திண்டுக்கல்

இது தமிழகத்தில் அமைந்துள்ள ஓர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி ஆகும்

திண்டுக்கல் (Dindigul) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இது மாநிலத்தின் 11-ஆவது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் நாள் தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 48 மன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1] ஐதர் அலி காலத்தில் திண்டுக்கல் கோட்டை முதன்மையான இடமாக இருந்து வந்தது.

திண்டுக்கல்
திண்டுக்கல் கோட்டையில் உள்ள கல் மண்டபம்.
திண்டுக்கல் கோட்டையில் உள்ள கல் மண்டபம்.
திண்டுக்கல் is located in தமிழ் நாடு
திண்டுக்கல்
திண்டுக்கல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
திண்டுக்கல் is located in இந்தியா
திண்டுக்கல்
திண்டுக்கல்
திண்டுக்கல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°21′N 77°57′E / 10.35°N 77.95°E / 10.35; 77.95
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திண்டுக்கல்
பகுதிபாண்டிய நாடு மற்றும் கொங்கு நாடு
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்திண்டுக்கல் மாநகராட்சி
 • மக்களவை உறுப்பினர்ப. வேலுச்சாமி
 • சட்டமன்ற உறுப்பினர்திண்டுக்கல் சீனிவாசன்
 • மாநகர முதல்வர்காலியிடம்
 • மாவட்ட ஆட்சியர்திருமதி. மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்46.9 km2 (18.1 sq mi)
ஏற்றம்
268 m (879 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,07,327
 • தரவரிசை11
இனம்தமிழர்
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீடு
624 001
தொலைபேசி குறியீடு+91-451
வாகனப் பதிவுTN-57/TN-94
சென்னையிலிருந்து தொலைவு428 கி.மீ. (267 மைல்)
மதுரையிலிருந்து தொலைவு70 கி.மீ. (43 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு103 கி.மீ. (64 மைல்)
கோவையிலிருந்து தொலைவு153 கி.மீ. (95 மைல்)
இணையதளம்dindigul

பெயர்க் காரணம்

தொகு
 • காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் 'திண்டுக்கல்' என்று பெயர் வந்ததாக கருதலாம். இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர் ஆகும். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களைத் துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.
 • 'திண்டு' அதாவது 'தலையணை' போன்று திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளதாலும், மலைக்கோட்டை முழுவதும் கல்லால் ஆனதாலும் 'திண்டு', 'கல்' ஆகிய இரண்டு சொற்கள் சேர்ந்து திண்டுக்கல் என்றானது. அதாவது நகரத்தை நோக்கி காணப்படும் வெறுமையான மலைகளை, இது குறிக்கும் விதத்தில் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாறு

தொகு
 
திண்டுக்கல் மலைக்கோட்டையின் 19-ஆம் நூற்றாண்டுப் புகைப்படம்

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. மதுரை நாயக்க மன்னர்கள், ஆற்காடு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்றாகும்.

மக்கள்தொகை பரம்பல்

தொகு
மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
69.11%
முஸ்லிம்கள்
14.17%
கிறிஸ்தவர்கள்
16.59%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.02%
சைனர்கள்
0.01%
மற்றவை
0.1%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 48 மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநகரத்தின் மக்கள்தொகை 207,327 ஆகும். அதில் 103,027 ஆண்களும், 104,300 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.47% மற்றும் பாலின விகிதம், 1000 ஆண்களுக்கு, 1008 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[4]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திண்டுக்கல்லில் இந்துக்கள் 69.11%, முஸ்லிம்கள் 14.17%, கிறிஸ்தவர்கள் 16.59%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.01%, 0.1% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.

மொழிகள்

தொகு

தமிழ்நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் மொழியுடன், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், உருது மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன.

