துரியோதனன்

மகாபாரத இதிகாசத்தில் கெளரவர்களில் மூத்தவர்

துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருந்தான். இவன் அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பானுமதி இவரது மனைவியாவர்.

பிறப்பு தொகு

வேத வியாசரின் அருளால் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறந்தனர்.[1]

முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.

வளர்ச்சி தொகு

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. தனது சகோதரர்களால், குறிப்பாக துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர், மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமரிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். கர்ணன், துரியோதனனின் உற்ற நண்பன்.

இளமைக் காலத்தில் பீமன் தனது வலிமையால் கெளரவச் சகோதரர்களுக்கு நிறைய காயங்களையும், வலிகளையும் உண்டாக்கி அனுபவிக்கச் செய்தான். பீமன் பெருந்தீனிக்காரனாக இருந்ததால், சகுனியின் வழிகாட்டுதலின்படி துரியோதனன் பீமனுக்கு உணவில் விடம் கொடுத்து கொல்ல முயற்சி செய்தான். ஆனால் பீமன் இந்த முயற்சியிலிருந்து தப்பிப்பிழைத்ததோடு, அவனது வலிமையும் முன்னை விட இன்னும் அதிகமானது. சகுனியின் ஆலோசனையின்படி பாண்டவர்களை விருந்துக்கழைத்து அவர்களை அரக்கு மாளிகையில் தங்க வைத்து அதற்குத் தீயிட்டுக் கொல்லவும் முயற்சித்தான். விதுரர் பாண்டவர்களுக்கு விடுத்த எச்சரிக்கையின் பேரில் பாண்டவர்கள் இந்த சதித்திட்டத்தில் இருந்தும் தப்பினர்.

கர்ணனுடனான உறவு தொகு

ஒரு கட்டத்தில் மகாபாரதத்தில் கெளரவ மற்றும் பாண்டவ இளவரசர்கள் தங்கள் திறமைகளை பெரியோர்கள், குரு துரோணர் மற்றும் பேரரசின் மக்கள் ஆகியோருக்கு முன் வெளிக்காட்டும் நிகழ்வொன்றில் துரோணரால் சிறந்த இளவரசன் என்று கருதப்பட்ட அருச்சுணனுக்கு சவால் விடும் திறமைகளை கர்ணன் கொண்டிருந்ததை துரியோதனன் உற்றுநோக்குகிறான். இந்த சமயத்தில் கிருபாச்சாரியார் கர்ணன் அரசகுலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதால் இந்த நிகழ்வில் மற்ற இளவரசர்களுடன் அவன் போட்டி போட முடியாது என்று தடுக்கிறார். கர்ணன் ஒரு சத்திரியனாக பிறக்கவில்லையே என்று மனம் கவலையுற்று, அவமானப்பட்டு தலை கவிழ்கிறான்.

அவையில் அந்த நேரத்தில் துரியோதனன் கர்ணனை ஆதரிக்கிறான். சத்ரியனாக இருப்பதென்பது பிறப்பால் அல்ல செயல்களாலேயே வரையறுக்கப்படுகிறது என்று வாதிடுகிறான். திருதராட்டிரனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டு கர்ணனை அங்கத அரசின் மன்னனாக்குகிறான். இதன் காரணமாக கர்ணனை அருச்சுணனுக்கு சமமாக துரியோதனன் ஆக்குகிறான். கர்ணன் தனது நட்பையும், கூட்டணியையும் என்றும் துரியோதனனுக்கே அளிப்பதாக உறுதி பூணுகிறான். அவையில் உள்ள யாருக்கும் கர்ணன் குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணம் நடந்ததற்கு முன்னதாக சூரியனால் குந்திக்கு அருளப்பட்ட குழந்தை தான் என்பது தெரியாது.

