தெலுங்கு மொழி

திராவிட மொழி

தெலுங்கு (Telugu,[1] తెలుగు) தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்பு பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கருநாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடியே 30 இலட்சம் (93 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் 'வடுகத்' தெலுங்கு ஆகும். 2008-ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு
தெலுங்கு
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, புதுச்சேரி, மேற்கு வங்காளம்.
தெலுங்கு
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1te
ISO 639-2tel
ISO 639-3tel
இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பகுதி

தோற்றம்

தொகு

தெலுங்கு தமிழிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. மற்ற தமிழ் மொழிக் குடும்ப பிரிவுகளை போலவே தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்தது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் தமிழ் மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன.

தெலுங்கு பழந்தமிழ் மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு தமிழ் மொழித் துணைக்குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற மொழிகள் கொண்டி, கூய், குவி போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் தமிழ் மொழிக் குடும்பத்திம் தெலுங்கே.

தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் தமிழை தவிர்த்து அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

பொ.ஊ. 1000 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டுகளில் தெலுகு என்ற சொல் காணமுடியாது. 11-ஆவது நூற்றாண்டில் "தெலுங்கு பூமிபாலுரு" (తెలుంగు భూమిపాలురు), "தெல்கரமாரி" (తెల్గరమారి), "தெலிங்ககுலகால" (తెలింగకులకాల), "தெலுங்க நாடோளகண மாதவிகெறிய" (తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ) போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

பொ.ஊ. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே தெனுகு என்ற சொல் வழக்கில் வரத் துவங்கியது. சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். திரிலிங்கம் என்பது காலேசுவரம், சிரீசைலம், திரட்சராமம் முதலிய மூன்று சிவத்தலங்களை குறிக்கும். இம்மூன்று இடங்களும் தெலுங்கு தேசத்தின் எல்லைகளாக அமைந்த காரணத்தினால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து தெலுங்கு தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இது பின்னர் எழுந்த பண்பாட்டு அடிப்படையில் தரும் காரணம் எனவும் தெலுகு என்ற சொல்லே பழமையானது எனவும் வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் "நவலட்ச தெலங்கு" (నవలక్ష తెలంగు) என்ற குறிப்பு காணப்படுகிறது.

தெலுங்கு என்ற சொல்லின் தோற்றம் குறித்து பலவாறாகவும் கூறப்பட்டுள்ளது. "தெலு" என்றால் வெண்மை என்று பொருள் எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதே நேரத்தில் தென் – என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து, தென்னகத்தின் மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றி இருக்கலாம் எனவும் கருதுவது உண்டு.

எது எவ்வாறாக இருப்பினும், தெலுங்கு தேசத்தின் பெயர் தெலிங்க தேசம் அல்லது தெலங்க தேசம் என்றிருந்திருக்க வேண்டும். எனவே அதன் வேர்ச்சொல் தெலி (తెలి – "பிரகாசம்") ஆகவும் இருக்கலாம். தெலுங்குப்பண்டிதர்கள் தெலுங்கு என்பதன் சரியான வடிவம் தெனுகு எனக் கூறுகின்றனர். தெனுகு என்றால் தேன் போன்ற மொழி என்று பொருள் (తేనె (தேனெ) – "தேன்"). தேன் போன்ற இனிய மொழி ஆகையால் தெனுகு என்பது பிற்காலத்தில் தெலுகு என ஆகியிருக்கலாம் என்பது இவர்கள் கருத்து

மொழி வரலாறு

தொகு

தெலுங்கு மொழியில் வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்

பொ.ஊ. 200 – பொ.ஊ. 500

தொகு

பழங்கால பிராகிருத/சமசுகிருத பிராமி கல்வெட்டுகளில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்குச் சொற்கள் மகாராட்டிரிப் பிராகிருதத்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன.

