பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில்

பட்டீச்சரம் பட்டீசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காமதேனுவின் புதல்வியான பட்டி பூசித்த தலமென்பதும் சம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 23-ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
பட்டீச்சரம் பட்டீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சத்திமுத்தம், திருச்சத்திமுத்தம், தேவிவனம்
பெயர்:பட்டீச்சரம் பட்டீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பழையாறை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பட்டீச்சுரர், தேனுபுரீசுவரர்.
தாயார்:ஞானாம்பிகை, பல்வளை நாயகி.
தல விருட்சம்:வன்னி மரம்
தீர்த்தம்:ஞான தீர்த்தம். (கோடி தீர்த்தம்)
சிறப்பு திருவிழாக்கள்:முத்துப்பந்தல், ரதசப்தமி, சோமவார வழிபாடு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்திய கட்டிடக்கலை

தல வரலாறு

தொகு
  • காமதேனுவின் புதல்வியருள், "பட்டி" பூசித்தது ஆதலால் இத்தலம் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது.
  • இத்தலத்தில் அம்பிகை தவஞ்செய்ததால் 'தேவிவனம் ' என்றும் கூறுவர்.
  • ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
  • இராமேசுவரத்தில் இராமர் இராமநாதரைப் பிரதிட்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு.
  • இங்கும் இராமலிங்கச் சந்நிதியும், கோடி தீர்த்தமும் உள்ளது.

தல சிறப்புக்கள்

தொகு
  • தல விநாயகராக அனுக்ஞை விநாயகர், மதவாரணப்பிள்ளையார் உள்ளார்.
  • ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய சிறப்புடைய தலம்.
  • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.
  • விசுவாமித்திரர் பிரம்ம ரிசி பட்டம் பெற்றது இத்தலத்தில் தான்.
  • இங்குள்ள துர்க்கை, சோழர் காலத்தில் பிரதிட்டை செய்ததாக கல்வெட்டு உள்ளது.
  • ஆனித் திங்கள் முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப்பந்தல் பெற்ற திருவிழா நடைபெறுகிறது.
  • இத்தலபுராணம் சமசுகிருதத்தில் உள்ளது.
  • இது தமிழில் உரைநடையில் பட்டீசுவரர் மான்மியம் எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

துர்க்கையம்மன் சன்னதி

தொகு

பட்டீசுவரர் கோயிலில் கிழக்கு வாயில், தெற்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய மூன்று வாயில்கள் பயன்பாட்டில் உள்ளன. கிழக்கு வாயிலின் உள்ள இராசகோபுரத்தின் வழியே வந்தால் நந்தியைக் கடந்து உள்ளே பட்டீசுவரர் கோயிலுக்கு நேரடியாக வரலாம். உள்ளே செல்லும்போது இடது புறம் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. தெற்கு வாயிலின் வழியே வந்தால் முதலில் கோயில் குளத்தைக் காணமுடியும். வடக்கு வாயிலின் வழியே இராச கோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ள துர்க்கையம்மன் சன்னதியைக் காணமுடியும்.

பட்டீசுவரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி, சந்நதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிர திரும்பியிருக்கவில்லை.[1]

திருத்தலப் பாடல்கள்

தொகு
  • இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

கலித்துறை
(கூவிளங்காய் 4 / கூவிளங்கனி)

பாட(ன்)மறை சூட(ன்)மதி பல்வளையொர் பாகமதின் மூன்றொ(ர்)கணையால்

கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்

மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்

வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே! 1


கலித்துறை

(கருவிளங்காய் காய் 3 / கனி)

மறையி(ன்)ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல் தோற்றநிலையாம்

இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்ல(ர்)மிகவே. 6

குடமுழுக்கு

தொகு

இக்கோயில் மற்றும் இக்கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலின் குடமுழுக்கு மன்மத ஆண்டு தை மாதம் 15-ஆம் நாள் 29 செனவரி 2016[2] அன்று நடைபெற்றது.[3]

கோவிந்த தீட்சிதர்

தொகு

இக்கோயில் கோவிந்த தீட்சிதரால் போற்றப்பட்டது என்பதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலமாக அறியலாம். இக்கோயிலின் ஞானாம்பிகை சன்னதியில் கோவிந்த தீட்சிதர் மற்றும் அவருடைய துணைவியார் நாகமாம்பா ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய உருவச்சிலையில் அவர் நின்ற நிலையில் வணங்கும் கோலத்தில் காணப்படுகிறார். அவருடைய துணைவியார் சிலை ஐந்தரை அடி உயரமாகும்.[4]

இவற்றையும் பார்க்க

தொகு

கோயில் படத்தொகுப்பு

தொகு

29 சனவரி 2016 குடமுழுக்கு நாளில் கோயில்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருவைகாவூர் அருள்மிகு வில்வவனேச்வரர் கோயில் மான்மியம், ஏ.எஸ்.ரங்காச்சாரி, பிப்ரவரி 2001
  2. "பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் 29ம் தேதி நடக்கிறது, தினகரன், 20.1.2016". Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-29.
  3. குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், திரளான மக்கள் பங்கேற்பு, தினமணி, 30 ஜனவரி 2016
  4. குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.267

வெளி இணைப்புக்கள்

தொகு