ஞான யோகம்
ஞான யோகம் என்பது ஞானமும் யோகமும் ஒன்று சேருவதே ஆகும். ஞானம் எனும் சொல்லுக்கு தன்னைப் பற்றிய அறிவை அடையும் சாதனை என்பது பொருளாகும். யோகம் எனும் சொல்லுக்கு, சாதனம் அல்லது கருவி என்று பொருள். எனவே ஞானம் எனும் சாதனை அடைய யோகம் எனும் சாதனம் (கருவி) அவசியம்.
இந்த ஞான சாதனம் எந்த இலக்குவை அடைய முயற்சி செய்வது எனில் தன்னைப் பற்றிய ஞானம் அடைவதே. தன்னைப் பற்றிய ஞானம் அடைவது எனில் தன்னில் நிலைபெற்ற ஆத்மாவைப் பற்றிய ஞானத்தை அடைதலே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஜீவாத்மா ஆத்ம ஞானத்தை அடைய ஞானயோகம் சிறந்த வழியாகும். [1]
ஆத்ம ஞானத்தை அடையும் வழிகள்
தொகு- இந்த ஆத்ம ஞானத்தை அடையும் வழிமுறைகளில் இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று ஞான சாதனை. இரண்டாவது யோக சாதனை. ஞானத்திற்கான சாதனை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று, வேதாந்த சாத்திரங்களை கேட்டல், கேட்டவைகளை அறிவினால் விசாரித்து ஆராய்ந்து சிந்தித்து தெளிவடைவதே ஞானம்.
- ஆத்ம ஞானம் என்பது “நான்” என்ற சொல்லினை விசாரித்து அறிந்து கொள்வதே ’ஞானம்’ என்பர்.
ஞானத்தை அடைய படிநிலைகள்
தொகு1. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம் - இது அதர்மம், இது உண்மை - இது பொய், இது நல்லது -இது கெட்டது, இது நன்மை - இது இன்பம், இது அழிவற்றது - இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.
2. வினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.
3. விசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.
4. விசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசால புத்தி (பரந்த மனப்பான்மை) என்பர்.
5. நிச்சல புத்தி: ஒன்றிலேயே நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியான புத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.
6. திட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.
7. ஜாக்கிரத் புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.
யோகம் என்பதின் பொருள்
தொகுயோகத்தை மனதின் அமைதி என்றும், மனதை சாத்வீக குணத்திற்கு மாற்றி அமைத்தல்` என்றும், நமது எண்ணங்களின் அமைதியே யோகம் என்றும், அலைபாயும் மனதை நமது மனதின் கட்டுப்பாட்டில் நிலை நிறுத்தும் செயல்களுக்கு யோகம் என்பர்.
சுகம்-துக்கம் போன்ற இருமைகளை சந்திக்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் திறன் நமக்குத் தேவை. நமது மனம் சாத்வீக குணத்தில் நிலையில் நிலை நிறுத்த வேண்டும். மனம் நமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படிப்பட்ட நற்குணங்களில் நமது மனதை நிலை நிறுத்த செய்தலே யோகம் ஆகும்.
யோகத்தை அடையும் வழிகள்
தொகுமுதலில் மனதை சத்துவ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார். வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருப்பதே. விவேகம், வைராக்கியத்தை அடைந்து, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.
மனம் வைராக்கியம் அடைவதற்கான வழிகள்
தொகுமனப்பக்குவமே வைராக்கியம் என்பர். தவத்தாலேயே வைராக்கியத்தை அடைய முடியும். அந்த மனதுடன் ஆத்ம ஞானத்தை அறிந்தால் சீவ முக்தி உறுதியாக கிடைக்கும். ஒரு பெருந் துயரத்தை கடக்க சிறிய கஷ்டங்களை தாங்கிக் கொள்ள நம் மனம் பழகிக் கொள்ள வேண்டும். தவத்தின் மூலம் யோகத்தை அடைந்து மனதை நம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
உடல் அளவில் செய்யும் யோகாசனம் எனும் தவத்தால் சோம்பல் நீக்கப்படுகிறது. மேலும் உடல் தூய்மை, சமூகப் பணி, குரு சேவை ஆகியவற்றாலும் சரணாகதி எனும் பணிவு குணங்களினாலும் நாம் மனதை தூய்மைப்படுத்திக் கொண்டு மன வைராக்கியம் அடையலாம்.
