வேலு நாச்சியார்

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை மற்றும் சிவகங்கை சீமையின் அரசி

வீரமங்கை இராணி வேலுநாச்சியார் (Velu Nachiyar) பதினெட்டாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியின் அரசி ஆவார்.[1] பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார். இவரே இந்தியாவில் விடுதலைக்காகப் போராடிய முதல் அரசி ஆவார்.[2][3]

இராணி வேலு நாச்சியார்
ஆட்சிகி.பி 1780- கி.பி 1783
முடிசூட்டு விழாகி.பி 1780
முன்னிருந்தவர்முத்து வடுகநாதர்
பின்வந்தவர்வெள்ளச்சி நாச்சியார்
துணைவர்முத்து வடுகநாதர்
தந்தைசெல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி
தாய்முத்தாத்தாள் நாச்சியார்
இராணி வேலு நாச்சியார் சிலையும் சிவகங்கை அரண்மனையும்

இளமை

1730-ஆம் ஆண்டு, வேலுநாச்சியார் இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே மகளாகப் பிறந்தார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.[4]

ஆங்கிலேயர் படையெடுப்பு

1772-இல், ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஐதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றி விளக்கிப் பேசினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு வியந்த ஐதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.[5] எட்டு ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.[6] வேலு நாச்சியார் திருப்பத்தூர் படைக்கு நன்னியம்பலம், சேதுபதி அம்பலம் ஆகிய கள்ளர் தலைவர்களையும், காளையார் கோவில் படைப்பிரிவிற்கு மருது சகோதரர்களையும் தலைமையேற்கச் செய்தார்.[7][8] நன்னியம்பலம் தலைமையில் திரண்ட மூவாயிரம் படை வீரர்கள் எட்டுப் பீரங்கிகளைக் கொண்டு திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றினர்.[9] வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர இவர்கள் முக்கிய பங்காற்றினார்.

படை திரட்டல்

08.12.1772 அன்று, சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை இராணி வேலு நாச்சியாருக்காக ஐதர் அலிக்கு அனுப்பிய கடிதத்தில், "ஆற்காடு நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். அங்கிருந்து தப்பி வந்த நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். இந்த முயற்சியில் எனக்கு யார் உதவி செய்தாலும், இன்னும் சிறந்த சாதனைகளை இயற்றமுடியும். ஆகையால், தாங்கள் ஐயாயிரம் குதிரை வீரர்களையும் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால், அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் இணைந்து இந்த இரு தன்னரசுகளையும் மீண்டும் கைப்பற்ற இயலும். அத்துடன், மதுரைக்கும் படைகளை அனுப்பி வைத்து அந்தச் சீமை முழுவதும் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கி வைக்கவும் இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும் நமக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.[10] 1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களையும் வென்ற பிறகு, போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு, இறுதிப் போராக மானாமதுரை நகரத்தில் அந்நியர்களை வெற்றிக்கொண்டனர்.

இறுதி நாட்கள்

1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியார் துயரில் மூழ்கினார். அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

வேலுநாச்சியார் நினைவாக

18 சூலை 2014 அன்று, சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் இந்திய ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தை, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.[11][12][13] வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. இந்திய அரசு, இராணி வேலு நாச்சியார் நினைவாக, 31 டிசம்பர் 2008 அன்று அஞ்சல்தலை ஒன்றை வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "Veeramangai Velu Nachiyar". The Hindu Business Line (Chennai, India). 18 January 2019. https://www.thehindubusinessline.com/blink/cover/veeramangai-velu-nachiyar/article26016399.ece. 
  2. Rohini Ramakrishnan (10 August 2010) Women who made a difference. The Hindu.
  3. Remembering Queen Velu Nachiyar of Sivagangai, the first queen to fight the British. The News Minute. 3 January 2017
  4. "11. வேலு நாச்சியார்". Dinamani.
  5. ஜூன் 26, பதிவு செய்த நாள்:; 2019 13:15. "வீரமங்கை வேலுநாச்சியார்!". Dinamalar. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  6. "Tamil Newspaper, Tamilnadu News, World news, Latest Tamil News, Tamilnadu Politics, Tamil News". DailyThanthi.com.
  7. "விடுதலைப் போரின் விடிவெள்ளிகள்". சுரா பதிப்பகம்.
  8. "விடுதலை வேள்வியில் தமிழகம்".
  9. "வேலு நாச்சியார்".
  10. "சீர்மிகு சிவகங்கைச் சீமை/விருபாட்சியில் வேலு நாச்சியார்".
  11. Correspondent, Vikatan. "வேலூநாச்சியார் நினைவு மண்டபம், வீரத்தாய் குயிலி நினைவு சின்னம்: ஜெயலலிதா திறப்பு!". www.vikatan.com. {{cite web}}: |last= has generic name (help)
  12. "வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் திறப்பு". Dinamalar. 19 July 2014.
  13. http://www.thinaboomi.com/news/2014/07/20/35262.html?page=6
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலு_நாச்சியார்&oldid=4248311" இலிருந்து மீள்விக்கப்பட்டது