மலைக்கோட்டை

தொகு

ஆங்கிலேயர்களால் கணவனையும், நாட்டையும் இழந்த சிவகங்கை இராணி வேலுநாச்சியார், ஹைதர்அலி வசம் இருந்த இக்கோட்டையில், தனது பரிவாரங்களுடன் எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது தனது குலதெய்வமான இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபாடு செய்ததால் இப்பெயர் பெற்றது. பின், மன்னர் திருமலை நாயக்கர் இம்மலை மீது கோட்டை கட்டினார். பொ.ஊ. 17-ஆம் நூற்றாண்டில் சையது சாகிப் என்பவர் இக்கோட்டையை விரிவு படுத்தினார். இக்கோட்டை பிரிட்டிஷார் வசம் இருந்தது. பின், ஹைதர் அலி போரிட்டுக் கைப்பற்றினார். கோட்டையைச் சுற்றி இராணுவத் தளவாடங்களையும், வீரர்கள் தங்கும் பாசறைகளையும் உருவாக்கினார். பொ.ஊ. 1784-இல் திப்பு சுல்தான் இங்கு வந்துள்ளார். பொ.ஊ. 1788-இல் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாளையக்காரர்களை அடக்க, பிரிட்டிஷார் மீண்டும் இக்கோட்டையைக் கைப்பற்றி, ராணுவத் தளமாக வைத்துக் கொண்டனர். பாளையக்காரர்களுக்குத் தலைவராக இருந்த கோபால் நாயக்கரும், அவருடன் இருந்த சோமன்துரை, பெரியபட்டி, நாகமநாயக்கர், துமச்சி நாயக்கர், சோமநாத சேர்வை ஆகியோரை ஆங்கிலேயர் 1801 மே 4-இல் கைது செய்து, நவம்பர் 5-இல் தூக்கிலிட்டனர். பாளையக்காரர்களை எதிர்க்க, கோட்டையின் நடுப்பகுதியில் அமைத்த பீரங்கி மேடு இன்றும் உள்ளது. பிரிட்டிஷார் கட்டிய ஆயுதக்கிடங்கு, தளவாட அறைகள் கோட்டையின் நடுமேற்கே உள்ளன. மதுரையை ஆண்ட கடைசி ராணியான மீனாட்சி இறந்ததும், சந்தாசாகிப்தான் முதலில் கோட்டையை கைப்பற்றினார். அது முதல் திண்டுக்கல் போர்க்களமாகவே இருந்தது. பொ.ஊ. 1790-இல் வில்லியம் மெடோஸ் என்பவர் திண்டுக்கல்லைக் கைப்பற்றினார். பல ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்த திண்டுக்கல் கோட்டை சந்தித்துள்ளது. இம்மலை படிக்கட்டுகளில் ஏறும்போதே நீளமான ஒரு அடி அகலமுள்ள வெள்ளைக்கோடுகளை காணலாம். பெரிய கற்சக்கரங்கள் கொண்ட வண்டியில் பொருட்களை ஏற்றிச் சென்றதன் அடையாளம் தான் இது.

மலைக்கோட்டை கோவில்

தொகு

திண்டுக்கல் மலையில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் கோவில் கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

திண்டுக்கல் மாநகராட்சி

தொகு

திண்டுக்கல் மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சியாகும். மாநிலத்தின் 11–வது மாநகராட்சியாக திண்டுக்கல் 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.[1]

முக்கிய வழிபாட்டு தலங்கள்

தொகு
 
திண்டுக்கல் மாநகரம்

அபிராமி அம்மன் கோவில்

தொகு
 • திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது.
 • இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[சான்று தேவை]
 • திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர்.
 • இங்குள்ள அபிராமிதேவியின் சிலை இஸ்லாமிய மன்னன் ஒருவனால் மலை மீது இருந்து அகற்றப்பட்டு தற்போது திண்டுக்கல் நகர் நடுவே அமைந்துள்ளது.
 • இந்த அபிராமிதேவியின் நின்ற திருக்கோலத்தில் இருந்து அருள்கிறாள் அவள் வயிற்றின் தொப்புள் கொடி பகுதியிலிருந்து ஒரு தாமரை மலர் கொடியாக (பத்மம்) வளர்ந்து அதில் இருந்து தோன்றிய ஈசன் இத்தலத்தில் "பத்மகிரி"சுவராக (சிவபெருமான்) வணங்கப்படுகிறார்.
 • இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20 சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.

