ஓம் தத் சத்

(ஓம் தத் ஸத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓம் தத் சத் என்பது ஒரு இந்து சமய மந்திரம் ஆகும். இம்மந்திரம் மூன்றுவிதமாக ஸத் சித் அனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயராக மொழியப்பட்டுள்ளது. ஸத் எனில் சத்தியம் அல்லது உண்மை, ஸித் எனில் மெய்யறிவு, அனந்தம் எனில் வரையறுக்கப்படாதது எனப் பொருள்படும்படியாக இறைவனை சச்சிதானந்தம் என்பர்.[1]

ஓம் என்பது பிரணவ மந்திரம் ஆகும். வேள்வி, யக்ஞம், தானம், தவம் முதலிய செயல்களை, எப்பொழுதும் ‘ஓம்’ என்ற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கி, அச்செயலை முடிக்கும் போது ஓம் தத் ஸத் என்று கூறி முடிக்க வேண்டும். ‘ஓம்’ என்ற சொல்லை உச்சரிப்பதால் நாம் செய்யும் அனைத்து செயல்களில் ஏதேனும் செயற்குற்றங்கள் இருந்தால் அவைகள் நம்மை விட்டு அகல்கிறது.

நாம் செய்யும் செயல்களினால் உண்டாகும் பலன்களை விரும்பாது, யாகம், தானம், தவம், யக்ஞம், முதலிய செயல்கள், வீடுபேறுஅடைய விரும்புபவர்களால் ``தத்`` எனும் மந்திரத்தை சொல்லிய பிறகே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகியலில், பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படையாக மெய்ப்பொருள் ஒன்று உளது என்பது, எல்லா உபநிடதங்களின் கூற்று. அது பெயர் உருவம் என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை அது (வடமொழியில் தத்) என்று மட்டுமே அல்லது ‘பிரம்மம்’ என்றே உபநிடதங்கள் குறிக்கின்றன.

ஸத் எனில், இருப்பது என்ற பொருளிலும், நல்லது என்ற பொருளிலும் உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறே மங்களகரமான செயல்களிலும் `ஸத்` என்ற மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. யக்ஞத்திலும், தவத்திலும், தானத்திலும் நிலைத்த இருப்பை `ஸத்` எனப்படுகிறது. அதன் தொடர்பான செயல்களும் கூட `ஸத்` என்றே சொல்லப்படுகிறது.

மாறுதலே இல்லாத முடிவான உண்மையை உறுதிப்படுத்த `ஸத்` என்பதை பரப்பிரம்மம் என்றும் கூறுவர். அங்கிங்காணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இப்பரம்பொருள் ‘இருக்கிறது’ (ஸத்) என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பிரம்மம் வெறுமனே இருக்கும்; அது பேசாது; பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது. அந்த `ஸத்` முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருள் கொண்ட ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்கிறது. எனவே ‘ஸத்’ என்றால் நிலையான பிரம்மம் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்!

ஆதார நூல்

தொகு
  • பகவத் கீதை, அத்தியாயம் 17, சுலோகம் 23 முதல் 27 முடிய

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_தத்_சத்&oldid=4054382" இலிருந்து மீள்விக்கப்பட்டது