பேரூர் பட்டீசுவரர் கோயில்

கோயில்

பேரூர் பட்டீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும்.[1] திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.இக்கோயில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

திருப்புகழ், தேவாரம் பாடல் பெற்ற
பேரூர் பட்டீசுவரர் கோயில்
கோயில் நுழைவாயில் விமானம்
பேரூர் பட்டீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
பேரூர் பட்டீசுவரர் கோயில்
பேரூர் பட்டீசுவரர் கோயில்
கோயிலின் அமைவிடம்
புவியியல் ஆள்கூற்று:10°58′N 76°55′E / 10.97°N 76.91°E / 10.97; 76.91
பெயர்
பெயர்:பேரூர் பட்டீசுவரர் கோயில்
ஆங்கிலம்:Perur Pateeswarar Temple
அமைவிடம்
ஊர்:பேரூர்
மாவட்டம்:கோயம்புத்தூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பட்டீசுவரர்
தாயார்:பச்சைநாயகி
தல விருட்சம்:பிறவாப்புளி மற்றும் இறவாப்பனை
தீர்த்தம்:தெப்பக்குளம்
சிறப்பு திருவிழாக்கள்:நாற்று நடவுத் திருவிழா
பாடல்
பாடல் வகை:திருப்புகழ், தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர், சமபந்தர், அப்பர், அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
தொன்மை:சுமார் 1800 ஆண்டுகள்
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு
அமைத்தவர்:கரிகால் சோழன்
வலைதளம்:http://www.perurpatteeswarar.tnhrce.in/

இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.[2]

வரலாறு

தொகு

இக்கோயில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.[3]

பெயர் காரணம்

தொகு

ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.

அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.

பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித்

தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார். “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.

இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோயிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.[4]

பாடல் பெற்ற தலம்

தொகு

இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

 
18 மார்ச்சு 2019 அன்று பேரூரில் பங்குனி உத்திரத்தேர்

பங்குனி உத்திரம்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக நடைபெறும். அப்பொழுது கோயில் தேர் அலங்காரப்படுத்தப்பட்டு வீதியில் உலா வரும். கோயில் தேரில் பட்டீசுவரர் - பச்சைநாயகி அம்மன் இருப்பர்.[5] மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர் நான்கு வம்ச பட்டகாரர்கள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பார்கள்

நாற்று நடவுத் திருவிழா

தொகு
 
காசிமுனிவரின் புதல்வனை சிவபெருமான் வதம் செய்யும் சிற்பம்
 
ஆலயத்தில் உள்ள கலை நயம் மிகுந்த தூண் ஒன்று

தமிழ் உழவர்கள் இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கும் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா தமிழர் திருவிழாவாகும். திருப்பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுக்கொருமுறை நாற்று நடும் விழா ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சத்திரத்தில் நாற்று நடவும், உத்திரத்தில் திருமஞ்சனமும் ஆக கோலாகலமாய் நடக்கிறது. காஞ்சி நதிக்கரையில் நாற்று நடும் திருவிழா இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பட்ட வரலாறு பின்வருமாறு:[4]

சகலமும் தானே என்ற தத்துவத்தை சுந்தரருக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சுந்தரர் திருப்பேரூர் வந்திருந்தபோது விவசாயியாக அவதாரமெடுத்தார். சிவபெருமான் மள்ளராகவும் உமாதேவி மள்ளியாகவும் பெண்ணாகவும் நாற்று நடச் சென்றனர். தனது பக்தரான சுந்தரரை பற்றி நன்கு அறிந்த சிவபெருமான் 'சுந்தரன் வந்து கேட்டால் நான் இருக்கும் இடத்தை சொல்லாதே' என்று நந்தி தேவரை எச்சரித்துவிட்டு சென்றார். இறைவனை தரிசிக்க கோயிலுக்கு வந்த சுந்தரமூர்த்தி நாயானார், கோயிலில் இறைவனை காணாமல் நந்தி தேவரை விசாரித்தார். சிவபெருமானின் எச்சரிக்கையையும் மீறி நந்தி தேவர் சுந்தரரிடம் இறைவன் இருக்குமிடத்தை கூறிவிட்டார். சுந்தரரும் நதிக்கரையில் நாற்று நட்டுக் கொண்டிருந்த சிவபெருமானை தரிசித்து மகிழந்தார். நந்தி தம் சொல் மீறியதற்காகக் கோபம் கொண்டு, கையிலிருந்த மண் வெட்டியால் நந்தியின் தாடையில் சிவபெருமான் அடித்து விட்டார். (இந்தக் கோயிலில் நந்தி தேவரின் தாடை சற்று சப்பையாகக் காட்சியளிக்கிறது). பிறகு நந்தி தேவர், மன்னிப்பு வேண்டி தவமிருக்க, தனது தாண்டவ தரிசனத்தை அவருக்கு சிவபெருமான் அருளினார்.

சிறப்பு

தொகு

இக்கோயிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. இக்கோயிலின் மண்டபம் ஒன்றில் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளன.

இக்கோயிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் (சிவபெருமான்) சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. இக்கோயில் பிறவாப்புளி (புளியமரம்) மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது.

வழிபாட்டு நேரம்

தொகு

இத்திருக்கோயிலை அனைத்து நாட்களிலும் வழிபடலாம். வழிபாட்டு நேரங்கள், கீழ்க்கண்ட வாரு [6]

காலை : 05:30 முதல் 01:00 வரை

மாலை : 04:00 முதல் 09:00 வரை

கல்வெட்டு செய்தி

தொகு

பேரூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் தண்ணீர் பிரச்சனையில் உடைக்கப்பட்ட கரையை சீராக்கும் செலவை யார் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.[7] இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rich in history and architecture". Archived from the original on 2008-01-23. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  2. குமுதம் ஜோதிடம்; 14.11.2008; ’படும் துன்பங்கள் பனிபோல் விலகும் பட்டீஸ்வரர் திருவருளால்!’ கட்டுரை
  3. "History of perur temple". Archived from the original on 2014-09-19. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2014.
  4. 4.0 4.1 "பட்டிபுரம் - காமதேனுபுரம் - பட்டிநாதர்". Archived from the original on 2014-09-18. பார்க்கப்பட்ட நாள் மே 8, 2014.
  5. "பேரூர் பட்டீசுவரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்". March 19, 2019. Archived from the original on அக்டோபர் 20, 2020. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-09-06.
  7. அமுதசுரபி;தீபாவளிச் சிறப்பிதழ் 2011; கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்; பக்கம் 226
  8. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, வ.எண்.114, ப.332

வெளி இணைப்புகள்

தொகு