கோட்டை மாரியம்மன்

தொகு
 • பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது. ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.[5]

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்

தொகு
 • பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம், இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.[6]

புனித ஜோஸப் தேவாலயம்

தொகு
 • இத்தலம் 1866-ஆம் ஆண்டிற்கும் 1872-ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.[7]

முக்கியத் தொழில்கள்

தொகு

பூட்டு

தொகு

திண்டுக்கல்லில் பூட்டு உற்பத்தி அதிகளவில் செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பூட்டு, யாராலும் எளிதில் திறக்க முடியாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது. திண்டுக்கல் பூட்டு உலகப்புகழ் பெற்றது.[8]

திண்டுக்கல் பூ வணிக மையம்

தொகு

திண்டுக்கலை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல பூ விளைச்சல் உண்டு. தமிழ்நாட்டில் பொதுவாக பூ விலை, தோவாளை பூ மையம் மற்றும் திண்டுக்கல் பூ வணிக மையத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகிறது.[சான்று தேவை]

தோல் தொழிற்சாலைகள்

தொகு

திண்டுக்கல் நகரில் பேகம்பூர், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பாறைப்பட்டி, தொழில்பேட்டை, நல்லாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. திண்டுக்கல் தோல்கள் பாதுகாப்பான முறையில், சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பின் சென்னையிலிருந்து, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆட்டுத்தோல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாரம்தோறும் கூடும் இந்த சந்தையில்,மாட்டுத் தோல்களை விட ஆட்டுத்தோல்களின் வரத்து அதிகரித்து காணப்படும்.[9].[10]

இலக்கியச்சிறப்பு

தொகு

திண்டுக்கல் நகரில் உள்ள பத்மகிரீசர் மீது பலபட்டடை சொக்கநாதர் எனும் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர் "பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது" எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியுள்ளார்.

ஆன்மீகச்சிறப்பு

தொகு

திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி அருளாளர்கள் பலர் இருந்துள்ளனர். ஓதச்சாமியார் எனும் சித்தர் அவ்வாறு மலைக்கோட்டையை ஒட்டிய குகையில் இருந்து அருள் புரிந்துள்ளார். பகவான் ரமணர் கூட திண்டுக்கல்லில் சில காலம் வசித்துள்ளார்.

முக்கிய இடங்கள்

தொகு

திண்டுக்கல் மணிகூண்டு

தொகு

திண்டுக்கல் மணிகூண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது திண்டுக்கல் நகரின் மையத்தில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ளது. கோபுர தூணின் உச்சியில் கண்ணாடிப் பேழைக்குள் நான்கு புறமும், கடிகாரம் வைக்கப்பட்டு பொது மக்களுக்கு பயன்படுகிறது. அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் இதன் அருகில்தான் நடைபெறும்.

திப்பு சுல்தான் மணிமண்டபம்

தொகு

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன் உயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல்லில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு 2014-இல் அறிவித்தது. அதன்படி மணிமண்டபம் அமைப்பதற்கு, திண்டுக்கல் பேகம்பூர் , அரண்மனை குளம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரியத்தின் இடம் வழங்கப்பட்டது. தற்போது அவ்விடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. [11].[12]

கோபால் நாயக்கர் மணிமண்டபம்

தொகு
 
கோபால நாயக்கர் மணிமண்டபம்

ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து கூட்டமைப்பு திரட்டி, ராணி வேலு நாச்சியார்க்கும், ஊமைத்துரைக்கும் போராட்ட காலத்தில் உதவி வந்தும் படை வீரர்களை அவர்களுக்குக் கொடுத்து உதவியும், கேரளா வர்மா, தூந்தாசிவாக் , திப்பு சுல்தான் என்று பலரிடமும் இணக்கத்தோடு இருந்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் பாடுபட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டி உள்ளனர். திண்டுக்கல் - பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம் 69 லட்சம் செலவில் 0.24.00 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.[13][14][15]

குமரன் பூங்கா

தொகு

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் குமரன் பூங்கா உள்ளது. சுமார் 3½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கடந்த 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், அலங்கார நுழைவுவாயில்,பறவை,விலங்கு கூடங்கள், சிற்றுண்டி உணவகம் உள்ளிட்டவை உள்ளன.[16]

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

தொகு
மாநகராட்சி அதிகாரிகள்
மாநகர முதல்வர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன்
மக்களவை உறுப்பினர் பி. வேலுச்சாமி

திண்டுக்கல் மாநகராட்சியானது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த ப. வேலுச்சாமி வென்றார்.

