ஊமைத்துரை
ஊமைத்துரை (Oomathurai) (இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்) (இ. நவம்பர் 16, 1801) ஒரு தென் இந்திய பாளையக்கார் ஆவார் .பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான இவர்,, முதல் பாளையக்காரர் போர், மற்றும் இரண்டாம் பாளையக்காரர் போர்களில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். முதல் போரில் பிடிபட்டுப் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஊமைத்துரை அடைக்கப்பட்டார். 1801 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாளன்று இவர் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைவாசத்திற்குப் பிறகு சிறையிலிருந்து தப்பித்தார்.[1] இரண்டாம் பாளையக்காரர் போரில் சிவகங்கை மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, மலபார் கேரள வர்மா மற்றும் பிற தலைவர்களுடன் பிரிட்டிசு கிழக்கிந்திய கம்பெனியை எதிர்க்க ஊமைத்துரை கூட்டணி அமைத்தார்.[2] இறுதியில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவரது இயற்பெயர் குமாரசாமி. அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திரமாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதிகட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டனர். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். .
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர் இவர்களுக்கு மகனாகப் பிறந்தார் ஊமைத்துரை . இவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி .இவருக்கு சுப்பா நாயக்கர் என்ற செவத்தையா என்ற தம்பியும் இருந்தார் .தமிழ் நாட்டார் தரவுகள் இவரது பேச்சாற்றலைப் பகடி செய்யும் வண்ணம் இவருக்கு “ஊமைத்துரை” என்று பட்டப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன. இவரை எதிர்த்துப் போர் புரிந்த ஆங்கிலேயத் தளபதி மேஜர் வெல்ஷின் குறிப்புகள் இவர் பேச்சுத் திறன் குன்றியவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கின்றன.
இவர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர்புரிந்தார். முதல் பாளையக்காரர்கள் போரில் இவர் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் சிவகங்கை மாமன்னர் மருதுபாண்டியர்கள் உதவியுடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்து சென்று வெறும் 6 நாட்களில் ஏற்கனவே இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை, மீண்டும் கட்டியெழுப்பினார்....இவர் பின்னர் மருது சகோதரர்களுடன் கூட்டாகச் சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்தார். மேலும் வெள்ளையர்களை எதிர்த்து உருவான, தீரன் சின்னமலை, கேரள வர்மா ஆகியோரைக் கொண்ட ஒரு பெரும் அணியிலும் இடம் பெற்றிருந்தார். இரண்டாவது போரில் அவரது கோட்டை வீழ்ந்த பின் மருது சகோதரர்களுடன் சேர்ந்து தப்பி காளையார் கோவிலில் தங்கியிருந்தார். பின்னர் காளையார் கோவிலும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டு 1801 நவம்பர் 16-ஆம் நாள் இவரும் மருது சகோதரர்களும் தூக்கில் இடப்பட்டனர்.
பண்புகள்
தொகுஊமைத்துரை நட்புணர்வும், மனிதாபிமானமும் கொண்டுருந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மருது பாண்டியர், வெள்ளையத்தேவன், தீரன் சின்னமலை, விருப்பாச்சி கோபால நாயக்கர் மற்றும் எல்லைத்தகராறு காரணமாக பகையாளியாகக் கருதப்பட்ட எட்டயபுரம் பாளையக்காரர்கள் இவர்கள் அனைவரிடத்தும் நட்போடு பழகி வாழ்ந்து வந்ததாகவும், ஆங்கிலேயர்கள் பலரை அழித்த ஊமைத்துரை அவரிடம் அடைக்கலம் கேட்டு வந்த ஆங்கிலேயர்களையும் அரவணைத்து நட்போடு உபசரித்து அனுப்பினார் என்று ஆங்கிலேய ஆவணங்களில் உள்ளது
ஆங்கிலேய அதிகாரிக்கும் பரிவு
தொகுகாலநெல் என்ற ஆங்கிலேயர் 1801இல் தூத்துக்குடி மாவட்டக் கம்பெனித் தளபதியாக ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார். அவர் தூத்துக்குடிக் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த நேரத்தில் ஊமைத்துரையின் படை வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டுப் பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தன் கணவரை விடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஊமைத்துரை இசைந்தார். அவர்களுக்கு வீரவாள் பரிசாகவும் கொடுத்து, தூத்துக்குடி வரையிலும் பாதுகாப்பாகச் செல்ல குதிரைகளுடன் இரண்டு வீரர்களையும் வழித்துணையாக அனுப்பினார். ஊமைத்துரை தான் எனது நண்பர் என்றும், ஊமைத்துரையின் நட்பு, மனிதாபிமானம், வீரம் பற்றிய அனைத்தையும் கால்நெல் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ State), Madras (India; Bahadur.), B. S. Baliga (Rao (1957). Madras District Gazetteers: Ramanathapuram (in ஆங்கிலம்). Superintendent, Government Press.
- ↑ Nandakumar, J. (2022-12-10). Swa: Struggle for National Selfhood Past, Present and Future (in ஆங்கிலம்). Indus Scrolls Press.
- ↑ [1]
- Major James Welsh (1830). Military reminiscences : extracted from a journal of nearly forty years' active service in the East Indies. London : Smith, Elder, and Co.
- ராபர்ட் கால்டுவெல் (1881). A Political and General History of the District of Tinnevelly, in the Presidency of Madras. E. Keys, at the Government Press. pp. 195–222.