கோயம்புத்தூர் மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம்
கோயம்புத்தூர்
மாவட்டம்
கோவை மாவட்டம்

பேரூர் பட்டீசுவரர் கோயில்

கோயம்புத்தூர் மாவட்டம்: அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் கோயம்புத்தூர்
பகுதி கொங்கு நாடு
ஆட்சியர்
மருத்துவர் ஜி.எஸ்.
சமீரான், இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

மாநகராட்சி 1
நகராட்சிகள் 7
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 11
பேரூராட்சிகள் 33
ஊராட்சி ஒன்றியங்கள் 13
ஊராட்சிகள் 227
வருவாய் கிராமங்கள் 295
சட்டமன்றத் தொகுதிகள் 10
மக்களவைத் தொகுதிகள் 2
பரப்பளவு 4723 ச.கி.மீ.
மக்கள் தொகை
34,58,045 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
641 xxx, 642 xxx
தொலைபேசிக்
குறியீடு

0422
வாகனப் பதிவு
TN-37, TN-37Z, TN-38, TN-40, TN-41, TN-41Z, TN-66, TN-99
பாலின விகிதம்
ஆண்-50.00%/பெண்-50.00% /
கல்வியறிவு
83.98%
சராசரி கோடை
வெப்பநிலை

35 °C (95 °F)
சராசரி குளிர்கால
வெப்பநிலை

18 °C (64 °F)
இணையதளம் coimbatore

கோயம்புத்தூர் மாவட்டம் (Coimbatore district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோயம்புத்தூர் ஆகும். இந்த மாவட்டம் 4723 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

பொருளாதாரத்திலும், தொழில் துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும், மின்சாரமும் ஆகும்.

பழைமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் கோசர் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்தூர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கப்படுகிறது.[1] கோயம்புத்தூர் முற்காலச் சோழனாகிய கரிகாலனின் ஆட்சிக் காலமான இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்து வந்துள்ளது. இதனை இராட்டிரகூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு ஆகிய பேரரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.

வரலாறு

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் வரலாற்று கொங்குநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது, இது மேற்கு கடற்கரைக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையான பாலக்காடு இடைவெளியின், கிழக்கு நுழைவாயிலாக சேரர்களால் ஆளப்பட்டது.

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9-ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்[சான்று தேவை]. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது.

1550களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர்.[2] 1700 களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் போர் நடைபெற்றது. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.

பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. இராஷ்டிரகூடர்களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் இராஜராஜ சோழன் காலத்தில் சோழர் கைக்கு மாறியது.[3][4] சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு சாளுக்கியர்களாலும் பின்னர் பாண்டியர்களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உள் நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, டெல்லி சுல்தான் தலையிட்டதனால், இப்பகுதி மதுரை சுல்தானின் கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78-ஆம் ஆண்டு காலத்தில் விஜய நகரப் பேரரசு கைப்பற்றியது[சான்று தேவை]. இதற்குப் பின் இப்பகுதியினை மதுரை நாயக்கர்கள் ஆண்டனர்.[2]

1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799-ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். 1801-ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார், மைசூர் ஆகியவற்றின் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981-ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்கா நல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

மாவட்ட வருவாய் நிர்வாகம்

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 11 வருவாய் வட்டங்களையும், 38 உள்வட்டங்களையும், 295 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[5]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

தொகு

மாநகராட்சி

தொகு
  1. கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி

நகராட்சிகள்

தொகு
  1. மேட்டுப்பாளையம்
  2. பொள்ளாச்சி
  3. வால்பாறை
  4. கருமத்தம்பட்டி
  5. காரமடை
  6. கூடலூர்
  7. மதுக்கரை

