சிவகங்கைச் சீமை

தமிழக மறவர் சமஸ்தானம்
(சிவகங்கை சமஸ்தானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிவகங்கைச் சீமை என்பது தமிழ்நாட்டில் (இன்றைய சிவகங்கையில்) அமைந்திருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்த முத்துவடுகநாத தேவர் ஆங்கிலேயரால் கொல்லபட்டார். பின்னர் ஆங்கிலேயரிடம் இருந்து தன் இராச்சியத்தை மீட்ட வேலு நாச்சியார் 1790 ஆம் ஆண்டு வரை சிவகங்கைச் சீமையை ஆண்டார். அவர் இறந்த பிறகு, அவரது மகள் வெள்ளச்சி நாச்சியாரும் அவருக்குப் பின் அவரது கணவரும் சக்கந்தி பாளையத்தைச் சேர்ந்தவருமான வேங்கன் பெரிய உடையணத் தேவரும் 1790-1801 வரை நாட்டை ஆண்டனர். மருது சகோதரர்கள் அவரது பிரதானிகளாக இருந்து மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தினர்.[1] அவர்களின் மரணத்திற்குப் பிறகு, 1801 இல் ஆங்கிலேயர்களால் இந்த இராச்சியம் இஸ்திமிரார் ஜமீன்தாரியாக தகுதி குறைக்கப்பட்டது . சோழபுரத்தில் கௌரி வல்லப முத்து விஜய ரகுநாத உடையாத் தேவர் அவர்கள் முதல் இஸ்திமிரார் ஜமீன்தாராக முடி சூட்டிக் கொண்டார். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு சோசலிச சீர்திருத்தத்தினால் சமீன்தாரி ஒழிக்கப்பட்டபோது சிவகங்கை சமீனும் அதனுள் அடைக்கப்பட்டது.

சிவகங்கை அரண்மனை

வரலாறு

தொகு

17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதுதாக அன்றைய இராமநாதபுர சமஸ்தானம் இருந்தது. 1674 முதல் 1710 வரை இராமநாதபுர சமஸ்தானத்தின் 7 ஆவது மன்னராக ஆட்சி செய்து வந்தவர் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மறைவுக்குப் பின் அவரது மகன் முத்துவிஜயரகுநாத சேதுபதி 8 ஆவது மன்னரானார். சிவகங்கையிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள நாலுகோட்டை பாளையக்காரரான பெரிய உடையர்த் தேவரின் வீரத்தை அறிந்து தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை பெரிய உடையார் தேவர் மகன் சசிவர்ணத் தேவருக்கு அவரை வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராக நியமனம் செய்தார். இந்நிலையில் இராமநாதபுரத்தில் பவானி சங்கர தேவர் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டார். இவரை அடக்க படைகளுடன் சென்று போரிட்ட முத்துவிஜயரகுநாத சேதுபதி அம்மை நோய் கண்டதால் இராமநாதபுரம் திரும்பிய நிலையில் இறந்தார். இதையடுத்து, பவானி சங்கர தேவர் எளிதாக இராமநாதபுரத்தைக் கைப்பற்றியதுடன் புதிதாகப் பட்டம் சூடிய சுந்தரரேசத் தேவர் என்ற சேதுபதியைக் கொன்றுவிட்டு அவரே சேதுபதியானார. இவர் மன்னராக ஆனதையடுத்து சசிவர்ணத் தேவர் தன் ஆளுநர் பதவியை இழந்தார்.

இதையடுத்து தனது அவல நிலையைத் தெரிவிப்பதற்காக சசிவர்ணத் தேவர் தஞ்சாவூர் மராத்திய மன்னரிடம் சென்றார். அப்பொழுது, இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு தகுதியுள்ள கட்டத்தேவரும் (இறந்துபோன சுந்தரேச தண்டத் தேவரது சகோதரர்) அங்கு வந்து இருந்தார். இருவரும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைத் தஞ்சை மன்னரிடம் விளக்கியதுடன் பவானி சங்கரத் தேவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற படை உதவி கோரினர். தஞ்சைமன்னர் சில நிபந்தனைகளுடன் படை உதவி செய்தார். இந்தப் படைகளுக்கு சசிவர்ணத் தேவரும், கட்டையத்தேவரும் தலைமை தாங்கிவர பவானி சங்கர சேதுபதி படைகளும் ஓரியூர் அருகே மோதின. வெற்றி தஞ்சை படைகளுக்கு. பவானி சங்கர சேதுபதி கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டார்.[2]

