களப்பிரர் (Kalabhra dynasty) தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.[சான்று தேவை] இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. களப்பிரர் ஆட்சிக்காலத்தை, கலை-இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இருண்ட காலம் என்பர்.

களப்பிர பேரரசு
250–600
களப்பிரர் எல்லைகள்
களப்பிரர் எல்லைகள்
தலைநகரம்காவிரிப்பூம்பட்டினம், மதுரை
பேசப்படும் மொழிகள்பிராகிருதம், தமிழ்
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்
சைனம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 5-ஆம் நூற்றாண்டு
அச்சுத விக்ராந்தன்
• 
பவத்திரியின் திரையன்
• 
வேங்கடத்தின் புல்லி
திருப்பதி
வரலாற்று சகாப்தம்மத்திய கால இந்தியா
• 3-ஆம் நூற்றாண்டு
அண். 250
• 7-ஆம் நூற்றாண்டு
அண். 600
முந்தையது
பின்னையது
பழந்தமிழ் நாடு
பல்லவர்
பாண்டியர்
தற்போதைய பகுதிகள் இந்தியா

வரலாற்றுச் சான்றுகள்

பொ.ஊ. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் எனும் பௌத்தத் துறவி பாளி மொழியில் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் அச்சுத விக்கிராந்தன் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.[1][2]

இலக்கிய வளர்ச்சி

களப்பிரர் ஆட்சியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை, ஆகிய ஒன்பது நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் மற்றும் முத்தொள்ளாயிரம் களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும்.[3]

பெரியபுராணம் குறிப்பிடும் செய்திகள்

மதுரையில் வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார். மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்குச் சந்தனக் காப்பு செய்வதற்கான சந்தனத்தை அரைத்து அவர் நாள்தோறும் வழங்கிவந்தார். இவரது திருப்பணிக்கு இடையூறு செய்தவர் அப்போது மதுரையை ஆண்ட மன்னன். அவன் சமண மதத்தைச் சேர்ந்தவன்.[4] இவர்கள் வடுகர், கருநாடர் இனத்தவர். தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தனர்.[5] மதுரையை வென்று ஆளத் தொடங்கினர்.[6] மதுரை மக்கள் அடிமை ஆயினர்.[7] அப்போது மதுரையை ஆண்ட அரசன் வடுகக் கருநாடர் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான்.[8]

இந்தக் குறிப்புகள் களப்பிரர் என்போர் கருநாடக வடுகர் என்றும், சமண சமையத்தவர் என்றும் காட்டுகின்றன. திருஞான சம்பந்தர் சமணர்களோடு போராடி வென்ற செய்தியும் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது.

கள்வர் கோமான்

வேங்கட நாட்டை ஆண்ட அரசன் புல்லி.[9] இவன் கள்வர் கோமான் எனக் குறிப்பிடப்படுகிறான்.[10] குல்லைப் பூ மாலை சூடியவர்கள் வடுகர். இவர்கள் நாட்டு எல்லைப் பகுதியில் உள்ளது கட்டி நாடு.[11] இவற்றை எண்ணிப்பார்க்கும்போது கள்வர் (களவர்)[12] என்போர் களப்பாளர் ஆயினர் எனக் கொள்ளல் ஏற்புடைத்து.

ஊகங்கள்

களப்பிரர் வரலாறு பற்றித் திடமாக அறிந்து கொள்வதற்கான விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. இவர்களின் மூலம், வலிமை பெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர் பெயர்கள் என்பன மறைபொருளாகவே உள்ளன. எனினும், கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்கள் தோற்றம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள்.அவர்களுள் ஒருவனே அச்சுத களப்பாளன்(அச்சுத விக்கந்தக் களப்பாளன்). வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. களப்பிரர் காலகட்டத்தை அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதிநூல்கள் அக்காலகட்டத்தில் உருவானவையே.

இராசமாணிக்கனார் பார்வையில் களப்பிரர்

1. நாகார்ச்சுனரால் (பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு) பின்பற்றப்பட்டது மகாயான கருத்துகள். ஆனால், மணிமேகலை ஈனயான கருத்துகளை உடையது. அசோகர் காலத்திலேயே ஈனயான கருத்துகள் தமிழகத்தில் இருந்தாலும், மக்கள் தமிழரின் தொன்மையான ஆசீவகத்தையும் அதன் தொடர்ச்சியான சமணத்தையும் பின்பற்றியதால் பவுத்த மதக் கொள்கைகளை ஏற்கவில்லை, சங்கம் மருவிய காலத்தில் தான் ஏற்கின்றனர்.

2. கிருதகோடி ஆசிரியரை குறிப்பிடும் மணிமேகலை பெரும்பாலும் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் முடிவு.

3. கனிஷ்கர் பொ.ஊ. 78 இல் அரியணை ஏறுகிறார். இவர் காலத்தில் ஈனயானத்தில் இருந்து மகாயானம் உருவாகிறது.

4. சங்க புலவர் மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர் என்பது கல்வெட்டு குறிப்புகள், சங்க புலவர்களின் ஓலைச் சுவடிகள் போன்றவை மூலம் பல தமிழ் ஆர்வளர்களால் தற்காலத்தில் உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

5. மாமூலனார் காலத்தின் மூலம், மணிமேகலை எழுதி முடிக்கப்பட்ட காலம் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் எனலாம். சி. இராசமாணிக்கனார் கணக்கீடும் இக்காலத்தையே வலியுறுத்துகிறது.