பேரூராட்சிகள்

தொகு

ஊராட்சி ஒன்றியங்கள்

தொகு

கோவை மாவட்டத்திலேயே பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் தான் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியம் ஆகும். இது சுமார் 39 ஊராட்சிகளை உள்ளடக்கி உள்ளது. அதேபோல் கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஊராட்சி வதம்பச்சேரி ஊராட்சி ஆகும். இது கிட்டத்தட்ட 15 மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19016,97,894—    
19117,54,483+0.78%
19217,87,002+0.42%
19319,14,515+1.51%
194110,50,676+1.40%
195112,59,135+1.83%
196115,01,084+1.77%
197118,86,146+2.31%
198122,16,562+1.63%
199124,93,715+1.19%
200129,16,620+1.58%
201134,58,045+1.72%
சான்று:[7]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 3,458,045 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,729,297 (51%) ஆகவும், பெண்கள் 1,728,748 (49%) ஆகவும் உள்ளனர். ஆவார்கள். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 968 பெண்கள் வீதம் உள்ளனர். குழ்ந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.06%, பெண்களின் கல்வியறிவு 78.92% ஆகும். இம்மாவட்ட மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 731 நபர்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) மக்கள்தொகை வளர்ச்சி 18.56% ஆகவுயர்ந்துள்ளது. ஆறு வயதிற்குட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 319,332 ஆக உள்ளது.[8][9]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 30,44,145 (88.03%), இசுலாமியர்கள் 211,035 (6.10%), கிறித்தவர்கள் 1,90,314 (5.50%) மற்றவர்கள் 0.36% ஆக உள்ளனர்.

அரசியல்

தொகு

இம்மாவட்டம் 2 மக்களவைத் தொகுதிகளையும், 10 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[10]

மக்களவைத் தொகுதிகள்

தொகு
  1. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
  2. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

புவியியல்

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மழைச் சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு மனத்திற்கு இதம் அளிக்கின்ற கால நிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. 25 கி.மீ நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது. இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயமும், அதனைச் சார்ந்த தொழில்களும் சிறந்து விளங்க ஒரு காரணியாக அமைந்துள்ளது.

தொழில்கள்

தொகு
 
கோயம்புத்தூரில் ஆரம்பகால பருத்தி ஆலைகளில், லட்சுமி ஆலையும் ஒன்றாகும்
 
டைடல் பூங்கா மாநிலத்தின் மிகப்பெரிய தகவல் தொழிநுட்பப் பூங்காக்களில் ஒன்றாகும்
 
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்சார உற்பத்திக்கான காற்றாலைகள்

இங்கு பருத்தி விளைச்சல் நெசவுத் தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது. இங்கு பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்ணும் கால நிலையும் நிலவுவதால் ஆலைகள் பெருகின. 1888-இல் கோயம்புத்தூரில் ஸ்பின்னிங் அண்டு வீவிங் கம்பெனி லிமிடெட் தான் முதல் பஞ்சாலை ஆகும்.1933-ல் ஸ்ரீ சாரதா மில்ஸ் லிமிடெட் மிகப்பெரிய நூற்பாலை(Spinning mill) தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் வளர்ந்து ஓங்கின. 1933-இல் பைகாரா மின் உற்பத்தி தொடங்கப் பட்டதால், பல புதிய ஆலைகள் தோன்றின. கோவை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய அறுபது பருத்தி ஆலைகள் உள்ளன. இது தவிர சிங்காநல்லுர், பீளமேடு, கணபதி, உப்பிலிபாளையம் ஆகிய இடங்களிலும், பல ஆலைகள் செயற்படுகின்றன. அதனால், இம்மாவட்டத்தில், நூற்றுக்கு அதிகமான நூற்பாலைகள் இயங்கி வருவாய் ஈட்டுகின்றன. இதனால் நிலையான, உறுதியான பொருளாதாரம் ஏற்படவும் அடித்தளமாகின்றன. கோயம்புத்தூர் புகழ் மிக்க நூற்பாலை நகரமாக உருவெடுக்கவும், தென்னிந்தியாவின் (இங்கிலாந்தினைப் போல) மான்செஸ்டர் என அழைக்கப்படவும் காரணமாக விளங்குகின்றன. இங்கு 25000 இற்கு மேல் சிறு நடுத்தர பெரிய தொழிற்சாலைகளும், டைடல் பூங்கா மற்றும் நூற்பாலைகளும் உள்ளன. கோயம்புத்தூர் சிறந்த நீர் ஏற்றுக் குழாய் (Motor pump sets), இயந்திர பொறியமைப்பு கருவிகள் என்பவற்றின் தனி உற்பத்தி மையமாக விளங்குகிறது. 1930 இல் பைகாரா நீர்மின் திட்டம் செயற்படத் தொடங்கியதன் காரணமாக கோயம்புத்தூர் நகரம் தொழில் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்தது.

