முத்து வடுகநாதர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

முத்து வடுகநாதர் (? - 25 சூன், 1772) என்பவர் சிவகங்கை சமஸ்தானம் ஆண்ட இரண்டாம் மன்னர் ஆவார். 1749-இல் இவரின் தந்தையான சசிவர்ணர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதர்
மன்னர் முத்துவடுகநாதர்
ஆட்சி1749 - 1772
முடிசூட்டு விழா1749
பின்வந்தவர்வேலு நாச்சியார்
மனைவி
அரச குலம்சேது மன்னர்
தந்தைசசிவர்ணர்
தாய்அகிலாண்டேஸ்வரி நாச்சியார்

மதுரை மீட்பு

தொகு

1752-இல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்துக் கைப்பற்றினர். அதையறிந்த முத்துவடுகநாதர் மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராகப் பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பினி படைகளுக்குச் சிவகங்கை மீது கோபம் இருந்தது.

வரி மறுப்பு

தொகு

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாகக் கும்பினியருக்குத் திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப் பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1763-ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்துச் சிவகங்கை மீது போர் தொடுத்துச் சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்துக் கான்சாகிப்பையும் விரட்டினார்.

இராமநாதபுரம் இழப்பு

தொகு

அதே நேரத்தில் பரங்கிப்படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. அப்போது இராமநாதபுரத்தின் பரங்கித் தளபதியாக மார்டினசு பொறுப்பேற்றான். அதற்கு உதவியவன் இராமநாதபுர தளபதிகளில் ஒருவனான இராயப்பன் என்றவனே. தனக்கு முத்துவடுகநாதர் மந்திரி பதவி அளிக்காததால் தான் அவன் இந்தத் துரோகச் செயலில் இறங்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தருமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்குத் தருமாறும் செய்தியனுப்பினான். அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமையைச் சேர்ந்தவர்களின் உதவியை நாடினார் முத்துவடுகநாதர்.

இராமநாதபுரம் மீட்பு

தொகு

மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து பரங்கியர்களின் துப்பாக்கிப் படைமீதும் பீரங்கிப்படை மீதும் போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை எனச் சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார்.

சதியில் மரணம்

தொகு

சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த பரங்கிப்படை தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்றை காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற பரங்கித்தளபதியின் கீழும் மற்றொரு பிரிவை தாண்டவராய பிள்ளை படை மீதும் செலுத்திப் போர் தொடுத்தது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.

போலி வரலாறு

தொகு

சமாதானம் பேசுவதாகப் பொய் கூறிவிட்டுக் கோவிலுக்கு ஆயுதமின்றிச் சென்ற நேரம் பார்த்து முத்துவடுகநாதரைக் கொன்றுவிட்டுச் சிவகங்கையும் காளையர்கோவிலையும் வெற்றி கொண்டதாகப் பரங்கியர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர். அந்தச் சதிச்செயலுக்கு லண்டன் நகரவாசிகள் வெட்கத்துடன் வெளியிட்ட ஆங்கில நாளிதழ் செய்திகளே சாட்சி.

சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

தொகு

முத்துவடுகநாதர் இறந்ததை அறிந்த அவரின் மனைவியான வேலு நாச்சியார் தன் மகளான வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து விருப்பாச்சிக்குத் தப்பிச்சென்றார். அதன்பிறகு ஹைதர் அலி உதவிபெற்று மீண்டும் சிவகங்கை, இராமநாதபுரம், காளையார்கோவில் போன்ற இடங்களைக் கைப்பற்றி 4 ஆண்டுகள் அரசாண்டார். சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை இராமநாதபுரத்தை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு,

1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்

2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

3. 1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

4. 1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்

5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கணவர்

5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்

7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்

8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்

9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்

10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி

11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்

12. 1878 - 1883 - துரைசிங்கராஜா

13. 1883 - 1898 - து. உடையணராஜா

  • 1892-ஆம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
  • 1910-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
  • சுதந்திரத்திற்குப் பின் 1985-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[1]

மூலம்

தொகு
  • குங்குமம் வார இதழ் கட்டுரை[2]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ராமநாதபுரம் வரலாறு
  2. இரா. மணிகண்டன் (மே 2011). "சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்". குங்குமம் (15): 122 - 127. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_வடுகநாதர்&oldid=4095776" இலிருந்து மீள்விக்கப்பட்டது