கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர்.[1] இவர்களைப் பாடிய புலவர்கள், இவர்களுக்குப் பல சிறப்பு அடை மொழிகளைக் கொடுத்துள்ளார்கள். அவற்றுள், முதுகோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர், நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் போன்றவை அடங்குகின்றன. இவற்றிலிருந்து கோசர்கள் வாய்மை தவறாதவர்கள் என்றும், பல மொழிகளை அறிந்தவர்கள் என்பதும் விளங்குவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

கோசர் பெற்றுள்ள அடைமொழிகளும் வரலாறும்

தொகு
  • நாலூர் கோசர் - இவர்கள் பறை முழக்கி, சங்கு ஊதி, வரி வாங்கினர். [2]
  • ஊர்முது கோசர் - அன்னி மிஞிலியின் தந்தையின் கண்ணை ஊர்முது கோசர் குருடாக்கிவிட்டனர். அன்னி மிஞிலி கலத்தில் உணவு உண்ணாமலும், ஆடையைத் துவைத்துக் கட்டாமலும் பாடுகிடந்தாள். போரில் வல்ல திதியனிடம் சொல்லி வஞ்சம் தீர்த்துக்கொண்டு சினம் தணிந்தாள். [3]
  • புனை தேர்க் கோசர் - கோசர் விரைந்து செல்லும் தேரில் சென்று ஆலமரத்தடியில் முரசு முழக்கி, பகைவரை அழித்தனர். அப்போது மோகூர் மன்னன் பணியவில்லை. அப்போது தென்திசை நோக்கிப் கடையெடுத்து வந்த மோரியர் முன்னேறுவதற்காக அவர்களின் தேர்ச்சக்கரம் உருளுவதற்காக, மலையில் வழி அமைத்துக் கொடுத்தனர். பொருள் தேடச் செல்லும் தமிழர் அந்தத் தேர்வழியைக் கடந்து செல்வார்களாம். [4]
  • பல் இளங் கோசர் - இளங்கோசர் எனப்படுவோரின் மகளிர் கடலில் நீராடுவர். அப்போது கடல்நிலத்தில் பூத்த ஞாழல் மலர்களையும், கழனி உழவர் வயல்நிலத்தில் களைந்து எறிந்த குவளைப் பூக்களையும், காப்புள்ள முல்லைநிலத்தில் பூத்த முல்லைப் பூக்களையும் சேர்த்துக் கண்ணியாகக் கட்டி அணிந்துகொள்வர். இவர்கள் வாழ்ந்த ஊர் செல்லி எனப்படும் செல்லூர். இவர்களின் அரசன் "செல்லிக் கோமான்". [5]
  • வாய்மொழிக் கோசர் - கோசர் சொன்ன சொல் தவறாதவர்கள். யாது காரணத்தாலோ பொலம்பூண் கிள்ளி என்னும் சோழன் இந்தக் கோசர் படையை அழித்தான். இந்தச் சோழன் காவிரிப்பூம் பண்ணினத்தைத் தலைநகராகக் கொண்டு காவிரிப் படுகை நாட்டை ஆண்டுவந்தான். [6]
  • ஒன்றுமொழிக் கோசர் - அழுந்தை (அழுந்தூர், திருவழுந்தூர்) அரசன் திதியன். அன்னி மிஞிலி இவனிடம் முறையிட்டு, தன் தந்தையின் கண்ணைக் குருடாக்கிய ஒன்றுமொழிக் கோசரைப் பழிதீர்த்துக்கொண்டாள். இந்தந் திதியன் "கடுந்தேர்த் திதியன்" எனப் போற்றப்படிகிறான். [7]
  • பல்வேல் கோசர் - இவர்களின் தலைவன் (பெருமகன்) அஃதை. இவன் நெய்தலங்கானல் (நெய்தலஞ்செறு) என்னும் பகுதியில் அரசாண்டவன். பல்வேல் கோசர் இவனைப் போற்றித் தம் ஊரைக் காப்பாற்றிக்கொண்டனர். இவர்கள் நல்லவனாக இல்லாவிட்டாலும் நண்பனாயின் கைவிடமாட்டார்கள். நெய்தலஞ்செறு காதலியின் தோள் போல இன்பம் தருவது. [8]
  • கருங்கண் கோசர் - இவர்கள் சிறந்த போர் வீரர்கள். அதனால் இவர்கள் முகத்தில் தழும்பு இருக்கும். இவர்கள் மிகவும் செல்வம் படைத்தவர்களாக விளங்கினர். தொல்குடி மகள் இந்தக் கோசரின் ஊர் போன்ற செல்வத்தை பெண்ணுக்குச் சீர்வரிசையாக (முலைவிலையாக)த் தருவதாக இருந்தாலும், பெற்றுக்கொள்ள-மாட்டார்கள். தொல்குடி மறவனையே மணந்துகொள்வாள். [9]
  • இளம் பல் கோசர் - தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் தலைமையை ஏற்று இளம்பல் கோசர் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தம் வாள் வலிமையால் செழியனுக்கு வெற்றிகள் பலவற்றுத் தேடித் தந்தனர். இவர்கள் செழியன் சொன்ன சொல்லை நிறைவேற்றி வந்தனர். [10]
  • செம்மல் கோசர் - இவர்கள் கோசர்களின் மூதாதையர். துளுநாட்டில் வாழ்ந்துவந்தனர். வந்தவர்களையெல்லாம் முன்பே அறிந்தவர் போன்று வரவேற்றுப் பாதுகாக்கும் பண்பினை உடையவர்கள். துளு நாட்டில் பாகற்காய் விளைச்சல் அதிகம். பாகல்-பழத்தை விரும்பி உண்ணும் மயில்களும் அதிகம். [11]
  • மனைக் கோசர் - இவர்கள் வாட்டாறு நிலப் பகுதியில் வாழ்ந்தனர். இவர்களின் தலைவன் எழினியாதன். இவர்கள் கள் உண்டு குரவை ஆடுவர். இவர்களின் அரசன் வலிமை இல்லாதவர்களுக்குத் துணைநிற்பவன். [12]
  • வலம்புரி கோசர் - இவர்களின் அவைக்களம் பெரிதும் மதிக்கப்பட்டது. அடங்காத "அழும்பில்" என்பவனையும் அடக்கியது. [13]
  • வென்வேல் இளம்பல் கோசர் - இவர்கள் முருக்கமரத்தில் வேலையும் அம்புகளையும் பாய்ச்சிப் போர்ப்பயிற்சி செய்வது வழக்கம். [14]
  • ஒன்றுமொழி கோசர் - இவர்கள் நன்னனின் காவல்மரமான மாமரத்தை வெட்டி வீழ்த்தியவர்கள். அப்போது தாக்கிய நன்னனையும் சூழ்ச்சியால் கொன்று வீழ்த்தியவர்கள். தன் காவல் மரத்து மாங்காய் நீரில் மிதந்து வந்ததை எடுத்து உண்ட கற்பினிப் பெண்ணுக்குக் கொல்லை தண்டனை வழங்கிய "பெண்கொலை புரிந்த நன்னன்". [15]
  • நால் ஊர்க் கோசர் - இவர்கள் பறை முழக்கியும், சங்கு ஊதியும், மன்னனுக்காக வரி தண்டினர். [16] கோசர் வழி அகதா என்ற மறவர் இனக்குழுவினர் வரி வாா்குவதுஙழிி குலத்தொழிலாகக் கொண்டுள்ளனர்.