இந்தியாவில் முகச்சவர பிளேடுகள் தயாரிப்பதில் இம்மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2400 இலட்சம் பிளேடுகளை, இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது.இதனக் கண்டே, பிற இந்திய மாநிலங்களிலும் பிளேடு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பது வரலாற்று நிகழ்வாகும்.[11]

கோயம்புத்தூர் மாவட்டம் அண்டை மாநிலமான கேரளத்திற்கும் புகழ் மிகுந்த உதக மண்டலத்திற்கும் நுழை வாயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து இயங்கும் புகழ் பெற்ற மலைத் தண்டவாளம் இங்கிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து ஊட்டிக்கு வழக்கமான பேருந்துப் போக்குவரத்துக்கள் உள்ளன.

மலைவளம்

தொகு

இம்மாவட்டத்தின் தட்பவெட்ப நிலைக்கும் மழைக்கும் காரணமாக அமைவது சுற்றியுள்ள மலைகளே ஆகும். இம்மாவட்டத்தின் தெற்கில் ஆனை மலை, வடமேற்கில் குச்சும்மலை, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நீலகிரி மலை, வெள்ளியங்கிரி மலை ஆகியவை உள்ளன. மற்றும் குமரிக்கல், புதுக்கல், அஞ்சநாடு பள்ளத்தாக்கு போளாம்பட்டி மலைகள், ஆசனூர், பருகூர், பாலமலை, போன்ற மலைகள் உள்ளன. இம்மலைகளின் உயரம் 4000 அடிமுதல் 5000 அடி வரை உள்ளது, கடல் மட்டத்திலிருந்து 6000 அடிமுதல் 8000 அடிவரை உள்ளது.

காட்டு வளம்

தொகு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காடுகள் அடர்த்தியாகவும் சிறந்த உயர்ந்த மரங்களைக் கொண்டும் விளங்குகின்றன. இத்தகைய காடுகள் 8 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.1951 - ஆண்டிலிருந்து தனியாக வனத்துறை அமைக்கப்பட்டு காடுகள் பராமரிக்கப்படுகின்றன. இம்மாவட்ட காடுகளின் எல்லை நீலகிரி மலை சரிவையும், மேற்கில் போலம்பட்டி தடாகம் பள்ளதாக்கு பகுதிகளில் உள்ள காடுகளையும், கிழக்கில் ஆனை மலை காடுகளையும் கொண்டுள்ளது. இதில் தேக்கு மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. பொள்ளாச்சி டாப்சிலிப் , ஆனை மலை , துணக்கடவு தொகுதிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மரங்கள் 150 அடி உயரம் வரை வளர்கின்றன. மூங்கில் பெரும்பான்மையாக கோவை மாவட்டத்திலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன.

கனிம வளம்

தொகு

இம்மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க கனிம வளப் பகுதிகள் உள்ளன. கருங்கல், சுண்ணாம்பு, குவார்ட்ஸ் என்னும் பொருட்கள் சிறிய அளவில் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு மதுக்கரையில் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