ஞான யோகமும் அதன் பலன்களும்
தொகுஞானயோகத்தை அடைவது என்பதும், ஆத்மஞானத்தை அடைவது என்பதும் ஒன்றே. உயிருடன் இருக்கும் போதே ஞானமும் யோகமும் அடைவதே சீவ முக்தி என்பர். ஆத்ம ஞானி என்றால் ஆத்மஞானத்தை அறிந்தவன் என்று பொருள். யோகி எனில் ஸித்தி ’ அடைந்தவர் என்று பொருள். சீவ முக்தி எனும் மோட்சத்திற்கு இலக்கு ஆத்ம ஞானம் ஒன்று மட்டுமே. ஞானத்தை அடைவது எளிது என்றும், யோக சித்தியை அடைவது கடினம் என்று கருதுகிறார்கள்.
ஞானத்தை அடைய அதற்கான பிரமாணங்கள் (கருவிகள்) எனும் வேதாந்த சாத்திரங்களை மரபு வழி வந்த குருவின் மூலம் கேட்டு, சிந்தித்து விசாரித்து அறியவேண்டும். சாத்திரங்களை சரியான முறையில் பகுத்தாய்வு (விசாரணை) செய்யாவிட்டால் விபரீத ஞானம் ஏற்படும். மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு, அறிவைத் தரும் சரியான கருவிகள் (பிரமாணங்கள்) இருப்பினும் பலனில்லாமல், விபரீத ஞானம் உண்டாகும். இதனை ஞான ஆபாசம் (ஞானம் வந்து விட்டது போல் தோண்றும் உணர்வு) என்பர். எனவே யோகத்தினால் மனதை கட்டுப்படுத்த வேண்டும்.
எனவே ஞான சாத்திரங்களை தொடர்ந்து பயில்பவர்கள், யோகமும் பயில வேண்டும். ஞான சாத்திரங்களை பயில்பவர்களின் வாழ்க்கையை விட யோகம் பயின்றவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும். பலர் என்னதான் சாத்திரங்கள் பயின்றாலும், அதன்படி ஏன் நடந்து கொள்ள இயலவில்லை எனில் யோகப் பயிற்சி இல்லாத காரணத்தினால்தான். நமது உடல் பல உறுப்புக்களின் சேர்கையாக அமைந்துள்ளது. அறிவு/புத்தி கட்டளை இட்டாலும், சக்தியற்ற உறுப்புக்கள் புத்தியிட்ட கட்டளைகளை நிறைவேற்ற இயலாது. அது போல் ஞானம் இருந்தும் யோகம் இல்லை எனில் ஞானத்தினால் கிடைக்க வேண்டிய பலன்களான சீவன் முக்தி எனும் மோட்சம் கிடைப்பதரிது.
ஞானம் எனும் அறிவு ஒரு பொருளை கண்ணாடி போன்று உள்ளது உள்ளபடி காட்டும். எனவே ஒரு பொருளை பகுத்தாராய்வு செய்ய நம் மனதில் உள்ள தீய குணங்களை நீக்கி தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஞானத்தை அடைய யோகம் எனும் சாதனை அவசியமாகும். இந்த ஞான யோகத்தின் மூலம் தத்துவமசி என்ற மகாவாக்கிய ஞானம் மற்றும் அஹம் பிரம்மாஸ்மி போன்ற ஞானம் நம்முள் உண்டாகும்.
ஞான யோக சாரம்
தொகுஉலக விவகார நோக்கில், புருஷன், பிரகிருதி எனப்படும் பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் இயல்பான குணத்தையோ, அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்பவன் ஞான நிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான்.
ஆத்மாவின் சொரூபம்:- இவ்வுலகில் பார்க்கப்படும் பொருள்கள், பார்வைக்கு அகப்படாத பொருள்கள் ஆகிய எல்லாமே, பரமாத்மாதான். அவரே உலகத்தை படைக்கிறார், உலகமாகவும் ஆகிறார். உலகத்தைக் காப்பாற்றுகிறார், காப்பற்றப்படுபவராகவும் இருக்கிறார், அவரே உலகத்தை அழிக்கிறார், அழிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார். (செய்பவரும், செய்யப்படும் பொருளும் அவரே; ஆத்மாவன்றி வேறோன்றில்லை. விவகார நோக்கில் பார்க்கையில் ஆத்மா, இவ்வுலகிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆன்ம நோக்கில் பார்த்தால் அதைத் தவிர வேறு பொருளே இல்லை.
ஆத்ம தத்துவத்தை வாயால் சொல்ல இயலாது (அனிர்வசநீயம்). படைப்பு - நடப்பு - துடைப்பு அல்லது அத்யாத்மம் - அதிதைவம் - அதிபூதம் என்று ஆத்மாவில் கற்பிக்கப்பட்டுள்ள நிலைகள் ஆதாரமற்றவை. இவைகள் இல்லை என்றாலும் இருப்பன போல் தோற்றமளிக்கிறது. இவை சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் ஆகிய முக்குணங்களால் தோன்றுவன. காண்பவன் - காட்சி - காணப்படும் பொருள் என்று மாயையின் மூன்று வகையான விளையாட்டுகள் இது.
