பழசி இராசா

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி
(கேரள வர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வீர கேரள வர்மா பழசி இராசா (Pazhassi Raja, அல்லது கேரளச் சிங்கம், சனவரி 3, 1753நவம்பர் 30, 1805) கேரளாவின் வடக்கில் உள்ள கண்ணூர் மாவட்டத்திலுள்ள தற்கால கூத்துப்பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னராக இருந்தவர். பிரித்தானியக் குடியேற்றவாதத்தை எதிர்த்துப் போராடிய துவக்க கால விடுதலை வீரர்களில் ஒருவர். பிரித்தானியர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய மறைவுத் தாக்குதல்களில் உயிர்விட்டதை அடுத்து அவருக்கு வீர என்ற அடைமொழி வழங்கப்பட்டது.

பழசி இராசா
Pazhassi Raja
பழசி கோட்டய இளவரசர்
வீர பழசி இராசா-கற்றளி ஓவியம்
ஆட்சி1774–1805
முன்னிருந்தவர்வீரவர்மா (முதியவர்)
பின்வந்தவர்வீரவர்மா (மருமகன்)
முழுப்பெயர்
கேரள வர்மா பழசி இராசா
பிறப்புசனவரி 3, 1753
கண்ணூர், கேரளம்
இறப்புநவம்பர் 30, 1805
சமயம்இந்து

பழசிராசாவின் இளமைக்காலம் பற்றிய குறிப்புகள் கிடைப்பதில்லை. துவக்கத்தில் பிரித்தானியருக்கு திப்பு சுல்தானுடன் நடந்த சண்டையில் உதவிய பழசிராசா பின்னர் அவர்களுடன் பிணக்கு கொண்டார். விடுதலை போராட்டமாக இல்லாது அவர்களது வரிவிதிப்பிற்கு எதிரான புரட்சியாக 1793–1797 காலகட்டங்களில் வெடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.[1]

வரலாற்று பின்னணி தொகு

 
பழசி குடீரம்-வயநாட்டில் மானந்தவாடியில் பழசிராசா இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவகம்

கேரளாவை ஹைதர் அலி, பின்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தபோது நிலக்கிழார்களை தவிர்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக வரிவசூல் செய்து வந்தனர். பழசிராசாவின் துணையுடன் திப்புவிடமிருந்து கேரளாவை வென்ற பிரித்தானியர் இதனை மாற்றி மன்னர்களிடமிருந்து வரி பெறும் முறையை கொண்டு வந்தனர். பிரித்தானியர் வசூலித்த வரிகள் மக்களால் கொடுக்க வியலாத அளவில் இருந்தன. மக்களின் எதிர்ப்புகளை யடுத்து மன்னர்களால் வரிவசூல் செய்ய இயலவில்லை. தவிர கோட்டயத்தை அடுத்திருந்த பகுதிகளை பழசிராசாவிற்கு கொடுக்காமல் அவரது மாமனுக்கு குத்தகை விட்டனர். இதனால் தன்னை அவமதித்ததாக கருதிய பழசிராசா மக்களிடம் வரி வசூலிப்பதை நிறுத்தினார். இது பிரித்தானியர்களுக்கு உடன்பாடில்லாவிடினும் பழசிராசாவின் மக்கள் ஆதரவை கண்டு ஓர் ஆண்டு வரிவிலக்கு அளித்தனர். ஆனால் பழசிக்கு கோபமூட்டுமுகமாக மாமனின் குத்தகையை ஐந்தாண்டுகளுக்கு நீட்டினர். இதன் எதிர்விளைவாக சூன் 28,1795 நாள் முதல் அனைத்து வரிவசூலையும் நிறுத்தியதோடன்றி பிரித்தானியரால் புரட்சியாளர்களாக காணப்பட்டவர்களுக்கு புகலிடம் கொடுத்தார்.