வேளாண்மை

தொகு

கோவை மாவட்டம் தலைசிறந்த தொழில் மாவட்டமாக விளங்கிய போதிலும், தஞ்சை, திருச்சி மாவட்டங்களைப் போல, வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது. மொத்த நிலப்பரப்பில் 65 சதவிகிதம் விவசாயம் சாகுபடி செய்யப்படுகின்றன. இம்மாவட்ட மக்கள் தொகையில், 30 சதவீத மக்கள் தங்கள் வாழ்வு ஆதாரத்திற்காக வேளாண்மையையும், அது சார்ந்த தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு ஏறத்தாழ 177313 ஹெக்டர் ஆகும். இதில் நிகர பகுதி விதைப்பு மட்டும் ஏறத்தாழ 173599 எக்டேர் ஆகும். மேலும், பல போகமாக பயிர்கள் ஏறத்தாழ 3714 எக்டேரில் விளைகின்றன. மற்ற மாவட்ட வேளாண் குடிமக்களை விட, இந்த மாவட்ட விவசாயிகள், புதிய தொழில் நுட்பங்களை விரைந்து ஏற்றுக் கொண்டு, அதன் நெளிவு சுளிவுகளைக் கற்று, அவற்றில் முன்னோடியாக விளங்குகின்றனர். எனவே, இம்மாவட்டம் வேளாண் உற்பத்தியில், பல ஆண்டுகளாக முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக சிறந்து விளங்குகிறது.

வேளாண் உற்பத்தியை உயர்த்தவேண்டி, பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும், அது தொடர்பான தொழில்நுட்பங்களை, வேளாண் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான முயற்சியை, இம்மாவட்ட விவசாயத்துறை திறமையாக கைக் கொள்கிறது. அதனால், விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம், அவர்களுடைய பணவரவு நிலைமை மேம்பாடு அடைந்து காணப்படுகிறது. குறிப்பிடத் தக்க முறையில், பயிர் சுழற்சி முறையும், பயிர் பரவலாக்கல் முறையும், புதியத் தொழில் நுட்பங்களுடன், அதிமாக, தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA), நீடித்த வறட்சி நில வேளாண்மை, நுண் நீர்ப்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பயனற்ற நில மேலாண்மை திட்டம், கூட்டு பண்ணை முறைகள், விரிவான நீர்வடிநிலப்பகுதி வளர்ச்சியுடைய செயல்பாடுகள், பசுமையான இயற்கை உரங்கள், உயிரி மிகுந்த உரங்கள் பின்பற்றப் படுகின்றன. இதன் மூலம் மண் வளம் வளர்ச்சி, ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை(IPM), அதனால் நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை முறைகள், ஒருங்கினைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் முறைமை (INM) போன்றவைகளின் தொழில் நுட்பங்கள், பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக அதிக முன்னுரிமை கொடுத்து, செயற் படுத்தப்படுகின்றன.[12]

பயிர்கள்

தொகு

நெல், சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு முதலிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிறு வகைகளில் துவரை உளுந்து, கொள்ளு, மொச்சை, கடலை போன்ற பயிர் வகைகளும் சாகுபடி ஆகின்றன. பணப்பயிர்களான பருத்தி, நிலக்கடலை, புகையிலை, கரும்பு, தேங்காய், வாழை, மஞ்சள் போன்றவைகளும் பயிராகின்றன. பயிர் செய்யப் படும் பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 1,16,000 ஹெக்டர்கள். கோயம்புத்தூர், பொள்ளாச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை வட்டங்களில் அமராவதி, பவானி, ஆழியாறு ஆகியவற்றின் பாசன வசதியால் நெல் மிகுதியாக பயிரிடப்படுகின்றது. பல்லடம் வட்டாரத்தில் பழவகைகள் அதிக அளவில் விளைவிக்கப் படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் தேங்காய் உற்பத்தி, மற்ற மாவட்டங்களை விட அதிகமாகும். திருப்பூர், அவிநாசி ஊர்களில் விளையும் எலுமிச்சை தரம் அதிகமுள்ளவையாகக் கருதப்படுகின்றன. அதேபோல, பொள்ளாச்சி வட்டாரத்தின் வெற்றிலை, இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும். ஆனை மலையில் விளைவிக்கப்படும், ஏலக்காய், சின்கோனா, இரப்பர் மரங்களின் விளைச்சலாலும், இம்மாவட்ட வேளாண் குடிமக்கள் நல்ல பொருளாதார நிலைகளை அடைந்துள்ளனர்.