பொ.ஊ. 500 – பொ.ஊ. 1100

தொகு

தெலுங்கு மொழி, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பொ.ஊ. 575-ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி சோழர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களே முதன் முதலாக சமசுகிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்குப் பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளைத் தெலுங்கில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கியமாகக் கருதப்படும் நன்னய்யரின் மகாபாரதம் இக்காலகட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன.

பொ.ஊ. 1100 – பொ.ஊ. 1400

தொகு

இக்காலகட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலகட்டத்தில்தான் துவங்கியது

பொ.ஊ. 1400 – பொ.ஊ. 1900

தொகு

இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விசயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தது. விசய நகர அரசர் கிருட்டிண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விசய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன.

பொ.ஊ. 1900 முதல் இன்று வரை

தொகு

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழியில் ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின.

ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள்.

 
உலக தெலுங்கு மகாசபையின் மாநாட்டின் போது வெளியிடப்பட்ட தபால் தலை. இதில் எழுதப்பட்டுள்ளவை -தேச பாசலந்து தெலுகு லெச, எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு, பஞ்சதாரகன்னி பனச தொநலகன்ன கம்மனி தேனலகன்ன தெலுகு மின்ன

பேசப்படும் பகுதிகள்

தொகு

தெலுங்கு மொழி, இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச தெலங்கானா மாநிலங்களில் அதிக அளவில் பேசப்படும் மொழி. மேலும் தமிழ் நாடு, கருநாடகம், ஒரிசா முதலிய பக்கத்து மாநிலங்களிலும் பேசப்படுகிறது..விசயநகரப் பேரரசின் காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றிய நாயக்கர் ஆட்சி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. நாயக்கர்கள் ஆட்சியின்போது ஆந்திராவில் இருந்து பல்வேறு மக்கள் தமிழ்நாட்டில் குடியேறினர்.

மேலும் பகுரைன், இங்கிலாந்து, பிசி, மலேசியா, மொரிசியசு போன்ற நாடுகளிலும் இம்மொழி பேசப்படுகிறது.

அரசு ஏற்புநிலை

தொகு

தெலுங்கு மொழி ஆந்திர மாநிலத்திலும் தெலங்கானா மாநிலத்திலும் அரசு ஏற்புபெற்ற மொழியாகும். மேலும் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளில் தெலுங்கும் ஒன்று. இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த யானம் பகுதியின் ஏற்பு பெற்ற மொழியாகவும் இது விளங்குகிறது.

வட்டார வழக்குகள்

தொகு

பேரத், தசரி, தொம்மரம், கொலரி, கமதி, கொண்டாவ், கொண்ட-ரெட்டி, சலேவரி, தெலங்காணம், வடகம், சிரீகாகுளம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ராயலசீமா, நெல்லூர், குண்டூர், வடரி மற்றும் ஏனாடு ஆகியவை தெலுங்கு மொழியில் வெவ்வேறு வட்டார வழக்குக்கள் ஆகும்.

தமிழ் நாட்டில் பேசும் தெலுங்கு மொழியை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் வட்டார வழக்கென பிரிக்கலாம். மேலும், விருதுநகர், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கில் அதிக அளவில் தமிழ் மொழி கலப்பைக் காண முடியும்.

செம்மொழியாக அறிவிக்க கோரிக்கை

தொகு

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததை அடுத்து தெலுங்கு மொழிக்கு செம்மொழி என்னும் சிறப்புநிலை வேண்டுமென கோரிக்கையை இந்திய அரசுக்கு விடப்பட்டு அது ஏற்கொள்ளப்பட்டது. தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இருமொழிகளும் செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒலிகள் மற்றும் எழுத்துமுறை

தொகு

தெலுங்கு எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கிரந்த எழுத்துக்களில் இருந்து தோன்றியது.

உயிரெழுத்துக்கள்

தொகு

தெலுங்கில் திராவிட மொழிகளுக்கே உரிய எகர ஒகர ஒலியுடன் சமசுகிருதத்தில் உள்ள அனைத்து உயிரெழுத்துகளும் உள்ளன.

