறக்காதவர்களுக்கு செயலினால் வரும் பாவ - புண்ணியம் மேலும் இரண்டும் கலந்த மூன்றுவிதமான பயன் இறந்தபின் உறுதியாக கிடைக்கிறது. ஆனால், கர்மபயனைத் துறந்த மனிதர்களுக்குக் கர்மங்களுடைய பயன் ஒருபோதும் கிட்டாது. எனவே கர்ம பலனை துறந்தவனுக்கு மறு பிறவி இல்லை.

பக்தி யோக சாரம் தொகு

பகவானின் அருளினால் மட்டுமே ஒருவன் மோட்சத்தை அடையமுடியும். ஒருவன் அகங்காரத்துடன் செயல்பட்டால் அழிந்துவிடுவான். பக்தி நம் மனதை பக்குவப்படுத்தும். ஒருவன் மற்ற சாதனைகளை (தர்மங்களை) கைவிட்டாலும், முடிவின் இலக்கை அடைய பகவான் மீது செலுத்தும் பக்தி அவசியமானது.

ஞான யோக சாரம் தொகு

சுத்தமான புத்தியுடன் மற்று உறுதியுடன் தன் மனதை அடக்கி, ஐம்புல விஷயங்களிலிருந்து மனதை நீக்கி, விருப்பு வெறுப்புகளை விட்டுவிட வேண்டும்.

தனிமையில் சிறிதளவே உண்டு, நாக்கையும், மனதையும் அடக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் ஈடுபட்டு, வைராக்கியத்தை மேற்கொண்டு; அகங்காரம், உடல் பலம், ஆணவம், ஆசை, வெறுப்பு, பற்று ஆகிய தீய குணங்களை விட்டொழித்து, மமகாரமற்று தன்னில் மனநிறைவைப் பெற்றவனே பிரம்ம நிலைக்கு உயர தகுதி பெறுகிறான். பிரம்மமாகவே ஆனவன், உள்ளம் தெளிந்தவனாகிவிடுகிறான்; அவன் எதற்கும் வருந்துவதில்லை; ஆசைப்படுவதில்லை; எல்லா உயிரிடத்திலும் சமநோக்குடன் இருப்பான்; அவன் பகவானிடம் அதிகமான பக்தியையும் பெறுகிறான்.

நிதித்யாசனம் (ஆத்ம தியானம்) தொகு

ஞானநிஷ்டை (தன்னில் மனநிறைவு) அடைய விஷய சுகங்களை துறந்து, தனிமையில் ஆத்மாவை தியானிப்பதே நிதித்யாசனம் ஆகும். ஒருவன் கர்மத்தினால் கிடைக்கும் பாவ - புண்ணியங்களையும், அகங்காரத்தையும் துறந்து பகவானை மட்டும் சரணாகதி அடைந்து, பகவானைப் பற்றிய அறிவை (ஞானத்தை) அடைந்தவன் உலகத் துயரங்களிலிருந்து விடுதலை பெற்று பகவானை அடைவான்.

முடிவுரை தொகு

இந்த அரிய உபதேசத்தை தவம் உடையவர்களுக்கு மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்துவதுடன், இந்த கீதா சாத்திரத்தை கேட்டவர்களும், படித்தவர்களும் வீடுபேறு அடைய புண்ணியம் செய்தவர்களாகி விடுகின்றனர் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

இறுதியாக பகவானின் உபதேசத்தின் மூலம் அருச்சுனன் தன் மனக் கலக்கம் நீங்கியது என்று கூறி, பகவான் கிருஷ்ணரின் ஆணையை நிறைவேற்றுவதாக கூறினான்.

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. https://archive.org/details/GistOfGita
 2. https://archive.org/details/EssenceOfGita
 3. மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 041

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்_கீதையின்_சாரம்&oldid=3291801" இலிருந்து மீள்விக்கப்பட்டது