பிரித்தானிய படைகள், லெப்.கார்டன் தலைமையில் கோட்டய அரண்மனையை சுற்றி வளைத்தது. ஆனால் அதன் முன்னரே பழசிராசா தப்பி விட்டார். பிரித்தானியப் படை அவருடன் பேசி மீண்டும் திரும்ப உடன்பட்டபோதிலும், ஓர் தவறெண்ணத்தால் வயநாட்டின் மலைப்பகுதிகளுக்கு தப்பினார். 1797ஆம் ஆண்டு பல சிறு தாக்குதல்கள் மூலம் பல பிரித்தானிய வீரர்களை கொன்றார். பழசியை எதிர்க்க முடியாத பிரித்தானியர் அவருடன் உடன்பாடு கொண்டு அவரது மாமனின் குத்தகையை இரத்தாக்கினர். அமைதியாக பிரித்தானியருடன் வாழ பழசி இணங்கினார்.

போராட்டங்கள் தொகு

1799 இல், திப்புவின் சீரங்கப்பட்டணம் வீழ்ந்த பிறகு ஆங்கிலேயர் வயநாடு பகுதிகளை தமதாக்கிக் கொண்டனர். இதனை எதிர்த்து மீண்டும் ஆங்கிலேயருடன் சூன் 1800 இல் சண்டையிடத் துவங்கினார். பிரித்தாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர் பழசிராசாவை அவரது மலபார் ஆதரவாளர்களிடமிருந்து பிரித்தனர். இதனால் பழசிராசா தனது மிக அணுக்க நண்பர்களுடனும் மனைவியுடனும் காடுகளில் வசிக்க வேண்டியதானது.மட்டனூர் அருகிலுள்ள புரலிமலை புரட்சி போராட்டங்களுக்கு மையமாக விளங்கியது.[2]

அவரது துணைவர்கள் சுழலி,பெருவாயல் நம்பியார் மற்றும் கன்னவத்து சங்கரன் நம்பியார் முதலானவர் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டும் தனது மறைமுகத் தாக்குதல்களை நிறுத்தவில்லை. 1802ஆம் ஆண்டு எடச்சேன கங்கன் நாயர் மற்றும் தலக்கால் சந்து பனமரம் கோட்டையை முற்றுகையிட்டு அங்கிருந்த 25 ஆங்கிலேயரை கொன்று வெற்றிக் கொடி நாட்டினர். இந்நிகழ்வு எதிர்ப்பு இயக்கத்திற்கு புத்துயிர் தந்தது.

இந்த நேரத்தில் வரியை உயர்த்தியதால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதனைப் பயன்படுத்திய பழசிராசா படையினர் ஆங்கிலேயருக்கு அதிக சேதம் விளைவித்தனர்.

இறப்பு தொகு

1804ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற தாமஸ் ஆர்வி பாபர், பழசிராசாவிற்கு துணைபோவது சட்டவிரோதம் எனவும் புரட்சியாளர்களின் நடமாட்டத்தை ஆங்கிலேயருக்கு தெரிவிப்பது கடமை என்றும் அறிக்கை விட்டார். சூன் 16 அன்று பழசிராசா மற்றும் அவரது துணைவர்களை பிடிப்பவர்களுக்கு பரிசும் அறிவிக்கப்பட்டது[1] இதனைத் தொடர்ந்து தலைக்கால் சந்து பிடிபட்டார்.

நவம்பர் 30,1805 அன்று பாபர் நேரடியாக பழசிராசாவினை சுற்றிவளைத்தார். ஆனால் பழசிராசா தனது மோதிரத்தை விழுங்கி ஓர் சிற்றாற்றின் கரையில் தற்கொலை செய்துகொண்டார். மன்னரின் உடல் அதற்குரிய மரியாதைகளுடன் எரிக்கப்பட்டது.

திரைப்படம் தொகு

பழசிராசாவின் வரலாற்றினை மலையாள இயக்குனர் ஹரிஹரன் திரைப்படமாக தயாரித்து மம்முட்டி, சரத் குமார், சுரேசுகோபி, மனோஜ் கே ஜயன் முதலானவர் நடித்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pazhassi Raja
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 "Who was Pazhassi Raja". varnachitram. Archived from the original on 2009-10-05. பார்க்கப்பட்ட நாள் 23 January. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |work= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "Kerala Info". [1]. {{cite web}}: External link in |work= (help)

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழசி_இராசா&oldid=3812833" இலிருந்து மீள்விக்கப்பட்டது