கோசர் பற்றிய கருத்துக்கள்

தொகு

தமிழ் மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணரின் கூற்றுப்பட்டி கோசர்கள் தான் தற்போது தென்னிந்தியாவில் காணப்படும் செங்குந்தர் கைக்கோள முதலியார்களே என்று கூறுகிறார். கோசர் என்பது கோளர் என்று மாறியது, பின்பு கோளர் என்பது கைக்கோளர் என்று மறுவியது.[1] இவற்றுள் ஒன்றிரண்டேயன்றி எல்லாம் உண்மையல்ல என்ற கருத்தும் நிலவுகிறது. பிறகு இடைக்காலங்களில் சோழர்களின் போர் படையில் இணைந்தனர். கைக்கோளர் படை என்று பல போர் படைகள் உருவாகின. இவர்களின் பழக்க வழக்கங்களும், சமைய பண்புகளும் தமிழ் கடவுளான முருகனை பின்பற்றியவர்கள். இதன்மூலம் கோசர்கள் பூர்வ தமிழ் குடிகள் என்று தெரிகிறது. தமிழகத்தில் இருந்து வடக்கே படையெடுத்த போர்களில் இவர்கள் பங்குப் பெற்றதால் இவர்களைப்பற்றி வடக்கிலும் சில குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்புகளை வைந்து சிலர் இவர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இவர்கள் பூர்வ தமிழ் குடிகலே, தமிழ் வளர்ந்தோங்கப் பெரிதும் அக்கரை காட்டியவர்கள் என்று நிறைய சான்றுகள் கூறுகிறது.[17]