இந்த உலகம் தோற்றம் - அழிவு உடையதாக இருப்பதால், அநித்தியம் - அசத்தியம் என்பதை, பிரதட்சம் - அனுமானம் - வேதாந்த சாத்திரங்கள், ஆப்த வாக்யம், சுய அனுபவம் மற்றும் குரு உபதேசம் எனும் பிரமாணங்களால் (கருவிகளால்) உறுதியாகிறது. எனவே உலகம் அநித்தியம், அசத்தியம் என்பதை உணர்ந்து, எதனுடன் ஒட்டுதல் இன்றி வாழவேண்டும். (சங்கத்தில் நிஷ்சங்கமாக வாழவேண்டும்).
சோகம், மகிழ்ச்சி, அச்சம், கோபம், லோபம், மோகம், வேட்கை, பிறப்பு-இறப்பு இவையெல்லாம் அகங்காரத்துக்கே அன்றி, ஆத்மாவுக்கு அல்ல.(சான்றாக, அகங்காரமில்லாத ஆழ்ந்த உறக்கத்தில், துயரங்கள் - குழப்பங்கள் ஏற்படுவதில்லை. சுக - துக்கங்கள் ஆத்மா சம்பந்தப்பட்டதாக இருந்தால் உறக்கத்திலும் அவை ஏற்பட வேண்டும். எனவே அவைகள் இந்த உடலின் தர்மங்கள் தவிர ஆத்மாவுடையதல்ல).
ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் பிராணன், மனம் ஆகியவற்றால் நிலைபெற்றுள்ள ஆத்மா, இவைகளில் பற்று கொண்டு, இவைகளே நான் என்று கருதும் போது, சீவன் என்று அழைக்கப்படுகிறது. அதிநுட்பமான ஆத்மாவின் மூர்த்திதான் - குண கர்மங்களான லிங்க சரீரம், அல்லது சூத்ராத்மா, அல்லது மஹத் தத்துவம் என்பர். அவன் காலரூபியான பரமேசுவரனுக்கு அடங்கி சம்சாரச் சக்கரத்தில் சுழல்கிறான்.
விவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அக்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி ஏகாத்மபாவம் எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை.
எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம்.
தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.
மனதிற்கு விழிப்பு நிலை - கனவுநிலை - உறக்கநிலை உள்ளது. இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்வம் - ரஜஸ் - தமஸ் எனும் முக்குணங்கள் காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன. மும்மூன்றாக இருப்பனவெல்லாம் எவருடைய இருப்பில் உண்மை போல் காட்சியளிக்கின்றனவோ, சமாதி நிலையில் மூவகை வேறுபாடுகள் இல்லாத போதும் எது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறதோ, அந்த நான்காவது தத்துவம் - பிரம்ம தத்துவம் - அதுவே சத்தியம்.
படைப்புக்கு முன் எது இருக்கவில்லையோ, பிரளயத்துக்குப் பின் எது இருக்கப் போவதில்லையோ, அது, அந்த இடைப்பட்ட காலத்திலும் இல்லை - என்றே கருதவேண்டும். ‘ உலகம் இருக்கிறது’ என்பது வெறும் கற்பனையே. ஒரு பொருள் எதனால் ஆக்கப்படுகிறதோ, எதனால் பிரகாசிக்கப்படுகிறதோ, அதுவே - அந்த காரணப் பொருளே - இதன் உண்மையான வடிவம் என்பது உறுதியான உண்மை. இதுவே முடிவான முடிவாகும்.
பற்பல மாறுதல்களை அடையும் பிரபஞ்சம், உண்மையில் இல்லாத போதிலும், இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. இது சுயம்பிரகாசமான பிரம்மமே ஆனதால், புலன்கள், விஷயங்கள், மனம், பஞ்சபூதங்கள் என பல்வகை நாம-ரூபங்கள் உண்டோ, அவை அத்தனையிலும் பிரம்மமே விளங்குகிறது.
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் (மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), ஸ்வாநுபூதி, முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான இயற்கையும் (பிரகிருதி) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்).
ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக - துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை.