6. களப்பிரர் என்பவர் வடுகர்களே (கன்னடர்) என்றும், தமிழ் அரசர்களோடு ஒன்று இணைந்தவர்கள் (அதாவது சங்க காலம் முடிவு பெற்ற பிறகு) என பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான பத்மாவதி கூறியுள்ளார்.

7. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் ஒரே காலத்தில் எழுதப்படவில்லை. பல வருடத்திற்கு முன்பே தமிழ் ஆர்வலர்கள், இவ்விரண்டு பெருங்காப்பியங்களை எழுதியவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று விளக்கியுள்ளனர்.[13]

ஆட்சிப் பகுதிகள்

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

இனக்குழுமம்

சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன், கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. தமிழ்நாடும் மொழியும்  என்ற நூலில் ஆசிரியர் பேரா.அ.திருமலைமுத்துசாமி அவர்கள், இன்று செந்தமிழ்நாட்டில்‌ வாழும்‌ கள்ளர்  மரபினர்‌ களப்பிரர்‌ வழிவந்தோராவர்‌ என மற்றுஞ்சிலர்‌ கூறுகின்றனர்‌ என்றும், தமிழ்நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர்  கூட்டத்தினர் என்றும் குறிப்பிடுகிறார்.[14] இன்று (களப்)பறையர் என்று அழைக்கபடுபவர்களே அன்று களப்பிரர் எனப்பட்டனர் என கருதுவோரும் உண்டு.[15] மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும்,[16] உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது பின்னர் களப்பறையர் என மாறியது)

களப்பிரரும், களப்பாளரும்

தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். களப்பாளர், களந்தையாண்டார் பட்டங்களுடைய கள்ளர் மரபினர் தஞ்சாவூர் தென்னமாநாட்டில் வாழந்து வருகின்றனர்.[17]. ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.

  1. களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
  2. வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
  3. களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
  4. களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சைனம்).[18]

மொழி

களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம்."[19] அதே வேளை இக்காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.[19]

இக்காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாளி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன.[19]

சமயம்

களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள்.[19] இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சைன சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும், இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு.[20] வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சைனர் அல்லது பௌத்த சமயத்தினராக இவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்.[21]

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

  • களப்பிரர், நடன காசிநாதன், பதிவாளர், தமிழ்நாடு தொல்லியல் துறை
  • The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There, By M. Arunachalam, Published by University of Madras, 1979[22]
  • பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

மேற்கோள்கள்

  1. . களப்பிர மன்னர்கள்
  2. களப்பிரர் வரலாற்றுச் சான்றுகள்
  3. களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி
  4. பெரியபுராணம் 986
    தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
    வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்
    சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்
    வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் 4.1.14

  5. பெரியபுராணம் 983
    கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
    மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
    யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்
    சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான் 4.1.11

  6.   பெரியபுராணம் 984
    வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
    சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
    சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
    கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான் 4.1.12

  7.  பெரியபுராணம் 985
    வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
    நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
    வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
    செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் 4.1.13

  8. பெரியபுராணம் 996
    அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
    மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
    தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
    மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல 4.1.24

  9. குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
    மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
    நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
    தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
    வேங்கடம் - அகநானூறு 393

  10. கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச் சீர் வேங்கடம் - அகநானூறு 61
  11. குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் மொழி பெயர் தேஎத்தர் - குறுந்தொகை 11
  12. புள்ளி இல்லாமல் ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் எழுத்து வடிவத்துக்குப் புள்ளியிட்டுப் பதிப்பிப்போர் களவர் என்பதைக் கள்வர் எனப் பதிப்பித்தனர் எனக் கொள்ள இடம் உண்டு
  13. கால ஆராய்ச்சி. டாக்டர். மா. இராசமாணிக்கனார், உரிமை: மா. ரா அரசு, அலமு பதிப்பகம், 9 அய்யா முதலி தெரு, இராயபேட்டை, சென்னை 600 014 முதல் பதிப்பு டிசம்பர், 2003.
  14. தமிழ்நாடும் மொழியும். 1959. pp. [37.
  15. செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2002
  16. பண்டைத்தடயம், பகுதி- கோசர் தான் களப்பிரரோ மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.
  17. கள்ளர் பட்டங்களின் வரலாறு. 1995. pp. [135].
  18. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 250. {{cite book}}: Check date values in: |year= (help)
  19. 19.0 19.1 19.2 19.3 ஆ. பதமாவதி. களப்பிரர்கள் கால மொழி, எழுத்து, கலை, சமயம். மணற்கோனி. ஏப்ரல் 2011. 107
  20. P. 146 Kerala State gazetteer, Volume 2, Part 1 By Adoor K. K. Ramachandran Nair
  21. P. 150 and P. 152 The peacock, the national bird of India By P. Thankappan Nair
  22. Arunachalam, M. (1979). The Kalabhras in the Pandiya Country and Their Impact on the Life and Letters There (Original from the University of California, Digitized Jul 30, 2008 ed.). University of Madras. p. 168.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=களப்பிரர்&oldid=4140669" இலிருந்து மீள்விக்கப்பட்டது