நொய்யல் ஆறு

காவிரியின் துணையாறு

நொய்யல் ஆறு (Noyyal River) தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த, சிறுவாணி மலையின் கிழக்குச் சரிவு, வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகும் ஓடைகள் இணைந்து உருவெடுக்கிறது. நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர்,சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும்.[1]

நொய்யல் ஆறு
நொய்யல் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், தமிழ்நாடு
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காவிரி ஆறு
நீளம்180 km (110 mi)
வடிநில அளவு3,500 km2 (1,400 sq mi)

தோற்றமும், ஆற்றின் போக்கும்

தொகு

நொய்யல் ஆறு என்றால் சிறுவாணி அணையிலிருந்து நீர் வரும் எனவும், தண்ணீரே வராத ஒரு ஆறு எனவும் நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல.

கோவைக்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலைப்பகுதியின் கிழக்குச் சரிவுகளில் பல்வேறு சிறு ஓடைகள் உருவாகிறது. இப்படியான 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் தமிழ்நாட்டில் சிறுவாணி மலைப்பகுதியின் கிழக்குச் சரிவின் அடிவாரத்தில் காணும் பெரியாறு. இதில்தான் கோவை குற்றாலம் அருவி உள்ளது.

வடபுரத்தில் ஏறத்தாழ வெள்ளியங்கிரி மலையிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மழை, 5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாறுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.

இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை, பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக பெரியாறுடன் சோலைப் படுகையில் ஒன்று சேர்கிறது. பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்குத் தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்து உருவாகும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி ஆற்றில்தான் வைதேகி அருவி உள்ளது. தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. நொய்யலின் நீளம் 180 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32. நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொங்கு நாட்டின் அடையாளம்

தொகு

மனிதகுலம் ஓரிடத்தில் நிலைத்து நின்று நாகரீகம் வளர முக்கிய காரணமாக இருந்தவை ஆறுகளே. உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களின் முக்கிய அடையாளமாக அங்கு பாயும் ஆறு விளங்குகிறது. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் அடையாளமாகவும், அங்கு விவசாயம் வளமாக அமையக் காரணமாகவும் இருந்தது நொய்யல் ஆறு. தொல்லியல் பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வாற்றின்கரையில்தான் அமைந்துள்ளது.

நொய்யலில் நீர் மேலாண்மை வகுத்த சோழர்கள்

தொகு

மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுக்கும் நொய்யல் ஆற்றின் நீரை ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் விதமான நீர் மேலாண்மைத் திட்டத்தை 800 ஆண்டுகளுக்கு முன்பு(கி.பி.1000-1300) கொங்கு மண்டலத்தை ஆண்ட சோழர்கள் உருவாக்கி வைத்தனர். நொய்யலை ஆதராமாகக் கொண்டு 32 அணைக்கட்டுகளும், 40 க்கும் மேற்பட்ட குளங்களும் கட்டமைக்கப்பட்டன. ஆனால் தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19 மட்டுமே. மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீரானது முழுவதும் வீணாகாமல் இடை இடையே தடுக்கப்பட்டு அணைக்கட்டுகளிலும் அதன் வழியாக குளங்களிலும் சேமிக்கப்பட்டது. அணைக்கட்டுகளில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போன்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி நொய்யல் ஆற்றின் கரையோர மக்கள் மட்டுமல்லாது தொலைவில் இருந்த மக்களும் விளை நிலங்களும் பயனடையும் விதத்தில் நீர் மேலாண்மை திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.இதன் மூலமாக குடிநீர், பாசனம், நிலத்தடிநீர் போன்ற பயன்களை மக்கள் அடைந்தனர். பின்னர் நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேய அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

ஆக்கிரமிப்பும் மாசுபாடும்

தொகு

மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் தற்போது பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்த ஆறுகளில் ஒன்று. கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது அந்நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவுகள் நொய்யலில் கலந்து இவ்வாற்றை மிகவும் மாசடையச்செய்கின்றன. சுத்திகரிக்கப்படாத சாயப் பட்டறைக் கழிவுகளால் அதிக அளவு அமிலங்கள் சேர்ந்து திருப்பூருக்கு பின் நொய்யல் ஆறு வேளாண்மைக்கும் குடிப்பதற்கும் ஆகாத நிலை உள்ளது. மனிதர்களுக்கும், மண்ணிற்கும் பயன்படாத ஆறாக மாறியதால் நொய்யலை இறந்த ஆறு என்றே கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.[2]

இக்கழிவுகள் எல்லாம் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கி அப்பகுதியின் நீர் நிலைகளை மோசமாக மாசுபடுத்தியுள்ளன. அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர். ஆற்று நீரை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுத்துள்ள உச்சநீதி மன்றம், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே ஆற்றினில் கலக்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு வசதி இல்லாத ஆலைகளின் உரிமம் பறிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. போராட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன.

சிறுவாணியும் நொய்யலும்

தொகு

உலகில் இரண்டாவது சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்பட்டாலும் அது இன்றைய கேரளத்தில் உள்ளது.இயற்கையாக சிறுவாணி கோவை பகுதியில் பாய்வதில்லை. ஆங்கிலேயர் காலத்தில் மலையைக் குடைந்து தாண்டி குழாய்கள் மூலம் கோவைக்கு சிறுவாணி நீர் கொண்டு வரப்பட்டது. சிறுவாணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில் உருவாகி பவானியுடன் கலக்கிறது. ஆனால் அதே பகுதியில் உருவாகி கோவை மாவட்டத்தை செழிக்கச் செய்யத நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை, வேதிக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்.

செய்ய வேண்டியவை

தொகு

பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அரசின் உதவியின்றி ஆற்றை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்பது அவர்கள் கருத்து. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நகரப் பகுதிகளின் சாக்கடை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் ரசாயானக் கழிவுகளை தடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும். நூற்றாண்டுகளாக அண்டை மாநிலங்களோடு தண்ணீருக்காக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இருக்கும் நீராதாரங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாக உள்ளது.

நொய்யல் ஆறு

மேலும் பார்க்க

தொகு
கரையில் அமைந்த ஊர்கள்

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொய்யல்_ஆறு&oldid=3629317" இலிருந்து மீள்விக்கப்பட்டது