ஆறுகள்

தொகு

ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல், அமராவதி ஆறுகள் இந்த மாவட்டத்தில் ஓடுகின்றன. கல்லார், கௌசிகா, சங்கனூர் பள்ளம் போன்ற சிற்றாறுகளும் இங்கு பாய்ந்து வருகின்றன. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் எனக் கருதப்படும், சிறுவாணி ஆற்று நீர் இந்த மாவட்டத்தில் ஓடுகிறது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, கோவையின் சுற்றுலாத் தலங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.[13]

அணைகள்

தொகு

புதுக்காடு அணைக்கட்டு, குனியமுத்தூர் அணைக்கட்டு, நீலி அணைக்கட்டு, வெள்ளூர், சிங்காநல்லுர், குறிச்சி போன்ற அணைக்கட்டுகள் உள்ளன. இவற்றால் கோவை, பல்லடம் பகுதி நிலங்களில் 15,000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுக்கு, குறுக்கே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளால், 9000 ஏக்கர் நிலங்களும், உடுமலை வட்டார பயிர் நிலங்களும் நீர்ப்பாசன வசதியைப் பெறுகின்றன. அமராவதி நீர்த்தேக்கத்தின் வழியாக, 40,000 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதியை அடைகின்றன.

நீர்மின் திட்டம்

தொகு

பரம்பிக்குளம், ஆழியாறு நீர்மின் திட்டத்தின் படி, நான்கு இடங்களில், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சோலையாறு, ஆழியாறு, சர்க்கார்பதி மின்நிலையங்கள் வழியாக, 200 மெகா.வாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுவதால், இம்மாவட்டத்தில் வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்கும், சிறு தொழில் பட்டரைகளுக்கும் தங்கு தடையின்றி மற்ற தமிழக மாவட்டங்களை விட மின்சாரம் கிடைப்பது, இம்மாவட்ட சிறப்புகளுள் ஒன்றாகும்.

ஒருங்கிணைந்த கோவை மாவட்டம்

தொகு

தற்போதைய கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி , திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கேரள,கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளும் அடங்கும்

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு
 
சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை

கோயம்புத்தூர் மாவட்டம் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏழு மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன: அவை கோயம்புத்தூர் தெற்கு (பீளமேடு), கோயம்புத்தூர் மத்திய (காந்திபுரம்), கோயம்புத்தூர் வடக்கு (துடியலூர்), கோயம்புத்தூர் மேற்கு (கோவைப்புதூர்), மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சூலூர். இம்மாவட்டத்தை மாநிலங்களின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன:

நெடுஞ்சாலை எண் புறப்படும் இடம் சேருமிடம் வழி
544 சென்னை கொச்சி கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர்
948 கோயம்புத்தூர் பெங்களூரு கொல்லேகல், சாமராசநகர்
81 கோயம்புத்தூர் சிதம்பரம் கரூர், திருச்சி
181 கோயம்புத்தூர் குண்டலுபேட்டை மேட்டுப்பாளையம், உதகமண்டலம்
83 கோயம்புத்தூர் நாகப்பட்டினம் பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர்

நகரப் பேருந்துகள், மாவட்டத்தின் பிற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சேவை செய்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் பேருந்துகள் மாவட்டத்தை இணைக்கின்றன.

தொடருந்து

தொகு
 
தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில்

கோயம்புத்தூரில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. 1863 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடருந்து சேவை தொடங்கியது, கேரளாவையும், மேற்கு கடற்கரையையும் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் போத்தனூர் - மெட்ராஸ் பாதை அமைக்கப்பட்டது. அகல இருப்புப்பாதை தொடருந்துகள், கோயம்புத்தூரை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் இணைக்கின்றது. போத்தனூர் மற்றும் திண்டுக்கல் இடையே குறுகிய இருப்புப்பாதை, பாதை மாற்றத்தின் காரணமாக மே 2009 இல் மூடப்பட்டது.