'ஆகுதை' என்பவன் கோசர் குடியின் தலைவன சங்க இலக்கியங்களில் பேசபடுகிறான்.அகுதை -மறவர் இனக்குழு ஒன்றின்(அகதா மறவர்) முன்னோனாக குறிப்பிடப் படுகிறான்.சங்க இலக்கியங்களில் கூட அகுதை குலத்தவர்கள் அகுதை என்ற பெயரைசூடிக் கொண்டார்கள்[18] என்ற குறிப்பு உள்ளது. இந்த மக்கள் குழுவினர் 'அகதா' என்றே வெள்ளையர்கால ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.கோசர் என்பவர் மறவர் இனக்குழுவின் ஒருபிரிவினர் என்றும் கொள்ளலாம்.

கோசர்களோடு தொடர்பு உடைய கோசாம்பி என்ற (புத்தர்கால)வடஇந்திய நகரம் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டதை நற்குடி வெளிர் வரலாறு என்ற நூல் கூறுகிறது[19].அந்த ஊர் வரலாறு கோசர்களால் உருவாக்கப்பட்டதாலும் கோச மரங்கள்[20] நிறைததாலும் அப் பெயர் பெற்றது என்கிறது.(கோசமரா-வேப்பமரம் -பிரகிருதமொழி).கோசர் காவல் மரம் வேப்பமரம் என்பதால் கோசர் என்பவர்கள் பாண்டியரின் படையினர் என்பது தெளிவு.

மதுரை வட்டார வழக்கில் கோசுதல் என்ற சொல் தலையை வெட்டுதல் என்ற பொருளில் உள்ளது.கோசர்கள் பாண்டியரின் படைவீரர்கள்[21] என்ற குறிப்பு மதுரைக்காஞ்சி என்ற நூலிலும் உள்ளது.

பாண்டியரின் பிரதிநிதியாக கோசர்கள் வட இந்திய எங்கிலும் ஆண்டனர்.கோசர் என்ற பெயரை ஒட்டிய பலநூறு ஊர்கள் இன்றும் வட இந்தியாவில் உள்ளன.

வலம்புரி கோசர் அவைக்களம் வலம்புரிச் சங்கு போன்ற அமைப்பினைக் கொண்டிருந்ததால் இவர்கள் இவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளனர். [22] அடைநெடுங் கல்வியார். இவர்கள் தான் தமிழகத்தின் இருண்ட காலத்தில் தமிழகத்தை ஆண்ட களப்பிரர்கள் என்று தமிழக தொல்பொருள ஆய்வாளர்களான நடன காசிநாதன் போன்றோர் சந்தேகிக்கின்றனர்.[23]

கோசர் கொங்குமண்டலத்தில் இருந்துகொண்டு அரசாண்டனர். தமிழ் வளர்ந்தோங்கப் பெரிதும் அக்கரை காட்டியவர்கள். [24] [25]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பாவாணர், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் (1984). தமிழியற் கட்டுரைகள். தமிழ்நாடு: தமிழ் இணையக் கல்விக்கழகம். pp. 104–119. {{cite book}}: Check date values in: |year= / |date= mismatch (help); line feed character in |first= at position 11 (help)
  2.  பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
    தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
    நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
    வாய் ஆகின்றே (குறுந்தொகை 15)

  3.  வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, 5
    ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
    கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
    சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
    மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
    செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் 10
    இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
    அன்னிமிஞிலி போல, (அகநானூறு 262)