குறில் நெடில்
முன் நடு பின் முன் நடு பின்
மேல் i u
இடை e o
கீழ் a~ɐ (ai) aː~ɐː (au)

ఋ ౠ ఌ ౡ అం అః

மெய்யெழுத்துக்கள்

தொகு

தெலுங்கு சமசுகிருத நெடுங்கணக்கில் உள்ள அனைத்து எழுத்துக்களுடன், திராவிட மொழிகளுக்கு உரிய ளகரம் மற்றும் றகரமும் கொண்டுள்ளது. தெலுங்கு மொழியில் பழங்காலத்தில் ழகரம் இருந்தது. ஆனால் தற்சமயம் அவ்வொலி மறைந்து விட்டது.
క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
య ర ఱ ల ళ
వ స శ ష హ
தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை கிழக்கின் இத்தாலிய மொழி (Italian of the East) என அழைத்தனர். தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார்.

இலக்கியம்

தொகு

தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்:

  • நன்னய்யருக்கு முற்காலம் – பொ.ஊ. 1020 வரை;
  • புராண காலம் – பொ.ஊ. 1020 முதல் பொ.ஊ. 1400 வரை;
  • சிரீநாதரின் காலம் – பொ.ஊ. 1400 முதல் பொ.ஊ. 1510 வரை;
  • பிரபந்த காலம் – பொ.ஊ. 1510 முதல் பொ.ஊ. 1600 வரை;
  • தெற்கு காலம் – பொ.ஊ. 1600 முதல் பொ.ஊ. 1820 வரை;
  • நவீன காலம் – பொ.ஊ. 1820 முதல் இன்று வரை.

தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின் (1022–1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்களால் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு சிரீநாதர் (1365–1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். சிரீநாதருக்கு பிறகு போதனா (1450–1510), சக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர்.

எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விசயநகர அரசர் கிருட்டிணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விசயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் எழுதினார்.

20ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கத்தால் சிறுகதை, நாவல் போன்ற நவீன கால இலக்கியங்கள் தோன்றின.

எண்கள்

தொகு
தெலுங்கு தமிழ்
ஒக்கடி ஒன்று
ரெண்டு இரண்டு
மூடு மூன்று
நாலுகு நான்கு
ஐது ஐந்து
ஆறு ஆறு
ஏடு ஏழு
எணிமிதி எட்டு
தொம்மிதி ஒன்பது
பதி பத்து
நூறு/வந்தல நூறு
வேயி/வெய்யி/சகச்சுரம் ஆயிரம்

அன்றாட வழக்குகள்:

தொகு
தமிழ் தெலுங்கு
வணக்கம் நமசுகாரம்
உங்களுக்கு தெலுங்கு தெரியுமா? மீகு தெலுகு தெலுசா?
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு தெரியும் நாகு கொஞ்சம் கொஞ்சம் தெலுகு தெலுசு
உங்கள் பெயர் என்ன? மீ பேரு ஏமிடி?
பேசு மாட்லாடு
சொல்லு செப்பு
நலமா? பாகுன்னாரா?
அங்கே பார் அக்கட சூடு
ஆமாம் அவுனு
இல்லை லேது/காது
நன்றி தன்யவாதமுலு
அங்கே அக்கட
இங்கே இக்கட
எங்கே எக்கட
அப்படி அலா
இப்படி இலா
எப்படி? எலா?
யார்? எவரு?
எவ்வளவு? என்த?
இந்தப் பேருந்து திருப்பதி செல்லுமா? ஈ பசு திருப்பதிகி வெள்துன்தா?
நான் உன்னைக் காதலிக்கிறேன் நேனு நின்னு பிரேமிசுத்துன்னானு

எதிர்

மேற்கோள்கள்

தொகு
  1. Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தெலுங்கு மொழிப் பதிப்பு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_மொழி&oldid=3939548" இலிருந்து மீள்விக்கப்பட்டது