ஆகாயம், வாயுவால் உலர்த்தப்படுவதில்லை; நெருப்பினால் எரிக்க முடியாது; நீரினால் ஈரப்படுத்த முடியாது; பூமி தனது புழுதியால் மாசுபடுத்த இயலாது; காலங்களின் தன்மைகளான வெப்பம் - குளிர் ஆகியவாற்றால் பாதிக்கப்படுவதில்லை. காரணம், இந்தத் தன்மைகள் எல்லாம் சில நேரங்களில் மட்டுமே இருப்பவை. ஆனால் ஆகாயாமோ, இவைகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருப்பது. அதுபோலவே, சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் செயல்களும் கர்மாவும், அழிவில்லாத ஆத்மாவை தொடக்கூட முடியாது. ஆத்மா இவைகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆனால் இவைகளில் அகங்காரம் கொண்டிருப்பவன் (இவைகள்தான் நான் என்று எண்ணிக் கொண்டிருப்பவன்) துயரக்கடலில் சிக்கித் திரிகிறான்.
பகவானிடம் பக்தி செலுத்துவதால் மட்டுமே, மனதின் தோஷமாகிய ரஜோகுணத்தைப் போக்கிக் கொள்ளும் வரை மாயையின் காரியமான குணங்களுடன் சம்பந்தத்தை தவிர்க்க வேண்டும்.
ஆத்ம ஞானத்தை நன்கு அடையாதவனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள கர்ம பதிவுகள் அடிக்கடி தலைதூக்கி, அஞ்ஞானம் தலைதூக்கச் செய்து, யோகப்பிரஷ்டனாக்கிவிடும் (ஆத்மவித்தையை அடையாமல் ஒதுக்கி வைக்கப்படுவர்).
ஞானப் பயிற்சி செய்து முன்னேறும் யோகிகளை, உறவினர்கள், நண்பர்கள் பந்த பாசத்தையோ அல்லது கவலையோ ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்கள் தன் நிலையில் இருந்து வழுக்கி விழுந்து விடுவார்கள். அப்படிபட்டவர்கள் அடுத்த பிறவியில், முன் பிறப்பில் விட்ட இடத்திலிருந்து ஞான யோகப் பயிற்சியை தொடங்குவார்கள். கர்மாக்களில் பற்று வைக்க மாட்டார்கள்.
ஞான யோகத்தை அடைந்து பண்டிதனாக விளங்குபவன், உலகத்தில் வாழ்ந்து கொண்டே கர்மவினைப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி - வருத்தம் முதலிய மன மாற்ற்ங்களை அடைவதில்லை. ஆத்மாவில் அறிவை நிலைநிறுத்திய ஆத்ம ஞானி, இந்த உடல் செயல்படுகிறது என்பதையே அறிய மாட்டான்.
உடலிலும் உலகிலும் தான் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆத்மா எப்போதும் ஒரேவிதமாக மாற்றமின்றி உள்ளது என்ற உண்மையை ஞானி அறிந்து கொள்கிறான்.
பகவானின் சாக்ஷாத்காரம் (உணர்வு) ஏற்பட்டதும், மனிதனின் மனதை மூடியிருந்த அக்ஞானம் விலகி, ஆத்ம சொரூபமாகி விடுகிறான்.
ஆத்மா அது நம்மால் அடையப்பட்ட பொருள்; சுயம்பிரகாசமானது; பிறப்பில்லாதது; அளவிடமுடியாதது; எல்லா அனுபூதிகளும் அதிலே நிகழ்கிறது; எல்லா விபூதிகளையும் (பெருமைகளையும்) தன்னுள் கொண்டது; தனக்குச் சமமான இரண்டாவது வஸ்து (பொருள்) இல்லாத தனிப்பொருள்; மனம் - வாக்குகளுக்கு எட்டாதது; நிர்குணமானது; அருவமானது; வடிவம் அற்றது; குணதோசங்களை கடந்தது.
இரண்டாவதற்ற அகண்ட ஆத்ம தத்துவத்தில், அஞ்ஞானத்தின் காரணமாக வேற்றுமை காண்ப்து, மனதின் மயக்கமே. சீவன், பிரகிருதியின் தொடர்பால் அகங்காரமடைந்து பேதத்தைக் கற்பிக்கிறது. மன மயக்கத்துக்கும், அக்ஞானத்துகும் (அறியாமை) தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகுஆதாரநூல்கள்
தொகு- ஞான யோகம், நூலாசிரியர், விவேகானந்தர் சுவாமி, இராமகிருஷ்ணா மடம், சென்னை.
- பகவத் கீதை, அத்தியாயம் இரண்டு
- உத்தவ கீதை, அத்தியாயம் 28
வெளி இணைப்புகள்
தொகு- ஞானயோகம், வேதாந்த சொற்பொழிவை தமிழில் கேட்க [1]