வானூர்தி

தொகு
 
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இந்த மாவட்டத்திற்கு கோவையில் உள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சேவை செய்கிறது. கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத்து, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கும் உள்நாட்டு வானூர்திகளையும், சார்ஜா, இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கான சர்வதேச வானூர்திகளையும் இயக்கப்படுகிறது. இந்த ஓடுபாதை 9,760 அடி (2,970 மீ) நீளம் கொண்டது மற்றும் சர்வதேச விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பரந்த உடல் மற்றும் "கொழுப்பு-வயிற்று" விமானங்களைக் கையாளும் திறன் கொண்டது. காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை நிலையம், இந்திய வான்படையின் விமானத் தளமாகும்.

சுற்றுலா

தொகு
 
ஆழியார் நீர் பிடிப்பு பகுதி
  • பொள்ளாச்சியில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள வால்பாறை கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வால்பாறை தேயிலைத் தோட்டங்களுக்கு பிரபலமானது.
  • கோயம்புத்தூரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஆனைமலை வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சரணாலயத்தின் பரப்பளவு 958 கி.மீ2 ஆகும்.
  • டாப் ஸ்லிப் என்பது ஆனைமலை மலைத்தொடரில் சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
  • பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டின் ஆனைமலை மலைத்தொடருக்கும், கேரளாவின் நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பரம்பிக்குளம், சோலையார் மற்றும் தெக்கடி உள்ளிட்ட பல ஆறுகளால் வடிகட்டப்பட்ட மலைப்பாங்கான மற்றும் பாறையான பகுதிகள் ஆகும்.
  • பரம்பிக்குளம் - ஆழியார் அணைத் திட்டம் நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்ட பரம்பிக்குளம், ஆழியார், நிரார், சோலையார், தூணக்கடவு மற்றும் பாலார் நதிகளைப் பயன்படுத்த பல்வேறு உயரங்களில் சுரங்கங்கள் மற்றும் கால்வாய்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அணைகள் உள்ளன.
  • காரமடை வனப்பகுதியின் சுற்றுச்சூழலை, தமிழக அரசு சுற்றுலாத் தலமாக ஊக்குவிக்கிறது. கோயம்புத்தூரில் உள்ளவர்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இது கோயம்புத்தூர் மாவட்டத்தில், காரமடை மலைத்தொடரின் பரளிக்காடு பகுதியில் உள்ள பில்லூருக்கு அருகில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

தொகு
  1. S. Krishnaswami Aiyangar (2009). Some Contributions of South India to Indian Culture. BiblioBazaar. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-113-17175-7.
  2. 2.0 2.1 "The land called Kongunad". தி இந்து. 19 November 2005 இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060329231820/http://www.hindu.com/mp/2005/11/19/stories/2005111902090200.htm. பார்த்த நாள்: 9 June 2010. 
  3. Vanavarayar, Shankar (21 June 2010). "Scripting history". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110160431/http://www.hindu.com/mp/2010/06/21/stories/2010062151120400.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
  4. M, Soundariya Preetha (30 June 2007). "Tale of an ancient road". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070703062941/http://www.hindu.com/2007/06/30/stories/2007063054660500.htm. பார்த்த நாள்: 9 May 2011. 
  5. Revenue Administration
  6. Local Bodies Administration
  7. Decadal Variation In Population Since 1901
  8. Coimbatore District : Census 2011 data
  9. DISTRICT CENSUS HANDBOOK COIMBATORE
  10. Elected Representative
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  12. https://coimbatore.nic.in/agriculture/
  13. https://www.trawell.in/tamilnadu/coimbatore/kodiveri-dam-waterfalls

வெளி இணைப்புகள்

தொகு
  1. கோயம்புத்தூர் மாவட்டம் அரசின் அதிகாரப்பூர்வதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயம்புத்தூர்_மாவட்டம்&oldid=3740278" இலிருந்து மீள்விக்கப்பட்டது