  4.  துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
    தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
    இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
    தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10
    பணியாமையின், பகை தலைவந்த
    மா கெழு தானை வம்ப மோரியர்
    புனை தேர் நேமி உருளிய குறைத்த
    இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், (அகநானூறு 251)

  5.  கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
    கழனி உழவர் குற்ற குவளையும்,
    கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10
    பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
    மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் (அகநானூறு 216)

  6.  வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
    வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
    நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, 10
    பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
    காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன (அகநானூறு 205)

  7.  தொடுகலம்; குறுக வாரல் தந்தை
    கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
    ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, 10
    கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
    அன்னி மிஞிலியின் இயலும்
    நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.(அகநானூறு 196)

  8.  நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
    சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின்,
    புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
    மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
    காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் 5
    இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
    வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, (அகநானூறு 113)

  9.  இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர்,
    கருங் கட் கோசர் நியமம் ஆயினும்,
    உறும் எனக் கொள்குநர் அல்லர்
    நறு நுதல் அரிவை பாசிழை விலையே. (அகநானூறு 90)

  10.  பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
    பெரும் பெயர் மாறன் தலைவனாக,
    கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர்,
    இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப, (மதுரைக் காஞ்சி)

  11.  எம் வெங் காமம் இயைவது ஆயின்,
    மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
    கொம்மை அம் பசுங் காய்க் குடுமி விளைந்த
    பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
    தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, 5
    வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
    செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
    அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல (அகநானூறு 15)

  12.  கீழ் நீரான் மீன் வழங்குந்து;
    மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து;
    கழி சுற்றிய விளை கழனி,
    அரிப் பறையான் புள் ஓப்புந்து;
    நெடுநீர் கூஉம் மணல் தண் கான் 5
    மென் பறையான் புள் இரியுந்து;
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீம் தேறல் நறவு மகிழ்ந்து,
    தீம் குரவைக் கொளைத் தாங்குந்து;
    உள் இலோர்க்கு வலி ஆகுவன், 10
    கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்,
    கழுமிய வென் வேல் வேளே,
    வள நீர் வாட்டாற்று எழினியாதன்;
    கிணையேம், பெரும! (புறநானூறு 396)

  13.  மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் 5
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
    வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,
    மன்றுள் என்பது கெட... (புறநானூறு 283)

  14.  வென் வேல்
    இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
    இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் 10
    பெரு மரக் கம்பம் போல,
    பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! (புறநானூறு 169)

  15.  மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
    அழியல் வாழி தோழி! நன்னன்
    நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
    ஒன்றுமொழிக் கோசர் போல,
    வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. (குறுந்தொகை 73)

  16.  பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
    தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
    நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
    வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
    சேயிலை வெள் வேல் விடலையொடு
    தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந்தொகை 15)

  17. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=197&pno=104
  18. https://books.google.co.in/books?id=Ggn5DwAAQBAJ&pg=RA1-PA12&lpg=RA1-PA12&dq=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=q4xenMTNVR&sig=ACfU3U2dG2t7DdYehdPHk18etmzdUdmbNQ&hl=en&sa=X&ved=2ahUKEwjg7YqwpqDsAhXMzjgGHRDfAb4Q6AEwFnoECAEQAg#v=onepage&q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&f=false
  19. http://tamilansekar.blogspot.com/
  20. https://www.wisdomlib.org/definition/kaushambi
  21. https://ta.m.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/50
  22. புறம் 283
  23. பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  24. கொங்கு மண்டல சதகம், பாடல் 40, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 48, 49
  25.  பனிமிகு நீள்கடல் சூழ் மேதினியில் பலரும் மெச்ச
    இனிமை தரும் தமிழ்மாது களிப்புற்று எலாவணியும்
    கனிவுறப் பூண்டு வளர்ந்தோங்கச் செய்யும் கருத்தோடு நன்
    மனம் மிகு கோசரும் வாழ்ந்து ஆண்டதும் கொங்கு மண்டலமே. (கொங்கு மண்டல சதகம் பாடல் 40)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசர்&oldid=4151372" இலிருந்து மீள்விக்கப்பட்டது