2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை (அதிமுக) சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் வென்றார்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

தொடருந்து நிலையம்

தொகு

திண்டுக்கல் தொடருந்து நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. வாராந்திர இரயில்கள் உட்பட 86 இரயில்கள் தினமும் திண்டுக்கல்லை கடந்து செல்கின்றன. பெங்களூர், கொல்கத்தா, புதுடில்லி, மும்பை நகரங்களுக்கு செல்ல தொடருந்து வசதி உள்ளது. [17]

கல்வி நிறுவனங்கள்

தொகு

பொறியியல் கல்லூரிகள்

தொகு
 1. பி. எஸ். என். ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9213)
 2. ரத்னவேல் சுப்பிரமணியம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9215,9214)
 3. எஸ். பி. எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9216)
 4. அண்ணா பல்கலைக்கழகம், திண்டுக்கல் வளாகம்.(கலந்தாய்வு எண்.9223)
 5. எஸ். எஸ். எம். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9221)
 6. ஜெய்னி பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.(கலந்தாய்வு எண்.9236).[18]

கலை மற்று அறிவியல் கல்லூரிகள்

தொகு
 1. ஜி. டி. என். கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
 2. எம். வி. முத்தையா மகளிர் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல்.
 3. பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
 4. ரமா பிரபா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
 5. ஜேகப் நினைவு கிறிஸ்தவக் கல்லூரி, திண்டுக்கல்.
 6. மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரி, திண்டுக்கல்.
 7. பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, திண்டுக்கல்.
 8. பி. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல்.
 9. ஸ்ரீ வீ கல்லூரி, தாடிக்கொம்பு.

செவிலியர் கல்லூரி

தொகு
 1. கிறிஸ்டியன் செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
 2. ஜெய்னீ செவிலியர் கல்லூரி, திண்டுக்கல்.
 3. சக்தி செவிலியர் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.

தொழில்நுட்பக் கல்லூரிகள்

தொகு
 1. ஆர். வி. எஸ். தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
 2. எஸ். பி. எம். தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
 3. இன்ஸ்டியூட் ஆப் டூல் இன்ஜினியரிங், திண்டுக்கல்.
 4. ஸ்ரீ ரமணாஸ் ஏ. பி. சி. தொழில்நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-08-17.
 2. Urban Infrastructure Report 2008, pp. 2-4
 3. "Census Info 2011 Final population totals - Dindigul". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 26 Jan 2014.
 4. திண்டுக்கல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
 5. [1]
 6. [2]
 7. [3]
 8. பூட்டுக்கு புவிசார் குறியீடு[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "அடையாளங்களைஇழந்துவரும் திண்டுக்கல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகஸ்ட் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. "வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சந்தையில் ஆட்டுத்தோல் கொள்முதல்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 7 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 11. "திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்". jayanewslive. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 12. "திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-15. பார்க்கப்பட்ட நாள் 2016-05-20.
 14. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3557002.ece
 15. http://dinamani.com/edition_chennai/chennai/article1472572.ece[தொடர்பிழந்த இணைப்பு]
 16. "திண்டுக்கல் குமரன் பூங்கா சிறுவர்–சிறுமிகள் உற்சாகம்". தினத் தந்தி. பார்க்கப்பட்ட நாள் 17 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 17. "மலைக்கோட்டையின் கம்பீரத்தை பிரதிபலிக்கும் திண்டுக்கல்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 18. "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் பட்டியல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்&oldid=4025385" இலிருந்து மீள்விக்கப்பட்டது