பவானி சங்கர சேதுபதி

இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்

பவானி சங்கர சேதுபதி என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதி மன்னரைப் போரில் கொன்று சேதுபதி மன்னரானார். இவர் இரகுநாத கிழவன் சேதுபதியின் மகன் ஆவார்.

பதவியைக் கைப்பற்றுதல் தொகு

இரகுநாத கிழவன் சேதுபதியின் மகனான இவர். அவரது தந்தையின் மறைவுக்குப்பிறகு அரியணை ஏற விரும்பினார். ஆனால் இவர் சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் என்ற காரணத்தினால் இராமநாதபுர அரண்மனை மரபின்படி இவருக்கு அரசுரிமை மறுக்கப்பட்டது. அப்போதிருந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு தன் கனவை நிறைவேற்றிக்கொண்டார்.

இராமநாதபுரத்தைக் கைப்பற்றுவதற்காக பவானி சங்கர சேதுபதி தஞ்சை மராட்டிய மன்னரின் உதவியை நாடினார். அவர் செய்யும் படை உதவிக்கு கைமாறாக தான் இராமநாதபுரம் சேதுபதியானதும் சேதுநாட்டின் வடபகுதியாக விளங்கிய சோழமண்டலப் பகுதிகளைத் (பட்டுக்கோட்டை சீமையை) தஞ்சை மன்னருக்கு விட்டுக்கொடுப்பதாக வாக்களித்தார். ஆனால் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பிறகு தஞ்சை மன்னருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இதனால் கோபமுற்ற தஞ்சை மராத்திய மன்னர் பவானி சங்கர சேதுபதியின் எதிரிகளின் படையெடுப்புக்கு உதவி செய்தார். இந்தப் போருக்கு மறைந்த சுந்தரேஸ்வர சேதுபதியின் சகோதரர் கட்டையத்தேவரும், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மருகர் ஆன சசிவர்ணத் தேவரும் தலைமை தாங்கி வந்தனர். ஓரியூர் அருகில் நடந்த போரில் பவானி சங்கரத் தேவர் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அவர் சிறைபிடிக்கப்பட்டு தஞ்சாவூருக்கு அனுப்பப்பட்டார். அவரது முடிவு பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/iii. பவானி சங்கர சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். p. 57. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_சங்கர_சேதுபதி&oldid=2768048" இலிருந்து மீள்விக்கப்பட்டது