முத்துப்பந்தல் விழா

முத்துப்பந்தல் விழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படும் விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஞானசம்பந்தர்

மூன்று நாள் விழா தொகு

2018இல் இவ்விழா சூன் 13ஆம் நாளன்று தொடங்கியது. முதல் நாளில் விழா முதல் திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அளிக்கும் நிகழ்வுடன் தொடங்கி, தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இரண்டாம் நாளன்று முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளித்து வீதியுலா நடைபெற்றது. அதே நாளில் முத்துத் திரு ஓடத்தில் ஞானசம்பந்தர் வீதியுலா நடைபெற்றது. மூன்றாம் நாளன்று முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவதும், அங்கிருந்து முத்துப்பல்லக்கில் அடியார்களுடன் இறைவனை தரிசித்தலும் நடைபெற்றது. [1]

முத்துப்பந்தல் விழா தொகு

வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வு ஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அளித்து வரவேற்பதாகும். [2] தேனுபுரீஸ்வரர் கோயிலுள்ள இறைவனை தரிசிக்க திருஞானசம்பந்தர், அடியார் கூட்டத்தோடு வரும்போது நண்பகலாக இருந்தது. வெப்பம் அதிகமாக இருந்ததை அறிந்த இறைவன் தன் பூதகணங்களை அனுப்பி திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்து, அவரை அழைத்துவருமாறு கூறுகிறார். அவருடைய அழகைக் காண இறைவன் விரும்பியபோது, அத்தலத்தில உள்ள நந்தியம்பெருமான் விலகி இருப்பதை இத்தலத்தில் காணலாம். முத்துப்பந்தல் விழாவின்போது திருஞானசம்பந்தர், திருமடாலயத்திலிருந்து திருமேற்றளிகை கைலாசநாதர் கோயிலுக்கு முத்துப்பல்லக்கில் செல்கிறார். அங்கிருந்து திருச்சத்திமுற்றம் சக்திவனேஸ்வரர் கோயிலை அடைந்தார். பின்பு அங்கிருந்து முத்துப்பந்தலில் வந்து தேனுபுரீஸ்வரரை வழிபட்டார். [3] [4]

விழா நிகழ்வு தொகு

முத்துப்பல்லக்கில் வந்த ஞானசம்பந்தர், கோயிலின் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளேயுள்ள நந்தி மண்டபத்தின் அருகே கோயிலின் திருக்குளத்தின் முன்பு வந்து, அங்கிருந்து அடுத்த கோபுரம் வழியாக உள்ளே சென்றார். கோயிலின் திருச்சுற்றினை வலம் வந்து முன் மண்டபத்தில் இருந்து இறைவனை வணங்கினார். இறைவனுக்கு நேராக அவர் இருக்கும்போது இருவருக்கும் கற்பூர ஆர்த்தி காட்டப்பட்டது. அடுத்து முன் மண்டபத்தில் தோன்றினார். அப்போது அவருக்கு உரிய பூசைகள் செய்யப்பட்டன. திரளான மக்கள் இந்நிகழ்வினை மிகவும் பக்தியோடு கண்டு இன்புற்றனர்.

படத்தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா தொடக்கம், தினமணி, 14 சூன் 2018
  2. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் வரவேற்பு, ம், தினமணி, 15 சூன் 2018
  3. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் விழா, தினமணி, 16 சூன் 2018
  4. Hundreds take part in temple festival, The Hindu. 16 June 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துப்பந்தல்_விழா&oldid=2663456" இலிருந்து மீள்விக்கப்பட்டது