குருச்சேத்திரப் போரில், போரின் 15 ஆம் நாள் முதல் கர்ணன் துரியோதனின் மிகப்பெரிய படைத்தளபதியாவான். துரியோதனன் கர்ணன் அருச்சுணனை விடத் திறமையில் உயர்ந்தவன் என்பதை உறுதிபட நம்பினான். அருச்சுணனையும் அவனது நான்கு சகோதரர்களையும் கர்ணன் வெல்வான் என்பதைம் நம்பினான். கர்ணன் போரில் கொல்லப்பட்டதற்கு துரியோதனன் மிகவும் வருந்தினான். தனது சொந்த சகோதரர்களின் இழப்பை விட இந்த இழப்பு அவனை ஆறுதல் கூற இயலாத சோகத்தில் ஆழ்த்தியது. கர்ணன் யாரென்ற உண்மை தெரிந்த போது கர்ணன் மீதான அன்பு வளர்ந்ததே ஒழிய குறையவில்லை. கர்ணனுக்கான இறுதிச் சடங்குகள் செய்யும் உரிமையை பாண்டவர்களைக் காட்டிலும் கர்ணனோடு நெருக்கமாகவும், உண்மையாகவும் இருந்த துரியோதனனுக்கே கண்ணன் வழங்கினார்.

பகடை ஆட்டமும் மற்றும் திரெளபதிக்கு நேர்ந்த அவமதிப்பும் தொகு

இந்திரப்பிரஷ்டத்தின் செழிப்பு மற்றும் புகழ் ஆகியவற்றால் பொறாமையில் ஆவேசப்படுவதும், பாண்டவர்களால் அவமானப்படுவதும் துரியோதனனை கோபப்படுத்துகிறது, மேலும் அவர் பாண்டவர்களை வீழ்த்த விரும்புகிறார். அவரது விருப்பத்திற்கு ஆதரவாக, சகுனி தனது பகடை விளையாட்டின் திறமையால் யுதிஷ்டிரனை தோற்கடிப்பதன் மூலம் அவனது அரசையும் செல்வத்தையும் கொள்ளையடிக்க ஒரு திட்டத்தை வகுக்கிறான். யுதிஷ்டிரனின் திறமையின்மை மற்றும் விளையாட்டுக்கு அடிமையாதல் ஆகியவற்றைப் பயன்படுத்தி சகுனி யுதிஷ்டிரனின் முழு ராஜ்யத்தையும், செல்வத்தையும், அவனது நான்கு சகோதரர்களையும், அவரது மனைவியையும் கூட தொடர்ச்சியான சூதாட்டங்களில் இழக்கச் செய்கிறான். துரியோதனன் தனது சகோதரர் துச்சாதனனை அழைத்து திரெளபதியை அரசவைக்கு இழுத்து வர ஊக்குவிக்கிறார். யுதிஷ்டிரர் எல்லாவற்றையும் அவனிடம் சூதாட்டத்திற்குப் பிறகு அவள் துரியோதனனின் சொத்து என்பதால், துரியோதனன் திரெளபதியை தனது இடது தொடையில் உட்காரச் சொல்கிறான். பழிவாங்குவதற்காக அவமானப்படுத்தும்படி அதைக் காட்டித் தட்டுகிறான். துச்சாதனனிடம் திரெளபதியின் துகிலை களையச் சொல்லி ஆணையிடுகிறான். இருப்பினும், அவள் கிருஷ்ணரால் காப்பாற்றப்படுகிறாள்.[2]

குடும்பம் தொகு

துரியோதனன் கலிங்க நாட்டின் இளவரசியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். கிருட்டிணன் மகன் சாம்பன், இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறான்.

பாத்திரம் தொகு

மகாபாரத இதிகாசத்தில் துரியோதனன் குருசேத்திரப் போரில் 18 அக்ரோணி படைகள் கொல்லப்பட்டது. குருச்சேத்திரப் போரின் 18வது நாள் இறுதிப் போரில், துரியோதனன், கதாயுதப் போர் புரிந்து வீமனால் கொல்லப்படுகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm
  2. Raya, Pratapacandra (1884) (in en). The Mahabharata. Рипол Классик. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9785875963933. https://books.google.ae/books/about/The_Mahabharata.html?id=HMsMAwAAQBAJ&printsec=frontcover&source=kp_read_button&redir_esc=y#v=onepage&q&f=false. 

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரியோதனன்&oldid=3832532" இலிருந்து மீள்விக்கப்பட்டது