துச்சாதனன்

இந்திய நாட்டின் புகழ் பெற்ற இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களுள் ஒருவனே துச்சாதனன். இந்த இதிகாசத்தின்படி, கண்பார்வையற்ற மன்னனான திருதராட்டிரனுக்கும், அவனது மனைவியான காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவனே இவன்.

துச்சாதனன் பிறப்பு

தொகு

காந்தாரி கர்ப்பமுற்றாளாயினும் அது நீண்டகாலம் நீடித்துச் சென்றதேயன்றிப் பிள்ளை பிறக்கவில்லை. வெறுப்புற்ற காந்தாரி தனது வயிற்றில் அடித்துக்கொண்டாள். திருதராட்டிரனின் தம்பியான பாண்டுவின் மனைவி ஏற்கனவே மூன்று பிள்ளைகளைப் பெற்றிருந்ததும் அவளுக்குப் பொறாமையை ஊட்டியிருந்தது. அவள் வயிற்றில் அடித்துக்கொண்டதனால் அவள் வயிற்றிலிருந்து சாம்பல் நிறமான தசைப் பிண்டம் ஒன்று அவள் வயிற்றிலிருந்து வெளிவந்தது. காந்தாரி மிகுந்த துயருற்றாள். அவளுக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என வாழ்த்திய பெரியவரான வியாசரிடம் அவள் முறையிட்டாள். வியாசர் அப் பிண்டத்தை நூறு பாகங்களாகப் பிரித்து, நெய் நிறைந்த பானைகளிலே இட்டு மூடி அவற்றை மண்ணிலே புதைத்து வைத்தார். ஓராண்டின் பின் முதல் பானை திறக்கப்பட்டபோது அதிலிருந்து துரியோதனன் வெளிப்பட்டான். இரண்டாவது பானையில் இருந்து வெளிவந்தவனே துச்சாதனன் ஆவான். துச்சாதனன் துரியோதனன் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தான். அவனுடன் இணைந்து பாண்டவர்களைக் கொல்வதற்காகப் பல திட்டங்களையும் தீட்டினான்.

துகிலுரிப்பு

தொகு

பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமன் துரியோதனன் ஆகியோரின் சதிவலையில் வீழ்ந்து தனது பொருளெல்லாம் சூதிலே தோற்றான். பின்னர் தனது தம்பியரையும், மனைவியான திரௌபதி (பாஞ்சாலி)யையும் கூடப் பணயம் வைத்துச் சூதாடினான் அவர்களையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து, துரியோதனன் ஆணைப்படி திரௌபதியை அவைக்கு இழுத்துவந்த துச்சாதனன், அவளது சேலையை உரிய முற்பட்டான். கண்ணனுடைய சக்தியால் இழுக்க இழுக்கத் பாஞ்சாலியின் சேலை நீண்டுகொண்டே இருந்தது. இதனால் பாஞ்சாலி காப்பாற்றப்பட்டாலும் சினம் கொண்ட அவள், துச்சாதனனின் இரத்தத்தைக் கூந்தலில் தடவினாலன்றித் தனது கலைந்த கூந்தலை முடிப்பதில்லை எனச் சபதம் எடுத்தாள். பீமனும் அவனது நெஞ்சைப் பிளந்து இரத்தத்தைக் குடிப்பேன் எனச் சூளுரைத்தான்.

துச்சாதனன் இறப்பு

தொகு

பாரதப் போரின்போது வீமன் துச்சாதனனுடன் போரிட்டு, அவனைக் கொன்றான். அவனது இரத்ததால் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றியதுடன் பாஞ்சாலியின் சபதமும் நிறைவேற உதவினான்.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துச்சாதனன்&oldid=3830369" இலிருந்து மீள்விக்கப்பட்டது