இதையடுத்து , இராமநாதபுர இராச்சியமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டது. பம்பறு ஆற்றின் வடக்கே உள்ள அனைத்து பிரதேசங்களும் தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டன. மேலும் போரில் கட்டையத்தேவருக்கு உதவிய சசிவர்ணத் தேவருக்கு வைகை ஆற்றின் வடகரைக்கும் பிரான்மலைக்கும் இடைப்பட்ட பகுதி 1728 இல் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த சின்ன மறவர் சீமை அல்லது சிவகங்கை சீமை என அழைக்கப்பட்டது. இந்த நாட்டின் முதல் மன்னராக சசிவர்ணத் தேவர் பொறுப்பேற்று ஆண்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார்

சசிவர்ணத்தேவர் 1750 ஆம் ஆண்டு மரணமடந்தார். அவருக்கு பின் முத்துவடுகத்தேவர் சிவங்கங்கைச் சீமையின் இரண்டாவது மன்னரானார். 1746 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்த வேலு நாச்சியாரை மணமுடித்தார். இவருடைய ஆட்சியின் போது இவரின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை டச்சுக்காரரிடம் அளித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு, வரியை ஆங்கிலேயே அரசுக்கோ அல்லது ஆற்காட்டு நவாப்புக்கோ செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தது. ஆனால் முத்துவடுகத்தேவர் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக 1772 ஆம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜோசப் ஸ்மித் என்பவர் கிழக்கிலிருந்தும், பெஞ்ச்மௌர் என்பவர் மேற்கிலிருந்தும் சிவங்கங்கைச் சீமையின் மீது படை எடுத்தனர். அன்றைய சிவகங்கைச் சீமை முழுதும் காடுகள் நிறைந்த பகுதிகளும் சிறு சிறு கிராமங்களை கொண்ட ஒரு திருநாடாகும். ஆங்கிலேயரின் படைகளை சிவகங்கைச் சீமையின் புறப்பகுதியிலேயே தடுக்க ஆங்காங்கு பல இடையூர்களை முத்துவடுகத்தேவர் ஏற்படுத்தினர். ஆயினும் 21 ஜூன் 1772 அன்று சிவகங்கையை கைப்பற்றினர் ஆங்கிலேயர். பின்னர் காளையார்கோவில், சோழபுரம் போன்ற பகுதிகளை 25 ஜூன் 1772 அன்று கைப்பற்றி சிவகங்கை முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நடந்த கடும் போரில் முத்துவடுகத்தேவர் மற்றும் அவரது சகாக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.

முத்துவடுகத்தேவரின் மறைவுக்கு பின் சில காலம் பதுங்கி இருந்த வேலுநாச்சியார் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவோடு திண்டுக்கல் மலைக்கோட்டையில் மறைந்திருந்தார். பின்னர் அதை கேள்வி பட்ட ஐதர் அலி வேலுநாச்சியாரையும் அவர் மகள் வெள்ளச்சிநாச்சியாரையும் தன் பாதுகாப்பில் சில காலம் வைத்திருந்தார். வேலுநாச்சியாரோடு மருது சகோதரர்கள் திண்டுக்கலில் பதுங்கி இருந்தனர். சுமார் 8 வருடங்களுக்கு பிறகு 1780 சிவகங்கை மீட்க ஒரு திட்டம் வகுத்தார். அதற்கு பக்கபலமாக ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். இந்தப் போரில் வேலுநாச்சியார் காளையார் கோயிலை கைப்பற்றினார். 1790 ஆம் ஆண்டு வரை ராணி வேலு நாட்சியாரால் சிவகங்கைச் சீமை ஆளப்பட்டது. அவர் இறந்த பிறகு, மருது சகோதரர்கள் 1790-1801 வரை நாட்டை ஆண்டனர். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, ஆங்கிலேயருக்கு அனுசரனையாக இருந்த படைமாத்தூர் கெளரி வல்லப ராஜாவிடம் இராச்சியம் ஒப்படைக்கப்பட்டது. அவர் 1801 இல் இறந்தார். அவர் இறந்த பிறகு 1803 இல் ஆங்கிலேயர்களால் இந்த இராச்சியம் ஜமீன்தாரியாக தகுதி குறைக்கப்பட்டது. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு சோசலிச சீர்திருத்தத்தினால் சமீன்தாரி ஒழிக்கப்பட்டபோது சிவகங்கை சமீனும் இல்லாம் ஆக்கபட்டது.

சிவகங்கை மன்னர்கள்

தொகு
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கு கீழ்பட்ட ஜமீந்தாரியாக (1803–1947)

வெளி இணைப்புகள்

தொகு


சான்றாவணம்

தொகு
  1. Kamal, SM. சீர்மிகு சிவகங்கை சீமை. p. 195.
  2. டாக்டர் எஸ். எம். கமால் (1997). "விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சிவகங்கையும் சேதுபதியும்". நூல். ஷர்மிளா பதிப்பகம். p. 67. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகங்கைச்_சீமை&oldid=4125798" இலிருந்து மீள்விக்கப்பட்டது