ஐதர் அலி

(ஹைதர் அலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐதர் அலி (Hyder Ali, உருது: سلطان حيدر علی خان ‎, கன்னடம்: ಹೈದರಾಲಿ, ஹைதர் அலி, (பிறப்பு: 7-12-1720) (இறப்பு: 7 திசம்பர் 1782), இசுலாமிய நாட்காட்டியில் 2 முகரம் 1197) மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். ஐதர் என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இவரது மகனே திப்புசுல்தான்.

ஐதர் அலி
மைசூர் அரசர்
வில்லியம் டிக்சு வரைந்த அயிதர் அலியின் உருவப்படம், 1846
ஆட்சி1761–1782
முன்னிருந்தவர்இரண்டாம் கிருட்டிணராச உடையார்
திப்பு சுல்தான்
மரபு மைசூர் சுல்தானகம்
தந்தைபஃதே முகம்மது
பிறப்பு1720
கோலார் இன்றைய கர்நாடகம்
இறப்பு(1782-12-07)7 திசம்பர் 1782[1] (வயது: 60–61)
சித்தூர்
அடக்கம்ஸ்ரீரங்கப்பட்டணம்
சமயம்இசுலாம்
1762 பிரான்சிய ஓவியம்
ஹைதர் அலிக்கு உதவிய பிரான்சு தளபதி

குடும்பம்

தொகு

இவரது முன்னோர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில், ஒரு சூபி குடும்பம் குல்பர்காவை நோக்கி வந்தது. அப்பகுதியில் பீஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சியா சிந்தனைப் பிரிவின் தாக்கமும், பாரசீக மொழியின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், தர்கா பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.

இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1686ல் ஔரங்கசீப், பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவரான பத்தே முகம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல ஊர்களில் குடியமர்ந்து, இறுதியாக கோலார் பகுதியில் குடியேறினார்கள். அதன்பின், ஆற்காடு நவாபின் படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். தஞ்சாவூரில் செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அயிதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, 1721ல் பிறந்தார்

அரசியல் சூழல்

தொகு

ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், முகலாயப் பேரரசு, அவரது வாரிசுகளின் திறமையின்மையால், அரசியல் குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட நவாபுகளும், நிசாம்களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் தான், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

படைவீரனாதல்

தொகு

இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு மைசூர் அரசை, விஜயநகரப் பேரரசின் கீழும், பாமினி சுல்தான்களின் ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது கிருட்டிணராச உடையார் என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.

பதவி உயர்தல்

தொகு

தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் தளபதி ஆனார்.1750-ல் ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் கர்நாடகப் போர் நடைபெற்றது. மைசூர் அரசு பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.ஐரோப்பியர்களின் ராணுவ நுட்பங்களையும், நவீன ஆயுதங்களைக் கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.அமைச்சர் நஞ்ஞராஜர், மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்[2]. அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் பீரங்கி படையையும் அமைத்தார்.

அரசரும், அரசுப்படையும்

தொகு

மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. சம்பள உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் 1758ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.

1759ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் கிருட்டிணராச உடையாரும் மகிழ்ச்சியடைந்தார். மேலும், அயிதரைப் போற்றும் வகையில் தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம் (“பதே ஹைதர் பஹதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது.இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்து கொண்டிருந்தார்.

அலியை அடக்குவதற்கு ஆங்கிலேயப் படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் மராத்தியர்களும், அயிதராபாத் நிசாமும் இணைந்தனர்.

அரசப்பதவி

தொகு

மராத்தியரும், நிசாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலி,புதுச்சேரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் கிருட்டிணாரச உடையருடன் ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்து கொண்ட அலி, அவ்விரு அமைச்சர்களை சிறைப்படுத்தி, பொம்மை மன்னர் கிருட்டிணாராச உடையாரை ஓரங்கட்டி, 1762ல் மைசூர் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.

ஆட்சிக்கு வந்ததும் முதலில் இராணுவத்தை சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, இந்தியாவில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத சம்பளத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது,[3]"பகோடா என்றழைக்கப்பட்டது. அது தங்கத்தாலும், இந்து கடவுளரும் அமைந்திருந்தது. அவரது இராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் எதிரிகளுக்கும் செய்தி பரவி திகழ்த்தியது. வேளாண்மையினருக்கும் உகந்த நண்பனாகத் திகழ்ந்தார்.

போர்கள்

தொகு

அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது.

அலியின் ஏவுகணைகள்: அட்டைக்கு பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10அடி உயரமுள்ள மூங்கில்களை பயன்படுத்தி ஏறத்தாழ6கிலோ எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.

முதலாம் மைசூர் போர்

தொகு

1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. ஈரோட்டில் ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே மராத்தியரை வென்று மங்களூரை வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர்(ஹைதராபாத் நிஜாம்) அச்சத்தால், 23.2.1768-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த நிலப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், மைசூருக்கு ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் என சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அந்த ஓவியத்தில் வரையபட்டிருந்ததை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற ஆங்கிலேய நிறுவன அதிகாரி.

நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் அயிதர் அலி. வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் அயிதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் மைசூர் போர்

தொகு

முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். 1780 முதல் 1784 வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது. 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். ஆற்காடு, பரங்கிப்பேட்டை, வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் போர் தீவிரமாக நடந்தது. பேரம்பாக்கம் என்னுமிடத்தில் இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.

நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும், சனவரி, 1782 ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.

ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் (ஆப்கான்) மற்றும் பாரசீக(ஈரான்) மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராட்டியர்களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். பிரெஞ்சுகாரர்களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக இராணுவ நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.

இறப்பு

தொகு

இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, அயிதரின் உடல்நிலை, முதுகுத் தண்டுவடப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 திசம்பர் 6-இல் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் திப்பு சுல்தானின் வேண்டுகோளை ஏற்று, ஐதர் அலியின் உடல், சிறீரங்கப்பட்டினம் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Hasan, Mohibbul (2005). History of Tipu Sultan. Aakar Books. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187879572. பார்க்கப்பட்ட நாள் 19 January 2013.
  2. Bowring, Lewin (1899). Haidar Alí and Tipú Sultán, and the Struggle with the Musalmán Powers of the South. Oxford: Clarendon Press. இணையக் கணினி நூலக மைய எண் 11827326.
  3. http://www.flickr.com/photos/celeste33/2924624305/

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதர்_அலி&oldid=3731106" இலிருந்து மீள்விக்கப்பட்டது